அதெல்லாம் ஒரு காலம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதெல்லாம் ஒரு காலம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 28, 2014

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும்!.

TAMILSNOW என்ற இணைய தளத்தில் நண்பர் ஹரிஹரன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறேன்.





          ந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் வாய்ப்பை வழங்குகிறது.தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வாங்கிய வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் வாழ்வாதரம் என்பது விளையாட்டு வீரனாக இருந்தாலே போதும் என்ற நிலை கிரிக்கெட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது. அத்தகைய நிலையில் விளையாட்டு போட்டிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் நுழைவது வரவேற்கத் தக்கதே. கிரிக்கெட், ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது.

கபடிக்கு புரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஒரு பெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாடினாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு, மேலும் கபடிக் கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது, இந்த உலக கோப்பையை 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இவைகளில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் ஒரளவாவது இருந்தே வருகிறது, 39 வயது சேரலாதன் மிகச்சிறந்த தற்காப்பு கள ஆட்டக்காரராக இந்திய அணியில் பல்லாண்டுகளாக ஆடிவருகிறார்.

கபடி என்பது தமிழர்கள் விளையாட்டு என்பதை உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விளையாட்டு, கை பிடி என்பதே கபடியாக மாறியது என்பதாக வரலாறு சொல்கிறது, இதை நாம் சடுகுடு என்ற பெயரிலும் நாட்டுப்புற பாடல் வரிகளுடன் விளையாடி வந்த விளையாட்டு. ஏன் இன்று வரை தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட தமிழகத்தின் விளையாட்டாக இருப்பது கபடி தான். (நம்மை தவிர பங்களாதேஷ் தனது தேசிய விளையாட்டாக அங்கீகரித்துள்ளது) இப்படி தமிழக அரசின் விளையாட்டாக இருக்கும் கபடி இந்த புரோ கபடி லீக்கில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 4 அணிகளாவது பங்கேற்று இருக்க வேண்டும் ஆம், ஊர்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து அனைத்து மட்டங்களிலும் கபடிப் போட்டிகள் கோயில் திருவிழா, பொங்கல் விழா என்று எங்கும் நிறைந்தே இருக்கும் கபடிப் போட்டிகள். இப்படி அனைத்து பகுதியிலும் விளையாடப்பட்டு வரும் நமது தமிழகத்தில் இருந்து ஒரு அணி கூட இந்த ப்ரோ கபடி லீக்கில் இல்லை.

காரணம் அணியை வாங்குவதற்கோ இல்லை அணி ஒன்றை நிறுவவோ எந்த நிறுவனமும் தயார் இல்லை என்று சொல்லலாம் ஆனால் நாமே இப்படி ஒரு போட்டி நடப்பதை அறியாதவர்களாகத் தான் இருக்கிறோம், இந்திய கபடி கழகத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்றுள்ளன. இதில் இந்தியன் ப்ரீமியர் லீக் போன்று அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. எட்டு அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது, பெங்கால் வாரியர்ஸ்,  பூனேரி பல்தான், யு மும்பா, தபங்க் டில்லி, பெங்களூர் புள்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரைட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ் இதில் பூனே அணியை அபிசேக் பச்சன் வாங்கியிருக்கிறார். அதிக பட்ச ஏலத்தொகையாக 12,80,000 ரூபாய்க்கும் குறைந்த பட்ச ஏலத்தொகையாக 9,10,000 ரூபாய்க்கும் அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து ஒருவரு கூட இந்த தொகையை முதலீடு செய்யும் அளவிற்கு இல்லையா என்ன.நடிகர்களுக்கு இடையே நடக்கும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி எந்த விதமான விளையட்டு மேம்பாட்டையும் கொடுக்காத வெறும் விளம்பரமாகவும், பொழுது போக்கிற்காகவும் நடக்கும் இந்த போட்டியின் சென்னை அணியை வாங்கிய ராதிகா சரத் குமார் போன்றவர்களுக்கு இந்த 12 லட்சம் பெரிய தொகையா என்ன. தமிழ் நாட்டி மானத்தை கட்டி காப்போம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசுபவர்கள் இங்கு பலர் உண்டு ஆனால் இப்படி ஒரு போட்டி அதை முதலில் முன்னெடுத்து இருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அதுவும் ஒரு முக்கியமான விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதற்கு விளம்பரதாராகவும் நேரடி ஒளிபரப்பும் செய்கிறது இத்தகைய ஒரு போட்டி அதுவும் தமிழர்களின் விளையாட்டை நடத்த தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் தயார் இல்லை. அதாவது பரவாயில்லை தமிழ் நாட்டில் இருந்து ஒரு அணி கூட கிடையாது.
    

