வெள்ளி, ஏப்ரல் 26, 2024

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

 

 

கவிஞர் ரவி சுப்ரமணியன்

               ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நினைத்திருந்தேன்.
தொடர் வேலைப் பளுவால் அது தள்ளிக் கொண்டே போனது.  இவ்வளவிற்கும் அலுவலகம் போகும் வழியில்தன்  அவரது வீடும் இருக்கிறது.  இன்று திடுதிப்பென்று அவரைப் பார்க்க கிளம்பிவிட்டேன்.  புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் இருக்கிறது அவரது வீடு.  


போன் செய்ததும், ஆர்வமாக வரவேற்றார்.

புரசைவாக்கம், கெல்லீஸ், அயனாவரம் என்று திரும்பிய திசையெங்கும் மெட்ரோ ரயில் வேலை நடைபெறுகிறது.  'இன்றைய சிரமம், நாளைய வசதிக்காக'  என்று நினைத்துக் கொண்டு ஒரு வழியாக புரசை தானா தெரு வழியாக உள்  நுழைந்து, ஜமாலியா, ஓட்டேரி,  அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை தாண்டி அவரது விலாசத்தை அடைந்துவிட்டேன்.

"வேறு யாராக இருந்தாலும்,  ஐந்து வாட்டியாவது அட்ரசைக் கேட்டு போன் செய்திருப்பார்கள், நீங்கள் டக்கென்று வந்துவிட்டீர்களே...?"  என்றார் ரவி சார்.

 என்னை போன்ற மார்கெட்டிங் மனிதர்களுக்கு    விலாசம்  தேடுவது  பெரிய  சிரமமான  வேலை இல்லை, அது எளிதானது. எந்த ஒரு விலாசத்திற்கு ஒரு கீ வேர்ட் இருக்கும், அதை பிடித்துக் கொண்டால் போதும்.  

காலை  உணவு இல்லை என்பதால், Mid Morning Meals ஐ அப்போதுதான் முடித்து அமர்ந்திருந்தார் கவிஞர் ரவி சுப்ரமணியன்.   அடர்த்தியான சிகை, சரியான திராவிடக் கலர்,  அதிராத மென் குரல், புன்னகை தளும்பாத முகம் என்று ஒரு  படைப்பாளிக்கான சர்வலட்சணமும் அவரிடத்தில் இருந்தது. 



இசையின் மீது தீராப் பற்றும், அவரது மென் குரல் பாடல்களும்  இலக்கிய மேடைகளில் ஏக பிரபல்யம்.  

தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநரான ரவி சுப்பிரமணியன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், சேக்கிழார் அடிப் பொடி, டி.என்.ராமசந்திரன்,  திரிலோக சீதாராம் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார்.  

எழுத்தாளர்கள் எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, மா, அரங்கநாதன்,  தேனுகா போன்றோரிடம் நெருங்கிப் பழகியவர்.  

எம்.வி.வி.தனது கடைசி காலத்தில் , 'ரவி சுப்ரமணியன் மெட்ராஸ் போய்ட்டான்...இனி வரமாட்டான்' என்று ஆதங்கத்தோடு கேட்கும் அளவிற்கு தனது  அன்பை  அவர்களிடத்தில் பதியம் செய்தவர்.

எத்தனை எத்தனை இலக்கிய  ஜாம்பவான்களைப் பார்த்து இருப்பார், பழகி இருப்பார்.  ஒரு இலக்கிய ஆளுமையாக இருந்தாலும், எந்தவித படாடோபமும் இன்றி  எளிய மனிதராக என்னோடு பேசிக் கொண்டு இருந்தார். 



கும்பகோணம், காவிரி, டைமண்ட் தியேட்டர், புருஷோத் விஹார், அரசு கலைக் கல்லூரி, பெரியக் கடைத் தெரு   என்று  பேசிக் கொண்டு இருந்தோம்.  கும்பகோணம் அருகில்தான் எனது ஊரும் என்பதால்,  அவரோடு மிக எளிதாக பொருந்திப் போக முடிந்தது.

 இயக்குநர்கள் அரவிந்த ராஜ், லிங்குசாமி, கவிஞர் பிருந்தாசாரதி என்று கும்பகோணத்திலிருந்து கிளைத்தெழுந்த படைப்பாளிகளைப் பற்றி சிலாகித்து பேசினார்.

தனது பெரும் மதிப்பு மிக்க சொத்துக்களை, உறவுகளுக்கு   கொடுத்துவிட்டு, தன்னை முழுமையாக இலக்கியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட உயர்ந்த மனிதர். 



அவரது படைப்புக்களில் மிளிரும் அழகியல் போன்றே அவரது உரையாடலும் அழகாக  இருந்தது.   

உரையாடலின் இறுதியில் நான் எடுத்த படங்களை அவருக்கு வாட்ஸ்ப்பில் அனுப்பி வைத்திருந்தேன். படத்தைப் பார்த்தவர்... "செழியன்  எடுத்தா மாதிரி இருக்கு, தேர்ந்த ஒளிப்பதிவாளர் எடுத்தா மாதிரி அழகாக எடுத்து இருக்கீங்க" என்று பாராட்டினார்.

மதிய வெயில்...உக்கிரம் குறைந்து நிலா போன்று காய்ந்து கொண்டிருந்தது !




-மபா

#ரவிசுப்ரமணியன்
#கும்பகோணம்
#mabaclicks

கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...