வியாழன், டிசம்பர் 25, 2014

பாரதிராஜாவை மறக்கலாமா......?!

 
 எழுத்தாளர் சுரா
 
 
தமிழ் திரைப்பட உலகை தங்களுடைய அபார திறமையால் வளர்த்த இயக்குநர்களைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.அப்போது என் மனதில் திரும்ப திரும்ப வலம் வந்தவர் பாரதிராஜா.

தான் இயக்கிய படங்களின் மூலம் தமிழ் படவுலகிற்கு பாரதிராஜா எவ்வளவு புகழையும்,பெருமையையும் சேர்த்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது,எனக்கு அவர் மீது அளவற்ற மரியாதை உண்டாகிறது.

என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது.

     1977 ஆம் ஆண்டு...அப்போது நான் என் பட்டப் படிப்பை முடித்திருக்கிறேன்.அந்தச் சமயத்தில்தான் பாரதிராஜா இயக்கிய முதல் படமான 'பதினாறு வயதினிலே' திரைக்கு வருகிறது.கமல்,ஸ்ரீதேவி இணைந்து நடித்த அப்படத்தில் வில்லனாக நடித்தவர் ரஜினி.படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.இசையமைத்தவர் இளையராஜா.சப்பாணியாக கமல் நடித்திருந்தார்.பரட்டையாக ரஜினி.மயிலாக ஸ்றீதேவி.படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.எங்கு பார்த்தாலும் அந்தப் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசினார்கள்.பத்திரிகைகள் அப்படத்தை தலையில் வைத்துக் கொண்டாடின.'யார் இந்த பாரதிராஜா?எங்கிருந்து இப்படியொரு திறமைசாலி படவுலகிற்கு வந்தார்?'என்று ஆச்சரியப்பட்டு எழுதின.இவற்றையெல்லாம் படித்து விட்டு, நான் படம் பார்க்கச் சென்றேன்.உண்மையிலேயே நான் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன்.இதுவரை தமிழில் பார்த்திராத ஒரு புது வகை சினிமா ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.உண்மையான கிராமத்தை படத்தில் பார்த்தேன்.இளையராஜா படத்தில் ஆட்சி புரிந்திருந்தார்.பாடல்கள் அத்தனையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.நிவாஸ் ஒளிப்பதிவில் தன் திறமை அத்தனையும் வெளிப்படுத்தியிருந்தார்.நடிகர்களும்,நடிகைகளும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள்.மிகச் சிறப்பாக திரைக்கதை அமைத்து புதுமையான பாணியில் படத்தை இயக்கியிருந்தார் பாரதிராஜா.படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் உள்ளங்களிலும் பாரதிராஜா நிறைந்து நின்றிருந்தார்.என் உள்ளத்திலும்தான்.தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலை வீச ஆரம்பித்து விட்டது,ஒரு புதிய அத்தியாயம் பிறந்து விட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன்.தலையை நிமிர்த்தி திரையரங்கை விட்டு வெளியே வந்தேன்.'பதினாறு வயதினிலே'திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சிறப்பாக ஓடி சாதனை புரிந்தது.25 வாரங்கள் ஓடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படம் 'கிழக்கே போகும் ரயில்'.சுதாகர் என்ற புதிய கதாநாயகனும்,ராதிகா என்ற புதிய கதாநாயகியும் அறிமுகம்.முற்றிலும் ஒரு புதிய பாணியில் படத்தை இயக்கியிருந்தார் பாரதிராஜா.அவர் நினைத்திருந்தால்,கமல் அல்லது ரஜினியை வைத்தே தன் அடுத்த படத்தையும் இயக்கியிருக்கலாம்.அப்படிச் செய்யாமல் தன்னுடைய திறமையை முழுமையாக நம்பி,புதுமுகங்களை வைத்து படத்தை இயக்கிய பாரதிராஜாவை எனக்கு மிகவும் பிடித்தது.இளையராஜா கோவில்மணி ஓசைதனை,மாஞ்சோலை கிளிதானோ,பூவரசம்பூ பூத்தாச்சு ஆகிய பாடல்களின் மூலம் அந்த படத்தை எங்கோ கொண்டு சென்றிருந்தார்.நிவாஸ் ஒளிப்பதிவில் முத்திரை பதித்திருந்தார்.கிராமத்தில் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி கதாநாயகனை முதல் தடவையாக நான் தியேட்டரில் பார்த்தேன்.அவன் சென்னைக்கு புறப்பட்டு வந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரப் போவதை,அந்த கிராமத்தின் வழியே வரும் புகை வண்டியின் பின் புறத்தில் 'நம் வாழ்க்கையில் வசந்தம் பிறந்தது' என்று எழுதி அனுப்புவான்.அதைப் பார்த்து பரஞ்சோதியின் காதலியான பாஞ்சாலி 'பூவரசம்பூ பூத்தாச்சு'என்று குதூகலித்து பாட்டு பாடுவாள்!என்ன உயர்ந்த கற்பனை!மதுரை கல்பனா திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனமும் ராதிகாவுடன் சேர்ந்து துள்ளி குதித்தது.அவருடன் சேர்ந்து நானும் ஆனந்த நடனம் ஆடினேன்.அதில் இருந்த 'பட்டாளத்தான்' கதாபாத்திரம் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்தது.

