"வீதிக்கு வந்தது மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவின் அவதாரம்!!"
"சவுக்கு இணைய தளத்தில் இந்துவுக்கு சவுக்கடி!!!"
என்.ராம் என்.ரவி |
இந்து பத்திரிக்கை தான் இப்படி கருணாநிதியால் அன்போடு மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று அழைக்கப் பட்டது. இந்து பத்திரிக்கைக்கு, ஒரு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. வீரப்பனைப் பற்றி புத்தகம் எழுதிய கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி ஒரு நபர் இறந்த செய்தியை மூன்று நாள் கழித்து, அந்த நபரின் வீட்டுக்கே தெரியப் படுத்தும் தந்தியைப் போன்றது என்று இந்து நாளிதழை வர்ணித்திருந்தார்.
இந்து நாளேடு அப்படி சில நேரங்களில் செய்திகளை தாமதாக வெளியிட்டாலும், இந்து நாளேட்டில் ஒரு செய்தி வந்து விட்டால், அந்தச் செய்தி 100% உண்மை என்று எடுத்துக் கொள்ளும் அளவுக்கு, அந்த நாளிதழுக்கு ஒரு நம்பகத் தன்மை உண்டு. படித்த வர்க்கத்தின் மத்தியில் இந்த நாளிதழுக்கு, மிகுந்த ஆதரவு உண்டு.
ஈழப் போரின் போது, இந்த நாளிதழ் எடுத்த நிலைபாடுகள், நேரடியான தமிழின விரோத நிலைபாடு. இந்த நாளிதழின் ஆசிரியர், என்.ராமின் புலிகள் விரோத கொள்கையின் காரணமாகவே, பல்வேறு சமயங்களில் சிங்கள அரசுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் நிலைபாடுகளை எடுத்தது. இவ்வாறு தொடர்ச்சியாக இந்து எடுத்த தமிழின விரோத நிலைபாடுகளின் காரணமாகவே, சிங்கள அரசு, என்.ராமுக்கு லங்கா ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது.
யார் இந்த ராம் ? இந்த ராம் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்பவர். இடது சாரிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் தொடர்பான செய்திகளுக்கு இந்துவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படுகின்றன என்பது உண்மையே. ஆனாலும் தன்னை கம்யூனிஸ்ட், அழைத்துக் கொள்ளும் இந்த லங்கா ரத்னா, செய்து கொண்டிருக்கும் காரியங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
அதற்கு முன், இந்து பத்திரிக்கையின் வரலாறு என்ன என்பதைப் பார்ப்போம்,
20 செப்டம்பர் 1878ல் இந்து பத்திரிக்கையின் முதல் இதழ் வெளிவருகிறது. தஞ்சை மாவட்டம், திருவையாற்றைச் சேர்ந்த சுப்ரமண்ய அய்யர் வீரராகாவச்சாரியார், டிடி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், கேசவராவ் பந்துலு, மற்றும் சுப்பாராவ் பந்துலு ஆகியோராடு சேர்ந்து, ஒரு ரூபாய் 12 அணா முதலீட்டில் தொடங்கப் பட்டது.
பின்னாளில் மற்றவர்கள் விலகிக் கொள்ள, வீரராகவாச்சாரியார் மற்றும் சுப்ரமண்ய அய்யங்கார் மட்டும் இந்துவை தொடர்ந்து நடத்தினர்.
முதலில் வார இதழாக ஒவ்வொரு புதனன்றும், மாலையில் வெளி வந்தது. சென்னை மின்ட் தெருவில் தான் அச்சடிக்கப் பட்டது. வாரத்திற்கு 80 காப்பிகள் மட்டுமே அடிக்கப் பட்டன. 1 அக்டோபர் 1883 முதல், வாரத்திற்கு மூன்று இதழ்கள் வெளி வந்தது. அப்போது இந்த பேப்பரின் சைஸ், இப்போது வரும் பேப்பரில் கால் பாகம். 1 ஏப்ரல் 1889 முதல், நாளிதழாக வெளி வரத் தொடங்கியது.
