சனி, டிசம்பர் 17, 2011

இந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்!. பகுதி 2

            பார்சிக்களின் வரலாறும் - வாழ்க்கையும் !                

முந்தைய  பதிவை வாசிக்க இங்கு சொடுக்கவும்....
இந்தியாவில் பார்சிக்கள்.பொழுது புலர்ந்தது. கடற்கரையில் ஆரவாரம் கேட்டு உள்ளூர் மக்கள் கடற்கரைக்கு திரண்டனர்.  வெள்ளை வெள்ளேரென்று  ஒரு சிறு கூட்டம் சிறு சிறு படகுகளில் வந்து இறங்கியிருந்தது. வந்தவர்கள் மிக அழகான தோற்றம் கொண்டவர்களாக இருந்தனர்.  நல்ல உயரமும், அகன்ற தோள்களும், எடுப்பான நாசியும்  பார்ப்பவரை வசீகரிக்கும் தோற்றத்தில்  இருந்தனர்.

வந்தவர்கள் யார் என்ன என்று வினவிய உள்ளூர் மக்கள், உடனே மன்னனுக்கு தகவல் தெரிவித்தனர். மன்னன் அந்தக் கூட்டத்தின் தலைவனை   அழைத்துவரச் சொன்னான்.

 " யார் நீங்கள் எதற்கு வந்திருக்கின்றீர்கள்?"  என்றான் மன்னன்.
 பெர்ஷியன்ஸ்

"மன்னா...நாங்கள் பெர்ஷியா (ஈரான்) தேசத்தவர். எங்கள் நாட்டில் எங்களை மதம் மாறச் சொன்னதாலும், தொடர்ந்து எங்களுக்கு இன்னல் செய்து, எங்கள் இனத்தாரை அங்கிருந்த அன்னிய அரசு அழித்ததாலும், நாங்கள் அடைக்கலம்  தேடி வந்திருக்கின்றோம். அடிப்படையில் நாங்கள் வியாபாரிகள். எங்களது குலத் தொழிலே வியாபாரம் செய்வதுதான். எங்களுக்கு இங்கு இருக்க இடமும், வியாபாரம் செய்யவும் அனுமதித்தால் நாங்கள் பிழைத்துக் கொள்வோம்" என்றான்.

அதற்கு மன்னன். " நீங்களோ வேற்று தேசத்தவர், அதோடு வேற்று மதத்தையும் சேர்ந்தவர்கள். மொழியும் வேறு, உங்களை இங்கு  தங்க அனுமதித்தால் அது எனது மக்களை பாதிக்கும். நாங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் உங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். நீங்கள் இங்கு தங்க அனுமதிக்க முடியாது " என்றான் மன்னன்.

" மன்னா எங்களுக்கு சிறிது காலம் கொடுங்கள், நாங்கள் உங்கள் மொழியை கற்றுக் கொள்கிறோம். உங்கள் மக்களோடு இணைந்து  வாழ்கின்றோம். அவர்களுக்கு எப்போதும் தீங்க செய்ய மாட்டோம்." என்றான் அந்தக் கூட்டத்தின் தலைவன், மன்னனைப் பார்த்து....மன்னா கொஞ்சம் பாலும் சக்கரையும் கொடுங்கள்" என்றான்.

பாலும் சக்கரையும் வந்தது.

பாலில் சக்கரையை போட்டு கரைத்த அந்த தலைவன், பாலை மன்னனிடம் நீட்டி அருந்தச் சொன்னான். "மன்னா...இனி நாங்கள் இப்படி இருப்போம். உங்களொடு கலந்து இருப்போம்" என்றான்.அதைக் கண்டு மகிழ்ந்த மன்னன், அவர்களுக்கு தங்க இடமும், அவர்கள் கோயில் கட்டிக் குடியேற நிலமும், வியாபரம் செய்யவும் அனுமதித் தந்தான்.

பார்சிக்கள் இந்தியாவில் குடியேறியதைப் பற்றி இப்படி ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு. 

ஆனால், உண்மையில் அப்படி அல்ல....

