சென்னை புத்ததக் காட்சி நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அதையொட்டி அடுத்த பத்து நாட்களுக்கு (ஜனவரி1 வரை) நீங்கள் படித்த புத்தகங்களை சிறு குறிப்பு கொண்டு வெளியிடுங்கள் என்று 'புத்தகம் பேசுது' மாத இதழ் வாயிலாக பாரதி நாகராசன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு இருந்தார்கள்.
இன்றைய தேதியில் நமது தமிழ் இளைஞர்கள் அறிவார்ந்த புத்தகங்களை தேடிச்சென்று படிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அந்த வகையில் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய புத்தகம் தமிழ் பேராசிரியரும் பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் எழுதிய 'இந்து தேசியம்'.
நான் இந்துவல்ல நீங்கள்?
சங்கர மடம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,
இந்து தேசியம்,
இதுதான் பார்ப்பனியம்,
புனா ஒப்பந்தம் ஒரு சோகக்கதை
இந்திய தேசியமும் திராவிட தேசியமும் : உறவுகளும் முரண்களும் என்று ஐந்துக்கும் மேற்பட்ட குறுநூல்களின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.
இந்து, திராவிடம், நீதிக்கட்சி, வேதம், பார்ப்பனீயம்,சாதியம், மடங்கள், தமிழர் பண்பாடு என்று இன்றைய இளைஞர்கள் விடை தேடித் துடிக்கும் பல்வேறு கேள்விகளுக்கான விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
எளிய நடையும், பொட்டிலடித்தாற் போன்ற ஆதாரங்களும், வரலாற்றுத் தரவுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வெளியிட்ட நாள் முதல் பல பதிப்புகளை கண்டு, தமிழர்களிடையே ஏக போக வரவேற்புக் கண்டதே இந் நூலுக்கான வெற்றியாகும்!