கிராமத்து மனிதர்களின் முகத்தில் கரியைப் பூசி விட்டு,கிழக்கே போகும் ரயிலில் ஏறி தப்பித்துச் செல்லும் அந்த இளம் காதல் ஜோடிகளை படம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களும் வாழ்த்தின.காதலர்களை வாழ வைத்த பாரதிராஜாவையும்.

அந்தப் படம் சென்னை தேவி காம்ப்ளெக்ஸில் 50 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது.
கிராமிய பாணி படங்கள் மட்டும்தானா,தன்னால் நகரத்து பின்னணியில் ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழ் படத்தை இயக்கவும் தெரியும் என்பதை பாரதிராஜா 'சிகப்பு ரோஜாக்கள்'படத்தை இயக்கியதன் மூலம் நிரூபித்தார்.இளையராஜா பாடல்களிலும்,பின்னணி இசையிலும் அபார சாதனை புரிந்திருந்தார்.பாரதிராஜாவிற்கு இன்னொரு வெற்றிப் படம்!
அடுத்து பாரதிராஜா இயக்கிய படம் 'புதிய வார்ப்புகள்'.கதாநாயனாக பாக்யராஜ் அறிமுகம்.கதாநாயகியாக 'லக்ஸ்'சோப் விளம்பரப் படங்களில் நடித்த ரத்தி அக்னிஹோத்ரி.ஒரு கவித்துவமான கிராமத்து காதல் கதை.கவுண்டமணி சுய உணர்வற்ற நிலையில் இருக்கும் ரத்தியின் கழுத்தில் தாலியைக் கட்டி விடுவார்.'உனக்கு இது தாலியாக இருக்கலாம்.எனக்கு இது சாதாரண கயிறு'என்று கூறி,ரத்தி அதைக் கழற்றி வீசி எறிவார்.அதற்கு முன்பு இப்படியொரு புதுமைக் காட்சியை நாம் எந்த தமிழ் படத்திலும் பார்த்தது இல்லையே!ரத்தி தாலியைக் கழற்றி விட்டெறிந்தபோது,மொத்த தியேட்டரும் கைத்தட்டி ஆரவாரித்தது.பாரதிராஜாவிற்கு எவ்வளவு பெரிய வெற்றி!இளையராஜாவின் இசையில் 'இதயம் போகுதே' ஒலித்தபோது,பாக்யராஜுடன் சேர்ந்து மக்களும் பேருந்தில் பயணித்தனர்.அந்த காதலர்களுக்காக கண்ணீர் விட்டனர்.இதுதான் உண்மை.பாரதிராஜாவிற்கு இன்னொரு வெற்றி மகுடம்!

பாரதிராஜா அடுத்து இயக்கிய படம் 'நிறம் மாறாத பூக்கள்'.அதுவும் ஒரு வெற்றிப் படமே! தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்கள்!யாரும் புரியாத சாதனை... பாரதிராஜாவின் அடுத்த படம் 'கல்லுக்குள் ஈரம்'.இயக்கம் என்று ஒளிப்பதிவாளர் நிவாஸின் பெயர் வரும்.டைரக்ஷன் மேற்பார்வை என்று பாரதிராஜாவின் பெயர் வரும்.யாரும் இதற்கு முன்பு தமிழ் படங்களில் தொடாத கதைக் கரு.ஒரு கிராமத்திற்கு படப்பிடிப்பிற்கு வரும் படப்பிடிப்பு குழு,அதைத் தொடர்ந்து அங்கு உண்டாகும் சில நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்...இதுதான் அப்படத்தின் கதை.அருணா,விஜயசாந்தி என்ற இரு புதுமுக நடிகைகள் அதில் அறிமுகம்.மாறுபட்ட கதை.எனினும்,வர்த்தக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை.பாரதிராஜாவின் கலையுலக பயணத்தில் அவருக்கு கிடைத்த முதல் தோல்வி அது!

