சனி, ஆகஸ்ட் 20, 2011

போலாமா....போலாமா....மீனு வாங்க போலாமா....?


                                                                               தமிழ்மணம் நட்சத்திரப்  பதிவுகள்!


ஞாயிற்று கிழமை வந்தாலே....மட்டனா, சிக்கனா அல்லது மீனா எது வாங்குவது  என்று வீட்டில்   'இங்கி பிங்கி' போட்டு பார்ப்போம்.  என்னதான் அலசி ஆராய்ந்தாலும்,  கடைசியில் மீன் வாங்குவது என்று முடிவாகும்.  அவ்வப்போது மட்டன் வாங்கினாலும் சிக்கன் பக்கம் அவ்வளாவாக தலைகாட்டுவதில்லை.  ஏனோ தெரியவில்லை சிக்கன் மீது எப்போதும் ஒரு பயம் உண்டு.  மீன் அப்படி அல்ல, துணிந்து வாங்கலாம்.  பிரச்சனை இல்லாதது. 
    

சென்னையில் திருமுல்லைவாயில் அம்பத்தூர் ஆவடி போன்ற பகுதிகளில் பழவேற்காடு மீன்கள் கிடைக்கும். பழவேற்காடு இறா சற்று பெரியதாக இருக்கும்.  இங்கு கிடைக்கும் மீன்கள் நல்ல ருசியாக இருக்கும் என்பது நிஜமான ஒன்று. 

கடற்கரை நகரான சென்னையில் என்றுமே மீன் தட்டுப்பாடு வந்ததில்லை. மீன்பிடி கட்டுப்பாடு காலங்களில் கூட ஆந்திராவிலிருந்து மீன்கள் சென்னைக்கு வந்துவிடும்.
காசிமேடு மார்க்கெட்
   
சிலநேரங்களில் மீன் வாங்க காசிமேட்டுக்கு போவதுண்டு. சுற்றி கண்டைனர் லாரி அணிவகுத்து நிற்க கடற்கரையில் மீன் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும்.  அங்கு சிறிய சிறிய படகுகள் வந்த வன்னம் இருக்கும். பெரிய பெரிய வஞ்சிரம் மீன்கள் ஏலம் போகும். யார் வேண்டுமானாலும்  ஏலம் கேட்கலாம். 4அல்லது 5 கிலோ எடை உள்ள வஞ்சிரம் மீனை 2 ஆயிரம் ரூபாயிக்கு ஏலம் எடுத்து பிரித்துக் கொள்வோம்.  அங்கே இருக்கும் மீன் சுத்தம் செய்பவர்களிடம் கொடுத்துவிட்டல் போதும் அவர்கள் மிக நேர்த்தியாக  யாருக்கும் கூடுதல் குறைவின்றி சமமாக  பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்.  அவர்கள் மீனை பிரிக்கும் முறை நிச்சயம் பாராட்டுக்குறியது. இங்கு கை நீளமுள்ள பெரிய பெரிய இறா(ள்) இங்கு சல்லிசாக கிடைக்கும்.
சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது காசிமேடு மீன் மார்கெட்டுக்கு போய்பாருங்க...


காவிரி மீனை காசுகொடுக்காமல் கொண்டுவந்தேன்.

எங்கள் ஊர் திருவாலங்காடு (நாகை மாவட்டம்) காவிரி ஆற்றில் பிரசித்தமான 'வாளை' மீன் கிடைக்கும். நல்லா நீளமா...வழ வழவென்று பார்க்கவே அழகா இருக்கும். அந்த மீன் வாங்க வேண்டுமென்றால் விடியற்காலை 5 மணிக்கு  சட்ரசுக்கு (காவிரியிலிருந்து விக்ரமாதித்யன் ஆறு பிரியும் இடம்)  செல்லவேண்டும். அப்போதுதான் வாளை மீன் கிடைக்கும். இருள் பிரியாத அந்த நேரத்தில் கிராமத்து மக்கள்  போர்வையை போர்த்திக் கொண்டு  ஆத்துப்பக்கம் நடையை கட்டுவார்கள். ஆற்றில் பெரும் பெரும் கூடையை கயிரில் கட்டி தண்ணி வெளியே பீச்சிக் கொண்டு வரும் வழியில் கட்டி வைத்திருப்பார்கள். தண்ணீர் வரும் வழியில்  ஏறி வரும் மீன்கள்   துள்ளி குதிக்கும்போது அந்தக் கூடையில் விழுந்துவிடும்.  இதில் அதிகமாக 'கெண்டை குஞ்சு' போன்ற மீன்கள்தான்  கிடைக்கும்.  வாளை மீனை வலைவைத்து பிடிப்பார்கள். 

