திங்கள், டிசம்பர் 23, 2013

அப்துல் கலாமும் தேவயானியும்!



                           மெரிக்க துணை தூதர்  தேவயானி கோப்ரகடே கைது நடவடிக்கை உலக அரங்கில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியிருக்கும் வேளையில்,  இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் அது  ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!.

வீட்டு வேலைக்குப் பணிப் பெண்ணை அமர்த்தியதில் விசா முறைகேடு செய்ததாக கடந்த வாரம் அமெரிக்க காவல்துறை இந்திய துணைத் தூதர்  தேவயானி கோப்ரகடேவை  கைது செய்தது.  அவரை கைவிலங்கிட்டு அழைத்து சென்றது மட்டுமல்லாமல், அவரது ஆடைகளை களைந்து சோதனை செய்து, அவரை போதை பொருள் கடத்தியவர்களுடன் சிறையில் அடைத்ததால் இந்தியாவில் பெரும் பரப்பரப்பு எழுந்துள்ளது.

தேவயானி கைது நடவடிக்கை இரு அவைகளிலும் எதிரொலித்தது. எதிர்ச் கட்சிகள் முதற்கொண்டு ஆளும் கட்சிவரை அனைத்து கட்சிகளும் இச் செயலுக்கு கடும் கண்டம் தெரிவித்தது. இதனால் தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த விசேஷ சலுகைகளை இந்திய அரசு உடனே விலக்கிக் கொண்டது.

இந்த எதிர்தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்பார்க்கவில்லை. அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அலறி அடித்துக் கொண்டு  இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் அளித்தார்.

தேவயானி கைது நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த இந்திய அரசு,  ஏன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை,  அமெரிக்க அரசாங்கம் அவமதித்த போது மெளனம் சாதித்தது?.  இந்த ஒப்பீட்டு விவகாரம், இணையத்தில் பெரும் ஆரவாரத்தோடு விவாதிக்கப்பட்டு வருகிறது!.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அவமதித்ததும், தேவயானி கைது நடவடிக்கையும் வேறு வேறு கோணத்தில் இருப்பவை.   இந்த இரண்டு பிரச்சனைகளையிம் ஒப்பிட்டு பார்ப்பது என்பது தேவையில்லாத ஒன்று!. இந்த பிரச்சனையில்  இந்திய துணை தூதுவரை கை விலங்கிட்டு கைது செய்து, 'காவிட்டிஸ் செக்'  (Cavities Check) என்று சொல்லப்படும் சோதனை செய்துள்ளது அமெரிக்க அரசு.

அதாவது ஒரு மனித உடலில் எங்கெல்லாம் துவாரங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சக்தி வாய்ந்த வெளிச்சத்தை அடித்து சோதனை செய்வது காவிட்டு செக்காகும்.  இச் சோதனையில் இந்திய துணை தூதரின் உடைகளை களைந்து அவரது அந்தரங்கப் பகுதிகளில்   ஏதேனும் மறைத்து வைத்து இருக்கிறாரா? என்று சோதனை செய்து இருக்கிறார்கள்.   (இச் சோதனை முன்பு ஈராக் அதிபர் சதாம் உஸேனுக்கு நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்)  அதோடு மட்டுமல்லாமல் அவரை போதை பொருள் மற்றும் விபச்சார கிரிமினல்களோடு அடைத்துவைத்து இருக்கிறார்கள்.  இச் சோதனைகள்   நம்மை மிகவும் பலகீனமாக்கி, நமது மன உறுதியை குலைக்கக் கூடியது.

இந்திய துணைத் தூதுவரை கைது செய்த விதம்,  இந்திய தரப்பை மிகவும் அவேசப்பட வைத்துள்ளது. ஒரு வெளி நாட்டு தூதுவரை நடத்தப்பட வேண்டிய  வியன்னா மாநாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் அப்பட்டமாக அமெரிக்க அரசால் மீறப்பட்டுள்ளன

இந்த விஷயத்தை தனது IFS சக அதிகாரிகளுக்கு தேவயானி  மின் அஞ்சல் செய்த பிறகே விஷயம் தீவிரம் அடைத்துள்ளது.  IFS அதிகாரிகளின்  அழுத்தமே இந்திய அரசை, தீவிரமாக  செயல் படவைத்துள்ளது.

இதற்கு முன்பு தூதரக அதிகாரிகளை அவமானப் படுத்தியுள்ளனர். இந்திய தூதர் மீரா சங்கரும் கூட  அமெரிக்கா  விமான  நிலையத்தில்  தோளில்  தட்டி  உட்கார வைக்கப்பட்டனர் .இந்த சம்பவம்  மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 2011 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள இந்திய தூதரகத்தில்  பணியாற்றிய கீர்த்திகா  பிஸ்வாஸ்  என்பவரும்  கைது  செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு  அழைத்து செல்லப்பட்டார்.

இந்த பிரச்சனையில் எதற்கு அப்துல் கலாம் விஷயத்தை  ஒப்பிட்டு பார்க்கவேண்டும்?.

  முன்னாள்  ஜனாதிபதி  அப்துல் கலாமை  விமான  நிலையத்தில், ஷீ வை  கழற்றச்  சொல்லி  சோதனையிட்டு  அமெரிக்கா  அவமானப்படுத்தித்தியது.  இது  நாட்டில்  பெரும்  சர்ச்சையை  உண்டாக்கியது.

