திங்கள், நவம்பர் 16, 2015

இது லா.ச.ரா நூற்றாண்டு!.


                ந்த நூற்றாண்டின் சொல்லாடல் மிக்க எழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு இது.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916 - அக்டோபர் 30ம் தேதி தமிழ் நாட்டில், லால்குடியில் பிறந்தார்.  200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளர்.  

தினமணி கதிரில் நான் எழுதிய  கட்டுரை!.
தனது 17வது வயதில் இருந்து எழுத தொடங்கிவிட்ட லா.ச.ரா தமிழின் தவிற்க முடியாத தனித்துவமிக்க எழுத்தாளர். தனது கவித்துவமான எழுத்து நடையில், புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தனது எழுத்தில் வாரி இறைத்தார். புரிந்தவன் புத்திசாலி, புரியாதவன் அபாயக்கசாலி என்ற பேதத்தின் அடிப்படையில் அவரது எழுத்துகள் துலாக்கோலில் அளவிட முடியாதவையாக இருந்தன.

1989ல் 'சிந்தா நதி' கட்டுரை தொகுப்பிற்காக லா.ச.ராவிற்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.  தினமணி கதிரில் வாரம் இரண்டு பக்கங்கள் எழுத சொன்ன போது முதலில் மறுத்த லா.ச.ரா பின்னர் ஒப்புக்கொண்டு எழுத தொடங்கினார். சிந்தா நதி 48 வாரங்கள்  தினமணி கதிரில் அலைகடலென புரண்டு மோதியது.  அதன் பிரவாகத்தில் காடுகள், மலைகள், நகரங்கள், மனிதர்கள், உணர்வுகள்,  என்று  பூமிக்கு மேல் உள்ள அனைத்தையும் இழுத்து சென்றது. இன்றளவும் இணையதள எழுத்துகளுக்கு 'சிந்தா நதி'யே முன் நதி, மூத்த நதி!.  கட்டுரையை கதை போலவும், கதையை கட்டுரை போலவும் சொல்லும் உத்தியை அவர் சிந்தா நதி முழுவதும் படரவிட்டிருந்தார். அதன் படிமங்களே இன்றும் ஆழமாய் படிந்துக் கிடக்கிறது. எல்லாம் அவரிடத்தில் இருந்து பெறப்பட்ட ஒன்ற!. லா.ச.ராவின் எழுத்துகள் புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தரவல்லவை!

சிந்தா நதியில் 'சொல்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

'பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன்மையை அதனதன் ஓசையினின்று தவிர்த்து? அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஓவியங்கள் பயக்கும் மயக்கும். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும்.

பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக்...

தருக்களின் இலைகளினூடே, காற்றின் உஸ்!...

அந்தி வேளையில் விண்மீன்கள் ஜரிகை கட்டிய இருள் படுதாவின் படபடப்பு.

நட்சத்திரங்கள் போன்று மின்னும் எழுத்துகள் நம்மை விட்டு விலகியே இருக்க விரும்புகின்றன. அவை கைகளுக்குள் தட்டுப்படாதவரைக்கும்தானே அவை நட்சத்திரங்கள்?!.

ரசிக்கத்தக்க அளவீடுகளில் அவரது பாணி எழுத்துகள் பிரிதொருவர் தொடராவண்ணமே இருக்கின்றன.

"என் எழுத்துகள் புரியவில்லை என்கிறார்கள். 'புரிந்தது புரியாதது இவை இரண்டுமே தற்காலிக நிலைகள். இன்றைக்கு புரியாவிட்டால் நாளைக்கு புரிகிறது. இல்லாவிட்டால் நாளைமறுநாள். அட, கடைசிவரை புரியாவிட்டால்தான் என்ன ? இருந்து விட்டுப் போகட்டுமே எழுதுபவனுக்கே எல்லாம் புரிந்து விடுகிறதா என்ன?' புரிவதைக்காட்டிலும் வாசகன் உணரக்கூடியது, உணர வேண்டியது விஷயத்தில் தாக்குதல் அந்த முதல் பாதிப்பு Impression, Impact ரத்தத்துடன் கலந்து உள்ளத்தில் ரஸாயணம் நிகழ்வது.

நான் ஜனரஞ்சகமான எழுத்தளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு அப்படியே, அதனாலயே பிரபலமாகிவிட்டவன். ஏதாவது புரியும் படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்துவிட்டது என்று என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்துவிடுவார்கள். இரண்டு மூன்று பேர் சொல்லிவிட்டார்கள் எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடில்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்?".

லா.ச.ராவின் எழுத்துகள் ஆத்ம சுத்திகரிப்பை செய்யக் கூடிய மந்திரத்தை பெற்று இருக்கிறது. கதைகளின் தோதான இடங்களில் அதை அவர் படைத்துவிடுகிறார். தனது முதல் கதையான ஜனனியில் இவ்வாறு எழுதுகிறார் "தேவி, நீ இதை அறிய வேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு. கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூட பயப்படுகிறது."

