திங்கள், ஜூலை 04, 2016

மாசிலாமணி சாரும் சில ரேடியோ நினைவுகளும்...




          மாசிலாமணி சாரைப் பார்த்து 30 வருடத்திற்கு மேல் இருக்கும். சாரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. நான் 6 வது 7 வது படிக்கும் போது சார்தான் உடற்கல்வி ஆசிரியர் (P.T Master). எப்படியோ கடந்த மாதத்தில் ஒரு நாள் அவரை சந்தித்துவிட்டேன். இவ்வளவிற்கும் திருவாலங்காட்டிலிருந்து ஆடுதுறை இதோ கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது. அப்படி இருந்தும் சாரை சந்திக்க 30 வருடம் தேவைபட்டிருக்கிறது.

மாசிலாமணி சார்
மாசிலாமணி சார்; ஆடுதுறை குமர குருபர சுவாமிகள் மேல் நிலைப் பள்ளியின் (Sri KGS Hr.Sec School Aduthurai) உடற் கல்வி ஆசிரியர். நான் ஆறாவதிலிருந்து பத்தாவது வரைக்கும் ஆடுதுறை கேஜிஎஸில்தான் படித்தேன். திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் கடைசி மகன் அன்பழகன் எனது கிளாஸ்மேட்!.

உடற்கல்வி ஆசிரியர்கள் பெரும்பாலும் ஸ்போர்ட்ஸில் மட்டும்தான் ஆர்வமாய் இருப்பார்கள். பைன் ஆர்ட்ஸ் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க மாட்டார்கள். சார் அதில் விதிவிலக்கு. பேச்சு போட்டி, நாடகம், ஆடல், பாடல், என்று ஃபைன் ஆர்ட்ஸ் முழுவதும் அவர்தான் ராஜா!. தற்போது பணி நிறைவுப் பெற்று வீட்டில் இருக்கிறார். 

சாருடன் நான்


ஆடுதுறை வீர சோழன் ஆறு பாலம் தாண்டியதும் இடது புரத்தில், சாத்தனூர் போகும் சாலையில் சாருடைய வீடு இருக்கிறது. நல்ல பிரமாண்டமான பழையகாலத்து வீடு. நான் சந்திக்கச் சென்ற போது, நெற்றி நிறைய விபூதியோடு இருந்தார். என்னை அறிமுகம் செய்து கொண்டு, காலை தொட்டு கும்பிட்டேன். முப்பது வருடங்கள் கழித்து ஒரு மாணவன் தன்னை தேடி வந்திருக்கிறான் என்று ரொம்ப சந்தோஷப்பட்டார்.

()()()()

திருச்சி வானோலி நிலையத்தில் எங்கள் பள்ளியின் சார்பாக 'விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கும் ஃபாக்டீரியாக்கள்' பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடாயிருந்தது. பேச்சுப் போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவன் என்பதால், கலந்துரையாடலில் பேச எனக்கும் வாய்ப்புக்கிடைத்தது. ஒரு தாத்தா அவரது பேரன், ஒரு கல்லூரி பேராசிரியர். மூன்று பேர்தான் கலந்துரையாடலில் பாத்திரங்கள். எனக்கு தாத்தா வேடம் கிடைத்தது. புரபுசர் வேடத்தில் இருக்கும் மாணவன் பாக்ட்டீரியாக்கள் பற்றி விரிவாக தெளிவாக கூற வேண்டும். எழுத்து இயக்கம் எல்லாம் மாசிலாமணி சார்தான். இதற்காக ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தகவல்களை பெற்று கலந்துரையாடலில் சேர்த்திருந்தார். எங்கள் பகுதி முழுவதும் நெல் விளையும் பூமி என்பதால் விவசாயத்திற்கே முன்னுரிமை!. பின்ன தமிழகத்தின் நெற்களஞ்சியமாச்சே எங்கள் தஞ்சை மாவட்டம்!.

இரண்டு மூன்று நாட்களாக கலந்துரையாடலை ரிகர்சல் பார்த்துவிட்டோம். அடுத்த நாள் காலையில் திருச்சிக்கு கிளம்ப வேண்டும் என்பதால், முதல் நாள் இரவே சார் வீட்டிற்கு வந்துவிட்டோம்,. கலந்துரையாடலை டேப்பில் ரிக்கார்டரில் பதிவு செய்து பார்த்தால்தான் எவ்வளவு நேரம் ஓடுகிறது என்று தெரியும். அதைவைத்தே கலந்துரையாடலின் நேரத்தை கூட்டவோ குறைக்கவோ முடியும்.

