செவ்வாய், மே 31, 2011

Back Waterல் ஒரு Bad அனுபவம்




 'நான் எப்படி உயிரோடு இருக்கிறேன்' என்ற நிகழ்ச்சி  டிஸ்கவரி சேனலில் வரும். 

அதில் விடுமுறையை கழிக்க புறப்படுபவர்கள் எப்படியே... ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள்.  பின்னர் அதில் இருந்து எப்படி தப்பித்து வருகிறார்கள் என்று காட்டுவார்கள்.  இந்த  நிகழ்ச்சி  உலக அளவில் பிரபலமான ஒன்று!

அப்படி ஒரு சம்பவம் எனக்கும் நிகழப் பார்த்தது.

ஒவ்வொரு கோடை கால விடுமுறைக்கும்  எங்கள் ஊருக்கும் எனது மாமா ஊருக்கும்  செல்வது வழக்கம். 

சீர்காழியிலிருந்து 15 கிலோ மீட்டரில் இருக்கிறது எனது மாமா ஊர் பழையபாளையம். எனது மனைவியின் ஊரும் அதுதான். (பின்ன...மாமா பொண்ணுதானே...!)   அமைதியான கிராமம். ஒரு பேருந்து செல்லும் அளவிற்கே தார் சாலை. மற்றொரு வண்டி எதிரில் வந்தால், சற்று அகலமான இடத்தில்தான் இரு வண்டிகளும் மாறி கொள்ளும்.  அந்த அளவிற்கு குறுகளான சாலை. இரு மருங்கிலும் பனைமரம் அணிவகுத்து நிற்க....மஞ்சளாறு சாலையை ஒட்டியே வரும். 

அப்படிதான்  கடந்த ஞாயிறு அன்று  22 மே  (அன்று எனது திருமண நாள் கூட...)   அருகில் உள்ள பழையாருக்கு சென்றோம். கடல், மீன்பிடி படகு என்று பார்த்துவரலாமே என்று எனது மனைவி இரு குழந்தைகள், மாமா பசங்க இரண்டு பேர், அவுங்க அம்மா என்று ஒரு சிறு பட்டாளமே மாலை 5.30 மணிகெல்லாம் காரில்  புறப்பட்டோம்.  வெளிச்சம் நன்றாக இருந்தது.

மீன் பிடி ஊரான பழையார்,  புதுப்பட்டினம் தாண்டி இருக்கிறது. முன்பெல்லாம் பேருந்து புதுப்பட்டினத்தோடு நின்றுவிடும். பழையாருக்கு செல்ல நடந்துதான் செல்லவேண்டும்.  இப்போது பழையார் மீன்பிடி ஜெட்டி வரைக்கும் பஸ் செல்கிறது.  முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சொந்த ஊர் இதுதான்.

நாங்கள் சென்றபோது பெரும்பாலான  போட்டுகள் கரையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தன.  மீன் பிடி தடை காலம் என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை.  ஒரு மோட்டார் படகு  மட்டும் கரையை நோக்கி வர....  அதிலிருந்து ஒரு குடும்பம் இறங்கியது. அப்போதுதான் புரிந்தது மீனவர்கள் இந்த மீன் படி தடை காலத்தை பயன்படுத்தி அங்கு வருபவர்களை சுற்றுலா  அழைத்து செல்கிறார்கள் என்று !.
படகு பயணத்திற்கு முன்!


கடல் பழையார் முகத்துவாரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இங்கு படகுகள் நிற்பது பழையார் ஆற்றில் என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது. ஆறே கடல் போல்தான் இருந்தது.

படகில் அழைத்து செல்ல 200 ரூபாய் என்றார்கள்.  அப்போதே மசங்கத் தொடங்கியது.  அந்த  படகில் டீசல் இல்லை என்பதால் மற்றொரு படகை ஏற்பாடு செய்தனர்.

அப்போது கரையில்  இரு பெண்கள்  6 குழந்தைகள் மூட்டை முடிச்சிகளோடு  நின்றுக் கொண்டு இருந்தனர். "எங்களை கொடியம்பாளையத்தில் விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சினார்கள். 

கொடியம்பாளையாம் என்பது ஒரு தீவு போன்றது. 'திட்டு ' என்றும் சொல்லலாம். அங்கு படகில்தான் செல்லவேண்டும். சாலை மார்க்கமாக  என்றால், சிதம்பரத்திலிருந்துதான் செல்லவேண்டும்.  அதுவும் பஸ் வசதி அதிகம் இல்லை. அதனால் மக்கள் சீர்காழியிலிருந்து பழையார் வந்து.... இப்படி படகில் சென்றுவிடுவார்கள்.  பெரும்பாலும் மீனவ குடும்பத்தினர் என்பதால் இங்கு உள்ள மீனவர்கள்...பணம் வாங்கிக் கொண்டு  அவர்களை படகில் ஏற்றி அக்கரையில் இறக்கி விடுவார்கள்.