தமிழ் நாடு கபடி கழகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் இரண்டு நபர்களின் பெயரும் எண்ணும் இணையத்தில் இருக்கிறது ப்ரெசிடெண்டாக திரு. சோலை எம். ராஜா மதுரையை சேர்ந்தவரும், செகரட்டரியாக திரு, சைபுல்லா, திருப்பூரை சேர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள் எண்களை தொடர்பு கொண்டால் ஒரு நம்பரில் அப்படிப்பட்ட பெயரில் இங்கு யாருமே இல்லை என்கிறார். அடுத்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. இதில் பிரசிடண்டாக இருக்கும் சோலை எம் ராஜா அனைவரும் அறிந்தவரே ஒரு காலத்தில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், இவரது தந்தை மதுரை காவல் துறையில் துணை ஆணையளாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பத்தின் அடிதடி கட்டப்பஞ்சாயத்து சாம்ராஜ்யம் மதுரை மாவட்டம் அறிந்ததே ராஜா அவர்களின் தம்பி ரவியும் தந்தை சோலை முத்தையாவும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ரவியின் மீது பல நூற்றுக் கணக்கான கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ராஜாவின் மீதும் பல வழக்குகள் உண்டு. இவர் தான் தமிழ் நாடு கபடி கழகத்தின் தலைவராக இருக்கிறார்.
 
இங்கு கபடி கழகம் மட்டும் தவறு செய்யவில்லை நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம், தமிழ்நாட்டின் விளையாட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம், இன்னும் பத்து வருடத்தில் இல்லை இந்திய கபடி கழகத்தில் கபடி வரலாறு என்று பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைவரும் விளையாடிய விளையாட்டாக சித்தரித்துள்ளனர். இந்தியா என்ற நாடே 1800களில் தான் உருவானது என்ற வரலாற்றையே மறைத்துவிட்டு. தமிழர் விளையாட்டாக இது எங்கும் அகில இந்திய கபடி கழகத்தின் இணையத்தில் எங்குமே குறிப்பிட படவில்லை. நமது அடுத்த தலைமுறை கபடி என்ற விளையாட்டை எதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாக பார்க்க போகிறது என்பது என்னவோ நிதர்சனமாகத் தெரிகிறது.
- ஹரிஹரன்

சனி, மார்ச் 20, 2010

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?


மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் படித்த போது, கூட படித்த ஒரு நண்பரின் பெயர் சிட்டுக்குருவி (நாங்கள் வைத்த செல்லப் பெயர்). மனுசன் மகா சுறுசுறுப்பு அதனாலயே அந்த பெயர வச்சோம். திண்டுக்கல்லிலிருந்து வருவார். கூடவே தலைப்பாகட்டி பிரியாணியும் வரும். (ஹூம்... அதெல்லாம் ஒரு காலம்!)

சரி, இந்த பதிவுக்கு அவர் ஒரு 'லீடு' மட்டும்தான். விஷயத்திற்கு வருவோம்.

இன்று உலக சிட்டுக்குருவி தினம்.

நவீன மயமாக்கலில் அழிந்து வரும் உயிரினங்களில் 'சிட்டுக்குருவி'யும் ஒன்று. சிட்டுக்குருவிகளை நாம், நமது வாழ்வில் சந்தோஷம் மற்றும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றோம்.

அழியும் குருவிகள்.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்று சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நன்பனான சிட்டுக் குருவி சங்க இலக்கியங்களில் பாடப் பெற்ற உயிரினம் ஆகும். பாரதியார் தனது கவிதைகளில் சிட்டுக் குருவியின் பெருமைகளை பாட மறக்கவில்லை.

காகங்களை போல மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அறிவுத் திறன் கொண்டது சிட்டுக்குருவிகள். சிதறிய தானியங்களை தலையை சாய்த்து சாய்த்து அது தின்னும் அழகே அழகு!.

அழிந்து வரும் சிறு உயிரினங்களில் சிட்டுக் குருவி மட்டுமல்லாமல் பல்வேறு குருவி இனங்களும் அழியும் தருவாயில் இருக்கிறது.

