சனி, ஏப்ரல் 23, 2011

'கோடை விடுமுறையும் - பாலியல் நோயும்'கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்!அப்போ நான் எட்டாம் வகுப்போ அல்லது ஒன்பதாம் வகுப்போ படித்துக்கொண்டு இருந்தேன். கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு செல்வது சகஜமான ஒன்று. எங்கள் மாமா வீடு கொல்லுமாங்குடியில் (அப்போ அது தஞ்சை மாவட்டம், இப்போ திருவாரூர் மாவட்டம்) இருந்தது, எங்கள் மாமா டாக்டர் கலைமோகன் மருத்துவம் முடித்து சொந்த ஊரிலேயே கிளினிக் வைத்திருந்தார்.சம்மர் விடுமுறைக்கு சொன்ற நான், கிளினிக்கில் அவருக்கு உதவியாளராய் மாறினேன். மாலை மட்டும் கிளினிக் என்பதால், அவ்வப்போது சினிமாவுக்கு மாயவரம் சென்றுவிடுவோம். அப்போ விஜயா தியேட்டரில் 'அச்சமில்லை அச்சமில்லை' படம் பார்த்ததாக நினைவு. தினமும் மாமாவோடு கிளினிக் செல்வது வாடிக்கையாகிவிட்டது.அங்கு கடைத்தெருவில் சூடாக வடை போடுவார்கள். அது என்ன வகை வடையென்றே நம்மால் கண்டுபிடிக்கமுடியாது. மொறு மொறுவென்று 'இரால்' சேர்த்து வடை 'சூப்பரா' இருக்கும். சும்மா..... வாசனை கடைத்தெருவே தூக்கும். அப்புறமென்ன " மாமா... வடை வாங்கட்டுமா?" என்பேன். அவர் சட்டையிலிருந்து பணம் எடுத்துத் தர ஓட்டமாய் ஓடினால்.... "இருங்க..." அங்க ஒரே கூட்டமாய் இருக்கும். எல்லோரும் கையை நீட்டிக் கொண்டு இருக்க.... வடை சுட சுட காலியாகிவிடும். வடை தீர்ந்து விடுமே... என்று மனம் வேறு 'பக்கு பக்குன்னு அடிச்சிக்கும். நல்ல வேளை கடைகார பாய் நம்மைப் பார்த்ததும் , டாக்டருக்கென்று உடனே வடையை மடித்து கொடுத்துவிடுவார். அதனால் 'வடை போச்சே' என்ற கவலையில்லாமல் வாங்கிவந்துவிடுவேன்.பெரும்பாலும் அதிக கேஸ்கள் வராது. மாமா அப்போதுதான் எம்பிபியஸ் முடித்திருந்ததால் இன்னும் நிறைய பேருக்கு தெரியாமல் இருந்தது. இதில் வருபவர்களும் தெரிந்தவர்களாக இருந்ததால் பெரும்பாலும் ஓசி வைத்தியம்தான். சில நேரங்களில் அவருக்கு துணையாக நானும் குமுதம் ஆனந்த விகடன் படித்துக் கொண்டு இருந்தேன்!?அப்படி இருக்க...ஒரு நாள் ஏழு மணி இருக்கும். ஒரு நடுத்தர வயது கிராமத்து இளைஞன் கைலியை கட்டிக்கொண்டு சற்று அவஸ்த்தையோடு காலை அகட்டிவைத்து நடத்துவந்தான். ஒரு படத்தில் விவேக் வருவதுபோல். கூட துணைக்கு அவனது கூட்டாளி. வேதனையின் உச்சத்தில் இருந்த அவன், வந்த வேகத்தில் பெஞ்சில் சுருண்டு படுத்துவிட்டான். அவனது கூட்டாளிதான் 'விளக்கி' சொன்னான். அதாவது... அவனது கைலியை 'விலக்கி' சொன்னான்."பாபு ...." என்று என்னை கூப்பிட்டார் மாமா. "அந்த டார்ச்ச லைட்டை எடுத்துக்கிட்டு வா..." என்றார்.அவனது கைலி முழுவதும் ஆங்காங்கே நனைந்திருந்தது. மாமா கையுறை மாட்டிகொண்டு அவனது கைலியை விலக்க...அவனது ஆண் குறி வீங்கி....முனையில் தண்ணீர் பந்து போல் ஒரு பெரும் கொப்பளம் இருந்தது. டார்ச்லைட் அடித்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதுவரையில் ஒப்படி ஒரு காட்சியை நான் பார்த்தில்லை. ஆண் குறியிலிருந்து நீர் வடிந்துக் கொண்டு இருந்தது."என்னப்பா ஆச்சி..."" ஒரு பொம்பளைக்கிட்ட போனேன்... டாக்டர், முதல்ல லேசா அரிச்சது, அப்புறம் வீங்கிக்கிட்டு 'சீழ்' வச்சி கொப்பளமா மாறிட்டது" என்றான்."ஏன்யா.... இப்படி ஆழம் தெரியாம காலை விடுறிங்க, பாதுகாப்பா இருக்க வேண்டியதுதானே? " என்று அவனை திட்டிக் கொண்டே சிகிச்சை அளித்தார்."..கல்யாணம் ஆச்சா...?" " என்ற கேள்விக்கு; இல்லை என்று அவஸ்த்தையோடு தலைஅசைத்தான்."ஏய்யா...நிரோத் போட்டுக்க வேண்டியதுதானே...""இல்ல டாக்டர்..... அவசரத்தில கிடைக்கில..." (என்ன அவசரமோ...எவனுக்குத் தெரியும்)"இது வீட்டுக்கு தெரியுமா...?""தெரியாதுங்க டாக்டர்.... இப்போ ஃபிரண்டு வீட்டில இருக்கேன். ஒரு வாரமா வீட்டுக்கு போகல... வேலைன்னு அம்மாகிட்ட பொய்சொல்லிட்டு வந்தேன். இது யாருக்கும் தெரியாது" என்று அழுதவாறே சொன்னான்.மாமா அவனிடம் பேசிக்கொண்டே மருத்துவம் செய்ய... செய்ய... நான் கை வலிக்க... டார்ச் லைட்டைக் அடித்துக் கொண்டு இருந்தேன். அவனது கூட்டாளி கைலியை விலக்கிப் பிடித்தவாறு இருந்தான். மாமா 'அதை' நன்றாக துடைத்து சுத்தம் செய்து மருந்துகள் போட்டு கட்டினார். அவனுக்கு உபத்திரம் குறைய அங்கேயே மாத்திரை சாப்பிட வைத்து... சற்று நேரம் ஓய்வெடுக்கவைத்தார்.அவன் போனதும். " இது என்ன நோய் மாமா....." என்றேன். ஆர்வம் தாங்காமல்."உனக்கு சொன்னா புரியாதுடா..." என்றார்."ப்ச்....சொல்லுங்க" என்றேன்." இத VDன்னு (Venereal Disease) சொல்லுவாங்க. தவறான பொம்பளைங்ககிட்ட போனா இப்படிதான் வரும். இதை கிராமப்புறங்களில் 'இரகசிய நோய்'ன்னும் சொல்லுவாங்க. ரொம்ப ஆபத்தான நோய். ஒழுக்கமாக இருந்தா இந்த நோய் வராதுடா..." என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இந்த 'பிலக்கா' பையனிடம் எதுக்கு விரிவா சொல்லனும் என்று நினைத்தாரோ என்னவோ...?!