அக்டோபர் 1898ல் இந்து நாளிதழின் சர்குலேஷன் பெருமளவில் குறையவும், சுப்ரமணிய அய்யர் விலகிக் கொள்கிறார். பிறகு சில நாள், வீரராகவாச்சாரியார் மட்டும் நாளிதழை தொடர்ந்து நடத்தகிறார். அவருக்கும் கட்டுப்படயாகாததால், இந்துவை விற்க முடிவெடுக்கிறார்.
அப்போது, இந்த பத்திரிக்கையின் சட்ட ஆலோசகராக இருந்த, கும்பகோணத்தைச் சேர்ந்த கஸ்தூரி ரங்க ஐயங்கார், இந்து நாளிதழை விலை கொடுத்து வாங்குகிறார்.
இந்து நாளிதழ் கஸ்தூரி & சன்ஸ் என்ற பெயரில், ஜி.நரசிம்மன், எஸ்.பார்த்தசாரதி, எஸ்.ரங்கராஜன், ஜி.கஸ்தூரி, ஆகியோரால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது.
எண்பதுகளில், இவர்களின் வாரிசுகள் பொறுப்பேற்கிறார்கள். நரசிம்மனின் பிள்ளைகள், என்.ராம், என்.ரவி மற்றும் என்.முரளி. பார்த்தசாரதியின் வாரிசுகள், மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், மற்றும் நளினி கிருஷ்ணன். ரங்கராஜனின் வாரிசுகள், ரமேஷ் ரங்கராஜன், விஜய அருண் மற்றும், அகிலா அய்யங்கார். கஸ்தூரியின் வாரிசுகள், கே.பாலாஜி, கே.வேணுகோபால் மற்றும், லட்சுமி ஸ்ரீநாத். (அது எப்டி கரெக்டா எல்லாரும் மூணு பிள்ளை பெத்துருக்காங்க ?)
இப்போது இந்த வாரிசுகளுக்குள் உள் குத்து உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வாரிசு மோதலில், முக்கிய பங்கை வகிப்பவர், என்.ராம். இவரை இந்து நாளேட்டின் கருணாநிதி என்று தாராளமாக வர்ணிக்கலாம். ஏனென்றால், 87 வயதிலும், அடுத்த முதல்வர் நான் தான் என்று பெற்ற பிள்ளைகளுக்குக் கூட வழி விடாமல், அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருப்பது போலத்தான் என்.ராமும் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
இந்த நாளேட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60. ஆனால், என்.ராம் மட்டும், 65 வயது வரை ஆசிரியராக தொடர்ந்தார். நிர்வாகக் குழுவில் இதற்குத் தகுந்தார்ப் போல, விதிகளை மாற்றிக் கொண்டார்.
இப்போது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால், 65 வயது முடிந்தும் கூட, ராம் ஓய்வு பெற மறுப்பதுதான். என்.ராம், இந்து நாளேட்டின் கருணாநிதி தானே ?
இப்போது ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் என்.ரவியை அந்தப் பதவியில் இருந்து நீக்க ராம் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார். இந்த முயற்சியை ஒட்டி, ராமின் சகோதரரும், இந்து பத்திரிக்கையின் மற்றொரு ஆசிரியருமான ரவி, இந்து பத்திரிக்கையின் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இதோ.
அன்பார்ந்த சக பணியாளர்களே,
என்.ரவி |
நாம் இப்போது நுழையும் அடுத்த விநாடியிலிருந்து, மிக நீண்டதொரு போராட்டமும், பிரச்சினையும் மிகுந்த ஒரு தருவாயில் நுழையப் போகும் சூழலில், உங்களின் புரிதலை வேண்டி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
மோசமான நடத்தையின் காரணமாக என்னைக் கவலையடையச் செய்யும் வகையில், என்.ராம் மற்றும் சில நிர்வாக இயக்குநர்கள் கடந்த 18 ஏப்ரல் 2011 அன்று கூடி, என்னை ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, 2004ல் இந்துவில் சேர்ந்த சித்தார்த் வரதராஜனை ஆசிரியராக்க முடிவெடுத்தள்ளனர்.