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள சாஞ்சன் என்ற தீவில்தான்,  பார்சிக்கள் முதன்முதலில் குடியேறினார்கள்.
கடவுளர்கள்

(தற்போது குஜராத்) அந்தப் பகுதியை  ஜாதி ராணா என்ற அரசன் ஆண்டுவந்தான்.  பார்சிக்களை யாரும் தங்க தட்டில் வைத்து அழைக்கவில்லை. குடியேறியது முதல் அவர்கள் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து வந்தனர். பார்சிக்கள் இந்தியாவில் காலடி வைத்ததுப் பற்றிய ஒரு பாடல் சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது. கிபி 1600ம் வருடம் பார்சிக்களின் மதகுரு பொஹ்மன்  கைகோபாத் இதை இயற்றினார் என்றும் கூறப்படுகிறது.

குஜராத் 'சாஞ்சனில்' குடியேறிய பார்சிக்கள் 10ம் நூற்றாண்டில் குஜராத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பரவியிருந்தனர். அங்க்லேஷ்வர், பரூச், கம்பத், நவ்சாரி, சூரத், வாங்கனெர் மற்றும் வாரியவ் போன்ற நகரங்களில் பிற்பாடு இடம்பெயர்ந்தார்கள்.

1290 வாக்கில் குடியேறிய இடத்தின் பெயரை வைத்தே அவர்கள் 5 மத பிரிவுகளாக (குழுக்களாக)  பிரிந்தனர். பகாரியஸ் (நவ்சாரி), பரூச்சா, கோதாவரா (சூரத்), , கம்பட்டா, சாஞ்சனாஸ்  என்று வழிபாடு முறைகளின் வேறுபாட்டின் மூலம் அழைக்கப்பட்டனர்.  (About the year 1290 the Parsis were under 5 different groups of priests based on the geographical location in Gujarat. These priestly groups were: The Bhagarias (Navsari), Bharucha, Godavra (Surat), Khambatta and Sanjanas )

போர்புரிந்த பார்சிக்கள்.

பார்சிக்களை இந்தியர்கள் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை.  11ம் நூற்றாண்டில் ராஜபுதானத்து அரசு அவர்கள் மீது விதித்த அதிகப்படியான வரியை கட்டாமல் அரசை எதிர்த்தனர்.  சிறிது காலம் கழித்து  ராஜபுதானத்து அரசு, வரி வசூலிக்க அனுப்பிய  படைகளோடு சண்டையிட்டு   அவர்களை தோற்கடித்தனர்.

பார்சி வழிப்பாட்டுத்தளம்.

பார்சிக்களில் ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் தீரமுடன் இருந்துள்ளனர். ராஜபுதானத்துப் படைகளை ஒரு பெண் தனியாக நின்று எதிர்த்திருக்கிறாள். அவளின்  நினைவாக வருடம் தோறும் சூரத்   நகரில் விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையே இந்தியாவில் முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகரித்தது. 1400ல் ஹிந்துக்களின் நகரான சஞ்சன் நகரை முஸ்லீம்கள் கைப்பற்றினார்கள்.  வடக்கு குஜராத்தை ஆண்டு வந்த ஹிந்து மன்னன் பார்சிக்களின் துணையை நாடினான். அவர்கள் இந்து அரசனுக்கு 1400 பார்சிக்களைத் தந்து உதவி புரிந்தார்கள். 

மூஸ்லீம்கள் மீண்டும் பெரும் படையைத் திரட்டி சஞ்சன் நகரை துவசம் செய்தனர்.  அதற்குள் பார்சிக்கள் தங்களது புனித 'தீ' யை  கைப்பற்றி, அருகில் உள்ள பெக்ரூட் என்ற  மலையில் பத்திரப்படுத்திக் கொண்டனர். .

பார்சிக்கள் இந்தியா வந்ததன் நோக்கமே...தங்களது மதத்தைக் காப்பற்றிக் கொள்ளத்தான். ஆனால் நடந்தது வேறு.....? 
-மீதி அடுத்தப் பதிவில்....!

Share/Bookmark

கருத்துகள் இல்லை :