அவர்களையும் ஏற்றிக் கொண்டு படகு புறப்பட்டது. அப்போதே லேசாக இருட்டத்தொடங்கியது. நான் எனது குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன். கரை எங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகியது.   கிட்டத்தட்ட கால் மணி நேர மாக ஓடிக்கொண்டு இருந்த படகின் மோட்டார். திடீரென்று உறுமத்தொடங்கியது. கர்...புர்...என்றது.  படகோட்டி என்னன்வோ செய்கிறான் படகு நகரவில்லை. கரை தூரத்தில் இருந்தது.  சுற்றிலும் தன்ணீர்.  என்னைத் தவிர என்னோடு வந்த யாருக்கும் நீச்சல் தெரியாது.


எங்கள் எல்லோர் முகத்திலும் பீதி அப்பிக்கொண்டது.  சரியாக மட்டிக் கொண்டோம் என்று என்னத் தோன்றியது.  பகலாக இருந்தால் ஒன்றும் பயம் இல்லை. கரைகளில் லைட் போட்டுவிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இருட்டத் தொடங்கியது

மறு கரையில் (கொடியம்பாளையம்)  இறங்க வேண்டியவர்கள் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைகிறார்கள். " தம்பி எங்களை வேறு  படகிலாவது அனுப்பி வைங்க". இனி நாங்க திரும்பி போக முடியாது என்று  கெஞ்சிகிறார்கள். படகோட்டியும்  படகில் நின்றுக் கொண்டு தூரத்தில் செல்லும் படகை கையை அசைத்து கூப்பிடுகிறான். ஹுகும் அவர்களுக்கு நாங்கள் போடும் இந்த சத்தம் கேக்கவில்லை.

பிறகு படகோட்டி தண்ணீரில் இறங்கி, படகை கொஞ்சம் வலுவோடு தூக்கி.... தூக்கி.... தள்ள அரம்பித்தான்.  தண்ணிர் கனுக்கால் வரைதான் இருந்தது. அதனால்தான் படகு சேற்றில் சிக்கி இருக்கிறது. அவனும் என்னன்னவோ முயற்சி செய்து பார்க்கிறான். ஒன்றும் பயன் தரவில்லை.  கழிமுகத்துவாரங்களில் எப்போது ஆற்றில் நீர் ஏறி  இருக்கும் எப்போது இறங்கி இருக்கும் என்று கணிக்க முடியது.  Back water- ல் இது ஒரு கஷ்டம்.  இதனாலயே படகு மேற்கொண்டு போக முடியாமல் சிக்கி இருக்கிறது. அக்கரைக்கு போகமுடியாத அளவிற்கு நீர் வற்றி இருக்கிறது. 


அதற்குள் அந்த படகோட்டியே " அம்மா... இங்க இறங்கி நடந்து போங்க...தண்ணீர் கனுக்கால் அளவுதான் இருக்கு. இல்லனா நா ஏத்தின இடத்திலேயே உங்கள இறக்கி விட்டுறேன். என்றான். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். எப்படியாது அந்த கரைக்கு சென்றுவிட்டால் ஊருக்கு சென்று விடலாம்.
 இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள்...எதிரே தெரிவது திட்டு!

இருட்டுறதுக்குள்ள சீக்கிரம் நடங்க. பசங்க பேண்ட், பாவடையெல்லாம் கழட்டி வச்சிடுங்க. ஜட்டியோடு நடக்க சொல்லுங்க. அப்பதான் பசங்க நடக்க ஏதுவா இருக்கும். நடக்கிறப்ப செருப்பு போட்டுக்கிங்க...இல்லனா கிழ கிடக்கிற 'ஆழி' கால பாளம் பாளமா பொளந்திடும்  " என்றான். அவர்கள் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தார்கள்.  பின்னர் அந்த   அம்மாவே " சரி தம்பி நாங்க இங்கனயே இறங்கி நடக்கிறோம்". என்றார்கள். எனக்கு திக்கென்று பட்டது. எப்படி இந்த தண்ணீரில் இறங்கி குழந்தை குட்டிகளோடு அக்கரைக்கு செல்வார்கள்?. 
                                                    


படகில் இருந்து இறங்க ஆரம்பித்தார்கள். கொண்டு வந்திருந்த பேக்குகளை வசதியாக அவர்கள் முதுகில் கட்டிவிட்டோம். பின்னர் வரிசையாக ஒன்றன் பின் ஒருவராக நடக்க ஆரம்பித்தார்கள்.  அவர்கள் கரையை அடையும் வரை நாங்கள் படகில் இருந்து கவணித்துக் கொண்டு இருந்தோம்.  அவர்கள் கரையை அடைந்ததும் 'கையை' அசைத்து நீங்கள் போங்கள் என்று சைகை செய்தனர்.
       
தூரத்தில்......நிழலாக அவர்கள் உருவம்.


