அதிரிபுதிரி அரசியல் ரிப்போர்ட்!
தினம் ஒரு பிரஸ் மீட், தினம் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை என்று பரப்பரப்பு முகம் காட்டி வருகிறது தமிழக பா.ஜ.க. முந்தையை தேர்தலில் பற்றிப்படர ஒரு கொழு கொம்பு இல்லாமல் அல்லாடிய பாஜக, இம் முறை மோடியை சுற்றி படர்ந்திருக்கிறது. குஜராத்தைவைத்து மோடிமஸ்தான் வேலை செய்து, தனக்கான தனி இமேஜை ஏற்படுத்திக் கொண்ட நரேந்திர மோடி, டீ ஆத்துவதை விட்டுவிட்டு இந்தியாவை நீள அகலத்தில் ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கொண்டு இருக்கிறார்.
சென்னை திநகர் வைத்தியராமன் தெருவில் இருக்கும் பிஜேபி தலைமை அலுவலகத்தின் வாசலில் வைத்துதான் ஊடகங்களுக்கு பேட்டி தட்டுகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள். ஒரு பக்கம் எல். கணேசன் மைக் பிடிக்க, மறுபக்கம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி கொடுக்க, வாசலில் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டிக் கொடுக்க தயாராக காத்திருக்க... என்று அந்த ஏரியாவே அதிரிபுதிரியாகி கதிகலங்கி நிற்கிறது.
தெருவின் திரும்பிய திசையெல்லாம் பத்திரிகையாளர்களும் டிவிக்காரர்களும் நிரம்பி வழிகின்றனர்.
ஒரு டிவி பேட்டி முடித்தால், மற்றோரு டிவி பேட்டியை தொடங்குகிறது. தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று டம்பிங் பட வரிசைபோன்று ரகத்திற்கு ஒன்றாய் பேட்டி கொடுக்கின்றனர்.
இதற்கு முந்தைய எபிசோடில் பிஜேபிக்காக வரட்டு வரட்டுன்னு கத்திகிட்டு இருந்த தமிழறிவு மணியன், தற்போது தனது டெசிபலைக் குறைத்துக் கொண்டு தனியாவர்த்தனம் செய்ய போய் விட்டார். விஜயகாந்த் திமுக பக்கம் போய்விடாமல் இருக்க என்னன்னவோ செய்து பார்த்தார். தனது வேட்டியை அவுத்து, கேப்டன் போகும் பாதையெங்கும் திமுக என்ற எழுத்து அவரது கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளக் கூட முயன்றார். என்ன பிரயோசனம்.....கேப்டன் போடுவது கரன்ஸி கணக்கு என்று தமிழறிவு மணியன் என்ற தவளைக்குப் புரியவில்லை. திமுகாவிற்கு எதிராக தினம் தினம் கொடுத்த பேட்டியும் வீணாகிவிட்டது.
தமிழறிவு மணியன் சொல்வதை கேட்க இவர் என்ன மச்சான் சதீசா.....?.
மோடியோடு மேடை ஏறுவேன் என்று சொன்ன நம்ம வைகோ, வாழ்த்து தந்தி மட்டும் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு தாயகத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார். பிற்பாடு கூட இருந்தவர்கள் எடுத்துச் சொல்லப் போக....ரெண்டாம் சாமத்துக்கு மோடியை, தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சந்தித்திருக்கிறார் வைகோ. அன்றைய தினம் (மோடி வருவதற்கு முன்) இரவு எட்டரை மணிக்கு கிளம்பிய ஒரு வதந்தி வைகோவை மேடை ஏறாமல் செய்துவிட்டது என்கிறார்கள் வைத்தியராமன் தெருவாசிகள்.
எட்டரை மணிக்கு கடையை (?) மூடிவிட்டு தலைவர்கள் காரில் ஏறி பறக்க இருந்த அந்த செகண்டில், எங்கிருந்தோ பறந்துவந்த ஊடகக்காரர்கள் "உங்களுக்கும் திமுகவுக்கும் கூட்டணியாமே....?" என்ற வெடியை கொளுத்திப் போட, அது பொன்னார் முகத்தில் சரமாரியாக வெடித்தது. வைகோவை மேடை ஏறாமல் செய்தது.
