செவ்வாய், மே 31, 2011

Back Waterல் ஒரு Bad அனுபவம்
 'நான் எப்படி உயிரோடு இருக்கிறேன்' என்ற நிகழ்ச்சி  டிஸ்கவரி சேனலில் வரும். 

அதில் விடுமுறையை கழிக்க புறப்படுபவர்கள் எப்படியே... ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள்.  பின்னர் அதில் இருந்து எப்படி தப்பித்து வருகிறார்கள் என்று காட்டுவார்கள்.  இந்த  நிகழ்ச்சி  உலக அளவில் பிரபலமான ஒன்று!

அப்படி ஒரு சம்பவம் எனக்கும் நிகழப் பார்த்தது.

ஒவ்வொரு கோடை கால விடுமுறைக்கும்  எங்கள் ஊருக்கும் எனது மாமா ஊருக்கும்  செல்வது வழக்கம். 

சீர்காழியிலிருந்து 15 கிலோ மீட்டரில் இருக்கிறது எனது மாமா ஊர் பழையபாளையம். எனது மனைவியின் ஊரும் அதுதான். (பின்ன...மாமா பொண்ணுதானே...!)   அமைதியான கிராமம். ஒரு பேருந்து செல்லும் அளவிற்கே தார் சாலை. மற்றொரு வண்டி எதிரில் வந்தால், சற்று அகலமான இடத்தில்தான் இரு வண்டிகளும் மாறி கொள்ளும்.  அந்த அளவிற்கு குறுகளான சாலை. இரு மருங்கிலும் பனைமரம் அணிவகுத்து நிற்க....மஞ்சளாறு சாலையை ஒட்டியே வரும். 

அப்படிதான்  கடந்த ஞாயிறு அன்று  22 மே  (அன்று எனது திருமண நாள் கூட...)   அருகில் உள்ள பழையாருக்கு சென்றோம். கடல், மீன்பிடி படகு என்று பார்த்துவரலாமே என்று எனது மனைவி இரு குழந்தைகள், மாமா பசங்க இரண்டு பேர், அவுங்க அம்மா என்று ஒரு சிறு பட்டாளமே மாலை 5.30 மணிகெல்லாம் காரில்  புறப்பட்டோம்.  வெளிச்சம் நன்றாக இருந்தது.

மீன் பிடி ஊரான பழையார்,  புதுப்பட்டினம் தாண்டி இருக்கிறது. முன்பெல்லாம் பேருந்து புதுப்பட்டினத்தோடு நின்றுவிடும். பழையாருக்கு செல்ல நடந்துதான் செல்லவேண்டும்.  இப்போது பழையார் மீன்பிடி ஜெட்டி வரைக்கும் பஸ் செல்கிறது.  முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சொந்த ஊர் இதுதான்.

நாங்கள் சென்றபோது பெரும்பாலான  போட்டுகள் கரையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தன.  மீன் பிடி தடை காலம் என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை.  ஒரு மோட்டார் படகு  மட்டும் கரையை நோக்கி வர....  அதிலிருந்து ஒரு குடும்பம் இறங்கியது. அப்போதுதான் புரிந்தது மீனவர்கள் இந்த மீன் படி தடை காலத்தை பயன்படுத்தி அங்கு வருபவர்களை சுற்றுலா  அழைத்து செல்கிறார்கள் என்று !.
படகு பயணத்திற்கு முன்!


கடல் பழையார் முகத்துவாரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இங்கு படகுகள் நிற்பது பழையார் ஆற்றில் என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது. ஆறே கடல் போல்தான் இருந்தது.

படகில் அழைத்து செல்ல 200 ரூபாய் என்றார்கள்.  அப்போதே மசங்கத் தொடங்கியது.  அந்த  படகில் டீசல் இல்லை என்பதால் மற்றொரு படகை ஏற்பாடு செய்தனர்.

அப்போது கரையில்  இரு பெண்கள்  6 குழந்தைகள் மூட்டை முடிச்சிகளோடு  நின்றுக் கொண்டு இருந்தனர். "எங்களை கொடியம்பாளையத்தில் விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சினார்கள். 

கொடியம்பாளையாம் என்பது ஒரு தீவு போன்றது. 'திட்டு ' என்றும் சொல்லலாம். அங்கு படகில்தான் செல்லவேண்டும். சாலை மார்க்கமாக  என்றால், சிதம்பரத்திலிருந்துதான் செல்லவேண்டும்.  அதுவும் பஸ் வசதி அதிகம் இல்லை. அதனால் மக்கள் சீர்காழியிலிருந்து பழையார் வந்து.... இப்படி படகில் சென்றுவிடுவார்கள்.  பெரும்பாலும் மீனவ குடும்பத்தினர் என்பதால் இங்கு உள்ள மீனவர்கள்...பணம் வாங்கிக் கொண்டு  அவர்களை படகில் ஏற்றி அக்கரையில் இறக்கி விடுவார்கள்.