இந்தப் பத்திரிக்கையில் நிருபராகச் சேர்ந்த 1972ம் ஆண்டு முதல், நான் பல ஆண்டுகளாக, அனைவரின் நிறைவுக்கும் ஏற்ற வகையில் பணியாற்றி வருகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நாளிதழின் முன்னேற்றத்திற்காக, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் பணியாற்நி வருவதை நீங்கள் அறிவீர்கள். 1991ம் ஆண்டு நான் பொறுப்பேற்றதிலிருந்து, சென்னையை மையமாகக் கொண்டு வெளியாகி வந்த இந்த நாளிதழை, மாநிலத்தின் பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்ததோடு, ஒரே பக்கமாக இருந்த உள்ளுர் செய்திகளை நான்கு பக்கங்களாக மாற்றியதோடு, தேசிய அளவுச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு கவர்ச்சிகரமான பகுதிகளை அறிமுகப் படுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களின் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி, வாசகர்களுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி இச்செய்தித்தாளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதையும் நீங்கள் அறிவீர்கள். செய்தித்தாளின் நேர்மையான கொள்கை மாறாமல், பல்வேறு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள், நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, அச்சமின்றி இச்செய்தித்தாள் செயல்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.
பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், நான் பொறுப்பேற்ற, ஜனவரி 1991ல் 4,52,918ஆக இருந்த இந்நாளேட்டின் விற்பனை, ஜுன் 2003 அன்று உள்ளபடி 9,33,458ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாகச் சொன்னால், 4,80,540 காப்பிகள் (106%) விற்பனை உயர்ந்துள்ளது. ஆனால், சமீபத்தில், இந்துஸ்தான் டைம்ஸுக்கு நிகராக இருந்த, இந்து பத்திரிக்கையின் விற்பனை, தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. சமீபத்திய சந்தை ஆய்வின் படி, வாசகர்கள், இந்து நாளேட்டின் மீது கோபத்தில் உள்ளதாகவும், பத்திரிக்கையில் உள்ள செய்திகள், ஆர்வக் குறைவை ஏற்படுத்துவதாகவும், இடதுசாரி அரசியலின் மீது, காழ்ப்புணர்வோடு இருப்பதாகவும் வாசகர்கள் கருதுவதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 4 மே 2010 அன்று 65 வயதை அடைந்த ராம், தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி, நான் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். ஆனால், தீய எண்ணத்தோடு, ராம் இந்த ஒப்பந்தத்தை மீறியதால், தலைமை ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்கும் விவகாரம் அப்படியே நின்று போயுள்ளது.
ராமின் நம்பிக்கை துரோகத்தின் ஒரு பகுதியாக, இயக்குநர்கள் குழுமத்திலிருந்த என்.முரளியின் அதிகாரங்களை பறித்து அவரை நீக்கியதை, கம்பெனி லா போர்டு (தீர்ப்பாயம்) ரத்து செய்ததோடு, மோசமான, நியாயமற்ற நடவடிக்கை என்றும் தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறு தீர்ப்பு வந்த நான்கே மாதங்களுக்குள், அதே போன்ற நியாயமற்ற மற்றொரு நம்பிக்கை துரோகத்தின் வடிவாக ராமும், அவரது குழுவைச் சேர்ந்த மற்ற இயக்குநர் குழு உறுப்பினர்களும், இந்நாளேட்டின் பாரம்பரியத்திற்கு எதிராகவும், கம்பெனி லா போர்டின் தீர்ப்புக்கு எதிராகவும், நான் ஆசிரியர் பொறுப்பேற்பதை தடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியான ஓய்வு தேதிக்கு ஒரு ஆண்டு கழித்தும், கம்பென் லா போர்டின் தீர்ப்புக்கு பிறகு, பதவியில் தொடர எவ்வித அருகதையும் இல்லாத ராம், ஐம்பதுகளில் இருக்கும் மற்ற ஆசிரியர் குழு உறுப்பினர்களை, அழிக்கும் உத்தேசத்தோடு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கூட ஆசிரியர் பொறுப்புக்கு வரக் கூடாது என்ற நோக்கில் ஒரு தீய திட்டத்தை இயற்றியுள்ளார். அடுத்து யார் ஆசிரியர் என்பதை முடிவு செய்யும் திட்டத்திற்கு பதிலாக, ஒட்டு மொத்தமாக, எல்லோரையும் அழிக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார். திடீரென்று, விதிகளை மாற்றி இந்து நாளிதழின் உரிமை வேறு, நிர்வாகம் வேறு, என்று பிரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, என்னோடு சேர்த்து, இணை ஆசிரியர் நிர்மலா லட்சுமணன் மற்றும் மற்றொரு ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி ஆகியோரும் பதவி விலக நிர்பந்திக்கப் படும் படி திட்டமிடப் பட்டுள்ளது.
