ஊருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா"
என்று தம்பி பயலிடம் சொன்னேன். "இந்தாப்பா இதை எடுத்துட்டு போ..." என்று
புதுக் கருக்கு குலையாத ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினான்.
அது தேவிபாரதி எழுதிய 'நட்ராஜ் மகராஜ்'
ரயில்
பயணத்தில் ஜன்னலோர சீட், ரயில் சென்னையை விடுத்து திருச்சியை நோக்கி
விரைய... காலை நேரக் காற்று இதமாய் அடித்துக் கொண்டு இருந்தது. படிக்கத்
தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'நட்ராஜ் மகராஜ்' என்னை இழுத்துக்
கொண்டா(ர்)ன்.
ரயிலின்
வேகத்தில் பக்கங்கள் சர சரவென கரைந்து கொண்டிருந்தது. குறு குறுவென
பார்த்துக் கொண்டிருந்த எதிர் சீட்டு இளைஞன் "என்ன அங்கிள், அதற்குள்
இவ்வளவு பேஜ் படிச்சிட்டீங்க?" என்றான். அவன் சொன்ன பிறகுதான் கவனித்தேன்
110 பக்கங்களுக்கு மேல் தாண்டிவிட்டிருந்தேன்.
பொதுவாக
புத்தக வாசிப்பில் நான் ஒரு தவணை முறைப் படிப்பாளி. எடுத்தோம் முடித்தோம்
என்ற கதையெல்லாம் நம்மிடத்தில் இல்லை. ஆற அமரதான் வாசிப்பேன். இந்த முறை
கொஞ்சம் ஸ்பீடு !!
சமீபகாலத்தில் நான் படித்ததில் முக்கியமான கவனிக்கதக்க ஒரு நாவல் 'நட்ராஜ் மகராஜ்' கதை
சொல்லப்படுகின்ற விதமே அலாதியானது. கதையாடலில் ஒரு வசீகர நடையை ரசிக்க
முடிந்தது. கதையில்...கதா பாத்திரத்தில், நடராஜைத்தவிர. யாருக்கும்
பெயர் என்பது கிடையாது. எல்லாருக்கும் பெயரின் முதல் எழுத்தை மட்டுமே
தந்திருப்பார் நாவலாசிரியர்.
'செ'
என்ற ஊரிலிருந்து 'தி' என்ற ஊருக்கு ரயிலில் செல்லும் 'ம' என்ற வாசகன்
விடாப்பிடியாக 'ந'வின் கதையைப் படித்தான். இப்படிதான் கதை போகும். அதுவே
நமக்கு சுவாரசியமான ஒரு கதைக் களத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தமிழுக்கு
இப்படியான கதை சொல்லல் புதிது!
கதா
பாத்திரத்திற்கு எதற்கு பெயர் ? நீட்டி முழங்கும் அளவிற்கு அந்தப்
பெயர்கள் ஒன்றும் கதையில் பெரிய மாறுதலை கொண்டு வந்துவிடாது என்று
நினைத்தாரோ என்னவோ...கதையாசிரியர் யாருக்கும் பெயர் வைக்க வில்லை.
பரம
ஏழையான நட்ராஜ், அந்த ஊரில் இருக்கும் சிதிலமடைந்த அரண்மனையில்
வசிக்கிறான். முழு அரண்மணையும் காடு மண்டிக் கிடக்க, முகப்பில் இருக்கும்
மணிகூண்டில்தான் அவனது வாசம். அவன் என்றால் அவன் மட்டுமல்ல, அவன், அவனது
பொஞ்சாதி, இரு புள்ளைங்க. அரசாங்க ஊழியனாக வேண்டிய கனவில் நட்ராஜ்
சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்கிறான்.
கடும்
வெயிலில் ரயில் வேகமெடுத்து... விழுப்புரத்தை தாண்டுகிறது. எதிர் சீட்டு
இளைஞன் மதியத்திற்கான உணவு பாக்ஸ்களை பிரிக்கிறான். சோறு தனியாக ஹைடெக்
பாக்ஸில் சீலிடப்பட்டிருக்கிறது. கோழி இறைச்சியும் அவ்விதமே
சீலிடப்பட்டிருந்தது. பாக்ஸ்களை ரொம்ப நேரமாக பிரித்துக்
கொண்டிருந்தான்.
அன்று ஞாயிறு என்பதால் ரயிலில் இருந்த பெருமபாலோர் அசைவ உணவுகளையே
வீட்டிலிருந்து
மதிய உணவாக எடுத்து வந்திருந்தார்கள். பக்கத்து சீட் ஆண்டி கருவாட்டுக்
குழம்பு ?! எங்கள் வீட்டில் காலையிலே மட்டன் குழம்பு. குழம்பு தனி, சோறு
தனியாக தருகிறேன் என்றாள் மனைவி. அப்படியெல்லாம் வேண்டாம் ரயிலில்
பிரித்துவைத்து சாப்பிட சிரமமாக இருக்கும் கிளறியே கொடுத்துவிடு என்றேன்.