மானுடத்தின் மீதான விடுதலையை இதைவிட எளிதான புரிதலில் யாரும் சொல்லிவிட முடியாது. அகப்பட்டுக்கொண்ட எலி போன்ற அவஸ்த்தையை பெற்ற பிறகே விடுதலைக்கான வாசலை அடைகிறோம். ஆனால் அந்த கதவு ஏற்கனவே திருந்துதான் இருக்கிறது என்பதை உணராமலேயே காலம் நம்மை கடத்திவிடுகிறது.

லா.ச.ரா முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கினார். பாபுஜி (Babuji) என்ற கதை Short Story என்ற பத்திரிகையில்  1934ல் வெளிவந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் யானைக்கு மதம் பிடிப்பது பற்றிய கதை அது!. அதைத் தொடர்ந்து அவரை தமிழ் முழுவதுமாய் சுவிகரித்துக் கொண்டது.  அவரை பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே பலமுறை எழுத அவர் தயங்கியதே இல்லை. அலுத்துக் கொள்வதுமில்லை. பல சிறுகதைகள் அவரது அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன் நினைவை பழக்கிக்கொண்டவர் . அவர் கதை எழுத உட்கார்ந்ததில்லை. கதை மனதில் உட்கார ஆரம்பிக்கும்போது எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக் கொள்ளும் போது அதன் உருவத்தை எழுத்தாக்கினார் என்று நினைவு கூறுகிறார் லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி.

நன்றி தினமணி கதிர். 
15.11.2015.

 ()()()()()

இனி லா.ச.ரா நூற்றாண்டு விழா தொகுப்பு...

விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா உரையாற்றுகிறார்.
அருகில் இடமிருந்து: லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி, கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன், விமர்சகர் முருகேச பாண்டியன்.  (Pix courtesy: Charuonline.com)


        ழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், அண்மையில்  நடைபெற்றது.  டிஸ்கவரி புத்தக நிலையம் இன் நூற்றாண்டு விழாவினை முன்னெடுத்து நடத்தியது. பத்திரிகைகள் அல்லது பெரிய அமைப்புகள் செய்ய பணியை டிஸ்கவரி வேடியப்பன் செய்திருப்பது பாராட்டுக்குறியது. 


நூற்றாண்டு விழாவில் லா.ச.ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை லா.சா.ராவின் புதல்வர் சப்தரிஷி வெளியீட லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி லா.ச.ரா  பெற்றுக் கொண்டார்.  383 பக்கங்களை கொண்ட நேர்த்தியான இத் தொகுப்பு புதிய வாசகர்களை தன் பக்கம் இழுக்கும் சக்தி கொண்டது.  டிஸ்கவரி தனக்கான புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

"லா.ச.ராவை வாசிக்குபோதெல்லாம் புத்தகத்தின் பக்கங்களில் அடிக் கோடிட்டு குறித்துக் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தளவிற்கு வாசகனின்று விட்டு விலகாத எழுத்து அவருடையது' என்றார் எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது சிறப்புரையில்.

கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார்.  அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், விமர்சகர் முருகேச பாண்டியன் மற்றும் பேராசிரியர் ராமகுருநாதன் ஆகியோர் லா.ச.ராவைப் பற்றி  நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சிகளை கவிஞர் அகரமுதல்வன் தொகுத்து வழங்கினார். லா.ச.ராவின் நூற்றாண்டு விழாவினை கணையாழி, டிஸ்கவரி புக் பேலஸ், ஆம்பல், யாவரும் டாட் காம் ஆகியன ஒருங்கிணைந்து நடத்தின.

6 கருத்துகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

லா. ச. ரா. அவர்களின் எழுத்தியல்புகளின் தன்மையை அழகாக விளக்கினீர்கள்.

நூற்றாண்டு விழா எடுத்தவர்களுக்கு, என் பாராட்டுகள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

லா.ச.ரா பற்றி அறியாத செய்திகள் பல அறிந்தேன்
நன்றி ஐயா

இராய செல்லப்பா சொன்னது…

லா சா ரா அவர்கள் சாகித்ய அக்காதெமி விருது பெற டில்லி வந்தபோது நான் தில்லியில்தான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவரோடு ஒரு நாள் முழுதாகக் கழித்தேன். அவரை அகில இந்திய வானொலிக்கும் பிறகு அவரது எழுத்துக்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஓர் அம்மையாரின் இல்லத்திற்கும் அழைத்துச் செல்லும் இனிய பணி எனக்குக் கிடைத்தது. அச்சமயம் தன் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பலவற்றை அவர் வயது வித்தியாசமின்றி என்னோடு பகிர்ந்து கொண்டார். நானும் அவரைப் போலவே வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்த காரணத்தால் என்னோடு அவர் எளிதாக நெருங்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். மறக்க முடியாத மாமனிதர் அவர். - இராய செல்லப்பா

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…


@அ. முஹம்மது நிஜாமுத்தீன்

மிக்க நன்றி !

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…


@கரந்தை ஜெயக்குமார்,
மிக்க நன்றி அய்யா !

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…


@Chellappa Yagyaswamy,

பிரிதொரு தருணத்தில் அதை பதைப் பற்றி விரிவாக எழுதுங்கள் சார்.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...