இது போல பதவி நீக்கம் செய்வதைத் தவிர்த்து, 2003ல் தலைமை ஆசிரியராக பொறுப் பேற்றதிலிருந்து, ஆசிரியர் குழுவின் அமைப்பை மாற்றும் பல்வேறு திட்டங்களை எங்கள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி வந்துள்ளார்.
ஆசிரியர் குழுவின் விவாதங்களின் போது, சில அரசியல் சக்திகளுக்கு தேவையற்ற ஆதரவை தருவதும், சில இடது சாரித் தலைவர்களுக்கு கூடுதலாக கவரேஜ் தருவதும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராசாவுக்காக வக்காலத்து வாங்கியதும், இதே போல ஊழல் குற்றச் சாட்டுகளில் சம்பந்தப் பட்ட, சுரேஷ் கல்மாடி அஷோக் சவாண் மற்றும் எடியூரப்பாவை பதவி விலக வற்புறுத்திய அதே வேளையில் இதே போல ஊழலில் ஈடுபட்டு, ஏராளமான ஆதாரங்கள் குவிந்தும், ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லாமல் தவிர்த்தது, சீன நாட்டுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது, சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது, இவை எல்லாவற்றையும் விட எந்த தலைமை ஆசிரியிரும் செய்யாத வகையில், என்.ராம் ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்களின் படங்களை பத்திரிக்கையில் பிரதானமாக வெளியிட்டு தனக்கே விளம்பரம் தேடிக் கொண்டது, ஆகிய செயல்கள், பன்னாட்டு முதலாளிகள் நடத்தும் நாளிதழ்களே வெட்கப் படக் கூடிய செயல்களாகும்.
இந்த நாளேடானது, மற்ற எல்லா விஷயங்களையும் விட, கொள்கையில் நேர்மையையே தனது முக்கிய குறிக்கோளாய் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், சமீப காலமாக, இந்தக் கொள்கையையே கேள்விக்குறியாக்கும் வகையில், விளம்பரம் மூலமாக பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடும் அளவுக்கு இந்து நாளேடு தரம் தாழ்ந்து விட்டது. விளம்பரத்துக்கும், செய்திகளுக்கும் இடையே இருந்து வந்த மதில் சுவரை, மதில் சுவருக்கு பதிலாக ஒரு நூலாக மாற்றும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.
இது போல ஒரு தந்திரமான உடன்பாட்டின் வெளிப்பாடாக, 22 மே 2010 அன்று, ராசாவின் லைசென்ஸ் கொடுத்த செயல்களை நியாயப் படுத்திய ஒரு பேட்டி வெளி வந்தது. இந்தப் பேட்டியை பிரதம மந்திரி தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தப் பேட்டிக்கு கைமாறாக, அவசர அவசரமாக அதே நாளன்று, ராசாவால், தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளிக்கப் பட்ட தொலைத் தொடர்புத் துறையின் முழுப் பக்க வண்ண விளம்பரம் வெளியிடப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இது போன்ற நடவடிக்கைகளை தொடர்வதற்காகவே, ஆசிரியர் குழுவிற்கு இருக்கும் சுதந்திரத்தை மாற்றி, நாளிதழின் ஆசிரியர், வணிக பிரதிநிதிகள் உள்ள இயக்குநர் குழு சொல்வதைக் கேட்டு செயல்படும் கைப்பாவையாக ஆக்கும் வகையில், விதிகளை மாற்ற, முயற்சி நடைபெற்று வருகிறது. இந்துவின் மதிப்பீடு மற்றும் செயல்பாடுகளின் (Editorial function) மீது தொடுக்கப் பட்ட இது போன்ற நடவடிக்கைகள் இந்து நாளேட்டின் ஆன்மாவின் மீத தொடுக்கப் பட்ட தாக்குதலாகும். இது போல மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டு விட்டு, இந்துவின் செய்திக் கொள்கை மிக அதிக மதிப்பீடுகளை கொண்டது என்று இப்போது அறிவித்திருப்பது வெற்று கோஷமேயன்றி வேறல்ல.
