வெள்ளி, நவம்பர் 06, 2009

‘சீன நலனை முன்னெடுக்கிறார் இந்து ராம்’


ஈழ விடுதலைக்கு எதிராகவும், ராஜபக்சேவி்ற்கு ஆதரவாகவும், அதே நேரத்தில் திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எதிராகவும் தனது நாளிதழில் செய்திகளையும், கட்டுரைகளையும் தீட்டும் தி இந்து நாளேட்டின் ஆசிரியர் என். ராம், சீன நாட்டின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறார் என்று மே 17 இயக்கம் நடத்திய கருத்தரங்கில் குற்றம் சாற்றப்பட்டது.

‘தி இந்து நாளிதழும், அதன் ஆசிரியர் என்.ராமும் வாசகர்களை ஏமாற்றுவது ஏன், ஊடகங்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை சென்னை தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தேவநாயகம் பள்ளியில் மே 17 இயக்கம் கருத்தரங்கத்தை நடத்தியது.

தமிழர்கள், ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மையை மறைத்து எப்படியெல்லாம் தி இந்து கட்டுரை எழுதியது என்பதை இந்தக் கருத்தரங்கில் பேசிய ஒவ்வொருவரும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர்.

இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஜி. திருமுருகன், இந்தியாவை நேசித்த ஈழத் தமிழர்கள் சிறிலங்க இனவெறி அரசால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதனால், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் கடற்பகுதி இந்தியாவிற்கு எதிரான சீனா போன்ற சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் உதவியைப் பெற்று ஒழித்த சீனா, தென்னிலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிற்குத் தாரை வார்த்து, அதனை நன்கு காலூன்ற இடமளித்துவிட்டது. இது மட்டுமின்றி, இலங்கையின் மற்ற இடங்களிலும் சீனா பலமாகக் காலூன்றி வருகிறது” என்று கூறிய திருமுருகன், சீனா அமைத்துள்ள தளத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு உட்பட்டுத்தான் கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளது என்று கூறினார்.

இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் பக்கம் சார்ந்த தி இந்து எழுதி வருகிறது என்று குற்றம் சாற்றிய திருமுருகன், இந்தியாவை 20, 30 துண்டுகளாக உடைக்க வேண்டும் என்று சீனத்தின் சர்வதேச இராணுவ ஆய்வு மையம் தனது இணையத்தளத்தில் எழுதியபோது அது குறித்து தி இந்து எந்தணச் செய்தியையும் வெளியிடாதது மட்டுமின்றி, அதுகுறித்து சீனா அரசு கருத்தேதும் கூறாத நிலையில், அதனை ‘அதிகப்படியான கருத்துக் கூறல்’ என்று கூறி தி இந்து அதனை சாதாரணமாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டினார்.

தி இந்து நாளேடு தொடர்ந்து ஆதரித்து எழுதிவந்த சிறிலங்க அரசு தனது நாட்டு மக்கள் மீதே தொடுத்தப் போரில் எப்படிப்பட்ட போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது என்பதை அமெரிக்க அயலுறவு அமைச்சகம் தயாரித்த அறிக்கையை மேற்கோள் காட்டி விவரித்தார் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் எம். சுப்ரமணியம்.

மனிதாபிமானமும், உண்மை கூறல் வேண்டு்ம் என்ற நேர்மை சற்றும் இன்றி எவ்வாறு ஒவ்வொரு பிரச்சனையிலும் தி இந்து நாளிதழ் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது என்பதை தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

உலகமே அதிர்ச்சியுற்ற செஞ்சோலைப் படுகொலையை கண்டுக்காதது, போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் போராடியபோது அதனை தமிழ் வெறித்தனம் என்று சித்தரித்தது, பாலஸ்தீன விடுதலைப் போரையும், ஹமாஸ் இயகத்தையும் சரியாக தனது செய்திகளில் குறிப்பிட்ட அதே நேரத்தில், ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து உண்மையை மறைத்து எழுதி வந்தததையும் எடுத்துக்காட்டிய அய்யநாதன், கச்சத் தீவுப் பிரச்சனையில் எப்படியெல்லாம் உண்மையை மறைத்து, தமிழ் மீனவர் நலனை கேவலப்படுத்தி எழுதியது தி இந்து என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினார்.

இறுதியாக உரையாற்றிய திபெத் விடுதலைப் போராளி டென்சிங், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், நலனிற்கும் திபெத் விடுதலைப் பெறுவதன் அவசியத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்புடைய திபெத்தும், அதன் மக்களும் இந்தியாவின் இயற்கையான நண்பர்களாக வரலாற்றுக் காலத்திலிருந்து திகழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

இந்தியாவை வளப்படுத்தும் ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்புத்திரா ஆகியன திபெத்தில் உருவாவது மட்டுமின்றி, இந்துக்கள் மிகப் புனிதமான இடமாக கருதும் கைலாயமும், மானசரோவர் நதியும் திபெத்தில் உள்ளதையும், ஆனால் திபெத் சீனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அங்கு இந்தியர்கள் அனைவரும் சென்றுவர முடியாத நிலை உள்ளது என்றும் கூறினார்.

இந்தியாவின் தெற்கிலுள்ள ஈழத்து விடுதலைப் போராட்டமும், வடக்கில் உள்ள திபெத்தின் விடுதலைப் போராட்டமும் ஒன்றிணைவது காலத்தின் அவசியம் என்றும் டென்சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தி இந்து நாளிதழின் உண்மைக்குப் புறம்பான போக்கை விமர்சித்து பத்திரிக்கையாளர்களும், வரலாற்றாளர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘பத்திரிக்கை அறமும் இந்து என்.ராமும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தை முதுபெரும் பத்திரிக்கையாளரும், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலருமான விடுதலை இராசேந்திரன் வெளியிட, அதனை டென்சிங் பெற்றுக் கொண்டார்.
www.tamilwebdunia.com
நன்றி வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...