அப்துல் கலாமுக்கு நிகழ்ந்த போது இந்திய அரசு மௌனம் சாதித்தது போல்,  இப்பவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?.  முன்னாள் குடியரசுத் தலைவருக்கு நடந்தது ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றபோது, ஒரு பெண்ணிற்கு நடந்ததும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாததுதான். இதில் இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது துரதிஷ்ட வசமானது.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ஷாருக்கான் ,கமல்ஹாசன், மீரா சங்கர், பிரபுல் பட்டேல், ஹர்தீப் புரி,  கீர்த்திகா பிஸ்வாஸ், தேவயானி என்று அமெரிக்க அதிகாரிகளால் அவமதிப்பட்ட இந்தியர்களின் பட்டியல் நீண்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதில் 'காவிட்டி செக்கிற்கு' ஆளானவர் தேவானி மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அப்துல் கலாமை அவமதித்த போதே இந்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், இத்தகைய அவகாரமான  நடவடிக்கைகள் இந்திய தூதரகத்திற்கு நடந்திருக்காது.  அதைவிட்டு இப்போதும் முந்தயை நிலையிலே நமது அரசு இருந்திருந்தால், இந்த துயர் ஒரு தொடர்கதையாகத்தான் இருந்திருக்கும்.

அமெரிக்க அரசிற்கு எதிரான இந்த தீவிர நடவடிக்கைகள்,  நிச்சயம் சர்வதேச அளவில் நமக்கான புதிய பார்வையை உலக அரங்கில் பெற்றுத்தந்திருக்கும் என்று நம்புவோம்!.

 இப்போதாவது மத்திய அரசுக்கு சுரணை வந்ததே என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்வோமாக?!
(()) (()) (())

கொசுறு:  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முரண்டுப் பிடித்த இந்திய அரசிற்கு, மன்னிப்பு கேட்க முடியாது என்று பதிலடித் தந்துள்ளார் அமெரிக்க வெளிவிவகாரத் துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹர்ப்.

 விரைவில் இப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சல்மான் குர்ஷித்.  தேவயானியை ஐ.நா சபை தூதராக நியமித்து, அவரது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது இந்திய அரசு. அதன் பலனாக தேவயானி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, எரியும் நெருப்பில் சற்று நீரை தெளித்திருக்கிறது அமெரிக்க அரசு.
-தோழன் மபா. 
(()) (()) (())

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

First of all you should know the differences between cavity search and strip search.

Devyani was strip-searched (not cavity search)which is common practice for new inmates in jail across the United States.

It's pathetic Indian government and media people doesn't know the difference between cavity search and strip search.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அப்துல் கலாமை அவமதித்த போதே இந்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், இத்தகைய அவகாரமான நடவடிக்கைகள் இந்திய தூதரகத்திற்கு நடந்திருக்காது என்பதே எனது கருத்தாகும் ஐயா.

இராய செல்லப்பா சொன்னது…

ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., இவர்கள் எப்போதுமே ஒரு கொடிய கும்பலாகச் செயல்படுகிறவர்கள். தங்கள் குழுவில் யாருக்கு கேடு நேர்ந்தாலும் கொதித்தெழுந்து போராடுவார்கள். இதுவே, அங்கிருந்த ஒரு சாதாரணமான கிளார்க்கிற்கு நிகழ்ந்திருந்தால் இந்தக் கும்பல் மூச்சே விட்டிருக்காது. அப்துல் கலாம விஷயத்திலும் இதுவே நடந்தது. (2) இந்த தேவயாணி அம்மையாரும் பல தவறுகளைச் செய்தவறாகத்தான் தெரிகிறார். எனவே நமது அனுதாபத்தைச் சற்று அளந்து தான் தெளிக்கவேண்டியிருக்கிறது.(3) இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்கர்களுக்கு இதேபோல் reciprocatory treatment வழங்குவது என்று அரசு முடிவெடுத்துச் செயல்படுத்தினால் போதும்.(௪) மோடிக்கு விசா வழங்கமாட்டோம் என்று சொன்னபோதே பிரதமர் கொதித்து எழுந்திருந்தால் இதுமாதிரி அவமானங்கள் ஒரு பெண் அதிகாரிக்கு நேர்ந்திருக்காது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Pararajasingham Balakumar

Really, we don't know the difference between cavity search and strip search.
Can you explain?.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…


@கரந்தை ஜெயக்குமார்

தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா!. இந்திய பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்காத ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான். சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட 52 தமிழர்களுக்கு இந்தியா எந்த உதவியும் செய்யவில்லை என்பது வேதனையான ஒன்று!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Chellappa Yagyaswamy


உண்மையான விஷயம்தான் அது.

ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். இவர்கள் ஒரு இயக்கப் போன்றே செயல்படக் கூடியவர்கள். இதில் தேவயானியை நாம் குற்றம் சொல்லுவதைவிட, அமெரிக்கா தூதரகத்தில் வேலைக்கு செல்லும், பணிப்பெண்கள் காவலாளிகள் என்று அவ்வப்போது கானாமற் போய்விடுகின்றனர். இதற்கு முன்பு மீரா சங்கர் என்ற துணைத் தூதுவரின் பணிப் பெண்ணும் கானாமற் போய் இருக்கின்றார். இது தொடர்கதையாகவே இருக்கிறது என்கிறார்கள்.

இதில் 007 போல் என்ன சதித்திட்டம் இருக்கிறது என்று தெரியவில்லை சார்?.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...