'அப்பாடா...என்று நிம்மதி பெருமூச்சு வந்தது' எனக்கு. அதற்குள் படகோட்டி படகை பலவாறு அசைத்து சேற்றிலிருந்து விடுத்து தண்ணீருக்கு கொண்டு வந்திருந்தான். பிறகு போட்டை திருப்பி கரையை அடைந்தோம்.

கரை ஏறியதும், படகோட்டியிடம் பணம் கொடுத்துவிட்டு....'உன் பேர் என்ன தம்பி' என்றேன். அவன் 'மாவீரன்' என்றான்.


********************























































சனி, மே 14, 2011

எப்போதும் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு!


                             மாறாத மக்கள் மனநிலை                          

கிடைத்த தேர்தல் முடிவுகள் நம்மை சலிப்படையச் செய்துள்ளன.  மாநிலத்தில் 78% வாக்குப் பதிவு என்ற போதோ ஆளும் கட்சிக்கு எதிரானதுதான் என்று சில ஊடங்கள் கூறியிருந்தன.  அது உண்மையென நிருபிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இப்படி ஆட்டு மந்தை கணக்காக ஒரே கட்சிக்கு வாய்ப்பளித்துள்ளது தமிழர்களின் மன்நிலை 80களில் இருந்தது போல்தான் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

ஆளும் கட்சி என்னதான் பல மக்கள் நலத் திட்டங்களை போட்டிருந்தாலும் மக்களின் மன நிலை வேறாகவே இருந்திருக்கிறது.

"5 வருடங்கள் உனக்கு தந்தாகிவிட்டது,  அடுத்த 5 வருடங்கள் உனக்கு இல்லை. இனி நீ மூட்டையை கட்டு "  என்ற பொதுவான மனநிலையில்தான் வாக்களித்துள்ளனர்.  இது... ஒரு மோசமன  நிலையை மாநிலத்தில் ஏற்படுத்தும். நாம் என்னதான் மக்களுக்குகாக உழைத்தாலும் அடுத்த முறை நமக்கு வாய்ப்புக் கிடைக்காது. மக்கள் நம்மை தூக்கி எறிந்துவிடுவார்கள், அதனால் கிடைக்கும் வரை சுருட்டிக் கொள்வோம் என்ற மனநிலையும்  வந்துவிடக் கூடிய வாய்ப்பு உண்டு.

இதனால் ஆளும் அரசுகள், மக்கள் நலப் பணிகளில் அதிகம் ஆர்வம் காட்டாமல், தங்களது சொந்த வருவாயை பெருக்க ஆர்வம் காட்டுவார்கள்.

திமுக தனது ஆட்சியின் தொடக்கத்தில் மக்களிடையே நல்ல ஆதரவு பெற்றிருந்தாலும், போகப் போக... திமுகவினரும் கலைஞரின் குடும்பத்தினரும் தங்களது வியாபார முகத்தை  கொஞ்சம் கொஞ்சமாக காட்டத் தொடங்கினர்.   அதனால் கடைசி ஆறு மாதத்தில் திமுகவின் செயல்பாடு மக்களை பெரிதும் முகம் சுழிக்க செய்துவிட்டன. அதன் விளைவுதான் இந்த கொடூரமான விரும்பதக்காத தேர்தல் முடிவுகள்.



திமுகவை இடறியவை....

1 இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் திருப்தியில்லா  நடவடிக்கை.

2 ஈழப் போரில் சிங்கள அரசுக்கு துணை போன காங்கிரஸை கடுமையாக கண்டிக்காதது.

3 இலங்கையில் தமிழர்கள் அவதிப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

4 தன் பிள்ளைகளுக்கு 'சீட்'வேண்டும் என்றபோது மட்டும்  தில்லிக்கு நேரில் விரைந்தது.

5 கடுமையான விலைவாசி.

6  தமிழக மக்களுக்கு பெரிதும் நெருக்கடி தந்த மின்வெட்டு.

7 காங்கிரசை கழற்றிவிடாதது.

8 தனக்கான தொகுதிகளை குறைத்துக் கொண்டு தேர்தலில்  போட்டியிட்டது . (இதுவே திமுகவின் வெற்றியை அதிகம் பாதித்தது.)

9 திமுக உறுதியாக   வெற்றி பெறும் தொகுதிகளையும்  கூட்டணி கட்சியினருக்க்கு தாரைவார்த்தது.

10  முந்தைய தேர்தல்களில் இனையத்தளங்களின் வீச்சு, மிகக் குறைவு. இந்த தேர்தல்களில் பேஸ்புக், டிவிட்டர், வலைபூக்கள் முதற்கொண்டு உப்புமா இணையத் தளங்கள் வரை கருணாநிதியின் எதிர்ப்பு அலை அதிகம் வீசியது.  இது கணினியை பயன்படுத்தும் இளைஞர்கள் மத்தியில் திமுக மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது. .

