ஞாயிறு, டிசம்பர் 13, 2009

மாலை பொழுதின் மயக்கத்திலே...சேர்ந்தவருக்கு இன்பத்தையும், பிரிந்தவருக்குத் துன்பத்தையும் தரவல்ல மாலை பொழுதினை, நம் தமிழ் இலக்கியங்களில் என்ன ஒரு அழகியலோடு விவரிக்கிறார்கள் பாருங்கள்...!

மாலைப் பொழுது வந்தாலே மங்கையர் மனமும் உடலும் வாடும், பசலை நோய் படர்ந்த நிலையில் அவர்தம் மேனியெல்லாம் ஒருவித மாற்றத்தைக் காணும். திருமணமான பெண்டிர்களின் உயிரை உண்ணும் வேலையைச் செய்யவே இந்த மாலைப் பொழுது வருவதாக வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

"மாலையே அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது"

**********************************************************கலித்தொகையில் ஒரு காட்சி.

தம் தலைவனைப் பிரிந்த தலைவி; மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி, தோழிக்கு உரைக்கிறாள். காலையில் பகற்பொழுது காலத்தைக் கக்கி, மாலையில் மீண்டும் அதை விழுங்குகிறான். அதனால் கதிர்கள் சுருங்கி, கதிரவன் மலைவாயில் மறைந்துள்ளான். காரிருள்படர்கிறது. கார்மேக வண்ணனின் மேனி நிறைந்தது போல் வெண்ணிலவு தோன்றுகிறது. தாமரை மலர்களோ உறங்குவதுபோல் கண்மூடிக் கிடக்கின்றன, தம் புகழைத் தாமே கேட்ட பெரியார் தலை தாழ்த்தி நிறப்பதைப் போல மரங்கள் கிளை தாழ்ந்து தூயில்கின்றன.

குழலின் ஓசைபோல வண்டுகள் ஒலிக்கின்றன. தம் பார்ப்புகளை நினைத்துத் தாய்ப்பறவைகள் பறக்கின்றன. கன்றுகளை நினைத்துக் கறவைப் பசுக்கள் தம்கொட்டகைகுச் செல்கின்றன. விலங்கினங்களோ தம் வாழ்விடங்களுக்கு நோக்கி விரைகின்றன. செந்தீ வளர்த்த அந்தணர், அந்திப் பொழுதை வழிபடுகின்றனர்.

இப்படி அனைத்து உயிர்களும் மாலை நேரம் வந்தால் வீடு திரும்புகின்றனர். மணந்த, மனம் கவர்ந்த தலைவனோ மாளிகை திரும்பவில்லை. "தன் உயிரே போய்விடும் போலிருக்கிறதே" என்று தலைவி பின்வறுமாறு வருந்தி கூறுகிறாள்.

அகன்ஞாலம் விளக்கும்தன் பல்கதிர் வாயகப்
பகல்நுங்கி யதுபோலப் படுசுடர் கல்சேர
இகல்மிகு நேமியான் நிறம்போல் இருள்இரவ,
நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்தரக்
கண்பாயல் பெற்றபோல் கணைக்கால மலர்கூம்பத்
தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம்துஞ்ச,
முறுவல்கொள் பாவைபோல முகைஅவிழ்பு புதல்நந்தச்
சிறுவெதிர்ங் குழல்போலச் சுரும்புஇமிர்ந்து இம்மெனப்
பறவைதம் பார்ப்புஉள்ளக் கறவைதம் பதிவயின்
கன்றுஅமர் விருப்பொடு மன்றுநிரை புகுதர
மாவதி சேர மாலை வாள்கொள்
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந்தீச் செவ்வழல் தொடங்க-வந்ததை
வால்இழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கி யோரே
(நெய்தற்கலி)
-கலித்தொகை

கருத்துகள் இல்லை:

2000-2020 சிறந்த படைப்பாக்கங்களின் தொகுப்பு .

உ லகமே இந்தக் கரோனா காலத்தில் சுணங்கிக் கிடந்த போதும், சுறுசுறுப்பாக இயங்கி 2000 to 2020 ஆண்டுக்கான, தமிழ் படைப்பாளர்கள...

பிரபலமான இடுகைகள்