1980ல் பாரதிராஜா இயக்கிய படம் 'நிழல்கள்'.பாரதிராஜாவிற்கும் நிவாஸுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி இருவரும் பிரிய பி.கண்ணன் ஒளிப்பதிவாளராக நுழைந்தார்.வைரமுத்து பாடல் எழுதிய முதல் படம்.வேலையில்லா திண்டாட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட கதை.ராஜசேகர்,ரவி,சந்திரசேகர்,சுவிதா,ரோகிணி-புதுமுகங்கள் என்று தோன்றாத அளவிற்கு பாத்திரங்களுக்கு உயிர தந்திருந்தனர்.இளையராஜாவின் இசையமைப்பில் இது ஒரு பொன்மாலைப் பொழுது.பூங்கதவே தாழ் திறவாய் ஆகிய பாடல்கள் தெருவெங்கும் முழங்கின.அனைத்தும் இருந்தும்,ஏதோ ஒன்று இல்லை.விளைவு-வர்த்தக ரீதியாக படம் தோல்வி.பாரதிராஜாவிற்குக் கிடைத்த இரண்டாவது தோல்வி.
அடுத்து பாரதிராஜா இயக்கிய படம் 'அலைகள் ஓய்வதில்லை'.கார்த்திக் கதாநாயகனாகவும், ராதா கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள்.தியாகராஜனும்,கமலா காமேஷும்.ஒரு முற்போக்கான காதல் கதை.ஒரு பிராமண இளைஞனுக்கும்,ஒரு கிறிஸ்தவ மீனவ பெண்ணுக்கிடையே மலரும் காதலை கவித்துவமாக வெளிப்படுத்தியிருந்தார் பாரதிராஜா.இளையராஜா இசை சாம்ராஜ்யமே நடத்தியிருந்தார்.அவரின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர்தான் படத்தின் தயாரிப்பாளர்.படம் சூப்பர் ஹிட்! 25 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது.அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.வெற்றி விழாவில் கலந்து கொண்டு கேடயங்களை வழங்கினார்.படத்தின் உச்சக்கட்ட காட்சியையும்,பாரதிராஜாவையும் அவர் மனம் திறந்து பாராட்டினார்.

கமல்ஹாசன்,ராதா,மாதவி,ஸ்வப்னா ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கிய க்ரைம் கதை 'டிக்...டிக்...டிக்'.கமல் சட்டையை ஸ்வப்னா மாட்டிக் கொள்ள,ஸ்வப்னாவின் ஆடையை அணிந்து கமல் இருக்க.கீழே போலீஸ் வேன் வர..அந்த ஒரு காட்சி போதும் பாரதிராஜாவின் திறமையைப் பறை சாற்றுவதற்கு!அடுத்து பாரதிராஜா இயக்கிய அருமையான படம் 'மண் வாசனை'.பாண்டியன் கதாநாயகனாகவும்,ரேவதி கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள்.உண்மையிலேயே மண் வாசனை நிறைந்த படம்தான்.இளையராஜாவின் அற்புதமான இசை!வைரமுத்துவின் வைர வரிகள்!ரேவதியின் அருமையான நடிப்பு!பாரதிராஜாவின் திறமை வாய்ந்த இயக்கம்!அனைத்தும் சேர்ந்து படத்தை வெற்றிப் படமாக ஆக்கின.அடுத்து ஏவிஎம்மின் 'புதுமைப் பெண்'.மீண்டும் பாண்டியன்-ரேவதி ஜோடி.இளையராஜாவின் இசை,வைரமுத்துவின் பாடல்கள்,பாரதிராஜாவின் சிறந்த இயக்கம் படத்தை வெற்றிப் படமாக ஆக்கின.தமிழக அரசு அந்தப் படத்திற்கு வரி விலக்கு அளித்தது.

'சங்கராபரணம்' ஓடி எங்கு பார்த்தாலும் அப்படத்தின் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த நேரம்.அதேபோல கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் தந்து ஒரு படத்தை இயக்கினால் என்ன என்று நினைத்த பாரதிராஜா இயக்கிய படம் 'காதல் ஓவியம்'.இளையராஜா இசையமைத்த அருமையான பாடல்களைக் கொண்ட படமது.கண்ணன் என்ற புதிய கதாநாயகன் அதில் அறிமுகம்.கதாநாயகி ராதா.இசையில் தோய்ந்த கதாநாயகனுக்கு பார்வை சக்தி இல்லை.அதற்காக காதல் வராமல் இருக்குமா?பாடல் காட்சிகளில் திரையரங்கில் கூச்சல்...குழப்பம்...விஷில்!ஏன்?பாரதிராஜாவிற்கே புரியவில்லை.கூச்சல் போடப்பட்ட பாடல் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன.ப.டம் தோல்வி!

அந்த தோல்வியால் உண்டான கோபத்தில் பாரதிராஜா இயக்கிய படம்தான் 'வாலிபமே வா வா'.ஆண் தன்மையற்ற கதாநாயகனைப் பற்றிய கதை.கதாநாயகன் கார்த்திக்.படம் பரவாயில்லாமல் ஓடியது.ஆனல்,'இந்தப் படத்தை பாரதிராஜா இயக்க வேண்டுமா?' என்ற விமர்சனம் எழுந்தது.

