வெள்ளி, ஜனவரி 16, 2009

புத்தகக் காட்சியில் நான் வாங்கியது என்ன?

சென்னை புத்தக காட்சிக்கு செல்ல இன்று (கன்னிப் பொங்கல் ) தான் நேரம் கிடைத்தது. அரங்கு முழுவதும் சுற்றிப் பார்க்க இரண்டு நாளாவது வேண்டும். இந்த வருடம் 600 அரங்குகளுக்குமேல் காட்சிக்கு வைத்து இருந்தனர். BAPASI (தென் இந்திய புத்தக தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியிட்டாளர்கள் சங்கம் ) சிறந்த முணைப்புடன் மக்கள் சுதந்திரமாக வாங்கும் வண்ணம் அரங்குகளை அமைத்து இருந்தனர்.

பபசியின் தலைவர் காந்தி கண்ணதாசன் மற்றும் செயலர் சண்முகம் இவர்களின் அயராத உழைப்பினால், வருடம் தோறும் சென்னை புத்தக கட்சி விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

எனது முதல் சுற்றில் (அதாங்க ... இரண்டு வரிசை தான் சுற்ற முடிந்தது) நான் வாங்கிய புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

  1. 'நரிக்குறவர் இனவரைவியல்' கரசூர் பத்மபாரதி எழுதியது. இந்திய-ஆரிய மொழிச் சமூகமான நரிக்குறவர் இந்தியா முழுமைக்கும் புலம்பெயர்ந்து நிலைநிறுத்திக் கொண்டுள்ள அசைவியக்கத்தை இந்த நூல் முனைப்புடன் எடுத்துரைக்கிறது. பொதுவாக நரிக்குறவர் பற்றி அறிந்துக் கொள்ள எல்லோரும் ஆவலாக இருப்பார். அதற்கு இந்நூல் துணை புரியும். வெளியீடு: தமிழினி. விலை Rs.160/- பக்கம்: 270
  2. 'குமரிக்கண்டம்' - ம. சோ.விக்டர். தமிழர்களின் தாயகம் எது? முதல் மாந்தவினத் தோற்ற நாடு எது ? உலகின் முதல்மொழி எங்கே அறியப்பட்டது? முதல் நாகரிகம் தோன்றிய நாடு எது ? போன்ற கேள்விகளுக்கு விடைக் காண ... நீங்கள் குமரிக் கண்டம் படிக்கவேண்டும். தமிழ் மையம் சார்பாக நல்லோர் பதிப்பகம் மூலமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு, உயர்தர காகிதம் என்று புத்தகத்தை மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளனர். விலை Rs.300/-
  3. 'தீண்டப்படாத நூல்கள்' - ஸ்டாலின் ராஜாங்கம். தலித் முன்னோடிகளின் பதிப்புப் பணிகள் குறித்த வரலாற்றின் விடுப்பட்ட பதிவுகள். அயோத்திதாசர், எம்.சி.ராஜா. இரட்டைமலை சீனிவாசன் முதலிய தொடக்க கால தலித் அறிஞர்களின் பங்களிப்பின்றி நவீன தமிழகம் இல்லை என்பதை மிக அழுத்தத்தோடு கூறும் நூல். சொல்ல மறந்த அல்லது மறுத்த தலித்துகளின் தமிழ் பங்களிப்பு. வெளியீடு: ஆழி. Rs.70/-
  4. 'வலி' - அறிவுமதி. ஈழத்து தமிழன் இழந்ததின் மிட்சம் மீதங்கள் இங்கே வலி யாக சிதறி இருக்கிறது. மடக்கி மடக்கி எழுதப்பட்ட கவிதைகளில் தமிழச்சியின் இரத்தமும், அழுகையும் , துயரமும் ஓலமிட்டு அழுகின்றன. வெளியீடு: தமிழ்மண். Rs.70/-
  5. 'யூதர்கள்' வரலாறும் வாழ்க்கையும் - முகில். யூதர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், திருமணம், வழக்கை முறை என்று யூதர்களை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பு. வெளியீடு: கிழக்கு. Rs.100/-
  6. 'செங்கிஸ்கான்' - முகில். இதுவும் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு தான். சாமானியன் ஒருவன் சாம்ராஜியத்தை கட்டி அமைத்த சாகச சரித்திரம். Rs.80/-
  7. 'மதராசபட்டினம்' - நரசய்யா. சென்னை மாநகரத்தின் கதை. "சென்னை மா நகரத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? " என்று இனியும் யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி வந்திருக்கிறது இந்த நூல். வரலாற்று சம்பவங்களோடு வெளிவந்திருக்கும் இன் நூல் நிச்சயம் ஒரு பொக்கிஷம் தான். வெளியீடு: பழனிப்பா பிரதர்ஸ். Rs.275/-

இந்த புத்தகங்களைப் பற்றி படித்து விட்டு கூறுகிறேன். உங்களுக்கு தெரிஞ்ச நல்ல புத்தகங்கள் இருந்தாலும் சொல்லுங்கள். இனி நாளையும் புத்தகக் காட்சிக்கு போகவேண்டு.

- தோழன் மபா

1 கருத்து:

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

சில கனமான புத்தகங்களைத்தான் வாங்கியிருக்கிறீர்கள். இனிமையான வாசிப்பனுபவம் அமைய வாழ்த்துகள்.புத்தகங்களைப் படித்த பின் உங்கள் பார்வையை பகிரவும்.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...