புதன், ஆகஸ்ட் 17, 2011

உங்கள் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள்.கிருத்துவத்தில் ஒரு பதம் உண்டு. 'பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று தெ‌ரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்' என்று.... !

 நாம் தமிழர்களையும் இப்படித்தன் சொல்லவேண்டும். பல நூற்றாண்டாக தாம் செய்வது தவறு என்று கூட தெரியாமல், ஒரு மாபெரும் தவறை காலம் காலமாக செய்து வருகிறார்கள்.   அது, தமது பெயருக்கு முன்னால் வரும் தலை எழுத்தை அதாவது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதுவது.

பெயரை எழுதும் போது ஆங்கிலத்தில் இன்ஷியலை எழுதுவதுதனே முறை.  இதில் என்ன தவறு இருக்கு என்று நீங்கள் கேட்களாம்?.  உன்மைதான் ஆங்கிலத்தில் எழுதும் போது சரி. ஆனால் தமிழில் உங்கள் பெயரை எழுதும்போது, ஆங்கிலத்தில் எப்படி இன்ஷியலை எழுதுவீர்கள்?. தமிழில்தானே உங்கள் தலையெழுத்தை எழுத வேண்டும். இப்போது புரிகிறதா நாம் செய்யும் தவறு?.

உதாரணமாக...கதிரேசன் மகன் சன்முகன் என்கின்ற போது, சண்முகனின் தலையெழுத்து அதாவது இன்ஷியல் 'க' என்றுதான்  இருக்கவேண்டும். ஆனால் நாம்  எப்படி எழுதுகிறோம் என்றால்  K. சண்முகம்   என்றுதான் எழுதுகிறோம். இது ஒரு குறைபாடாக நமக்குத் தெரிவதில்லை.

மாறாக 'க. Shanmugam' என்று ஆங்கிலத்தில் பெயர் எழுதி தமிழில் இன்ஷியலை  எழுதினால் எப்படி ஒரு அபத்தமோ அப்படி ஒரு அபத்தம்தான் ஆங்கிலத்தில் நமது பெயரின் முதல் எழுத்தையும் எழுதுவது.

கடந்த 400 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலம் இந்தியாவிற்கு வந்தது.  வியாபரத்திற்காக வந்தவர்கள் நமது வெகுளித்தனத்தை கண்டு இங்கேயே தங்கி நாட்டையும் வளைத்து நம் கலாச்சாரத்தையும் கெடுத்துவிட்டார்கள்.  அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம் வரை பாய்ந்தது.

இதில் நமது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதி தவறுக்கு பிள்ளையார் சுஷி போடும் இடம் எது தெரியுமா..? அது பள்ளிக் கூடம்தான். பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக் கூடங்களில் 'டீசி'யில் நமது பெயரை தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இன்ஷியல் போடுகிறார்கள்.  இந்த தவறை நமக்கு சொல்லித் தருவதோ ஆசிரியர்கள்தான்.  ஒரு வகுப்பில் இரண்டு கண்ணன் இருந்தால் ஒரு கண்ணனை T.கண்ணன் என்றோ அல்லது  R. கண்ணன் என்றோ அழைக்கிறார்கள்.

அவர்கள் நிர்வாக வசதிக்காக செய்யும் ஒரு செயல் நமது ஒரு தலைமுறையையே பாதிக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...? .

இன்னோரு  கொடுமையான விஷயமும் நடக்கும்.  அதாவது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதாமல், தமிழிலேயே எழுதுவார்கள். உதா... K.பத்மனாபன்  என்பதை  கே.பத்மனாபன் என்று எழுதுவார்கள். கேட்டால் நான் தமிழில்தானே எழுதியிருக்கிறேன் என்று வியாக்கியானம் வேறு!.  இதுவும் தவறான ஒன்று. திருத்திக் கொள்ளவேண்டிய ஒன்று.


இந்தத் தவறை சாதாரண படிப்பறிவு இல்லாதவன் என்று இல்லை, அனைத்துத் தரப்பு மக்களும் சர்வ சாதராணமாக எந்தவித கூச்சமும் இல்லாமல் செய்கின்றனர்.  மெத்தப் படித்தவர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என்று அனைவரும் இந்த தவறை செய்கின்றனர். 

சினிமா அழைப்பிதழ்கள் மற்றும் விளம்பரங்கள்,  விளம்பரச் சுவரொட்டிகள், கல்வி நிலைய அழைப்பிதழ்கள்,  திருமண அழைப்பிதழ்கள், அரசியல் விளம்பர பேனர்கள், பத்திரிகை விளம்பரங்கள் என்று இந்தத் தவறு,  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.   உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் உங்களது திருமண அழைப்பிதழை மீண்டும் ஒரு முறை பாருங்கள்,  அதில் நிறைய இடங்களில் ஆங்கிலத்தில்தான் இன்ஷியலை எழுதியிருப்பார்கள்.    
                                                    
ஆங்கிலத்தில் இன்ஷியல்  உள்ள கல்யாண பத்திரிகை      
இது அரசியல் விளம்பரம். இதுவும் அந்த ரகம்தான்.


சினிமாக்காரர்களின்  இரு மொழி மோகம்!

40களில் இருந்து தொடங்குகிறது சினிமா காரர்களின் இரு மொழிகளில் தங்களது பெயரை எழுதும் மோகம். அது ஒரு தவிற்க முடியாதா ஒரு விஷயமாகவே சினிமாத் துறையில் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது.  இரு மொழிகளில் தங்களது பெயர்களை வைத்துக் கொண்டவர்களின்  பட்டியல் வால் போன்று நீண்டுக் கொண்டே செல்கிறது.

M.K.தியாகராஜ பாகவதர் (MKT)
N.S. கிருஷ்னன்
T.A. மதுரம்
M.G.இராமச்சந்திரன் (MGR)
T.R.மகாலிங்கம்
A.V. மெய்யப்பச் செட்டியார் (AVM)
K.V. மகாதேவன்
S.S. ராஜேந்திரன்
M.R. ராதா
Y.A.K தேவர்
M.N. நம்பியார்
S.A. அசோகன்
V.K.ராமசாமி
M.N. ராஜம்
K.R. விஜயா
T.M. சொளந்தர்ராஜன்
T.R.பாப்பா
K.பாலச்சந்தர்
S.P. முத்துராமன்
K.பாக்கியராஜ்
M.S.விஸ்வனாதன்
T. ராஜேந்தர்
A.R. ரஹ்மான்
S.A. சந்திரசேகர்
K.S.ரவிக்குமார்
A.R. முருகதாஸ்
Y.G.மகேந்திரன்
S.J.சூர்யா
V.G.பன்னீர்தாஸ் (VGP)
H.வசந்தகுமார் (வசந்த் & கோ.,)
T.T. கிருஷ்னமாச்சாரி (TTK group)
T.R பாலு
K.N. நேரு
KKSSR. இராமச்சந்திரன்.
A.K.மூர்த்தி
எஸ். ராமகிருஷ்ணன் (எழுத்தாளர்)

      படிக்கும் உங்களுக்கு புரிய வைப்பதற்காகத்தான்  இரு மொழிகளில் பெயர் வைத்தவர்களின் பெயர் பட்டியல். இன்னும் இந்த கணக்கில் வராதவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  இதைப் பார்க்கும் போதே  விஷயத்தின் விபரீதம் புரிந்திருக்கும்.

அதுவும் சினிமாக்காரர்கள் செய்யும் நல்லதும் கெட்டதும் மிக விரைவாக தமிழர்களிடம்  பரவிவிடுவதுதான் கொடுமையிலும் கொடுமை! இரு மொழிகளில் பெயரை எழுதுவது தவறில்லை என்ற என்னம் தமிழர்களிடையே வருவதற்கு சினிமாகாரர்களே முக்கிய  காரணம். 

தினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களைப் பாருங்கள். அதில் வரும் தொழிற்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் எல்லாம் இரு மொழிகளில்தான் எழுதப்பட்டு இருக்கும்.


தமிழிலேயே இன்ஷியலை போட்ட செட்டியார்கள் 

முன்பு வியாபரத் துறையில் கோலோச்சிக் கொண்டு இருந்த தமிழ் செட்டியார்கள் தங்களது தந்தையார் பெயரினையும் தாத்தன் முப்பாட்டன் பெயரினையும் தங்களது பெயருக்கு முன்னால அழகு தமிழில்  வைத்து இருந்தனர்.  அதனாலயே அவர்கள் ஆனா ரூனா செட்டியார், வேனா செட்டியார், லேனா செட்டியார், தானா முனா செட்டியார் என்று அவர்களது முன்னோர் இன்ஷியலோடு அழைத்தார்கள். இன்றும் எங்கேயாவது அத்தகைய பெயர்களை வெகு அறிதாகத்தான் காணமுடியும். அதில் ஒரு பெயர் 'லேனா. தமிழ்வாணன்'.

ஆனால் காலம் செல்லச் செல்ல செட்டியார்கள் கூட தங்களது மரபுகளையும் காலச்சாரத்தையும் மற்றிக் கொண்டு வழக்கமான தமிழர்களாக மாறிவிட்டனர் என்பதுதான்  வேதனையான ஒன்று.

'தானாக எதுவும் மாறாது'

தமிழர் தந்தை ஆதித்தனார் ஒரு முறை கூறும் போது " உலகை  நான் நான்கு முறை சுற்றி விட்டேன். தமிழர்களிடம்  மட்டும்தான்  T.K.மூர்த்தி  P.R கண்ணன் என்று இரு மொழிகளில் தமது பெயரை எழுதும் மனிதர்களை  காணமுடியும்" என்றார்.

தாம் செய்வது தவறு என்று கூட சிந்திக்க முடியாத அளவிற்கு இந்த ஆங்கில தாகம் நமக்கு இருந்திருக்கிறது. இருந்துவருகிறது. 

இதை நாம் மக்கள் மனறத்தில் கொண்டு செல்ல வேண்டும்.  விஷயத்தின் விபரீதத்தைப் புரிய வைக்கவேண்டும். இதை ஒரு இயக்கமாக கொண்டு சென்று நல்ல ஒரு மாறுதலை காணவேண்டும்.  இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லை. 


நாம் ஒன்று சேருவோம்,  நமக்குத் தெரிந்தவர்கள், அருகில் உள்ள பள்ளிகள், ஊர் மக்கள்,  முக்கியஸ்த்தர்கள் என்று எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். சிறு துளி பெரும் வெள்ளமாய் மாறி இந்தத் தவறை தமிழனிடமிருந்து  துடைத்தெறிவோம்.

முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளங்களை பயன்படுத்தி இனி வரும் காலங்களிலாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி,  தமிழர்கள் தங்களது பெயர்களை  இரு மொழிகளில் எழுதுவதை தவிர்த்திடுவோம்.  அதை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.Share/Bookmark

13 கருத்துகள் :

புகல் சொன்னது…

மிக சிறப்பாக சொன்னிர்கள்,
ஒன்றை நான் இங்கு பதிவு செய்ய விழைகிறேன்

இது என் தனிபட்ட கருத்து

என்ன பொருத்தவரை இந்தியா என்னும் கூட்டாட்ச்சியில் இருக்கும்வரை தமிழை வளர்ப்பது என்பது மிக கடினமான ஒன்று
தமிழக அரசால் தனிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது.
இந்தியா தமிழனின் தாய் நாடாம் ஆனால் இந்தியாவின் முதன்மை மொழியோ இந்தி, ஆங்கிலம்.
எடுத்து காட்டாக சில
இந்தியாவின் பாராளுமான்றத்தில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே
நடுவன அரசின் அத்தனை தேர்வுகளும் இந்தி, ஆங்கிலத்தில்தான் நடத்தபடுகின்றன,
தமிழில் நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது, போராடினால் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என சில கூட்டங்கள் திரித்து பேசுகின்றன

எந்த ஒரு விசயமானாலும் இந்தியை அனைத்து பொது இடங்களிலும் மலிவாக்கி
இந்தியை தேவையுள்ள மொழிபோலவும் தமிழை படித்தால் ஒரு பயனும் இல்லாததுபோல் மாற்ற முயற்சிக்கிறது இந்த ஈன இந்திய அரசு அதில் முடிந்த அளவிற்க்கு வெற்றியும் பெற்றுள்ளது.
Central government trying to make hindi as a soft corner among tamilnadu
and making them as a part of day-2-day life.

தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட
இந்திய அரசின் காலை பிடித்து தமிழகம் கெஞ்சிகொண்டிருக்கிறது
என்றால் நாம் என்ன விடுதலையை அடைந்துள்ளோம்.

தமிழை மட்டும் அல்ல தமிழினின் உயிரை காப்பாற்ற இந்தியாவின் காலை நக்க வேண்டிய அவல நிலை.
இலங்கை கடற்படை தமிழனை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொன்று குவிக்கிறான் இந்தியா இதன் நிமத்தமாக இலங்கைக்கு ஒரு கண்டன குரலோ, இல்ல ஒரு பதிலடியோ கொடுத்ததில்லை இது தமிழனின் சொந்த நாடா இருக்கவே முடியாது
தமிழனின் வரிபணத்தை பறித்து கொண்டு தமிழனை அடிமைகளாக வைத்திருக்கிறது.

இந்தியை தமிழகத்தின்மேல் வலுகட்டாயமாக திணித்து அதை எதிர்த்து போராடிய மாணவர்களை நசுக்கியது,
விளைவு நூற்றுகண்கான தமிழர்கள் உயிர்கள் பலியாயின, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள். இது வெள்ளையினின் ஆட்சியைவிட எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி இது.

இதை நாம் பாடமாக படிக்க முடியுமா முடியாது ஏன் என்று விடை உங்களுக்கே தெரியும்!!

ஆக மொத்தம் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்கு தமிழகத்தின் வளங்களும், தமிழனினெ வரிபணம் வேண்டும் தமிழ் மொழியை பற்றியோ, தமிழினின் உயிரை பற்றியோ எந்த ஒரு கவலையும் கிடையாது.
இலங்கைகாரன் அடித்து கொன்றாலும், கர்நாட்டகாரன் அடித்தாலும், தண்ணிர் தர மறுத்தாலும்,
மலையாளத்தான் தண்ணிர் தராவிட்டாலும்,
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்ச்சி, போர் கருவிகள், தளவாடங்கள் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம்.
இப்படி எல்லாத்தையும் பொத்திகொண்டு இந்தியா விளையாடும் கிரிக்கெட்டுக்கு(அதில் ஒரு தமிழனாவது விளையாட மாட்டானா என்ற ஏக்கம் ஒருபுறம்) கைதட்டிகொண்டு இருக்கவேண்டும்

இவன்
pugal.na@gmail.com

JOTHIG ஜோதிஜி சொன்னது…

தமிழை பெருமைப்படுத்தி எழுதிக் கொண்டு இருப்பவர்கள் கூட கட்டுரையில் கடைசியாக தங்கள் பெயரை இரண்டு மொழிகளில் தான் எழுதுகிறார்கள். பல முறை நொந்து போயிருக்கேன். வேறெங்கும் போக வேண்டும். பதிவுலகில் உள்ள பல பெயர்களை கவனித்துப் பாருங்க. அவர்கள் எழுதிக் கொண்டிருப்பவதையும் பாருங்க. உங்களுக்கே புரியும். தமிழ்மணத்திற்கு நன்றி. நிறைய விசயங்கள் உங்கள் மூலம் கற்றுக் கொண்டேன். வாழ்த்துகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி புகல்! தங்களது உயர்வான கருத்தை நான் ஆமோதிகின்றேன்.

தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது அது இந்தியாவில் இருப்பதுதான். இந்திய மொழிகளில் இந்தி அதிகமாக பேசப்படும் மொழியாக இருந்தாலும், திராவிடக் குடும்பந்தைச் சார்ந்த தெலுங்கு இரண்டாவதாக இருந்தாலும் தமிழுக்கு என்று சில நிரந்த உயர்வுகள் இருக்கத்தான் செய்கிறது. இலங்கை, சிங்கபூர், மலேஷியா, மொரிஷியஸ் போன்ற அயல் நாடுகளில் ஒரு பேச்சு மொழியாக, தேசிய மொழியாக தமிழ் மொழி ஆட்சி செய்கிறது. ஆனால் இந்த தகுதி இந்திய மொழிகளில் ஒன்றுக்கும் கிட்டவில்லை.
அதுபோக, இந்தி திணிப்பு என்பது "நீங்கள் சொல்வது போல நகரங்களில் வெகு சுலபமாக தங்கு தடையின்று நடந்துக் கொண்டு தான் இருக்கச்செய்கிறது. இந்தியாவில் இருப்பதாலேயே தமிழ் தனிக் குடித்தனம் காணாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. லெமூரிய கண்டத்தில் தமிழ் நாடு ஆப்ரிக்க மடகாஸ்கரிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலும் விரிந்து பரவி இந்தியாவைவிட பெரிய நாடாக இருந்தது. காலத்தின் கோலம் நமது பெரும்பான்மையான நிலங்கள் இந்திய பெருங்ககடலில் உள்வாங்கிக் கொண்டது. தமிழனின் தாய் நிலம் இன்றும் இந்திய பெருங்கடலில் உறங்கிக்கொண்டு இருக்கிறது.

பிரச்சனைகளின் மத்தியில்தான் தமிழனும் தமிழ்நாடும் எப்போதும் இருந்துவருகிறது. அதனால் நாம் அனைவரும் இணைந்தே செயல்படவேண்டிய இருக்கிறது தோழர்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி ஜோதிஜி!
நீங்கள் சொன்னபிறகுதான் நானும் கவனிக்கத் தொடங்கினேன். வலைத்தளத்தில் எழுதும் பல பேர் இருமொழிகளில்தான் தங்களுது பெயரை வைத்திருக்கின்றனர். இது புரையோடிப்போன ஒன்று. நாம் நமது முயற்சியை இப்போதே தொடங்கினால்தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும்.

கோவை நேரம் சொன்னது…

தமிழ்நாட்டுல பொறந்துட்டு தமிழ்ல பேசுனா எப்படி ...?

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

தமிழ்மண நட்சத்திரத்துக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

மிக அழகாகச் சொன்னீங்க
நண்பரே.

நான் என் மாணவர்களுக்கு அடிப்படையில் அறிவுறுத்துவது இதுதான்.

ஒன்று தமிழிலே கையெழுத்திடு
இல்லையென்றால் ஆங்கிலத்திலாவது கையெழுத்திடு

இருமொழிகளையும் கலந்து இருமொழிகளையும் கொல்லாதே என்று நான் சொல்வதுண்டு.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

சிப.ஆதித்தனால் சொல்வார்..

நானும் உலகம் முழுக்க சுற்றியுள்ளேன்.

நம் நாட்டைப்போல இருமொழிகலந்து கையெழுத்திடும் வழக்கத்தை எங்குமே பார்த்தில்லை என்று தன் அனுபவத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவரசு. ம சொன்னது…

நான் இது வரை M. அறிவரசு என்றோ, ம . Arivarasu என்றோ எழுதியது இல்லை, எழுதிய ஞாபகம் இல்லை. ம. அறிவரசு என்று தான் எழுதுவேன்!!

சாய் பிரசாத் சொன்னது…

நீங்கள் சுட்டிக்காட்டிய உதாரணம் 'க.sanmugam' சிந்திக்க வைத்துள்ளது;

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி குணசீலன் அவர்களே...எதிர்காலத்தில் நல்ல மாணவர்களை உருவாக்குவது, உங்களை போன்ற ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி சாய் பிரசாத். இப்படி சொன்னால்தான் அனைவருக்கும் எளிதில் புரியும்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி அறிவரசு. பெயரிலேயே அழகு தமிழை வைத்திருக்கும் உங்களது செயல்பாடுகள் மற்றவருக்கு எப்போதும் முன்மாதிரியாகவே இருக்கும்.