உலகிலேயே அதிகம் சினிமா தயாரிக்கும் நாடு இந்தியாதான். அதே போல் சினிமா திரையரங்குகளும் இந்தியாவில்தான் அதிகம் இருக்கின்றன. சினிமா- கிரிக்கெட் இல்லாமல் இந்தியனின் வாழ்க்கை இல்லை. இந்தியர்களின் ஆன்மா சினிமாவில் இருப்பதாக ஒவ்வோரு இந்தியனும் நம்புகிறான் அல்லது நம்ப வைக்கப்படுகிறான்.
தினந்தோறும் சினிமா நட்சத்திரங்களை பார்க்காமலோ, அவர்கள் சொல்வதை கேட்காமலோ அல்லது படிக்காமலோ இருந்தால் நிச்சயம் நீங்கள் உலகத்தை விட்டு வெளியில்தான் இருக்கவேண்டும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சினிமா எந்தவகையிலாவது உங்கள் மீது திணிக்கப்பட்டுவிடும். அப்படிப்பட்ட இந்திய சினிமாவிற்கு இது நூறாண்டு!.
1913ல் இந்தியா வந்த சினிமா இன்று நூறு ஆண்டுகளை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. சினிமா இளமையுடன் இருப்பதற்கு காரணமே ரிளே ரேஸ் போல, பலர் அதை காலம் காலமாக தூக்கி சுமப்பதால்தான்.
இந்தி, தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம்,வங்காளம், மராத்தி, போஜ்பூரி, ஒரியா,குஜராத்தி,அஸ்சாம்,பீகாரி, ஹரியான்வி,கொங்கனி, கோஸ்லி (சம்பல்பூர்),மணிப்பூரி, ராஜஸ்தானி, காஷ்மீரி,பஞ்சாப்,துலு,சிந்தி என்று இந்தியாவின் பெருவாரியான மொழிகளில் சினிமா தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 300 கிமி தாண்டினாலே மொழியும் கலாச்சாரமும் மாறுபட்டுவிடுகிறது. அதனாலயே இங்கு பல பிராந்திய மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்தி, தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளிவருகின்றன. இதில் தமிழ் நாட்டில் சினிமாவின் ஆதிக்கம் மற்ற மொழிகளை விட அதிகம் என்றே சொல்லவேண்டும். . தமிழர்கள் ஒரு படி மேலே போய், தங்களை ஆளக் கூடிய தலைவர்களை சினிமாவில் தேடக்கூடிய உட்சப்பச்ச(?) அறிவு படைத்தவர்கள். தமிழகத்தை பொறுத்தவரை அரசியலுக்கு வர கோடம்பக்கம்தான் பயிற்சி பட்டரை?!.
உலகில் வேறு நாடுகளில் சினிமா இல்லையா...?
இங்கு மட்டும் ஏன் இந்தளவிற்கு கொண்டாடப்படுகிறது....?
நமது கலாச்சாரம், கலை, பண்பாடு என்று பட்டியல் போட்டாலும் உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால் நமது 'அறியாமை'தான் நம்மை இந்தளவிற்கு சினிமாவை நேசிக்கச் செய்கிறது. எதையும் வாய் பிளந்து பார்க்கும் அதிதீவிர குனம்தான் சினிமாவை வாழவைக்கிறது.
எம்.ஜி.ஆர் ஒரு முறை தேனி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்ற போது, அங்கிருந்த ஒரு வயதானவர் "தம்பி அந்த நம்பியார் பயல்ட்ட மட்டும் கொஞ்சம் சாக்கிரதையா இரு" என்று அறிவுறை சொன்னாராம். அப்படிதான் தமிழர்கள் சினிமாவை பார்த்தார்கள். நடிகர்கள் அவர்கள் திரையில் காட்டும் வாஞ்சை, வீரம், ஈரம், தியாகம் இவையெல்லம் தமிழ் ரசிகனைப் பொருத்தவரை உண்மை!.
சினிமாவிற்கு முன்பு இவர்கள் நாடக நடிகர்களை தூக்கி வைத்து கொண்டாடினர். எங்கோ ஒரு குக்கிராமத்தில் விடிய விடிய நாடகம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தொடங்கும் நாடகம் விடியும் போதுதான் முடிவடைகிறது. ஒரு வாரத்திற்கு மேலாக அந்த நடிகர்கள் அந்த கிராமத்தில் தங்கி நடிக்கிறார்கள். இரவில் பார்த்த நடிகர்களை பகலில் பார்க்க வயது வித்தியாசம் இன்றி பெருசு முதல் சிறிசுவரை தேவுடு காத்துக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலர் கொஞ்சம் முன்னேறி அந்த நடிகர்களுக்கு டீ, பீடி, சிகரேட்,வெற்றிலைப்பாக்கு வாங்கிதந்து ஊரில் தங்களது கொளரதையை(?) உயர்த்திக் கொள்வார்கள்.
அரிதாரம் பூசி ஆடை அணிந்து மேடையை ஆளும் நாடக நடிகர்களின் பகல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பாமரத்தனமான எண்ணம்தான் இன்றைய கார்ப்பரேட் மனிதர்களிடமும் காணப்படுகிறது. அதுதான் இன்றைக்கு பல்கி பெறுகி 100வயதை தொட்டு இருக்கிறது. இந்திய சினிமாவும் கோடிகளில் புரண்டுக் கொண்டு இருக்கிறது?.
அப்படி என்றால் இந்த கட்டுரை சினிமாவிற்கு எதிரானதா....? 'இல்லை' என்பதையோ 'ஆம்' என்பதையோ நீங்கள்தான் தீர்மாணிக்கவேண்டும்.
சாதி, மதம் என்று பிரிந்துக் கிடக்கும் இந்திய திருநாட்டில், மற்றொரு பிரிவினையிலும் மனிதன் சிக்கிக் கொண்டு இருக்கிறான். அது யாருக்கு ரசிகனாய் இருப்பது என்று? நாம் பலருக்கு ரசிகனாய் இருக்கலாம், ஆனால் யாருக்காவது ஒருவருக்குதான் தீவிர ரசிகனாய் இருக்க முடியும். அந்த தீவிரத் தன்மை ஒன்று நம்மை சாகடித்திருக்கும் இல்லையென்றால் அரசியலில் இருக்கச் செய்திருக்கும்.
எம்ஜிஆர் சிவாஜி முதற்கொண்டு, ரஜினி கமல் கடந்து அஜித் விஜய் வரை தமிழ் ரசிகன் ரகவாரியாய் பிரிந்துதான் கிடக்கிறான். நடிகனின் வீரா வேச நடிப்பில் மயங்கிக் கிடக்கும் ரசிகன் முதல் நாள் முதல் ஷோவிற்கு போவதில் தொடங்கி பேனர் வைப்பது, கொடி கட்டுவது, நடிகனின் படத்திற்கு பால் அபிஷேகம் செய்வது, பணம் வசூல் செய்து அன்னதானம் போடுவது, ரசிகர் மன்றத்தில் இணைந்து கிரிகெட் போட்டி நடத்துவது, கண்தானம், இரத்த தானம், பிறர் உயிர்தானம்(?) என்று படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையான அரசியலுக்கு வந்துவிடுகிறான். அப்படி வந்தவர்கள்தான் தமிழக அரசியல் களத்தில் இருக்கும் முன்னாள் இன்னாள் அமைச்சர் பெருமக்களும், எம்.எல்.ஏக்களும் கல்வி தந்தைகளும்.
தீவிர ரசிகன் என்ற நிலையில் இருந்து பரிணாமம் பெற்று இன்று கல்வித் தந்தைகளாக, தொழிற் அதிபர்களாக வலம் வருகிறார்கள். அந்த லிஸ்ட் வேண்டும் என்பவர்கள தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரி தலைவர்களின் பூர்வாசிரமத்தை பாருங்கள் புரிந்துவிடும்.
ரசிகனாய் இருப்பதற்கும் அதி தீவிர ரசிகனாய் இருப்தற்கும் என்ன வித்தியாசம்....?
சராசரி சினிமா ரசிகனிடம் நீங்கள் உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பேசலாம். அதி தீவிர ரசிகனிடம் அதை எதிபார்க்க முடியாது. அவன் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் வட்டச் செயலாளர் போலவே பேசுவான். நடிகர் வரும்போது கூட்டம் சேர்ப்பது, எதிர்தரப்பு நடிகரின் பேனரை கிழிப்பது, அவரது ரசிகனை பதம்பார்ப்பது என்று முழு நேரப் பணியாக ரசிகர் மன்ற வேலையை செய்வார். அதி தீவிர ரசிகனுக்கு வேறு எந்த முக்கிய வேலையும் இல்லாததால் அவர் ரசிகர் வேலையே முக்கிய வேலையாக செய்வார்.
சாதா ரசிகரான நீங்கள் பின்னாளில் உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ கல்லூரி சீட்டு வேண்டி அந்த தீவிர ரசிகரிடம்தான் போய் நிற்கவேண்டும்.
'தமிழகத்தை என் தலைவன் ஆளனும், நாங்க வாழனும்!'
முன்பே சொன்னதுபோல, தமிழ் நாட்டு மக்கள் தனது தலைவரை திரையில்தான் தேடுகிறார்கள். அவர்கள் திரையில் காட்டும் வீரம், ஈரம்,அன்பு, நாட்டுப்பற்று,தியாகம், தொண்டை கிழிய பேசும் வசனம் எல்லாம் இவனுக்குள் மாயஜாலம் செய்கிறது. 'தமிழ் நாட்டை என் தலைவன் ஆளனும், நாங்க வாழனும்' என்ற கொள்கையோடு களம் இறங்கும் ரசிகன், அடுத்த சில ஆண்டுகளில் எம்எல்ஏவாகி விடுகிறான். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தேமுதிக எம்.எல்.ஏக்களை பாருங்கள், அதில் பெருவாரியான சட்டப் பேரவை உறுப்பினர்கள் விஜயகாந்தின் அதி தீவிர ரசிகர்கள்தான்.
நடிகர்கள் நாடாளக்கூடிய எம்ஜியாரிஸத்திற்கு யார் காரணம்?
-தொடரும்