சனி, செப்டம்பர் 10, 2011

ஜெயலலிதாவின் தலையில் தட்டிய தினமணி.முதாய நலனில் எப்போதும் அக்கரைக் கொண்டு, மக்கள் பக்கம் நின்று செய்திகளை வழங்கி வரும் தினமணி நாளிதழ், தனது இன்றைய (10/09/2011)  தலையங்கத்தின் மூலம் ஜெயலலிதாவிற்கு 'குட்டு' வைத்துள்ளது.
நேற்று முன்தினம் 8ம் தேதி  சட்டப் பேரவையில்  ஜெயலலிதா பேசும் போது...  "  கள்ளச்சாராயம் காய்ச்சி சம்பாதிக்கவேண்டும்  என்பதற்காக சமூகவிரோதிகள்தான் டாஸ்மாக்கை மூடவேண்டும்  என்கிறார்கள்.  டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று சொல்பவர்கள் சமூக விரோதிகள். டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்...." என்று வசைபாடினார்.  

டாஸ்மாக் வருவதற்கு நாம்தானே காரணம்  (படிக்க... குடிக்க கற்றுக் கொடுத்த 'கோ' மகள்) என்ற மனசாட்சியின்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.   இதை நாளிதழ்களில் படித்தவர்கள்  முகம் சுழிக்கத்தான் செய்தனர்.   முழு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லாமா...? இதை தட்டிக் கேட்க ஆளில்லையா என்று நாம் திகைத்து நிற்க....  இன்றைய  தலையங்கம்  'மகுடமல்ல, முள்கிரீடம்' என்ற தலையங்கம் மூலம் ஜெயலலிதாவிற்கு 'குட்டு' வைத்துள்ளது தினமணி நாளிதழ். 'டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்றால்,  எதற்கு ஆட்சி அதிகாரம், காவல்துறை' என்று கேள்வி எழுப்பி... சற்று காட்டமாகவே ஜெவை விளாசிவுள்ளது தினமணி.  

இனி தினமணி தலையங்கம்......

                                                  'மகுடமல்ல, முள்கிரீடம்'                                                   

மதுவிலக்கை அமல்படுத்தினால் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடி வருவாய் சமூக விரோதிகளுக்குச் சென்றுவிடும்' என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது நியாயமான கருத்து போலத் தோன்றும். மது விற்பனையை அரசு செய்யாமல் தனியார் எடுத்துக்கொண்டு செய்தால், இத்தனை லாபமும் தனியாருக்கு அல்லவா போகும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இந்த மதுவைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் பணம் எவ்வளவு, இந்த மதுவின் உற்பத்திச் செலவு எவ்வளவு என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்குமேயானால், தற்போது மது விற்பனையில் அரசுக்குக் கிடைக்கும் ரூ.15,000 கோடியைக் காட்டிலும் அதிகமான வருவாயைத் தனியார் மது தயாரிப்பு நிறுவனங்கள் லாபமாக அடைந்து வருகின்றன என்கிற கசப்பான உண்மை வெளிப்படும்.

அந்நிய மதுபானத் தொழிலில் வெறும் எரிசாராயத்தைத் தண்ணீரில் கலந்து விற்பதைத் தவிர, மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் கிடையாது. பல தருணங்களில் இந்த மது புளிப்பேறும் காலஅவகாசம்கூட இல்லாமல் அப்படியே பாட்டில்களில் அடைக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. அவ்வளவு தேவை இருக்கிறது. ஆகவே, மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் மேலதிகமாகவே கிடைக்கிறது என்பது நிச்சயம். தரக்கட்டுப்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது, கலால் வரி கட்டாமல் திருட்டுத்தனமாக எவ்வளவு மது விற்பனையாகிறது என்பதெல்லாம் வெளியில் விவாதிக்கவேபடாத பிரச்னைகள்.

மதுவிலக்கை அமல்படுத்தினால் என்ன ஆகும் என்று பார்க்கலாம். தமிழக அரசுக்கு ரூ. 15,000 கோடி வருவாய் கிடைப்பது நின்றுபோகும். அதேபோல, மதுபானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்காது. இத்தனை வருமானமும் சமூகவிரோதிகளுக்குப் போகும் என்று சொன்னால், தமிழகத்தில் இப்போது விற்பனையாகும் அதே அளவுக்கு கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடினால்தான் உண்டு. பிறகு எதற்கு காவல்துறை, கண்காணிப்பு? ஏன், ஒரு ஆட்சி, அரசாங்கம் எல்லாம்? லஞ்சத்தைக் கட்டுப்படுத்த அரசால் முடியாது என்று கூறி லஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதுபோல இருக்கிறது இந்த வாதம்.

மதுவிலக்கு அமலில் இருக்கும்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் இருக்கத்தான் செய்தனர். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவர்களிடம் திருட்டுத்தனமாக சாராயம் குடித்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஊரிலும் சில நூறு பேர்தான். கள்ளச்சாராயம் குடிப்பது சமூக அவமானமாகக் கருதப்பட்டதால் 95 சதவிகித குடிமக்கள் குடிகார மக்களாக இல்லாமல் இருந்தனர்.