11 தேர்தல் ஆணையத்தின் அதிதீவிர திமுக எதிர்ப்பு நடவடிக்கை.

12 திமுக வின் நற்பெயரை கெடுத்த 2g  அலைகற்றை ஊழல்.

13 திமுகவை எதிர்ப்பதில் வழக்கம்போல் ஒன்று சேர்ந்த தினமணி, தினமலர்,
   ஆனந்தவிகடன், ஜூவி மற்றும் வட இந்திய ஊடகங்கள். 

மக்கள் மறந்த  சில நல்ல திட்டங்கள்.....

1 கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை.

2 விளிம்பு நிலை மனிதர்களுக்கும் நல்ல வாழ்க்கையைத் தந்த 'கலைஞர் காப்பீடு'.

3  சுய உதவி குழுக்களின் மூலம் மளிருக்கு வேலைவாய்ப்பு.

4 தமிழ் மொழி வளர்ச்சிக்காக 'செம்மொழி மாநாடு'.

5 தமிழர்களுக்கு பெருமை தந்த தஞ்சை பெரிய கோவிலின் 1000மாவது விழா.

6 தமிழக சட்டமன்றதிற்கென ஒரு நிலையான கட்டிடம். (அது நாள் வரையில் தமிழக சட்டமன்றக் கட்டிடம்  வாடகை  கட்டிடத்தில் இயங்கிவந்தது.)

7 போக்குவரத்து கழக டப்பா பேருந்துகளை மாற்றி புதிய நவீன பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது.

8 கடந்த 5 வருடங்களில் தமிழகத்தில் பெருவாரியான் அயல் நாட்டு தொழிற்சாலைகளை திறந்து... நாட்டின் வளர்ச்சிக்கு    வித்திட்டது.

9 தேசிய அளவில் தமிழகத்தை வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றியது.

10 சிறு சிறு கிராமங்களில் கூட சாலை வசதிகளை மேம்படுத்தி...நகரங்களோடு விரைவான தொடர்பை ஏற்படுத்தியது.   (உதாரணமாக :   பல வருடங்களாக பல அரசுகளுக்கு சவால் விட்டுவந்த 'சென்னை பெரம்பூர்' பாலத்தை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது)

 பிராமணர்களுக்கு திமுக மீது கடும் வெறுப்பு நிலவியதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.  இதில் முடிவெடுக்கும் இடங்களில் அவர்கள் கை ஓங்கியிருந்ததும் திமுக தோற்க ஒரு காரணம். 

 ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போதும் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு. அவர்கள்தான் ஆளும் கட்சியாக வரவேண்டும் என்ற மனநிலை  நிச்சயம் தமிழகத்தை பலவீனப்படுத்தும்.



புதன், மே 11, 2011

மாற்று சக்தியை ஏமாற்றும் சக்தியாக காட்டிய 'கோ'!



ஒரு மாற்றம் வேண்டும்,  என்று தமிழ மக்கள் காத்துக் கொண்டு இருக்கும் வேளையில், தேர்தல் முடிந்து  வந்திருக்கிறது கோ.  முதல்வர்கள் பற்றிய கதை என்பதாலே என்னவோ...  இயக்குனர் கே.வி.ஆனந்த் 'கோ' என்று பெயர்  வைத்திருக்கிறார்.   ' கோ' என்றால் அரசன் அல்லது அரசு என்று பொருள் படும். ஸ்வஸ்திக் சின்னம் வாக்கு முத்திரையை குறிக்கிறது.

அடிப்படையில் பத்திரிகை புகைப்படக் கலைஞரான கே.வி. ஆனந்த், தனக்கு அதிகம் தெரிந்த 'பிரஸ் போட்டாகிராபர்'  கதையையே  களமாக எடுத்திருக்கிறார்.  அதற்கு வசதியாக இன்னாள் முதல்வர், முன்னாள் முதல்வர், வருங்கால முதல்வர் என்று 'பத்தி' பிரித்துக் கொண்டு எட்டு காலத்திற்கு 'கோ'வை  வெளியீட்டு இருக்கிறார்.

படத்தில் நிகழ்கால முதல்வராக  பிரகாஷ் ராஜ் .  நாட்டில் எங்கு பார்த்தாலும் லஞ்சம், கொள்ளை, கொலை என்று நாடே சீரழிந்து கிடக்கும் வேளையில் முதல்வராக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்த நேரத்தில்தான் சட்டமன்ற தேர்தல் வருகிறது. 

'சிறகு' என்ற மாணவர் இயக்கம் தோன்றி தேர்தலில் போட்டியிடுகிறது.  பட்டி தொட்டி எங்கும் நடையாக நடந்து மக்கள் ஆதரவை திரட்ட, மக்களோ அவர்களை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. மக்களின் கவனத்தை திருப்ப 'சிறகு' போரடுகிறது... ஆடி படுகிறது!. 