ஆணுறை அவசியமா?


அப்போதெல்லாம் செக்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எயிட்ஸ் பற்றியும் நாம் அறிந்திருக்கவில்லை. ஆண் பெண் உறவின் போது ஆணுறை (நிரோத்) பயன்படுத்துவதும் அப்போது எளிதானதாக இல்லை. இப்போது போல் அப்போது நிரோத் கடைகளிலும் கிடைக்காது. சுகாதார ஆய்வாளர்கள் அல்லது செவிலியர்கள், மக்கள் தொகையை கட்டுப் படுத்த கிராமங்கள் தோறும், வீதிகள் தோறும் நிரோத்தை விநியோகம் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் ஒரு சாதனமாகத்தான் நிரோத் அப்போது பார்க்கப்பட்டது. பால்வினை நோயை தடுக்கும் ஒரு காரணியாகவும் பிரபலப் படுத்த அரசாங்கம் முணையவில்லை.அதுவும் நிரோத்தின் பயன்பாடு அரியாத பெரிசுகள், அதை சிறுவர்களிடம் விளையாட கொடுத்துவிடுவார்கள். அதை அவர்கள் பலூன் போல் ஊதி விளையாடிய கொடுமையும் உண்டு. அந்தளவிற்கு செக்ஸ் அறிவு நம்மிடம் இருந்தது?!.அதனால் கிராமப்புறங்கள் என்றில்லாமல் நகரப்புறங்களில் கூட பால்வினை நோய் பற்றிய அடிப்படை அறிவு இல்லை. தற்போது ஊடங்களில் வரும் நிகழ்ச்சிகளால், இளைய சமுதாயம் செக்ஸ் பற்றி, பால்வினை நோய் பற்றி தமக்கு தேவையான அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருக்கின்றனர்.மேற்கூறிய சமாச்சாரங்கள்... கூட நான் இப்போது அறிந்ததுதான்.சரி போகட்டும்....

பிற்பாடு மாமா DO முடித்து கண் மருத்துவராகிவிட்டார். திருச்சி அரசு மருத்துவமணையில் RM ஆக இருந்து, இப்போ மலேஷியாவில் பணிபுரிந்துக் கொண்டு இருக்கிறார்.இப்படியாக அந்த மாத கேடை விடுமுறை சற்று வித்தியாசமாகக் கழிந்தது எனக்கு!!!.


()()()()()()()()()()

Share/Bookmark

2 கருத்துகள் :

சுரேஷ் கண்ணன் சொன்னது…

//அவனது கூட்டாளிதான் 'விளக்கி' சொன்னான். அதாவது... அவனது கைலியை 'விலக்கி' சொன்னான்.
//

:-)

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

Thanks Suresh!