திங்கள், டிசம்பர் 31, 2012

"போட்டோ புடிங்க....பிளிக்கர்ல போடுங்க!"






                                 கொஞ்ச நாளா பிளிக்கர் பக்கமே உலாத்திக்கிட்டு இருக்கேன். பேஸ்புக், வலைத்தளம் பக்கம் தலை காட்டவே  இல்ல.  நூற்றுக் கணக்கில் எடுக்கப்பட்ட  புகைப்படங்களை பிளிக்கர்  சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதிலேயே ஆர்வம் அதிகரித்துள்ளது.  புகைபடங்களை மட்டுமே பகிர என்று இருக்கும் இந்த பிரத்யேக தளத்தில் நமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.

யாகு (Yahoo) அக்கவண்ட் உள்ள எவரும் பிளிக்கரில்  புகைப்படங்களை பகிர முடியும்.  அது உலக அளவில் நமது புகைபடங்களுக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுத்தரும்.

வளைத்தளம் போன்றே பிளிக்கரும்.

எப்படி தமிழில்  (Blog) வலைத்தளம் இருக்கிறதோ, அதேபோன்ற  அப்படி ஒரு செட்டப்பில் இயங்கிக் கொண்டு இருக்கிறது பிளிக்கர்.  தமிழ் வலைத்தளம் தமிழ் தெரிந்த வாசகர்களிடம் மட்டுமே இயங்கும். இங்கு நமது நட்பு வட்டம் தமிழ் சார்ந்த பதிவரிடம் மட்டுமே இருக்கும். ஆனால் பிளிக்கரின் செயல்பாடோ வேறு விதமானது.   இது முழுக்க முழுக்க உலக அளவில் இயங்கக் கூடியது.  அதனால் நீங்கள் எடுத்த புகைப்படங்களுக்கு சர்வதேச அளவில் பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.  படங்களுக்கு உடனே உடனே விமர்சனமும் கிடைக்கும்.


Pix: Gabygobou
பிளிக்கரில்  நிறைய குழுக்கள் இருக்கின்றன. பிளிக்கர் டிராவல் அவார்ட், நேஷனல் போட்டகிராபி, தெற்காசிய புகைப்படங்கள், தெரு முனைப் புகைப்படங்கள்,  இந்தியா இமேஜ், சில்க் ரூட், கெட்டி இமேஜஸ், தி பெஸ்ட் ஷாட், மத்திய சைனா, பீப்புள்ஸ் இன் த வில்லேஜ்,   பழங்கால இடங்கள் பற்றிய புகைப்படங்கள், வாழ்வியல் புகைப்படங்கள் என்று  ரகவாரியாக புகைபடங்களின் குழுக்கள் கொட்டிக் கிடக்கிறது. நீங்கள் எடுத்தப் புகைப்படங்கள் எந்த வகையைச் சார்ந்ததோ அந்த குழுவில் உங்கள் படங்களை வெளியிடலாம்.

பிளிக்கரில் பேஸ் புக்கில் இருப்பதுபோல் உங்கள் புகைப்படங்களை நீங்கள் டேக் (Tag) செய்யலாம். இது மிகவும் எளிதானது ஜஸ்ட் ஒரு கிளிக் அவ்வளவுதான். அதற்கு முன் அந்தப் புகைப்படங்களை உங்கள் தளத்தில் நீங்கள் அப்லோட் செய்திருக்கவேண்டும். பிளிக்கர் மிகவும் எளிதானதாகவும், பயன்படுத்துவதற்கு சிரமமில்லாமலும் இருக்கிறது.


முன்பெல்லாம் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அது குதிரைக் கொம்புதான்.  டவுனுக்கு போயிதான் போட்டோ புடிக்கவேண்டும்.  சாமானிய மக்களால் புகைப்படக் கருவி வாங்குவதென்பது மிகுந்த கடினமானது.  இப்போது ஆளாளுக்கு கையில் காமிரா மொபையில் வைத்திருக்கிறார்கள்.  ஆட்டோ போக்கஸ் உள்ள டிஜிடல் காமிராக்கள் இருக்கிறது.  இத்தகைய  தொழிற் நுட்ப வளர்ச்சியால், இப்போது யார் வேண்டுமானாலும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
ஜிபிஸ் தொழிற் நுட்பம் உள்ள மொபைல் காமிராவில் படமெ எடுத்தால் மிக எளிதாக பேஸ் புக் மற்றும் பிளிக்கரில் பதிவேற்றம் செய்ய முடியும்.
     