அன்றும் அப்படித்தான்.  நான் ஏழாவதோ எட்டாவதோ படித்துக்கொண்டு இருந்த நேரம். என்னை மீன் வாங்க அனுப்பினார்கள்.  எனது 'ஹெர்குளிஸ் கேப்டனை' எடுத்துக் கொண்டு அங்கு போனால், அந்த விடியற்காலை நேரத்திலும்  நல்ல கூட்டம் இருந்தது. இப்போது போல் அப்போதெல்லாம் எடை வைத்து மீன் விற்பதில்லை. மீனை கண்ணால் பார்த்தே விலையை சொல்லி விடுவார்கள்.  ஒரு பெரிய கூடையில் மீன்களை போட்டு விற்பனை செய்தார்கள்.  நானும் கூட்டத்தில் நின்றுக் கொண்டு கையை நீட்டிக் கொண்டு இருந்தேன். எல்லோர் கைக்கும் மீன் சென்றது என் கைக்கு மீன் வரவில்லை. கையை இன்னும் நீட்டவே மீனை என் கையில் திணித்தார் விற்பவர். மீனை வாங்கி ஒயர் கூடையில் போட்டுக் கொண்டு பணத்தை நீட்டினால் அவர் வாங்குவதாக இல்லை. நானும் ஒரு அரை மணி நேரமாக 'பணம் இந்தாங்க வாங்கிக்கிங்க" என்று கிளிப்பிள்ளையாய் கூவிக் கொண்டு இருந்தேன். அவர் கண்டுக் கொள்வதாயில்லை.  பொறுத்துப் பொறுத்து பார்த்த நான், பணத்தையும் மீனையும் எடுத்துக் கொண்டு சிட்டாய் சைக்கிளை  எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.   அன்று பணம் கொடுக்காமலேயே வாளைமீன் எங்க வீட்டில் வாழை இலைக்கு வந்தது. 

இன்றும் எனது அம்மா இதை சொல்லி சொல்லி  என்னை கேலி செய்வார்.

முன்பெல்லாம் எங்கள் ஊருக்கு மாலையில்தாங் கடல் மீன் வரும். என் தாத்தா வாங்கிக்கொண்டு வருவார். வாழமட்டையில் வைத்துதான் மீனை கட்டித்தருவார்கள்.



மீன் வகைகள்

உலகில் 22000 வகை மீன்கள் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது.   என்னன்ன நல்ல சமாச்சாரம்  உள்ளனவோ அவை அனைத்தும்  மீன் உணவில் இருக்கிறது.  அத்தகைய சக்தி வாய்ந்தது மீன் உணவு.  உலகம் 75 சதவீதம் நீரால்  சூழப்பட்டு இருப்பதால் மீன் உணவிற்கு என்றுமே பஞ்சமே ஏற்பட்டதில்லை. 
மீன்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கடல் மீன்கள் மற்றொன்று நாட்டு மீன்கள்.  ஆறு, குளம், ஏறி, கன்மாய், குட்டை போன்ற இடங்களில் வாழக்கூடியது நாட்டு மீன்கள். உப்பு நீரில் மட்டுமே வாழ்வது கடல் மீன்கள். இது இரண்டுமே அநதந்த வாழ்விட மக்களால் உண்ணக்கூடியது. எங்கள் ஊரில் நாட்டு மீனைவிட கடல் மீனைத்தான் அதிகம் விரும்புவர். ஏனென்றால் நாட்டு மீனில் சேற்று நாற்றம் சிறிது அடிக்கும். அதனை நிறைய பேர் விரும்பமாட்டார்கள்.

நாட்டு மீன்களில், விரால், ஆரா, கெளுத்தி, கெண்டை,  கட்ளா, அயிரை, கொறவை, தொய்மா, சிலேப்பி, சார, வாளை போன்ற மீன்கள், மனிதர்கள் சாப்பிடும் பட்டியளில் இருக்கின்றது.

கடல் மீன்களில் சங்கரா, , வஞ்சிரம், வவ்வாள், கொடுவா, கிழங்கான், நெத்திலி, அயிலை(கானாங்கழுத்தை), மத்தி. உறி பாரை, தேங்கா பாறை, திருக்கை, சுறா, பால் சுறா, சுதும்பு, காரபொடி, சூரமீன், காளா, நாக்கு மீன், கவலை, பொறுவா, வாளை,ஓரா, உளுவை, காரப்பொடி, கீச்சான், கோளா, சுதும்பு, ஷீலா, சூடான், பன்னா  போன்ற மீன்கள் மனிதர்களின் தேவைக்காக  கடலில் உயிர் வாழ்ந்துக் கொண்டு  இருக்கிறது. 