 எதிர்க் கட்சி தலைவராக கேட்டா சீனிவாச ராவ்.  அவர் மீண்டும் அறியணை ஏற பல 'அகாசுகா' வேளைகளை செய்கிறார். அப்போதுதான் வயதுக்கு வந்த சிறுமியை மணந்து கொண்டால் மீண்டும் அறியணை கைக்கு வரும்,  என்று  மந்திரவாதி சொல்ல... காட்டில் மண்டை ஓடுக்கிடையே அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. (மறைந்த என்.டி.ஆர் போல கெட்டப் வேற...)அதை 'தின அஞ்சல்' புகைப்படக்காரர் அஷ்வின் (ஜீவா) படம் எடுத்து தின அஞ்சலில் வெளியீட...தேர்தலில் அவருக்கு பயங்கர பின்னடைவு எற்படுகிறது.

ஆளும் கட்சி முதல்வரோ   டிவி நிருபரை செருப்பால் அடித்துவிட...அதையும் போட்டா  எடுத்து தின அஞ்சலில்  போட்டு... அவரது விக்கட்டையும் காலிசெய்கிறார் ஜீவா. 

இதற்கிடையே பல சமூக சேவைகளால் சிறகுகள் அமைப்பு மக்களிடையே நற்பெயரை   பெறுகிறது. இந்த நேரத்தில் அந்த அமைப்பின் தேர்தல்  மாநாட்டில்  குண்டு வைக்கப் பட்டு பல உயிர்கள் பலி ஆக்கப்படுகின்றது. வெடி குண்டு இருப்பதை கண்டு பிடிக்கும் தின அஞ்சல் பெண் நிருபரும் கொல்லப் படுகிறார். தான் சாகும் முன்  பொது கூட்டத்தில் குண்டு இருப்பதை தெரிந்துக் கொண்ட அந்த பெண் நிருபர் ஜீவனுக்கு எஸ்ஸமஸ்  அனுப்புகிறார்.  அதற்குள் அவரும் கொல்லப்பட,  குண்டு வெடிப்பில் பொது மக்களோடு சில நிருபர்களும் சாகிறார்கள்.  இதற்கு ஆளும் கட்சியும் முதல்வரும்தான் காரணம் என்று  நம்ப வைக்கிறார்கள்.

தேர்தலில் மக்கள் ஆளும் கட்சி மீதும் எதிர்கட்சி மீது நம்பிக்கை இழக்கும் நேரத்தில், 'சிறகு' செமத்தியாக ஸ்கோர் செய்கிறது.  மக்கள் ஆளும் கட்சியையும் எதிர்கட்சியையும் புறக்கணித்து விட்டு... மாற்று சக்தியான 'சிறகு'க்கு ஆதரவு தர.. சிறகு மக்களின் அமோக ஆதரவுடம் ஆட்சி கட்டிலில் அமருகிறது.

அட நல்லா இருக்கே என்று நாம் சீட்டின் நுனிக்கு வர...... அங்கே இருக்கிறது ஒரு 'டுவிஸ்ட்'

நிற்க:

நிஜத்தில்  எல்லோரும் தமிழகத்தில் ஆளும் கட்சிமீது  ஒருவித வெறுப்பில் இருக்க... துணை முதலவரின் மகன் எடுக்கும் படமே ஆளும் கட்சியை சாடுகிறதா? இவர்களே எப்படி மாற்று சக்திக்கு   ஆதரவு தருகிறார்கள்?  

எப்படி முதல்வர் பலபேர் பார்க்க நிருபரை செருப்பால் அடிப்பார்?


அவருக்கு கொ.ப.செ ஆக எப்போதும்  அருகில்  ஒரு இளம் பெண். 

படத்தில் ஆளும் கட்சி,   மக்களுக்கு எதிரானது.  மக்கள் அவர்களை நம்ப வில்லை என்று காட்டுகிறார்கள்.
 
இப்படி ஆளும் கட்சி மீது அவதூறு பரப்பக் கூடிய ஒரு படைத்தை எப்படி உதயநிதி ஸ்டாலின் எடுத்தார்?. அதுவும் இந்த நேரத்தில்...?

மில்லியன் டாலர் கேள்வி...? !

அங்குதான் அவர்களின் சூட்சுமம் இருக்கிறது.

மேலே படியுங்கள்........

தேர்தலில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் தோற்றுவிட... சிறகுகளின் தலைவர் அஜ்மல் மக்களின் ஆதரவுடன்  முதல்வராக பொறுப்பேற்கிறார். 

சிறகுகளின் பொது கூட்டத்தில் குண்டு  வைத்தவன்  பற்றிய துப்பு கிடைக்க... அதை தெரிவிக்க தின அஞ்சல் போட்டோகிராபர்   ஜீவா முதல்வரை (அஜ்மல்) பார்க்க முயலும் போது...கதையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படுகிறது.