அதுவும் அறுவடை காலம் என்றால் குருவிகளுக்கு கொண்டாட்டம்தான். எங்கள் ஊரில் வயல் வரப்புகள் ஊடே இரயில் பாதை நீண்டு இருக்கும். இரு புறமும் தந்தி மரங்கள், இரயில் பாதையை தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்கும். தந்திக் கம்பிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி,கருவாட்டுவாலி, மீன் கொத்தி, நானத்தான் குருவி (மைனா), அக்கா குருவி, பச்சைக் கிளி, என்று ரகத்திற்கு ஒன்றாய் குருவிகள் வரிசை கட்டி அமர்ந்து இருக்கும்.

வயலில் ஆட்கள் நெற்கதிர்களை அறுக்க அறுக்க, அதிலிருந்து பூச்சிகள், வெட்டுக்கிளி, அந்துப் பூச்சி, தட்டான், என்று வித விதமான பூச்சிகள் பறக்கத்தொடங்கும். வரிசை கட்டி காத்திருக்கும் குருவிகள் பறந்து பறந்து பூச்சிகளை வேட்டையாடும். பிறகு தந்தி கம்பங்களில் அமர்ந்து கொள்ளும்.
அத்தகைய கவின் மிகு காட்சிகள் ஆயிரம் இலக்கியத்திற்கு சமம்!.

சில துணிச்சலான சிட்டுக்குருவிகள் மட்டும் ஆட்கள் நெற் கதிர்களை அறுத்து போடும் இடத்திற்கு அருகிலேயே நின்றுக் கொண்டு பூச்சிகளை பிடிக்கும்.

அரி காடை (அறுத்து போட்ட அரிகளில் அமர்ந்து இருக்கும் அதனாலயே அந்த பெயர்), கவுதாரி, கானாங் கோழி போன்ற பறக்க இயலா கோழியினங்கள் அறுவடை நடைபெறும் வயல்களில் மனிதர்களிடமிருந்து கூப்பிடு (ம்) தூரத்தில் இருந்துக் கொண்டு புச்சிகளை பிடிக்கும். இத்தகைய அரிய குருவியினங்கள் இன்று அழிவின் பிடியில் சிக்கியுள்ளது.

மொபைல் போன்களால் ஆபத்து.

களங்கள், வீட்டு முற்றம், மளிகை கடைகள், தானியத் தோட்டங்கள், உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகள், தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், வீட்டின் கூரை என்று மனிதன் புழங்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிட்டுக்குருவிகள் மொபைல் போன் களின் வருகையால் 90 சதவீதம் அழிந்துவிட்டன என்கின்றன ஆய்வுகள்.

மொபைல் போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது. அதோடு மீதமுள்ள குருவிகளின் கருப்பையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மெல்ல மெல்ல அருகி வரும் சிட்டுக்குருவியை காப்பது நமது கடமை.

குருவிகளை காக்கும் வழி.

1 பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிப்பதை தவிற்போம்.
2 சிறிய வீடானாலும், அபார்ட்மெண்டானாலும் குருவிகளை பாதுகாக்க சிறிய தோட்டங்களை பால்கனியில் அமைக்கலாம்.
3 வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து குருவிகளுக்கு உணவிடலாம்.
4 குருவிகள் குடிக்க சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
5 முக்கியமாக ஜன்னலில் வந்தமரும் குருவிகளை 'அச்சூ' என்று விரட்டாத மன நிலை வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதியென்ற பாரதியின் கனவை புத்துயிர் பெறச் செய்வோம்'.

வெள்ளி, ஜூலை 31, 2009

புளிய மரமும் நானும்...





புளிய மரமும் நானும்...




-தோழன் மபா










எனது பால்யகால வாழ்வில் புளியமரதிற்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. என்ன இவன் பேயாக இருந்திருப்பானா என்று கேட்காதீர்கள்? வைக்கம் முகமது பஷிர் சொல்வது போல் எனது 'பால்யகால சகி' எங்கள் வீட்டு புளிய மரம். திருவாலங்காட்டில் ரயிலடி தாண்டி நடுத் தெருவில் எஙகள் வீடு. ஓடு வேயிந்த இரண்டு சுற்று உள்ள வீடு. ஒரு பக்கம் எஙகள் வீடு, அடுத்தப் பக்கம் எஙகள் பெரியண்ணன் வீடு. வீட்டின் கொல்லைப் புறத்தில் அந்த புளிய மரம். தப்பு ...தப்பு ...புளிய மரம் இல்லை, புளிய மரங்கள். இரண்டு புளிய மரங்கள் காதலன் காதலி போல் பின்னி பிணைந்து இருக்கும்.

அந்தளவிற்கு நெருக்கம்.


