வியாழன், ஜனவரி 14, 2010

எங்க ஊர் பொங்கல்....

விரிவான கட்டுரை ....







பொங்கல் வர பத்து நாள் இருக்கும் போதே எங்கள் ஊரில் 'பரப்பரப்புத் தொற்றிக்கொண்டுவிடும். பெருவாரியான வீடுகள் ஓடு மற்றும் கூரை வேய்ந்த வீடுகள் என்பதாலும், மண் தரை என்பதாலும் வீட்டு வேலைகள் நிறைய இருக்கும்.



காவிரி பாசனம் என்பதால், முப்போகம் விளையும் பூமி. சோற்றுக்கு வஞ்சனை இல்லாத ஊரு, எங்க ஊரு. திருவாலங்காடு; கும்பகோணத்திற்கும் மாயவரத்திற்கும் இடையில் காவிரி ஆற்றை ஒட்டி இருக்கிறது.

"சரி...! வாங்க எங்க ஊருக்கு போவோம்..."

மண் போடும் படலம்.

வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமனெயெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். சாணம் மொழுகி சும்மா... ஜில்லுன்னு இருந்த தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும் களங்களில் (மண் மேடுகளில்) கூடை கூடையாய் மண் எடுப்பார்கள்.

மண்ணை வீட்டின் வெளியே கொட்டி தண்ணீர் விட்டு, நல்லா சாணி மிதிப்பது போல் மிதித்து (ஊரில் உள்ள குஞ்சு குளவாங்களையெல்லாம் இறக்கி விட்டுவிடுவார்கள். அதுங்க 'தையா தக்கான்னு' குதிக்கும்.) எங்கள் பக்கம் களி மண் என்பதால் (களி மண் நீரை சேமிக்கும் திறன் கொண்டது), நன்றாக குழைந்து வரும். மண் பிசையும் போதே அதில் உள்ள சிறு கற்கள், சிலாம்பு, தூசி, ஓட்டாஞ் சில்லு ( அதாங்க... மண் பானை ஓடு) எல்லாம் எடுத்து விடுவார்கள்.

மண்ணை சிறு சிறு அளவில் எடுத்து, வீட்டின் தரையில் பூசிக் கொண்டு வருவார்கள். நன்றாக காய்ந்து வரும் பொது, கை அளவில் உள்ள கூழாங்கற்களை கொண்டு தரையை தேய்ப்பார்கள். தேய்க்கத்... தேய்க்க தரை வழ வழன்னு., அப்படியே... மொசைக் தரைபோல மாறும். அதுவரை தப்பித் தவறி கூட ஒரு பய ஊட்டுக் குள்ளாற நடக்க முடியாது. அப்படி ஒரு
கட்டுப்பாடு இருக்கும்.

கடைசியா ஒரு கோட்டிங் உண்டு. சாணிய நல்லா 'திக்' கா கரைச்சி தரையை மொழுகி எடுப்பார்கள். சாணி ஒரு நல்ல கிரிமி நாசினி.

பிற்பாடு அரிசியை ஊறவைத்து, ஆட்டுகல்லில் ஆட்டி , வீடு முழுவதும் அரிசி கோலம் போடுவார்கள். எந்த வீட்டு திண்ணையிலாவது ஒக்காந்திங்கன்னா கை காலெல்லாம் வெள்ளையாகிவிடும்.

நான் சொல்வது 25 / 30 வருடங்களுக்கு முந்தைய கதை. இப்போது எல்லாம் மாடி அல்லது சிமண்ட்டு தரை வீடுதான். இரவு 8மணிக்கு மேல் எவனும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. 'மானாட மயிலாட' பார்த்துக் கொண்டு காற்றாட உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்! எல்லாம் விவசாயிகள் என்பதால் ஊரை சுத்தி வயல் வெளிதான். பின்ன..! தஞ்சை மாவட்டம் எப்படி இருக்கும்?

வெள்ளை அடிக்கும் படலம்.