இங்கே முடிச்சை அவிழ்த்துதான் ஆகவேண்டும்.

முதல்வர்  அஜ்மலோடு  அரசங்கம் தேடிக்கொண்டு இருக்கும்  நஸ்லைட் தலைவன் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறான்.  அவன் ஏற்கனவே ஒரு வங்கி கொள்ளையில் சம்பந்தப் பட்டவன் என்பது ஜீவாவுக்கு தெரியும். ஜீவா அவனைப் பார்த்துவிட அங்கே துவங்குகிறது ஜீவாவின் துப்பறியும் படலம்.

ஜீவா கண்டு பிடிக்க ....கண்டுபிடிக்க... நமக்கு தலை சுற்றுகிறது.

நடந்த அத்தனை களோபரத்திற்கும் காரணம் மாற்று சக்தியான,  சிறகுகளின் தலைவர் அஜ்மல்தான்.  இவரது இன்னொரு முகம் இவரது  சிறகு சகாக்களுக்கு  தெரியாதது வியப்புதான்.

அவர்தான் நக்ஸ்லைட்டுகளுடன் சேர்ந்து தான் நடத்தும் கூட்டதிற்கு குண்டு வைக்கிறார்.  குண்டு வெடிப்பில் பலர் கொல்லப் பட அஜ்மலுகு சிம்பத்தி 'சிறகு' முளைக்கிறது.

தன்னை அடியாட்களை விட்டு அடிக்க வைத்து பொதுமக்களிடம் பேர் வாங்குகிறார்.

சேரியில் குடிசைகளை  கொளுத்திவிட்டு அவர்களுக்கு உதவுகிறார்.

குண்டு வெடிப்பிற்கு பிறகு மனம் வெதும்பி (சும்மனாச்சிக்கும்) தேர்தலில் நிற்க போவதில்லை என்று அஜ்மல்  பேட்டி தட்ட.... பொது மக்களும் ஊடகங்களும்    நிற்கச் சொல்லி அஜ்மலுக்கு ஆதரவுகரம் நீட்டுகிறார்கள்  .

மாற்று சக்தியான அஜ்மல்;  முதல்வராவது சதிச் செயலால்தான் என்று காட்டுகிறது படம். 

முடிவில்... பதவி இழந்த முதல்வர் பிரகாஷ்ராஜை நல்லவராக காட்டுகிறார்கள்.

இப்படி மாற்று  சக்தியான இளைஞர்களை, திரையில்  ஏமாற்றும் சக்தியாக  காட்டிருக்கிறார்கள்.  இதன் மூலம் ஒரு உண்மை தெரியவருகிறது.

என்னதான் மாற்று சக்தி என்று நீங்கள்.... அவர்கள் பின்னால் போனாலும் அவர்கள்,  நீங்கள் நினைப்பது போல் நல்லவர்கள் இல்லை. 

அப்படியே ஆட்சி பொறுப்பு கிடைத்தாலும் அவர்களும் மாமுலான அரசியல்வாதியாக மாறிவிடுவார்கள் என்று காட்டுவது.


அவர்கள் எங்களை விட  மிகவும் கொடியவர்கள். அதனால் மாற்றுசக்தி என்று அலையாமல் எங்களையே மீண்டும் தேர்ந்தெடுங்கள்  என்று கூறுவது போல் படம் முடிகிறது.



அதானே....இவங்களாவது  மாற்று சக்திக்கு ஆதரவு தருவதாவது...?









ஞாயிறு, மே 08, 2011

தூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்! தொகுப்பு.


            "சேமித்துவைக்க  வைக்கவேண்டியவை"           






மீபத்தில்  முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்!. புதுச்சேரி அரசில் Gazetted Officer ஆக பணியாற்றும்   முனைவர்  இராஜ. தியாகராஜன் அவர்களின் பிறந்த நாளுக்கு (5th May)  ஏராளமான முக நூல் நண்பர்கள் வாழ்த்து  தெரிவித்திருந்தனர்.  அதற்கு அவர் மிக அழகாக.... தூய தமிழில்  நன்றியும்  வாழ்த்துகளையும்  சொல்லியிருந்தார்.  


இராஜ. தியாகராஜன்

கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தபோதுதான் ஒரு வித்தியசத்தை காணமுடிந்தது.  அதில் ஒவ்வொரு நன்றிக்கும் வாழ்த்திற்கும் வித விதமான தூய தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தார். அவை நாம் அதிகம் அறியப் படாத தமிழ் சொற்கள்.   அதில் ஒவ்வொரு வாழ்த்தையும்... விடாமல் படித்துவிட்டேன்.  ஒவ்வொன்றையும் தனித்தனிமையுடன் வழங்கியிருந்தார் இராஜ. தியாகராஜன். அவரின் பணி போற்றத்தக்கது!



அதை... இந்த தமிழ்கூறும் நல்லுலகமும்  பயன்பெறவேண்டும் எடுத்து சேமிக்க வேண்டும்  என்பதற்காகத்தான் இந்த தொகுப்பு.