ஒரு சில்வர் டிபன் பாக்ஸில் சாப்பாட்டை கிளறி கொடுத்துவிட்டாள். சாப்பிட
எளிதாக, வேலையும் விரைவாக முடிந்தது.
எதிர்
சீட்டு இளைஞன் ஒருவழியாக பிரித்து சாப்பிடத் தொடங்கினான். எந்த
சங்கோஜமும் இன்றி சோறு, கறிகளை தனித்தனியே தட்டில் எடுத்துவைத்து
சாப்பிட்டான். பொறுமையாக சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே கீழ்
பெர்த்தில் உட்கார்ந்திருந்தவர்களை எழுப்பிவிட்டு கட்டையை நீட்டிவிட்டான்.
இரண்டு மணி நேரம் நல்ல உறக்கம்.
"வீட்டில் ஒரே பிள்ளையா ?" என்றேன்
"ஆமாம்" என்றான், கண்கள் மிளிர.
ரயிலில்
பயணிக்கும் போதே, நாளை சென்னை திரும்புவதற்காக TNSTC ஆப்பில் ஏசி
பஸ்ஸில் தனி சீட்டாக பார்த்து புக் செய்துவிட்டேன். அது எளிதாக இருந்தது.
பஸ்ஸ்டாண்ட் சென்று சென்னைப் பஸ்ஸில் சீட் இருக்கிறதா ? என்று ஒவ்வொரு
பஸ்ஸாக அலைய வேண்டாம். TNSTC ஆப்பை தரவிறக்கம் செய்து கொண்டால் போதும்.
மிக சிறப்பாக பராமரிக்கிறார்கள். சாதாரண பேருந்து முதற்கொண்டு ULTRA
DELUXE, ஏசி படுக்கை, இருக்கை என்று தமிழகம் முதற்கொண்டு, அண்டை
மாநிலங்கள் வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கட்டணமும் குறைவு,
பயணிப்பதும் சிரமமின்றி இருக்கிறது.
கதைக்கு
வருவோம்... ஸ்ரீரங்கத்தில் கல்யாணத்தை முடித்து விட்டு, சென்னை திரும்பும்
வழியில், பஸ் பயணத்தில் மீண்டும் நட்ராஜ் மகராஜ் புத்தகத்தை படிக்கத்
தொடங்கினேன்.
தனது
பூர்வீகத்தை மறந்து, இந்த அறத பழசான அரண்மணை புறாக் கூண்டில் வசிக்க
முடியாது என்பதை உணர்ந்த 'ந' அரசாங்கத்தின் இலவச தொகுப்பு வீடு கட்டுவதற்கு
விண்ணப்பிக்கிறான். அதற்காக அரசாங்கத்தின் பல அடுக்குளில் ஜீவித்து வாழும்
பல ரக அரசாங்க மனிதர்களை சந்திக்கிறான்.
அரண்மணை
எப்போது இடிந்து விழுமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இனியும்
வாழ முடியாது, நமக்கென்று சின்னதாக ஒரு வீடு இருந்தால் போதும், பாம்பு,
தேள் என்று விஷ ஜந்துக்கள் பயமின்றி வாழலாம் என்று முடிவெடுக்கிறான்.
கதை
வேகமெடுத்து வரும் இத்தருணத்தில்... இடையிடையே வரும் போன் அழைப்புகளை
பதிலளித்துவிட்டு, கொஞ்சம் முக நூல், கொஞ்சம் வாட்ஸ்ஸப் என்ற நேர
விரயத்தில் இரவு எட்டரை மணி வாக்கில் சென்னை கிளாம்பாக்கம் வந்தடைகிறது
பேருந்து. அங்கிருந்து கோயம்பேடு, அங்கிருந்து இன்னொரு பஸ் என்று வீடு
வந்து சேர இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. (இந்த நேரத்தில்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு பஸ்ஸை நிறுத்தியவர்களை சபிக்கிறேன்.)
வீடு
வந்து மீண்டும் ஆவலாக 'நட்ராஜ் மகராஜ்' புத்தகத்தை தேடினால் புக்கை
காணோம். எங்கு தேடியும் இல்லை. மொபைல் பார்க்கும் போது புத்தகத்தை
சீட்டில் சைடில் செருகியாதாக நினைவு....
'நட்ராஜ் மகராஜ்' என்ன ஆனார் என்று தெரியவில்லை ??
-மபா
(வெளியீடு: காலச்சுவடு. விலை ரூ.390)
#நட்ராஜ்மகராஜ்
#தேவிபாரதி
#காலச்சுவடு
#பயணங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக