வியாழன், ஏப்ரல் 14, 2011

கணையாழி இதழ் ஜெயகாந்தன் வெளியீடு



சிற்றிலக்கியங்களில் முதன்மையானதும் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதுமான கணையாழி வெளியீட்டு விழா நேற்று சென்னை தி நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது.

 
  

இடையில் சில காலம் நின்று போயிருந்த கணையாழி இதழை தசரா அறக்கட்டளை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.

'கணையாழி' கலை இலக்கிய திங்களிதழை எழுத்தாளர் ஜெயகாந்தன் வெளியீட தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ம. ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசும் போது " கணையாழியில் நான் எழுதியதில்லை, ஆனால் கணையாழி என்னை பற்றி எழுதியது..., எதற்காகச் சொல்கிறேன் என்றால், கணையாழி தொடாத விஷயம் ஒன்றும் இல்லை என்பதற்காகத்தான். எழுத்தை எழுதுவது ஒரு சுகம், எழுதாமல் இருப்பது ஒரு சுகம், பிறர் எழுத்தை வாசிப்பதும் சுகம்" என்றார். கூடவே " கணையாழியில் நானும் எழுதுவேன்" என்ற போது அரங்கம் அதிர்ந்தது.



முன்னதாக தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தி விழாவில் படிக்கப்பட்டது.



எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தனது தலைமை உரையில் "1965 வாக்கில் தில்லியில் கஸ்தூரிரங்கன் கணையாழியை தொடங்கும் போது, அது அரசியல் இதழாகத்தான் இருந்தது. பிற்பாடு நான், அசோகமித்ரன், சுஜாதா போன்றோர் சேர்ந்தபிறகு அது இலக்கிய இதழாக மாறியது" என்றார். "கணையாழிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு" என்று கூறிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி; கணையாழியின் 'பொறுப்பாசிரியராக' தனது பொறுப்பை ஏற்றுள்ளார்.



தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரும், கணையாழியின் ஆசிரியருமான ம. ராஜேந்திரன் பேசும்போது கணையாழி "அணிகலன் அல்ல அது ஒரு அடையாளம். இவ்வளவு நாட்களாக நின்று போயிருந்த கணையாழி 'விதை உறக்கக் காலத்தில் இருந்தது' எனலாம். ஒரு விதை போட்டவுடன் உடனே முளைத்து விடுவதில்லை. அது முளைக்க சிறிது காலம் ஆகலாம், அது போல்தான் இதுவும். கணையாழி விதை போன்றது. அது இப்போது முளைத்திருக்கிறது" என்றார். தொடர்ந்து " கணையாழி என்றாலே அது கை மாறுவதுதான்" என்ற போது அரங்கம் அதிர்ந்தது. ஒவ்வொரு முறையும் அது நன்முறையில் மாறியிருக்கிறது" என்றார்.



நடிகர் நாசர் விழா துவங்கி அரைமணி நேரம் கழித்துதான் வந்தார். காலம்தாழ்த்தி வந்தமைக்கு மன்னிப்பு கேட்டுகொண்ட அவர், " போதுவாக நடிகர்கள் என்றாலே, விழா துவங்கி சிறிது நேரம் கழித்துதான் வருவார்கள் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். அப்படி தலைவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது வந்தால்..... என்ன சலசலப்பு நடக்கும், அதனால் என்ன நிகழும் என்பது நமக்கு தெரியும்....?! சரி... நாம் அதற்குள் போக வேண்டாம். நான் லேட்டாக வந்ததற்கு காரணம், சென்னையின் டிராபிக்தான்" என்றவர் தொடர்ந்து நனெல்லாம் 1983ல்தான் கதைகள் படிக்கத் தொடங்கினேன். பின்பு இலக்கியம் மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதே கணையாழி இதழை கையில் வைத்துக் கொண்டுதான் திரிவேன்" என்றார். "இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து யாருக்கும் சொல்ல வில்லை, சொன்னால் அது அரசாங்கத்திற்கு எதிராக போய்விடுமோ என்பதால் சொல்லவில்லை " என்றபோது அரங்கம் கைத்தட்டளில் அதிர்ந்தது.





தசரா அறக்கட்டளை.  தமன் பிரகாஷ், சாமிநாதன், ராஜேந்திரன் எனும் மூவரின் முதல் எழுத்துக்களைக் கொண்ட 'தசரா' 1994 அக்டோபரில் கலை இலக்கிய மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதில் தமன் பிரகாஷ் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மார்வாடி. அவர் அட்சரசுத்தமாக தமிழ் பேசியது காதுகளுக்கு இனிமையாக இருந்தது. இவர்களின் மூலதனம்தான் கணையாழியை மூண்டும் தமிழர்களின் விரல்களில் அணிவித்தது.

முன்னதாக நா. சுவாமிநாதன் வரவேற்புரையாற்ற, தமன் பிரகாஷ் முன்னிலை வகித்தார். விழாவில் ட்ராஸ்கி மருது, பாடலாசிரியர் நா.முத்துகுமார், ரெ.பாலகிருஷ்ணன்,கவிஞர் குட்டி ரேவதி போன்றோர் சிறப்புரையாற்றினார்கள். விழா முடிவில் கவிதா பதிப்பகம் சேது. சொக்கலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினர்.



கீழே


விழா அரங்கம் இளைஞர்களால் நிறைந்திருந்தது.


கணையாழி ஆண்டு சந்தா கட்ட நிறைய பேர் ஆர்வம் காட்டினார்கள்.


விழாவில் ஞானி, ஈரோடு தமிழன்பன் ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், கனித்தமிழ் ஆண்டோ பீட்டர் போன்றோரை பார்க்க முடிந்தது.


விழா தொடங்கும் முன்னர் அங்கிருந்த கேண்டினில் அனைவருக்கும் டீ, பிஸ்கட் தரப்பட்டது.


விழா ஏற்பாடுகளை கவிதா பதிப்பகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

















விழாத் துளிகள்!?

1 கருத்து:

குடந்தை அன்புமணி சொன்னது…

கணையாழி இதழ் மீண்டும் வருவதில் மிகவும் மகிழ்ச்சி. நிகழ்வை தொகுத்து வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...