அனைத்து வகையான முதலீட்டாளர்களும் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரத் துடிக்கும் நேரத்திலும், ஊடகங்கள், பலப் பல கவர்சிகரமான விஷயங்களைக் கொண்டு வந்து வாசகர்களை கவர போட்டி போடும் நேரத்தில், இந்துவுக்கு இந்த நெருக்கடி, வந்துள்ளது. பத்திரிக்கையாளர்களின் ஒரு அங்கம் என்ற முறையில், நீங்கள் அனைவரும் இந்து பத்திரிக்கையின் வளர்ச்சிக்கும், கடும் போட்டி நிலவும் ஒரு சூழலில் இந்துவின் கொள்கையை விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறீர்கள். அரை குறை உண்மைகளோடு பரவும் வதந்திகளைத் தடுக்கும் பொருட்டு, என்ன நடக்கிறது என்ற உண்மைகள், இயக்குநர் குழுவின் அறையோடு நின்று விடாமல், இந்தப் பத்திரிக்கையின் ஒரு அங்கம் என்ற முறையில் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.
இந்த உத்வேகத்திலேயே நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். மேலும், இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று உறுதியையும் நான் உங்களுக்கு அளிக்கிறேன். நம் அனைவருக்கும் மிகவும் நெருக்கமான, இந்துவின் நேர்மையான கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற இந்தப் போராட்டத்தில், உங்களின் புரிதலையும், ஆதரவையும் வேண்டியே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
என்.ராம் என்ற போலி கம்யூனிஸ்ட்டின் உண்மையான முகம் தெரிகிறதா ? தன்னுடைய சொந்த நலன் காக்கப் பட வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்.
ராமின் இந்த முடிவை எதிர்த்து, மீண்டும் நீதிமன்றத்தை அணுக இருப்பதாக, ரவி தலைமையிலான டீம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ந்து நாளேட்டின் 50 பங்குதாரர்களின் கூட்டம் மே 20 அன்று, கூட்டப் பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உரிமை உள்ள மற்றவர்களை வீழ்த்தி, இந்து பத்திரிக்கையை சட்ட விரோதமாக கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே ராம், 2006 முதலாகவே, கருணாநிதியின் கைப்பாவையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார் என்பதை, அவரது சொந்தத் தம்பி எழுதிய கடிதம் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ராசாவைக் காப்பாற்றுவதற்காக, ராசாவின் பேட்டியை வெளியிட்டதோடு, ராசாவுக்கும் மன்மோகனுக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தையும் முழுமையாக வெளியிட்டு, அனைத்து விவகாரங்களும், மன்மோகனுக்கு தெரிவிக்கப் பட்ட பின்னரே நடந்தது போலவும், செய்தி வெளியிட்டது என்.ராம் தான். 66 கோடி ரூபாய் ஊழலான போபர்ஸ் ஊழலை தொடர்ந்து வெளியிட்டு, ஒரு அராசாங்கத்தையே கவிழ்த்த ஒரு நாளேட்டை தனது சொந்த நலனுக்காக, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலை மறைக்க பயன்படுத்துகிறார் என்றால், ராசாவை தலித் இனத்தின் “தகத்தகாய கதிரவன்” என்று அழைத்த கருணாநிதியை விட மோசமானவர் அல்லவா ? இந்து என்.ராம் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் வலம் வரும், ஒரு மிக மோசமான தீய சக்தி என்றே சவுக்கு பார்க்கிறது.
நன்றி: சவுக்கு இணைய தளம்.
http://savukku.net/home/735-2011-04-24-12-16-08.html