மண் போட்டு முடிந்ததும், சுண்ணாம்பு (கிளிஞ்சல் -கடல் மட்டி) வாங்கி ஒரு வாளி போன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு சுடு தண்ணீர் ஊற்றுவார்கள். தண்ணீர் பட்டதும் அது 'குபு குபு'ன்னு பொங்கத் தொடங்கும். அதை பார்க்க, சின்ன பசங்களாகிய எங்களுக்கு ஒரே ஆச்சரியமா இருக்கும். வெந்த சுண்ணாம்போடு வஜ்ஜிரம் கலப்பார்கள். அது மாட்டு கொழுப்பாலானது. கட்டி கட்டியாக ஒரே நாத்தம் அடிக்கும். அதை வாங்கி தனியே அடுப்பில் வைத்து காய்ச்சி,பிசின் போல் ஆகிவிடும். வெந்த சுண்னாம்போடு கலந்து சுவருக்கு வெள்ளை அடிப்பார்கள். அப்போதுதான் சுண்ணாம்பு சுவரில் ஒட்டும். பெரிசுங்க வெந்த சுண்ணாம்பை (வஜ்ஜிரம் கலப்பதற்கு முன்பு) எடுத்து, தங்களது சுண்ணாம்பு 'டப்பியில்' அடைத்துக் கொள்வார்கள். அது ஒரு மாசத்துக்கு ஓடும். வெற்றிலையையும் ஊர் வாயையும் மெல்ல...!


சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்க தேங்காய் மட்டை பெஸ்ட். அதை சுத்தியலால் தட்டி, புருஸ் (கிராமத்து பிரஷ்) போன்று செய்துகொள்வார்கள். கூடவே நீலம், பச்சை, செவப்பு, கருப்பு,மஞ்சள் போன்ற கலர்களை வாங்கிவந்து சுண்ணாம்போடு கலந்து வீட்டின் முகப்பில் படம் வரைவதும் உண்டு. இதில் தேர்தல் சின்னங்கள் முக்கிய இடம் பிடிக்கும். சூரியன், இரட்டை இலை, கை போன்ற சின்னங்கள் வரைந்து இருக்கும். அரிவாள் சுத்தி, கதிர் அருவா இதெல்லாம் அதிகம் இருக்காது. எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட்கள் குறைவு. எல்லோரிடத்திலும் நிலம் இருப்பதால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அங்கு வேலையில்லை. என்ன.. நிலத்தின் அளவு ஆளாளுக்கு வேறுபடும். கம்யூனிஸ்ட்டுகள் நாகைப்படினத்தில் அதிகம்.

தேர்தல் சின்னங்கள் வரைய தேங்காய் காம்புதான் நல்லது. பிரஷ் போலவே சின்னதாக வரைய ஏதுவாக இருக்கும்.


தை பொங்கல்.

இதை 'பெரும் பொங்கல்' ன்னும் சொல்லுவாங்க. தை முதல் நாள். ஊரே திருவிழா கோலம் கொண்டு இருக்கும். மண்ணின் திருவிழா. தமிழனின் தனி விழா இந்த பொங்கல் விழா.

பொங்கலுக்கு சிறப்பே கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே 'கொடாப்பு' போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான். எல்லோரது வீட்டிலும் வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை.









தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு பானையை கவிழ்த்தாற்போல் வைத்து மண்ணை கொண்டு மூடி மொழுகி விடுவார்கள். இப்போது மண் பாணையின் சிறு பகுதி மட்டும் வெளியில் தெரியும். அதில் ஒரு ஓட்டையைப் போட்டு நெறுப்பு வைத்து காலையிலும், மாலையிலும் ஊதுவார்கள். அந்த மண் பாணை முழுவதும் வாழைச் சருகு இருக்கும். அதனால் நெறுப்புக் கொண்டு ஊத..ஊத புகை உள்ளே பரவி காயை பழுக்கவைக்கும். இரண்டு நாள் கழித்து கொடாப்பை பிரித்தால் வாழைக்காய் செங்காயாக பழுத்து இருக்கும். எடுத்து கொடியில் அடுக்கி விட்டால் பொங்கல் அன்று காலையில் பழம் பழுத்து விடும். எல்லோர் வீட்டிலும் வாழை பழம் கிடைக்கும் என்பதால், 'வகை - தொகை' யில்லாமல் சாப்பிட்டு விட்டு கொல்லைப் புறத்திற்கு ஓடுபவர்கள் அந்த நேரத்தில் சற்று...அதிகம்!!.

மற்றொன்று கரும்பு; காவிரிக்கு வடக்கே கரும்பு பயிரிடுவார்கள். சில சமயங்களில் அருகில் உள்ள திருக்கொடிகாவலுக்கு சென்றும் கரும்பு வாங்குவோம். பொங்கலுக்கு பயன்படுத்துவதை 'பன்னிக் கரும்பு' என்போம். எங்கள் வீட்டில் ஒன்று இரண்டு வாங்கும் பழக்கம் இல்லை. வாங்கினால் ஒரு கட்டுதான். அப்படி ஒரு சனக் கூட்டம்.