ஓச்சப்பன் என்கிற ஹெங்க் (Mr.Henk) .


பிளிக்கரில் போட்டோ வெளியிட புகைப்பட அறிவு தேவையில்லை. ஆர்வம் உள்ள எவரும் இதில் பங்கேற்கலாம். தாம் எடுத்த புகைப்படங்கலை இதில் வெளியிடலாம். அதேசமயத்தில் இதில் கட்டுப்பாடும் உண்டு. முகம் சுளிக்கக் கூடிய, ஆபாசமான புகைப்படங்களை வெளியிட தடை இருக்கிறது.  படங்களை வெளியிட சுய கட்டுப்பாடு அவசியம்.

ஒச்சப்பன் என்பவரின் புகைபடம் சர்வதேசப் புகழ்பெற்றது. மதுரையைச் சுற்றி அவர் எடுத்த எடுக்கும் புகைப்படங்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். மதுரையிலிருந்து இந்த கலக்கு கலக்குகிறாரே என்று புருவம் உயர்த்தினால். சார் பக்கா பெல்ஜியம்காரர். 1985ல் மதுரை வந்தவர் , மதுரையின் அழகில் மயங்கி சுற்றுவட்ட கிராமம் கிராமமாக அலைந்து சுட்டுக் கொண்டு இருக்கிறார். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல, பெல்ஜியம் மதுரை என்று மாறி மாறி பறக்கிறார். மதுரை அவருக்கு இரண்டாவது தாய்விடாகிவிட்டது. அப்புறம் பெயர் எப்படி ஓச்சப்பன் என்று கேட்கிறீர்களா. மதுரையில் இவரை கவர்ந்த சைக்கிள் ரிக் ஷா காரரின் பெயர் ஒச்சப்பன். அவரது பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டுவிட்டார்  ஓச்சப்பன் என்கிற ஹெங்க் (Mr.Henk) .




ஒச்சப்பன் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும் அள்ளிக்கொண்டு போகும். கிராமங்களை இவரது காமிரா மிக அழகாக பதிவு செய்கிறது. மனிதர்களையும் அவர்களது வாழ்வியலையும் வண்ணத்தில் வார்த்துதருகிறது இவரது புகைப்படங்கள். இவர் எடுத்த படங்களை காப்பி பண்ண் முடியவில்லை என்பதால், அவரது புகைப்பட லிங்கைத் தந்திருக்கிறேன் கிளிக் http://www.oochappan.be  செய்து பார்க்கவும்.




காபி கோபு. இவரது காமிராஆப்ரிகா மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக அருகில் இருந்து படம் பிடிக்கிறது. அந்த கருப்புத் தோலும் வெண்மை பற்களும் காந்தம் போல் நம்மை இழுக்கிறது. எப்போதும் தனது காமிராவால் மக்களையே குறி வைக்கிறார். மிக நேர்த்தியாக நுண்ணியமாக படம் பிடிக்கிறார். மிகக் குறைந்த காலத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தவர்.



இவரது படங்களில் ஆப்ரிக்க மனிதர்களை பார்க்கும்போது நிறைய நேரங்களில் நமது தென்னிந்திய மக்களையே ஞாபப்படுத்துகிறது. அந்த அளவிற்கு வாழ்க்கைத் தரமும், உருவமும் ஒற்றுமையுடன் காணப்படுகிறது.




   





அமெரிக்கரான டானியல் என்கிற டான் ஒரு ரிடையர் மேன். தனது கடைசி மகளுக்கு திருமணம் செய்ய இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.டானுக்கு கடன் வாங்குவது பிடிக்காதாம். அதனால், ரிடையர்டு ஆன்பின்னும் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறார். சமையல் சார்ந்த புகைப்படங்களை மிக அழகாக படம் பிடித்து வெளியிடுவார். 70 வயதை கடந்த டேனியல் என்னை ஒரு மகனாகவே பார்க்கிறார். அவரது அன்பு நிச்சயம் விலைமதிக்க முடியாதது. தாங்க்யூ பாஸ்.  

                        



டான் எடுத்த புகைப்படம் பெரும்பாலும்  உணவு பொருள் மற்றும் செய்முறை சார்ந்தே இருக்கும். 70 வயது டான் இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கிறார். அவரது கடைசி மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதற்காக வேலைக்கு செல்கிறார்.

இந்திரா நாயர். இவரது காமிரா உலகம் முழுவதும் பறந்து பறந்து படம் பிடிக்கிறது. நிறைய நேரங்கங்களில் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். எப்போது இந்தியாவில் இருப்பார், எப்போது வெளி நாட்டில் இருப்பார் என்பதை இவர் பதிவேற்றும் படங்களைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். அந்த உலகம் சுற்றி வரும் இவரது காமிரா.  

அதுவும் பங்களாதேஷ் காரர்கள் எடுக்கும் புகைப்படங்கள் நிச்சயம் கவிதைதான். அங்கு எல்லோரும் புகைபடக் கலைஞர்களா என்று வியப்பு மேலிடுகிறது?!.

உஸ்பெக்கிஸ்தான், ஆப்ரிகா, கஜகஸ்தான், சீனா, கொரியா, தாய்லாந்து, அரேபியா, இத்தாலி என்று சர்வதேச சமூகம் ஃபளிக்கரில் சங்கமித்து இருக்கிறது ஒரு அதிசயம்தான்.

வியாழன், டிசம்பர் 20, 2012

நாளை உலகம் உயிரோடு இருக்குமா...?



            ன்னதான் மனுச பயல் துணிச்சல்ன்னு காட்டிக்கிட்டாலும், நேரம் நெருங்க நெருங்க டிவியை அணைக்காம எதாவது செய்தி கிய்தி வருதான்னுட்டு பார்த்துக்கிட்டுதான் இருக்கான்.  ரொம்ப நாளா சொல்லிக்கிட்டுதான் இருந்தாங்க  உலகம் அந்தா அழியப்போகுது இந்த அழியப் போகுதுன்னுட்டு. கடைசில அது நாளைக்குதான் தெரிஞ்சதும் கொஞ்சம் தவிப்போடுதான் காத்துக்கிட்டு இருக்கான்.  இருந்தாலும் எதையும் இன்னும் அவனால முழுசா சொல்ல முடியல.

மாயன் காலேண்டர் உலகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும், கிருஸ்துமசுக்கும் ஆங்கில புத்தாண்டுக்கும் மக்கள் தயாராகிக்  கொண்டுதான் இருக்கிறார்கள்.

உலகம் எப்படி அழியும்... சூப்பர் வல்கானோன்னு சொல்ற எரிமலை வெடிக்குமா...?  இல்ல சுனாமி வந்து கடல் நீர் அப்படியே மேலெழும்பி உலகத்த லவட்டிக்குமா....?  இல்ல பூகம்பம் வந்து மொத்தத்தையும் சுருட்டிக்குமா...? இல்ல நச்சுக் கிரிமி உலகம் முழுவதும் பரவி உயிரினங்களை பலி வாங்குமா....? ஒன்னுமே புரியாமா பேதலிச்சுப் போய் கிடக்குறான்.

சென்னையில ஹை- ஸ்டையில்ன்னு ஒரு கடை.  அவுங்க ஒரு படி மேலே போயி "World End Offer' ந்னுட்டு விளம்பரம் போடுறாங்க. என்ன தாமசு பாருங்க...?  எதையும் சீரியசா எடுத்துக்கமாட்டன் மனுசப் பய.  உலகம் அழியறத டிவில தெளிவா காட்டினாதான் நம்புவான்.  அதுவும் லைவ் ரிலேன்னா  போதும் சீட்டு நுனிக்கே வந்திடுவான்.

நாளை மற்றும் ஒரு நாளா...?

இல்லை

உலகின் இறுதி நாளா...?

காத்திருப்போம்.

வெள்ளி, டிசம்பர் 14, 2012

ரஜினியைப் பற்றி சொல்ல பெருசா என்ன இருக்கு....?