தாழ்வாக இருக்கும் கிளையில் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு தொங்குனவாகில் ஏறினால் சர சர வென்று உச்சி மரத்திற்கு ஏறிவிடலாம். அந்தளவிற்கு எனக்கும் என் புளியமரதிர்க்கும் இணக்கம் உண்டு. இரு மரங்கள் இணைந்தே இருப்பதால் பாதுகாப்பைப் பற்றி பயம் இல்லை. என் வயது ஒத்த பசங்களுக்கு நான் தான் தலைவன் என்பதால், என்னை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். கபடி தான் எங்களது பிரதான விளையாட்டு. புளிய மரத்திற்கு கீழே தான் நாங்கள் கபடி விளையாடும் இடம் இருப்பதால், புளிய மரத்தில் வவ்வால் தொங்குவது போல் எப்போதும் நாங்கள் தொங்கிக் கொண்டு இருப்போம் அல்லது மரத்தில் தூங்கிக் கொண்டு இருப்போம். அந்தளவிற்கு புளிய மரத்தை எங்களது வசதிக்காக மாற்றி இருந்தோம்.



புளிய மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கும் என்று சொன்னேன் அல்லவா ? அந்த இடம் தான் புளிய மரத்தின் மடி. மிகவும் பாதுகாப்பான இடம். ஒரு மாதிரி கிண்ணம் போல் இருக்கும், நாம் மிக எளிதாக பொருந்தி அமரலாம். கால்களை மரத்தின் இருப் பக்கமும் போட்டுக் கொண்டால் மிக பாதுகாப்பாக அமர்து இயற்கையின் அந்த சுகமான தாலாட்டை அனுபவிக்கலாம். மரம் மிக மெதுவாக அசைந்து ஆடும். புளிய மரத்தின் இலைகள் மிக சிறியது என்பதால், சூரிய கதிர்கள் மிக அழகாக ஊடுரிவி நம் மேல் இதமாக படும்.



சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் 'தாய்லந்து' நாட்டின் 'தாய் எக்ஸ்போ ' கண் காட்சி அண்மையில் நடைப்பெற்றது. அங்கு அவர்களது பாரம்பரியமான தின் பண்டம் ஒன்று வைத்து இருந்தார்கள், அது என்ன தெரியுமா? புளியம் பழத்தின் மேல் சீனி தூவி அழகான பிளாஸ்டிக் கண்டைனரில் அடுக்கி இருந்தார்கள். மக்கள் மிக ரசித்து, ருசித்தார்கள் . நானும் வாங்கலாம் என்று போனேன், பிறகு ஒரு எண்ணம் வந்தது 'நமக்கு தெரியாத புளியம் பழமவென்று, வாங்காமல் தெரிம்பினேன். இல்லத்திற்கு வந்த பிறகுதான் வாங்காதது பெரும் வருத்தமாக இருந்தது.



போகட்டும் கதைக்கு வருவோம்...



புளிய மரத்தில் நான், குண்டுமணி, ரமேஷ், கலியபெருமாள், லோகநாதன் என்று ஒரு பட்டாளமே விளையாடிக் கொண்டு இருப்போம். மரத்தில் படுத்து தூங்க வசதியா ஒரு பரண் அமைத்து இருந்தேன். மூங்கில் தட்டியை, இரு மரத்தின் கிளைகள் வரும் இடத்தில் படுப்பதிற்கு வசதியாக அமைத்து, அதன் மேல் பெட் சீட், தலகாணி எல்லாம் வைத்து பாதுகாப்பாக அங்கு தூங்கலாம். அந்த அளவிற்கு யனது படுக்கையை தயார் செய்து இருந்தேன். அங்கு ரேடியோ வைக்க, முகம் பார்க்கும் கண்ணாடி மாட்ட என்று, என்னால் முடிந்ததை எல்லாம் மேலே கொண்டு வைத்து இருந்தேன்.

அங்கு எப்போதும் ஒரு சுவையான பானம் செய்வோம். பழுக்காத சதைப் பிடிப்பான, செம் புளியம் பழத்தை ஒரு பாத்திரத்தில் கரைத்து கொள்வோம். கூடவே நாட்டுசர்க்கரை , உப்பு, அரைத்த மிளகாய் தூள் இதையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்தால், புளிப்பு, இனிப்பு, கார்ப்பு என்று பலவித சுவை கொண்ட நீங்கள் விரும்பும் ஒரு பானம் கிடைக்கும். இதை நீங்கள் குடிக்கும் சமயம் நிச்சயம் உங்கள் ஒரு கண்ணை மூடுவீர்கள். புளிப்பின் காரணமாக...



அப்படிதான் ஒரு நாள்....

-தொடரும்.

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...