கே.பாக்யராஜ் கதை எழுத,பாரதிராஜா இயக்கிய படம் 'ஒரு கைதியின் டைரி'.கமல் ஹீரோ.அருமையான திரைக்கதை.விறுவிறுப்பான காட்சிகள்.கமல்,ரேவதி ஆகியோரின் அருமையான நடிப்பு படத்திற்கு சிறப்பு சேர்த்தது.ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற படமது.

ரஜினி நடித்து,பாரதிராஜா இயக்கிய 'கொடி பறக்குது' வெற்றி பெறவில்லை.
நடிப்பு மாமேதை சிவாஜி கணேசனை வைத்து பாரதிராஜா இயக்கிய 'முதல் மரியாதை' காலமெல்லாம் பாரதிராஜாவின் பெயரைக் கூறிக் கொண்டேயிருக்கும்.'பூங்காற்று திரும்புமா?' பாடலைக் கேட்கும்போதெல்லாம் சிவாஜி,பாரதிராஜா,இளையராஜா,வைரமுத்து அனைவரும் நம் நினைவில் வந்து கொண்டே இருப்பார்கள்.

பாரதிராஜாவின் குறிப்பிடத்தக்க படம் 'கடலோரக் கவிதைகள்'அவரின் துணிச்சலான முயற்சி.'வேதம் புதிது'.'வா ராசா வா'என்று சரிதா சிறுவனை வீட்டிற்குள் அழைக்கும் காட்சி மனதிலேயே நிற்கிறது.

'புது நெல்லு புது நாத்து'-பாரதிராஜா இயக்கிய இன்னொரு நல்ல படம்.'வர்ற லட்சுமியை யாருடா தடுத்து நிறுத்த முடியும்?நான் எப்பவும் நல்லதுதான் சொல்லுவேன்.நல்லதுதான் செய்வேன்.இந்த ஜனங்கதான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க' என்ற நெப்போலியனையும்,கதாநாயகன் ராகுல் தோளில் போட்டு தூக்கிக் கொண்டு போகும்போது,அவரின் முதுகை விரல்களால் வருடும் சுகன்யாவையும் எப்படி மறக்க முடியும்?

பாரதிராஜாவை புகழ் குன்றின் உச்சியில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்த படம் 'கிழக்குச் சீமையிலே'.விஜயகுமார்,ராதிகா,நெப்போலியன் மூவரும் கதாபாத்திரங்களாகவே அதில் வாழ்ந்திருந்தார்கள்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தென் கிழக்குச் சீமையிலே,மானூத்து மந்தையிலே,ஆத்தங்கரை மரமே ஆகிய பாடல்கள் இப்போதும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றனவே!

வித்தியாசமான கதை என்று இயக்கிய 'என் உயிர் தோழன்'..தேசிய விருதுகள் பெற்ற 'கருத்தம்மா'...'அந்தி மந்தாரை'...'கடல் பூக்கள்'...மாறுபட்ட முயற்சியான 'கேப்டன் மகள்'...சிவாஜி நடித்த 'பசும்பொன்'..ஏ.ஆர்.ரஹ்மானின் இனிய பாடல்களைக் கொண்ட 'தாஜ்மஹால்'...ஆங்கிலேயர் காலத்து காதல் கதையான 'நாடோடித் தென்றல்'...எதிர் பார்த்த வெற்றியைப் பெறாமல் போன 'அன்னக்கொடி'...விஜயகாந்த் நடித்த 'தமிழ்செல்வன் ஐ.ஏ.எஸ்...நல்ல முயற்சியான 'கண்களால் கைது செய்'....அருமையான படமான 'பொம்மலாட்டம்'...இப்படி பாரதிராஜாவின் சாதனைகளையும்,பெருமைகளையும் கூறிக் கொண்டே போகலாம்.

இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்,யாரும் படத்தை இயக்கலாம்,யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்ற சூழ்நிலை உண்டாகி,கூட்டம் கூட்டமாக ஆட்கள் வெளியூர்களிலிருந்து தினமும் படவுலகைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்...அவர்கள் பாரதிராஜாவிற்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.அவர்தான் கோட்டைகளைத் தகர்த்தெறிந்து இந்த அருமையான சூழ்நிலையை உண்டாக்கிய மாமனிதர்.அவர் போட்ட பாதையில்தான் இன்று எல்லோரும் சந்தோஷமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.பாதை போட்டவரை மறக்கலாமா?
 
(எழுத்தாளர் சுரா  தனது முக நூலில் எழுதிய கட்டுரை! )

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பாரதிராஜா பற்றிய அருமையான திறனாய்வுக் கட்டுரை
பகிர்ந்தமைக்கு
நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கட்டுரை அருமை...

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...