 இனி  வாழ்த்து கூறியவர்களுக்கு....அவர் தந்த  நன்றியும் வாழ்த்துகளும்.....!
 
  1. என்னுடைய உளமார்ந்த நன்றி ஒண்டமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  2. என்னுடைய உளமார்ந்த நன்றி நற்றமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  3. என்னுடைய உளமார்ந்த நன்றி நறுந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  4. என்னுடைய உளமார்ந்த நன்றி பைந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  5. என்னுடைய உளமார்ந்த நன்றி அறுகெனவே நலம்விளைக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  6. என்னுடைய உளமார்ந்த நன்றி நந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  7. என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறித் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  8. என்னுடைய உளமார்ந்த நன்றி வான்மழையாய் இனித்திருக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  9. என்னுடைய உளமார்ந்த நன்றி செந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  10. என்னுடைய உளமார்ந்த நன்றி வளப்பத் தமிழ் போன்றே இனித்திருக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  11. என்னுடைய உளமார்ந்த நன்றி கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டாய்த் தித்திக்கும் உங்கள் இனிய     வாழ்த்துகளுக்கு!
  12. என்னுடைய உளமார்ந்த நன்றி நட்பின் மணம் வீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  13. என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பின் மணம் வீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  14. என்னுடைய உளமார்ந்த நன்றி தெங்கிளநீராய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  15. என்னுடைய உளமார்ந்த நன்றி தண்டமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  16. என்னுடைய உளமார்ந்த நன்றி தீந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  17. என்னுடைய உளமார்ந்த நன்றி வானமுதாய் வளங்கூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  18. என்னுடைய உளமார்ந்த நன்றி வளப்பமிகு செந்தமிழின் சுவையூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  19. என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  20. என்னுடைய உளமார்ந்த நன்றி தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  21. என்னுடைய உளமார்ந்த நன்றி கற்கண்டாய் இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  22. என்னுடைய உளமார்ந்த நன்றி   பண்ணார் தமிழெனவே நாமணக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  23. என்னுடைய உளமார்ந்த நன்றி   கன்னலின் சாறனைஉங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  24. என்னுடைய உளமார்ந்த நன்றி   பூந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  25. என்னுடைய உளமார்ந்த நன்றி  தூயநற்றமிழ்ப் பண்ணிசையாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  26. என்னுடைய உளமார்ந்த நன்றி தென்றலென வருடுகின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  27. என்னுடைய உளமார்ந்த நன்றி தமிழ் அமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  28. வாழ்தல் இனிது; அதனினும் இனிது உங்களைப் போல் அடுத்தவர்க்காய் வாழ்தல்.
  29. என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  30. என்னுடைய உளமார்ந்த நன்றி ஆரமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  31. என்னுடைய உளமார்ந்த நன்றி தெள்ளமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  32. என்னுடைய உளமார்ந்த நன்றி சீரமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  33. என்னுடைய உளமார்ந்த நன்றி விண்ணமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  34. என்னுடைய உளமார்ந்த நன்றி வானமுதாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  35. மிக்க நன்றி  வைகறையின் தண்ணொளியாய் மிளிர்கின்ற உங்கள் வாழ்த்துரைக்கு.
  36. என்னுடைய உளமார்ந்த நன்றி முக்கனியாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  37. என்னுடைய உளமார்ந்த நன்றி பரிவூறிய உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  38. என்னுடைய உளமார்ந்த நன்றி அமிழ்தெனவே தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  39. என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் அமுதூறித் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  40. ன்னுடைய உளமார்ந்த நன்றி நந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  41. என்னுடைய உளமார்ந்த நன்றி பசுந்தேனாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  42. என்னுடைய உளமார்ந்த நன்றி செங்கனியாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  43. என்னுடைய உளமார்ந்த நன்றி இந்தளமாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  44. என்னுடைய உளமார்ந்த நன்றி அலைபாயும் கானடாவாய் கட்டியிழுக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  45. என்னுடைய உளமார்ந்த நன்றி அன்னையின் அன்பெனவே இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  46. என்னுடைய உளமார்ந்த நன்றி பூமணமாய் இனிக்கின்ற உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  47. என்னுடைய உளமார்ந்த நன்றி நறுந்தேனின் சுவையூறி தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  48. என்னுடைய உளமார்ந்த நன்றி கனிச்சாறாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  49. என்னுடைய உளமார்ந்த நன்றி மலையிழியும் சுனைச் சாறாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  50. என்னுடைய உளமார்ந்த நன்றி பனித்துளியாய் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  51. என்னுடைய உளமார்ந்த நன்றி தேந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  52. என்னுடைய உளமார்ந்த நன்றி  தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  53. என்னுடைய உளமார்ந்த நன்றி மாருதமாய் மனம் வருடும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு
  54. என்னுடைய உளமார்ந்த நன்றி தென்றலென உளம் வருடும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  55. என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பார்க்கும் அருமைமிகு உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  56. என்னுடைய உளமார்ந்த நன்றி எந்தமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  57. என்னுடைய உளமார்ந்த நன்றி முக்கனியின் சாறெடுத்த முப்பாலாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  58. என்னுடைய உளமார்ந்த நன்றி ஆடகமாய் ஒளிவீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  59. என்னுடைய உளமார்ந்த நன்றி பாவன்பரே... வான்மதியாய் ஒளிவீசும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  60. என்னுடைய உளமார்ந்த நன்றி அன்பென்னும் இனிப்பார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  61. என்னுடைய உளமார்ந்த நன்றி தேறலென தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  62. கொட்டுகின்ற மகிழ்ச்சியொன்றே குவலயத்தில் வேண்டுமென்று அட்டியின்றி அறுதியிடும் அணங்குங்கள் அன்பினுக்கு கட்டுண்ட கவிஞனென்றன் கவிவரியால் நன்றிகள்!
  63. என்னுடைய உளமார்ந்த நன்றி தெளிதமிழாய்த் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  64. என்னுடைய உளமார்ந்த நன்றி நிவி பூந்தேனாய்த் தித்திக்கும் உன்னுடைய இனிய வாழ்த்துகளுக்கு!
  65. என்னுடைய உளமார்ந்த நன்றி தமிழார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  66. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதைப் போல இத்தனை வாழ்த்துகளா! மனம் நெகிழ்கிறது நண்பரே!
  67. என்னுடைய உளமார்ந்த நன்றி நட்பார்க்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  68. என்னுடைய உளமார்ந்த நன்றி தூயநற் பண்ணிசையாய் தித்திக்கும் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு!
  69. தேர்ந்தெடுத்த சொல்கொண்டு செறிவான வாழ்த்துகளை ஆர்வமுடன் அன்பாய்நீர் அளித்துவிட்டீர்! மனமகிழ்ச்சி; வேர்வரையில் தான்பாய்ந்து மேதினியில் மேன்மேலும் நேர்மையுடன் நீணிலத்தில் நானுழைக்க மருந்திதுவே! 
  70. வாழ்த்துரைக்கும் வாலிபமே! வாழ்கவென செந்தமிழில் ஊழ்த்துவரும் உயர்தமிழால் உளமார வாழ்த்துகிறேன்!

