இனி எல்லா இழவுகளும், சென்னையில் நடைபெறுமோ என்று அச்சமாக இருக்கிறது. வட இந்தியாவில் அவ்வப்போது நிகழும் குண்டு வெடிப்புகள் நமக்கு செய்தியாகத்தான் தரப்பட்டது. அனுபவ ரீதியான பாதிப்புகள் என்பது சென்னையில் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அமைதிப் பூங்காவாக சென்னை இருந்து வருகிறது. இன்று நடந்த குண்டு வெடிப்பு நமக்குள் பெரிதும் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் ரீதியாக சென்னையின் முகம் சற்று மாறத் தொடங்கியதுமே இந்த வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியலாக இருந்தாலும் சரி மதம் சார்பான அனுகுமுறையாக இருந்தாலும் சரி நடு நிலைப்போக்கையே இது நாள் வரையில் நாம் கடைபிடித்து வருகிறோம். நாட்டின் பிற நகரங்களில் நிகழும் மத ரீதியான தீவிரச் செயல்கள் கூட, சென்னையைவிட்டு தூரத்தில்தான் இருக்கும். இங்கு அனைத்து மதத்தினரும் நடு நிலை கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.
சென்னை சென்ரலில் திட்டமிட்டே இந்த குண்டு வெடிப்பு நடந்து இருக்கிறது. இதில் ஆந்திராவை சேர்ந்த அப்பாவி சுவாதி என்ற இளம் பெண் தனது இன்னுயிரை துறந்திருக்கிறாள். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் வட மாநிலத்தை சார்ந்தவர்கள். பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலே இந்த இரட்டை வெடி குண்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. சென்னையில் வெடிக்கும் வகையில் இந்த வெடி குண்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மீது அப்படி என்ன வன்மம் என்று தெரியவில்லை?.
சென்னை எப்போதுமே, எல்லோரையுமே சுய சுதந்திரத்துடன் வாழ வைக்கும் ஒரு நகரம். இங்கு நமக்கான உழைப்பின் பலனை, எவரது குறிக்கீடும் இல்லாமல் நாம் அனுபவிக்கலாம். இந்த நகரத்தின் மீதான அன்பு என்பது, இங்கு குடிபெயர்ந்த மனிதர்களிடம் வாஞ்சையில்லாமல் விரவிக் கிடக்கிறது. பிற மாநிலத்தவர்கள் கூட தனக்கான தனியோரு Gated Community குடியிருப்புகளை சர்வ சுதந்திரமாய் அமைத்துக் கொள்ள உரிமை அளிக்கும் ஒரு மாபெரும் பரந்த இதயம் கொண்ட நகரம். வேப்பேரி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் மார்வாரி மற்றும் ஜெயின் சமூகத்தினர் தங்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். வந்தாரை வாழ வைப்பதில் சென்னைக்கு என்றுமே முதல் இடம்.
பெண்களிடம் பேசுவதில் சென்னை இளைஞர்களுக்கு இன்றும் தயக்கம் இருக்கிறது என்கிறார் நேகா குப்தா என்ற கல்லூரி மாணவி. இவர் வட இந்தியாவிலிருந்து சென்னையில் தங்கி கல்வி பயிலுகிறார். அந்தளவிற்கு தனி மனித ஒழுக்கம் இன்னும் சென்னையில் கடைபிடிக்கப்படுகிறது. மும்பை பெங்களூரு போன்ற மேற்கத்திய கலாச்சாரத்தை ஒரு எல்லைக்குள்ளேதான் நாம் வைத்திருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் சில பாலியல் சீண்டல்களைவைத்து நாம் மொத்தமாய் எடை போட்டுவிடக் கூடாது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் விபச்சார விடுதிகள் அரசின் துணைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆனால் 80களில் சென்னையிலும் அப்படி ஒரு 'ரெட்லைட் ஏரியாவை' ஏற்படுத்த சர்வதேச தாதாக்கள் முயன்றபோது.... அதை முளையிலேயே கிள்ளி எறிந்தது தமிழக காவல் துறை. இரவு எந்த நேரமானாலும் சென்னையின் பிரதான பகுதிகளில் எந்தவித அச்சமுமின்றி நாம் பயணிக்கலாம். இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் அன்று!. அனுபவத்தில் கண்ட ஒன்று. சென்னை மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் நகரம் எப்போதும் பாதுகாப்பாய் இருக்கிறது. காவல் துறையினருக்கு அரசியல் குறிக்கீடு இல்லையென்றால், இவர்களது பணி இன்னும் சிறப்பாகவே இருக்கும்.
முன்பெல்லாம் சென்னை சாலையில் ஒரு மனிதன் அடிப்பட்டு விழுந்தால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறி இருக்கிறது. சாலையில் ஒரு விபத்து என்றால் ஆயிரம் கைகள் உதவிக்கு வருகிறது. பைக்கில் சறுக்கி விழுந்தால் கூட, உடனே நாலு பேர் பைக்கை நிறுத்தி உதவிக்கு ஓடி வருகிறார்கள். அந்தளவிற்கு இங்கு மனித நேயம் காப்பாற்றப்படுகிறது. மனிதனுக்கு மனிதன் உதவி செய்யக் கூடிய மன நிலையில் சென்னை மக்கள் வாழ்கிறார்கள்.
சென்னையை பாதுகாப்பதில் காவல் துறைக்கு மட்டும்தான் கவலையா, நமக்கு இல்லையா.....?. என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது. சென்னையில் கிட்டதட்ட 9 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஆனால் காவல் துறையினரின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் இல்லை. 413 பேருக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் இங்கு பணியாற்றுகின்றனர். இன்னிலையில் முழுமையான பாதுகாப்பு என்பது இயலாத ஒன்றாகவே இருக்கிறது.
பெற்ற அன்னைக்குப் பிறகு நம்மை காப்பாற்றும் சென்னையை நாமும் காப்பாற்றுவோம். எல்லோரும் அச்சமின்றி வாழ நமக்கான பாதுகாப்பை நாம் முன்னிறுத்துவோம். சென்னையில் மத தீவிரவாதத்தை வேரறுப்போம். மதங்களை கடந்து, சாதி இனம் கடந்து நமக்கான சென்னையை பாதுகாப்பதில் நாம் நமது பங்களிப்பைத் தருவோம். மத சாயத்தை சென்னையின் மீது பூசுவதை நாம் அனுமதிக்க வேண்டாம். மத ரீதியிலான தாக்குதல்களை நாம் முறியடிப்போம். இனி ஒரு குண்டு வெடிப்பு சென்னைக்கு வேண்டாம். மத தீவிரவாதத்தை ஒழித்து மனிதநேயம் காப்போம். கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்.
"ஒன்றிணைவோம் உறுதிபடுவோம்!"
-தோழன் மபா.