ஆனால், அரசு சொல்கிறது 32 மாவட்டங்களில் ரூ.66 லட்சத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தி மதுவின் தீமை குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லவிருக்கிறோம். இதுதவிர, ஆயத் தீர்வை ஆணையருக்கு ரூ.34 லட்சம் வழங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று! ஏற்கெனவே மாநிலத்தில் மதுஅடிமைகளின் புனர்வாழ்வு மையங்கள் 15 உள்ளன. இவற்றுடன் மேலும் 3 மையங்கள் திறக்கப்படும். புதிய மையத்துக்காகவும், பழைய மையங்களை மேம்படுத்தவும் ரூ.5 கோடி வழங்கப்படும் என்று சொல்கிறது தமிழக அரசு. கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக இருக்கிறது.

ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜ், பக்தவத்சலம், அண்ணாதுரை ஆகிய ஆறு முதல்வர்கள், மதுவாசனையை தமிழக இளைஞர்களுக்குக் காட்டாமல் இருந்தார்கள். 1991-ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, சாராயக்கடைகளை மூடி புண்ணியம் கட்டிக்கொண்டார். அதற்காக அவரைப் பாராட்டாத தாய்மார்களே கிடையாது. இப்போது அவர் ஏன் அதே மனத்திண்மையுடன் செயல்படாமல் இருக்கிறார் என்பதுதான் அவரிடமிருந்து நல்லாட்சியை எதிர்பார்ப்பவர்கள் எழுப்பும் கேள்வி.

"திமுக அரசின் இலவசத் திட்டங்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கான நிதி மதுவிற்பனையில்தான் கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தைக் கைவிட முடியாத நிலை' என்று காரணம் கூறக்கூடும். அதற்கு படிப்படியாக இலவசங்களைக் குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் வழியே தவிர, மது விற்பனையை அதிகரித்து இலவசங்களை வாரி வழங்குவது சரியான முடிவாக இருக்காது.

மதுக்கடைகளில் வேலை செய்யும் சுமார் 30,000 பேரும் ஏதோ ஓர் அரசியல்கட்சியுடன் இணைவு பெற்ற டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் அமைத்துள்ளனர். பணிநிரந்தரம் செய்யக் கோரி போராடுகின்றனர். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் அதே அரசியல் கட்சிகள் தங்கள் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்காகக் களத்தில் குதிக்கின்றன. அரசியல் கட்சிகளின் ஆஷாடபூதிதனத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

மது விற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அதனால் இலவசங்களை அள்ளிக் கொடுக்க முடிகிறது. 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது என்பதெல்லாம் நொண்டிச் சாக்குகள். மது விற்பனையால் மக்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம் சீர்குலைகிறது. உழைக்கும் திறன் குறைகிறது. அடுத்த தலைமுறையினர் சீரழிகிறார்கள். மாலை 5 மணிக்குப் பிறகு பெண்கள் தனியாகத் தெருவில் நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரக் குறைவான தெருவோரக் கடைகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம்தான் நிஜமான விளைவுகள்.

"முதலில் தெருவுக்குத் தெரு மதுக்கடைகளும் பார்களும் இருப்பதை பாதிக்குப் பாதியாகக் குறைப்பது அடுத்த 5 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை நோக்கித் தமிழகத்தை இட்டுச் செல்வது மதுக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சுயதொழில் செய்ய வாய்ப்பளித்து அந்த இளைஞர்களுக்கு நல்லதொரு வருங்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது'. இப்படியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பு.

2003-04-ம் ஆண்டில் மது விற்பனையால் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3,639 கோடி. 2010-11-ம் ஆண்டில் ரூ.14,965 கோடி.
   

இது நமக்கு நாமே சூட்டிக்கொள்ளும் மணிமகுடமா, முள்கிரீடமா? என்ற கேள்வியோடு தனது தலையங்கத்தை முடித்துள்ளது தினமணி.

தினமணி போன்ற  பொறுப்புமிக்க பத்திரிகைகளால்தான் நாடும் வீடும் உறுப்படும். அவர்கள் தரும் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு நல்வழியில் நடந்தால் எல்லோருக்கும் நலமே....!

                                                                                                                                                   

Share/Bookmark

6 கருத்துகள் :

கும்மாச்சி சொன்னது…

நானும் அந்த தலையங்கத்தைப் படித்தேன், தினமணி இப்பொழுதுதான் முதலில் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு எழுதும் முதல் எதிர்ப்பு தலையங்கம்.

jinglibingli சொன்னது…

இதே போல சமச்சீர் கல்வி விவகாரத்திலும் ஓங்கி குட்டியிருக்கலாமே?

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

Thanks கும்மாச்சி
தினமணி தனது சாட்டையை முன்பே சுழற்றத் தொடங்கிவிட்டது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

Thanks Jinglibingli:
மச்சீர் விவகாரத்தில் தின 'மணி' அடித்தது அந்த அம்ம காதில் விழவில்லை

பெயரில்லா சொன்னது…

மது குடும்பங்களையே அழித்துக் கொண்டுள்ளது. மது விலக்கு வந்தால் பெண்கள் ஆதரவு அமோகமாக இருக்கும். மற்ற வேலைகளும் ஒழுங்காக நடை பெறும். வெறும் பணந்தான் முக்கியமென்றால் அரசு விபச்சாரம் ஆரம்பிக்கலாமே !

Jagath சொன்னது…

Thanks for this information...Closing eyes Tamilians voted for her...today Bus fare, Milk price increased...
For what? To give Free items to Public and get votes in the coming Parliament Election?...Poor Innocent
and Emotional Tamil people...Even God cannot Save them for next Five years.