அவர்களையும் ஏற்றிக் கொண்டு படகு புறப்பட்டது. அப்போதே லேசாக இருட்டத்தொடங்கியது. நான் எனது குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன். கரை எங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகியது.   கிட்டத்தட்ட கால் மணி நேர மாக ஓடிக்கொண்டு இருந்த படகின் மோட்டார். திடீரென்று உறுமத்தொடங்கியது. கர்...புர்...என்றது.  படகோட்டி என்னன்வோ செய்கிறான் படகு நகரவில்லை. கரை தூரத்தில் இருந்தது.  சுற்றிலும் தன்ணீர்.  என்னைத் தவிர என்னோடு வந்த யாருக்கும் நீச்சல் தெரியாது.


எங்கள் எல்லோர் முகத்திலும் பீதி அப்பிக்கொண்டது.  சரியாக மட்டிக் கொண்டோம் என்று என்னத் தோன்றியது.  பகலாக இருந்தால் ஒன்றும் பயம் இல்லை. கரைகளில் லைட் போட்டுவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இருட்டத் தொடங்கியது

மறு கரையில் (கொடியம்பாளையம்)  இறங்க வேண்டியவர்கள் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைகிறார்கள். " தம்பி எங்களை வேறு  படகிலாவது அனுப்பி வைங்க". இனி நாங்க திரும்பி போக முடியாது என்று  கெஞ்சிகிறார்கள். படகோட்டியும்  படகில் நின்றுக் கொண்டு தூரத்தில் செல்லும் படகை கையை அசைத்து கூப்பிடுகிறான். ஹுகும் அவர்களுக்கு நாங்கள் போடும் இந்த சத்தம் கேக்கவில்லை.

பிறகு படகோட்டி தண்ணீரில் இறங்கி, படகை கொஞ்சம் வலுவோடு தூக்கி.... தூக்கி.... தள்ள அரம்பித்தான்.  தண்ணிர் கனுக்கால் வரைதான் இருந்தது. அதனால்தான் படகு சேற்றில் சிக்கி இருக்கிறது. அவனும் என்னன்னவோ முயற்சி செய்து பார்க்கிறான். ஒன்றும் பயன் தரவில்லை.  கழிமுகத்துவாரங்களில் எப்போது ஆற்றில் நீர் ஏறி  இருக்கும் எப்போது இறங்கி இருக்கும் என்று கணிக்க முடியது.  Back water- ல் இது ஒரு கஷ்டம்.  இதனாலயே படகு மேற்கொண்டு போக முடியாமல் சிக்கி இருக்கிறது. அக்கரைக்கு போகமுடியாத அளவிற்கு நீர் வற்றி இருக்கிறது. 


அதற்குள் அந்த படகோட்டியே " அம்மா... இங்க இறங்கி நடந்து போங்க...தண்ணீர் கனுக்கால் அளவுதான் இருக்கு. இல்லனா நா ஏத்தின இடத்திலேயே உங்கள இறக்கி விட்டுறேன். என்றான். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். எப்படியாது அந்த கரைக்கு சென்றுவிட்டால் ஊருக்கு சென்று விடலாம்.
 இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள்...எதிரே தெரிவது திட்டு!

இருட்டுறதுக்குள்ள சீக்கிரம் நடங்க. பசங்க பேண்ட், பாவடையெல்லாம் கழட்டி வச்சிடுங்க. ஜட்டியோடு நடக்க சொல்லுங்க. அப்பதான் பசங்க நடக்க ஏதுவா இருக்கும். நடக்கிறப்ப செருப்பு போட்டுக்கிங்க...இல்லனா கிழ கிடக்கிற 'ஆழி' கால பாளம் பாளமா பொளந்திடும்  " என்றான். அவர்கள் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தார்கள்.  பின்னர் அந்த   அம்மாவே " சரி தம்பி நாங்க இங்கனயே இறங்கி நடக்கிறோம்". என்றார்கள். எனக்கு திக்கென்று பட்டது. எப்படி இந்த தண்ணீரில் இறங்கி குழந்தை குட்டிகளோடு அக்கரைக்கு செல்வார்கள்?. 
                                                    


படகில் இருந்து இறங்க ஆரம்பித்தார்கள். கொண்டு வந்திருந்த பேக்குகளை வசதியாக அவர்கள் முதுகில் கட்டிவிட்டோம். பின்னர் வரிசையாக ஒன்றன் பின் ஒருவராக நடக்க ஆரம்பித்தார்கள்.  அவர்கள் கரையை அடையும் வரை நாங்கள் படகில் இருந்து கவணித்துக் கொண்டு இருந்தோம்.  அவர்கள் கரையை அடைந்ததும் 'கையை' அசைத்து நீங்கள் போங்கள் என்று சைகை செய்தனர்.
       
தூரத்தில்......நிழலாக அவர்கள் உருவம்.


'அப்பாடா...என்று நிம்மதி பெருமூச்சு வந்தது' எனக்கு. அதற்குள் படகோட்டி படகை பலவாறு அசைத்து சேற்றிலிருந்து விடுத்து தண்ணீருக்கு கொண்டு வந்திருந்தான். பிறகு போட்டை திருப்பி கரையை அடைந்தோம்.

கரை ஏறியதும், படகோட்டியிடம் பணம் கொடுத்துவிட்டு....'உன் பேர் என்ன தம்பி' என்றேன். அவன் 'மாவீரன்' என்றான்.


********************
Share/Bookmark

கருத்துகள் இல்லை :