              12/12/12 சிறப்பு தேதி என்று கூறிக் கொண்டு ஊடகங்கள் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது.  12/12/12 ல் ரஜினியின் பிறந்த நாளும் சேர்ந்த வர நூறு வருடத்திற்கு ஒரு  முறை வரும்  அந்த சிறப்புக்குறிய நாளை ரஜினியின் நாளாக்கினர். எங்கு திரும்பினாலும் ரஜினி, எதை கேட்டாலும் ரஜினி என்று அது அவருக்கே போரடித்துவிடும். அந்தளவிற்கு இருந்தது ரஜினி புராணம்.   
                
கேஷ்வல் ஸ்டைலில்


சின்ன பத்திரிகை முதற்கொண்டு வெகு ஜன இதழ்வரை, பெரிய டிவி முதல் சின்ன டிவி வரை  ரஜினியை கூட்டாக, பொறியலாக, ரசமாக, ஊறுகாயாக, சூப்பாக என்று தாளித்தெடுத்துவிட்டார்கள்.

 குமுதம் இதழும் தன் பங்குக்கு 'ரஜினி ஸ்பெஷல்' என்ற புத்தகத்தை வெளியீட்டுள்ளது. 144 பக்கங்களில் ரூ120/- விலையில் தனிப்பதிப்பாக வெளிவந்துள்ளது 'ரஜினி ஸ்பெஷல்'.  ரஜினி பற்றிய அரிய புகைப்படங்கள், வித்தியாசமான துணுக்குகள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் என்று ஒரு சின்னத்திரைக்கே உரிய இலக்கணத் தொகுப்பாக இம் மலர் வெளிவந்துள்ளது.
    
தம்பிக்கு எந்த ஊரு...?


இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், எழுத்தாளர்கள், ரஜினிக்கு வீடு கட்டித் தரும் மேஸ்திரி என்று  எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டித் தட்டியுள்ளனர்.  ரஜினியைப் பற்றி எல்லொரு சொல்லிவிட்டார்கள் இதில் இவுங்க என்ன பெருசா சொல்லிவிட போறாங்க...? என்று கையில் எடுத்தால் நிச்சயம் தோல்விதான்.  அந்த வகையில் நல்லாவே மெனக்கெட்டு இருக்கிறார்கள்!.

செவ்வாய், டிசம்பர் 04, 2012

'கருத்த லெப்பை' புத்தக விமர்சனம்.




      

            'கருத்த லெப்பை' கதையை படித்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது!.  இதே கதை மேற்கு உலகிலோ அல்லது ஆங்கில மொழியிலிலேயோ வந்திருந்தால் கதையே வேறு? ஒன்று இக் கதையை தடை செய்திருப்பார்கள்.  அல்லது எழுத்தாளரின் தலையை கொய்து வரச்சொல்லியிருப்பார்கள்.  ஆனால், இங்கே இக் கதையை யாரும் கண்டுக் கொண்டதாகக் தெரியவில்லை.

விலை ரூ 50ல், மருதா வெளியிட்டில், 70 பக்கத்தில், குறு நாவலாக வந்திருக்கும் கருத்த லெப்பை 2007ல் முதல் பதிப்பு கண்டுள்ளது. இரண்டாவது பதிப்பு 2010ல் வந்திருக்கிறது. நான் படித்தது 2012ல்.  எவ்வளவு வருஷ இடைவெளி பாருங்கள்!.  இருந்தும் ஒரு பரபரப்பு இல்லை.  இல்லை எனக்குத் தெரியவில்லையா...?  தெரியவில்லை?

சாத்தானின் கவிதையை எழுதி சர்வதேச கவனத்திற்கு வந்த அதிர்ஷ்டம் சல்மான் ருஷ்டிக்கு கிடைத்தது பாவம் இக் கதையை எழுதிய எழுத்தாளர் கீரனுர் ஜாகிர் ராஜாவுக்குக் கிடைக்கவில்லை. பேட் லக் ஜாகீர் ராஜா!.


சரி, நாவலுக்கு வருவோம்.

மரைக்காயர். ராவுத்தர்,  லப்பை என்று இஸ்லாமியர்களுள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் இருப்பது நமக்குத் தெரியும்.  ராவுத்தர்மார்களுக்கும் லப்பைகளுக்கும் இருக்கும் பொருளாதார வேறுபாடு, சமூதாய வேறுபாடாய் வளர்ந்து, நான் உசத்தி, நீ கீழே என்று தொடைத்தட்டுவது வெளிஉலகம் அவ்வளவாக அறியாத ஒன்று!.  இருந்தாலும் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எந்தவித முக்காடும் போட்டுக் கொள்ளாமல் கதையை பட்டவர்த்தனமாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார்.

