படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.
ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமான திரைக்கதையாக்குவதில் சேட்டன்கள் மகா சமர்த்தர்கள். அப்படி நெட்பிளிக்ஸில் வந்து கவனம் பெற்ற மலையாள படம்தான் 'அடியோஸ் அமிகோ' (படம்: தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது.)
அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கும் ஒருவனுக்கு, ஆஸ்பத்திரி செலவுக்கு 25 ஆயிரம் தேவைப்படுகிறது. தங்கையிடமிருந்து போன் வந்து கொண்டே இருக்கிறது. யார்யாரிடமோ பணம் கேட்கிறான். எல்லோரும் கை விரிக்க....ஏற்கனவே வாங்கி கொடுக்காமல் இருக்கும் நண்பனிடமே மீண்டும் கேட்கிறான். குடிக்க பணம் கேட்கிறான் என்று நினைத்து அவனை திட்டி தீர்க்கும் அவனது நண்பன்; முடிவில்... "எதையாவது பண்ணி தொலைக்கிறேன், பஸ்ஸ்டாண்டுக்கு வா" என்கிறான்.
அவன் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்கிறான்.
கிடைக்கும் பஸ்ஸில் ஏறி, நினைக்கும் இடத்தில் இறங்கி ஜாலியாக ஊர் சுற்றும், ஒரு பெரிய பணக்காரரின் மகன் ஒருவன் மகா குறும்புக்காரன், மகா போதைக்காரன். கத்தையாக பணத்தை வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு குடித்துவிட்டு பணத்தை வாரியிறைக்கும் ரகளையான மனிதன் அவன், அந்தப் பஸ்ஸ்டாண்டிற்கு வருகிறான்.
25 ஆயிரம் பணம் வேண்டி காத்திருக்கும் அவனும் (சூரஜ் வெஞ்சரமூடு), கத்தையாக பணம் வைத்திருக்கும் இவனும் (ஆசிப் அலி), அந்தப் பஸ்ட்டாண்டில் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள்.
அதன் பிறகு என்ன நடக்கும் ? என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாக, புது ரூட் பிடித்து பயணிக்கிறது 'அடியோஸ் அமிகோ' திரைப்படம்.
அன்றாட வாழ்வாதரத்திற்காக போராட வேண்டிய எளிய மனிதராக தன்னை ஒப்பிட்டு கொண்ட சூரஜ், பாத்திரம் அறிந்து விளையாடி இருக்கிறார்.
இதில் நிறைய அவமானங்களை சந்திக்கவேண்டிய தருணங்களை அப்படியே நமக்கும் கடத்திவிடுகிறார். என்னவொரு தேர்ந்த நடிப்பு, ஆசம் !!
சூரஜ் என்ற தேர்ந்த நடிகனுக்கு இணையாக டஃப் கொடுத்து நடித்திருக்கிறார் ஆசிப் அலி. பணக்கார வீட்டுப் பிள்ளையாக குடி போதையில் அவர் அடிக்கும் லூட்டிகள் A1 ரகம்.
இவரது அடாவடித்தனத்தால் சூரஜ் போன்ற இவரது தந்தை உட்பட அனைவரிடமும் அவமானங்களை சந்தித்துள்ளார்.
படம் முழுவதுமே இருவர் மட்டுமே பெரும்பாலான நேரங்கள் திரையில் இருப்பதால் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், சுகமான நகர்வுகளால் அதை நாம் உணராமல் செய்துவிடுகிறார் படத்தின் இயக்குநர்.
மிக எதார்த்தமான கதைக் களம் நமக்குள் ஒரு ஆசுவசத்தை ஏற்படுத்துகின்றது. அந்த இழையோட்டமான பிரதிபலன் பாராத அன்புக்கு படத்தின் முடிவு ஒரு ஜீவனை தந்துவிடுகிறது. அதன் தாக்கம் நம்மை கண்கலங்க செய்துவிடுகிறது.
கதை : தங்கம்
இயக்கம்: நஹாஸ் நாசர்.
பி.கு: 'அடியோஸ் அமிகோ' என்ற ஸ்பானிய (ஸ்பானிஷ்) மொழிக்கு 'போய்வருகிறேன் நண்பா', அல்லது 'விடைபெறுகிறேன் நண்பா' என்ற அர்த்தம்.
-மபா
#adiosamigomovie
#அடியோஸ்அமிகோ