அப்பப்பா.....தமிழ் இங்கு நதியாய் உருக்கொண்டு....தாவி தவழ்ந்து நம்மை வருடிச் செல்கிறது. பொதுவாகவே...  திரு  இராஜ. தியாகராஜனின்  தமிழ் நம்மை பிரமிக்கவைக்கிறது.   அவரது முகநூல் தமிழின் தொன்மங்களை அகழ்ந்தெடுக்கும் நற்பணிகளை செய்துவருகிறது. தமிழுக்கும் தமிழருக்கும்  அவர் செய்யும் பணி அளப்பறியது.

                       வாழ்க அவரது தமிழ்ப் பணி!                 
                  வளர்க அவரது தமிழ் தொண்டு!!



புதன், மே 04, 2011

கணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.

                                            அஞ்சலி                                         

முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி  இலக்கிய இதழின் நிறுவனருமான கஸ்தூரிரங்கன் இன்று காலமானார். அவருக்கு வயது 78.    சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் குடியிருப்பில் வசித்துவந்த அவர், சிறிதுகாலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.



முதுபெரும் பத்திரிகையாளரும் சமூக  ஆர்வலருமான கஸ்தூரிரங்கன் இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் காலமானார். 

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டெல்லி நிருபராக 20 ஆண்டுகள் பணியாற்றிய அவர், டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 ல் கணையாழி இதழை தொடங்கினார்.  கணையாழியில்  அரசியலை முதன்மைப்படுத்திய கட்டுரைகள் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன கணையாழியில் வெளியாகியது.  கணையாழியை தனது உயிர் மூச்சாக நினைத்து நடத்தி வந்தார்.

பின்னர் 1992 வாக்கில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இனைந்து பணியாற்றினார். அப்போதுதான் அவருக்கு தினமணியின் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. இரண்டு ஆண்டுகள் அவர் தினமணியின் ஆசிரியராக இருந்து முத்திரையைப் பதித்தார்.  அதுவே அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை பத்திரிகை உலகில் பெற்றுதந்தது எனலாம்.

சிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கணையாழியை  நடத்திய பெருமை கி. கஸ்தூரிரங்கனுக்கு உண்டு.  இதோ இப்போதும் கூட....  நின்று போன கணையாழியை உயிர்பித்தப் பின்னரே தனது  மூச்சை நிறுத்தி உள்ளார் கஸ்தூரிரங்கன் என்பது குறிப்பிடத்தக்கது.


**********

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...