மீன் ஆயுளுக்கும் துணை புரியும்.

மீன் உணவில் ரொம்ப முக்கியமானது ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட்.  இதில் உள்ள ஓமேகா 3 வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைத்துவிடுகிறது. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

உலகம் முழுவதும் மீன் உணவை வைத்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மீன் சாப்பிட்டால் கண்கள், இருதயம், தோல் போன்றவைக்கு  மிகவும் நல்லது என்கிறது ஒரு ஆய்வு. அதோடு தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறது இன்னொரு ஆய்வு.



பூஜைகளில் மீன்கள்.

என்னது பூஜைகளில் மீனா என்று திகைக்க வேண்டாம்.
பூஜையில் மீன்
                        

மீன்கள் உலக மக்களிடையே எப்போதும் இனக்கமாகவே இருந்து வருகிறது. ஆதிகாலம் தொட்டு உலகில் முதலில் தோன்றிய உயிரினம் என்ற அடிப்படையில் மனிதர்கள் அதனை சில இடங்களில் பூஜிக்கவே செய்கின்றான். வங்காள பிராமனர்கள் தங்களது திருமண சடங்கின் போது மீனையே தெய்வமாக வைத்து வணங்குவார்கள்.  மீனை 'கடல் புஷ்பம்' என்று கொண்டாடுவார்கள். திருமண சடங்கின்போது மீனே பிரதானமாக அமையும்.  திருமண சடங்கு முடிந்த பின் அனைவருக்கும் மீன் உணவே பரிமாறப்படும். வ்ங்காள பிராமனர்கள் சமையளில் மீன்ககள் தினந்தோறும் இடம் பெறும்.
மணமக்கள் அலங்காரத்தில் மீன்கள்
     

இந்தியாவின் வடக்கே  லடாக் பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆறு மற்றும் குளங்களில் வற்றிபோய் உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் மீன்களை பிடித்து நீர் ஓடும் ஆற்றில்  விடுவார்கள். அப்படி செய்வது புன்னியத்தையும் தாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாய் இருக்கும் என்றும்  நம்புகின்றனர்.  அதனால், அவர்கள் மீன் உணவை சாப்பிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
      

நம்மூரில் கோயில் குளங்களில் இன்றும் மீன் வளர்ப்பதை பார்த்திருக்கின்றோம். என்னேரமும் சலசலவென்று மீன்கள் இயங்கிக்கொண்டு இருப்பது கோயிலுக்கு வரும் பக்தர்களை பரவசப்படுத்துகிறது.

அதேபோல் ஊர் குளமோ அல்லது கோயில் குளமோ இப்போதெல்லாம் காண்ட்ராக்ட் விட்டு மீன் வளர்க்கின்றனர். அதனால் அந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதிலை.  பயன்படுத்த முடிவதில்லை.  'இப்போதெல்லம் யாரும் குளத்தில் குளிப்பதேயில்லை' என்ற எனது கட்டுரை கல்கியில் வெளிவந்தது.    இதனால் கிரமங்களில் கூட ஆறு குளம் மீன் போன்றவை நமக்கு அன்னியமாகவே மாறிவிட்டது. எனலாம்.

நமது தென் மாவட்டங்களில் கூட கோயில் குளங்களில்  'மீன் கொடை' குடுக்கப்படுகிறது.  ஊர் பெரியவர்களால்  நல்ல நாள் குறித்து அன்று கோயில் குளத்தில் மீன் பிடித்து எடுத்துக் கொள்வார்கள்.  அவரவர் பிடிக்கும் மீன் அவரவருக்கு.

.
இப்படி காலம்காலமாக மனிதன் மீன்களை சார்ந்தே தனது வாழ்க்கை அமைத்திருக்கின்றான். ஆறுகளின் ஓரத்தில் நாகரிகம் வளர்ந்ததும் ஒரு காரணம்.  மீன்கள் பிடிப்பதும் அதை உணவாக சமைப்பதும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அது அந்தந்தப் பகுதி கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. 
'மீன் வாங்கும் போது நாறும் சமைக்கும் போது மணக்கும்'  என்று கேலியாய் கூறினாலும் மீன்  உலக மக்களை என்றென்றும் வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறது.


'நாளை ஞாயிற்றுக் கிழமை...... 
மீண்டும் முதல் பாராவைப்  படிக்கவும்!'





1 கருத்து:

testermind சொன்னது…

Excellent sir, Today only i visited your blog, wonder how effective your blog is..

Thank you

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...