எங்க ஊர்ல ஒரு ஏடா கூடம் ( ஒரு பெருசு) இருக்கும். பொங்கல் சமயத்திலேயே நாலஞ்சி கரும்ப எடுத்து பரண்ல போட்டு வச்சிடும். பொங்கல்லாம் முடிஞ்சி எல்லா பய வூட்லேயும் கரும்பு தீர்ந்திடுச்சின்னு தெரிஞ்சதும் எடுத்து ஆர அமர வாசல்ல சாக்க (கோணி) விரிச்சிப் போட்டு திங்க ஆரம்பிக்கும். அப்ப நடக்கும் பாருங்க ஒரு கூத்து.... போற வர பய புள்ளங்கையெல்லாம் அவர் கரும்பு சாப்பிடுறத பார்த்துட்டு வீட்டில அழுது, கரும்பு வேணும்ன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடும். எங்கேருந்து குடுப்பான் அப்பன்காரன் 'கரும்பும் -மாம்பழமும்' சீசன் முடிஞ்சா கிடைக்காதுன்றது அந்த குழந்தைகளுக்கு தெரியாதில்ல. அப்புறமென்ன அங்கே ஒரே அமளி-துமளிதான்.

புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என பொங்கல் வைக்க எல்லாமே புதுசுதான். சிலர் வீட்டிற்கு வெளியே பொங்கல் வைப்பார்கள், சிலர் வீட்டு முற்றம் அல்லது வராண்டாவில் பொங்கல் வைப்பார்கள். பொங்கலுக்கு மண் பானையைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். வசதி உள்ளவர்கள் வெங்கலப் பானையை பயன்படுத்துவார்கள்.

மொத்தம் இரண்டு அடுப்பு செய்வார்கள், ஒன்று வெண் பொங்கலுக்கு மற்றொன்று சர்க்கரை பொங்கலுக்கு. அரிசி, காய்கறிகளை படையளிட்டப் பிறகுதான் பொங்கல் வைப்பார்கள்.

பெரும்பாலும் மஞ்சள் கொத்து எல்லோரது வயல் வரப்பிலும் / தோட்டத்திலும் இருக்கும். இஞ்சி கொத்து கடையில் வாங்கிக் கொள்வர்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ... பொங்கல்..." என்று சில்வர் தட்டில் தட்டிக் கொண்டு குடும்பமே உற்சாக குரல் எழுப்பும். பெரும்பாலும் வெண் பொங்கல் தான் முதலில் பொங்கும். அதுதான் சுபீட்சம் என்றும் சொல்வார்கள்.

வெண் பொங்கலை 'நண்ட சோறு' ன்னு சொல்வாங்க. அதில உப்பு இருக்காது. வெறும் பச்சரிசியைப் போட்டு பொங்கி இருப்பார்கள். அதற்கு ஊத்திக் கொள்ள 'கதம்ப குழம்பு' (பகவான் குழம்பு) கொடுப்பார்கள். இதில் முள்ளங்கி, வாழைக்காய், அவரைக் காய், சேப்பங்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு,பரங்கிக் காய், செளவ் செளவ், கத்திரிக்காய், உருளை இப்படி பலதரப்பட்ட காய்கறிகளை கொண்டு இந்த குழம்பு தயாராகும். இதை தாளிக்க மாட்டார்கள். சர்க்கரைப் பொங்கல் வழக்கம் போல்தான். (அது அடுத்த நாள் காலையில் தான் நல்லா இருக்கும்! )இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்பதால், பெரும் பொங்கல் அன்று முக்கால் வாசி நேரம் அரை வயிறுதான்.

மாட்டு பொங்கல்.

விடியற்காலையிலேயே மாட்டை மேய்ச்சலுக்கு இழுத்துச் சென்றுவிடுவார்கள். அதுநாள் வரை ரயிலடி, திடல் போன்ற பகுதிகளில்தான் மாடு மேய்க்க முடியும். ஆனால், மாட்டு பொங்கலுக்கு மட்டும் விதிவிலக்கு. மாட்டை எங்கு வேண்டுமானலும் மேய்க்கலாம்.வயல் ஓரங்களில், வரப்புகளில் என்று எங்கு பார்த்தாலும் மாடு மேய்ந்துக் கொண்டு இருக்கும். ஊர் தலையாரி பார்த்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார்.