காலம் காலமாக லப்பைகள் ராவுத்தர்மார்களிடம் அடிமைப் பட்டுக் கிடப்பதும், அதிலிருந்து விடபட லப்பைகள் விருப்பமின்றி இருப்பதுமாய் கதை நகர்கிறது.  கருத்த லப்பைதான் இதில் கதா நாயகன். மூல நோய் வியாதிக்காரனான கருத்த லப்பைக்கு  ஊர் வம்பு வாங்குவதில் அலாதி பிரியம் போலிருக்கிறது.  வெட்டியாய் பொழுதைக் கழிக்கும் கருத்த லெப்பைக்கு ராவுத்தர்மாருங்களோடு ஒத்து போவதென்பது முடியாத ஒன்றாகிவிடுகிறது. அவ்வப்போது விடைத்துக் கொள்ளும் கருத்த லப்பை நல்லதொரு லெவ பையானாகவே வளர்கிறான்.

பொருளாதார ரீதியில் கருத்த லெவை சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும்  கொள்கை அளவில் கொஞ்சம் மாறுபட்டுத் தான் திரிகிறான்.  என்னதான் மதம் மனிதன் மீது பல கட்டுபாடுகளைத் தினித்தாலும், ஒரு தனி மனிதன் தனி அறையில் மதம் பற்றியோ அல்லது வழிபாடு பற்றியோ மறுபட்டு சிந்திப்பதில் எந்தவித வரையோ தேவையில்ல்லை.


சிறிய நாவல் என்றாலும் மிளகுப் போன்றே  எதார்த்த நடையில், பிற்போக்குத் தனமின்றி சற்று துணிச்சலுடனே கதை நகர்கிறது.   வீட்டில் குனிந்து பாத்திரம் கழுவும் அம்மாவின் பருத்த பிருஷ்டங்கள் கருத்த லப்பையை சற்றே சங்கடப்படுத்த.... அந்த சங்கடம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. எல்லோர் வீட்டிலும் சாதாரணமாய் நிகழும் ஒரு நிகழ்வை விகல்பம் இன்றி கையாண்ட  விதத்திற்கு கதையாசிரியருக்கு ஒரு சலாம் போடலாம்.  இத்தகையை கதையை கையால்வதும் ஒன்றுதான்  எரியிற கொல்லியால் தலையை சொறிந்துக் கொள்ளுவதும் ஒன்றுதான்.


உருவ வழிபாடென்பது இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. திசையை நோக்கித் தொழும் இஸ்லாத்தில், உருவம் பொறித்த ஆடைகளை அணிவதோ, ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதோ, நல்ல ஓவியங்களை வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வதேக் கூட மத துவேஷமாகத்தான் பார்க்கப்பட்டது.  ஆனால் கால மாற்றத்தில் இத்தகைய என்னமெல்லாம் புதையுண்டு போவது நல்லதுதானே....?   சமீபத்தில் பாகிஸ்தானில் அல்லாவின் உருவத்தை வரைவோம் வாருங்கள் என்று 'ட்விட்டரில்'வந்த செய்தியை அடுத்து ஒரு வாரகாலத்திற்கு ட்விட்டரை முடக்கியது பாகிஸ்தான் அரசு. அதை ட்விட்டியவனை நோண்டி நோங்கெடுக்க,  சல்லடை போட்டு தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.  அவன் கிடைத்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா...?


ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் நீங்கள் வெகு தூரத்தில் தள்ளிதான் நிற்கவேண்டும். அல்லா உருவம்  தொடர்பாக உங்கள் புருவம் கூட நெற்றியில் நெறிபடக் கூடாது. அந்த ஆசை இருந்தால், நீங்கள் மவுத்தாவது உங்கள் கையில் இல்லை.  இக் கதையில் கூட கருத்த லப்பைக்கு நல்லதொரு  தண்டனையை தந்திருக்கிறார் ஜாகீர் ராஜா.   இல்லை என்றால்... அவருக்கல்லவா கிடைத்திருக்கும்!?.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...