"உங்களுக்கு யாருங்க சொன்னா.....யாருங்க சொன்னா.....?" என்று பொன்னார் கோபத்தில் கத்த, "இங்கதாங்க தெரு முக்ல பேசிக்கிட்டாங்க...." என்று ரிப் போட்டர்கள் பொத்தாம் பொதுவாய் பதிலளிக்க, பொன்னார் மறுபடியும் மைக் பிடித்து பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். அன்றைய இரவு மூடிய கடையை மறுபடியும் திறக்கும்படியாகிவிட்டது.
பிளாஷ் லைட் வெளிச்சம் பீய்ச்சு அடிக்க.....சீரியல் பார்த்துக் கொண்டு இருந்த வைத்தியராமன் தெருவாசிகள் சிலபல நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியஸ் மூடுக்கு வந்தார்கள். ஒரு கட்சி இருந்தாலே இப்படி இருக்க, அதே தெருவில் இன்னோரு கட்சியும் இருக்கிறது.
அது சிபிஐ!. சிபிஐயில் ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர்கள் காம்ரேட்டுகள் என்பதால் கட்சி அலுவலகத்தில் அவ்வளவாக இருப்பதில்லை. களப்பணியாற்ற சென்றுவிடுகின்றன்ர். செவப்பு கலர் உண்டு, அம்மா தரும் தொகுதி உண்டு என்று காம்ரேட்டுகள் கம்முன்னு கிடந்து ரெண்டு மூனு வருஷமாச்சி.
ஜெ எதுக்கு காம்ரேட்டுகளுக்கு ஒகே சொன்னார்ன்னு தெரிஞ்சா, எதுத்தாப்பல இருக்குறவுங்க மூக்கு மேல கை வைப்பிங்க. தான் ஜெயிச்சு டெல்லிக்கு போனா.... கூட மாட கொரல் எழுப்ப ஆளு வேண்டாமா....?.. சைடு சப்போட்டுக்கு எப்படியும் இருபது முப்பது கம்யூனிஸ்ட்டு தேருவாய்ங்க!.
தான் ஒரு சாமானியன் என்று கதை அளந்த மோடி எஸ்ஆர்எம் பலகலைக்கழகத்திற்கு தனி விமானத்தில் வந்து போயிருகிறார். பூஷ்வாக்களின் நாயகன் என்ற முகமூடிதான் மோடிக்கு சரியாக பொருந்துகிறது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு பல கோடி ரூபாய்களை வாரி இறைத்து இருக்கிறது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்.
தாங்கள் கூட்டணி வைக்கும் அளவிற்கு பச்சமுத்துவின் IJK ஒன்றும் பெரிய கட்சியல்ல என்ற முணுமுணுப்பு பாஜகாவில் இப்போதே தோன்றிவிட்டது.
இரண்டு தவணையில் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்த பாஜக இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை, என்பது நிதர்சனம். தனக்கு கிடைக்க இருக்கும் ஒரு வாய்ப்பை பறிகொடுக்கவே பாஜக இம்முறையும் முயலுகிறது. பாஜகவின் செயல்பாடுகளை பார்த்தால், ஏதோ.... இப்பவே மோடி பிரதமாராகிவிட்டார் என்ற கனவில் மிதப்பதாகவேப்படுகிறது.
தாமறை கட்சிக்காரர்களே கொஞ்சம் சுய நினைவுக்கு வாங்க...... இல்லென நீங்க அபிட்டுதான்.
6 கருத்துகள்:
சுய நினைவிற்கு வருகிறார்களா எனறு பார்க்க வேண்டும்
என்ன நண்பரே, முழுநீள அரசியல்வாதியாகப் போகிறீர்களா?
'பாஜகவின் செயல்பாடுகளை பார்த்தால், ஏதோ... இப்பவே மோடி பிரதமாராகிவிட்டார் என்ற கனவில் மிதப்பதாகவே படுகிறது' - சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் பலூன் உடைந்து சிதறும் மக்களுக்கு இதை உணர்த்த வேண்டிய நேரமிது. தொடர்வோம். நன்றி
@கரந்தை ஜெயக்குமார்.
சுய நினைவு வந்தால் பிழைத்துக் கொள்வார்கள் அய்யா.
@Chellappa Yagyaswamy இல்ல சார், ரெண்டு நாள் பாஜக அலுவலகத்தில் இருந்ததால் எழுத நேரிட்டது.
@நா.முத்துநிலவன்.
மிக்க நன்றி அய்யா!. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல வேடிக்கைகளை நாம் பார்க்கலாம்.
கருத்துரையிடுக