மாடு மேய்ந்த பின்னர் குளம், ஆறுகளில் மாடுகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து கொம்புகளை கூர் சீவி கலர் பெயிண்ட் அடிப்பார்கள். கழுத்தில் கட்ட (மாட்டுக்கு தான்...!) கழுத்துக் கயிறு, மூக்கனாங்கயிறு, தாம்பு கயிறு என்று பார்த்து பார்த்து வாங்குவார்கள். கூடவே நெட்டிமாலை, பூ மாலை, நெற்கதிர் மாலை என்று மாட்டுக்கு சோடிப்பு ஒரு பக்கம் நிகழும்.

மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து, கோலம் போட்டு பரங்கி பூ வைப்பார்கள். கொட்டகையின் ஒரு மூலையில் சாணியால் ஒரு தொட்டில் கட்டி (கையளவிற்கு) அதில் ஆலம் (மஞ்சள்-சுண்ணம்பு) கரைத்து ஊற்றுவார்கள். அதில் பரங்கி பூ, செவ்வந்திப் பூ, தும்பைப் பூ போன்ற பூக்களைக் கொண்டு அலங்கரித்து விளக்கு ஏற்றி வைப்பார்கள். கூடவே.. ஒரு நெற் கதிரை மண்ணோடு பிடிங்கி அந்த தொட்டிற்கு அருகில் வைப்பார்கள்.

இப்படி ஒரு ஏற்பாடு நடக்க... மறுபக்கம் கறி,மீன்,கோழி, கருவாடு வாங்க ஒரு கூட்டம் கிளம்பிவிடும். பொதுவாக கிராமங்களில் இதைப் போன்ற விசேஷ நாட்களில் ஆட்டு கறி கூறு போடுவார்கள். நல்லா பெரிய வாழை இலையில் தண்ணி ஏத்தாத கறியை கூறு போட்டு விற்பார்கள். சுத்தமான கறி. நல்லா கடா ஆடா பார்த்து போட்டுத் தள்ளுவார்கள்.

வீட்டில் மீன் குழம்பு, கறி குழம்பு, கறி வறுவல்,கருவாட்டு குழம்பு, எரா தொக்கு, இரத்தப் பொறியல் (ஆடுதான்...) , முட்டை மசாலா என்று வீடே ஒரு மினி முனியாண்டி விலாசா மாறிடும். அன்று இறந்தவர்களுக்குப் படைப்பதால், இப்படி 'தட-புடல்' ஏற்பாடு. அவர்களுக்கு பிடித்த(?) அயிட்டமா போட்டுத் தாக்குவார்கள்.

இதெல்லாம் இருந்து 'சரக்கு' இல்லனா எப்படி...?

கட்டுரை பெரிசா போவுதுன்னு நினைக்கிறேன்... வேறு வழியில்லை.
மீதி அடுத்த பதிவில்....

6 கருத்துகள்:

தாராபுரத்தான் சொன்னது…

உங்க ஊருக்கு இப்பவே வரணும் போல இருக்குங்க உங்க பதிவு.உங்கள் ஊரில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கள்.

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

interesting article. please continue.

தமிழன் வீதி சொன்னது…

நன்றி. தாராபுரத்தான். உங்கள் வருகை எனக்கு என்றும் மகிழ்ச்சி.
தோழன் மபா

தமிழன் வீதி சொன்னது…

நன்றி சுரேஷ், வந்ததற்கும் வாழ்த்து சொன்னதற்கும். இந்த பதிவின் தொடர்ச்சி இருக்கிறது பாருங்கள்.
தோழன் மபா

சிவப்ரியன் சொன்னது…

தொடர்ச்சிக்காக காத்திருக்கின்றேன்...
நடை நன்றாக இருக்கிறது...
தயவு செய்து என்னைப்போல் முடிக்காதீர்கள்...

மொக்கையாய்...?!
(நிறைய எழுதினால் படிக்க மாட்டார்கள் என்ற பயம் தான்...)

தமிழன் வீதி சொன்னது…

நன்றி சிவப்ரியன்.

தெரிந்த ரூட்டு என்பதால் எனது சைக்கிள் சும்மா... சந்து பொந்தெல்லாம் பூந்துவருது. தொடர்ச்சியையும் நன்றாகவே முடிக்க முயற்சிக்கிறேன். தங்களது ஆதரவையும் எதிர்ப்பார்த்து.
-தோழன் மபா

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...