கலந்துரையாடலை கேசட்டில் பதிவு செய்து, ரிக்கார்டரில் போட்டுக் கேட்டதில், எனது வாய்ஸ் தாத்தா வேடத்திற்கு பொருந்தவில்லை. தெளிவாக உச்சிரிப்பு பிழையின்றி, பெரிய ஆள் குரல் போல் கேட்டது. அப்போது நான் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டு இருந்ததாக ஞாபகம். புரபுசர் கேரக்டருக்கு வாய்ஸ் தந்தவனின் குரல் அந்த பத்திரத்திற்கு ஏற்றார் போல் இல்லை. உடனே என்னை புரபசர் கேரக்ட்டருக்கும், அந்த பையனை தாத்தா வேடத்திற்கும் மாற்றினார். இரவு நெடுநேரம் எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும் என்று சார் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

அன் நாட்களில் தமிழகத்தில் உள்ள ரேடியோ நிலையங்களில் திருச்சி வானொலி நிலையம் பிரசித்திப் பெற்ற வானொலி நிலையமாக திகழ்ந்தது. தனது விதவிதமான நிகழ்ச்சிகளால் திருச்சி வானோலி நிலையம் ஒரு முன்னணி நிலையமாக இருந்தது. அதன் நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்று சொல்லாம். துகிலி சுப்ரமணியம், கமலா அம்மாள் போன்றவர்கள் தங்களது நாவன்மை மிக்க பேச்சால் அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பிரபலமான மனிதர்களாக இருந்தனர்.

"அன்பார்ந்த விவசாய பணியாளர்களே...ஆய்வு மன்ற அமைப்பாளர்களே..., நடப்பு சம்பா பருவத்தில் குவிண்டாலுக்கு......" என்று விவசாயம் தொடர்பான அறிவிப்புகளை காலையில் அரைத் தூக்கத்தில் கேட்கும் சுகம் இருக்கிறதே அது மீண்டும் கிடைக்காத ஒன்று!. அந்த அறிவிப்புகளில் நிறைய புதுமைகளை அன்று புகுத்தியிருந்தனர். சர் சர்ரென்று டீ ஆற்றும் சத்தம், டீயைய் உறிஞ்சு குடிக்கும் சத்தம் போன்ற சவுண்ட் எஃபக்கெட்டுகளை போட்டு ஏதோ இருவர் டீ கடையில் அமர்ந்து விவசாயம் தொடர்பாக பேசுவது போல் அந்த நிகழ்ச்சிகள் தத்துருபமாக இருக்கும். மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி அது!.

இப்படி பேரு பெற்ற வானொலி நிலையத்தில் மகன் பேசுகிறான் என்றால் என் அப்பா விடுவாரா....? சொந்தக்காரர்களுக்கு கார்டு போட்டு சொல்லிவிடுவார். "பாபு இத்தானாம் தேதி திருச்சி ரேடியோவில் மாலை 6.5 மணிக்கு கிராம சமுதாயம் நிகழ்ச்சியில்' பேசுகிறான் என்று. அந்த வயதில் ரேடியோவில் பேசுவது என்பது இன்று டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது போன்றது. நான் ஒரு மூண்று முறை ரேடியோவில் பேசியிருப்பேன்.

திருச்சி வானொலி நிலையம் எப்போதும் ஒரு பிரமிப்பைத் தரும்.  குண்டுசி கீழே விழுந்தால் கூட கேட்கும் துள்ளியமான பிரத்யேகமான அறைகள், வித்தியாசமான மைக்குகள், நிகழ்ச்சி பதிவு அறைகளில் ஓட்டை ஓட்டையாய் அட்டைகள் பொறுத்தப்பட்ட சவுண்ட் புருஃப் சுவர்கள் என்று வானொலி நிலையமே ஒரு மாய விஞ்ஞான உலகம் போன்று காட்சி அளிக்கும். ரவுண்டு மேஜையில் நடுவே மைக் பொருத்தியிருப்பார்கள். சுற்றி அமர்ந்துக் கொண்டு இயல்பாக பேச வேண்டும். பேச்சை பதிவு செய்யும் போது ஒன் டூ திரி சொல்லி கையை உயர்த்துவார்கள். பேச ஆரம்பிப்பதற்குள் எங்களது இதயம் உச்சபச்ச வேகத்தில் அடித்துக் கொள்ளும்!. அந்த வயதில் அதெல்லாம் ஒரு மிரட்சியான தருணங்கள்!.

பேசி முடித்தப்பின் திருச்சி சென்ட்ரல் பஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும் நல்லதொரு ஹோட்டலில் சுவையான மதியம் உணவு சார் வாங்கிக் கொடுத்துவிடுவார். சில நேரங்களில் சோனா மீனா தியேட்டரில் படம் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாசிலாமணி சார் பத்திரமாய் அழைத்துக் கொண்டு போய் அழைத்துவந்துவிடுவார். தனது குழந்தைகள் போன்றே எங்களை கவனித்துக் கொள்வார்.

()()()

இப்படித்தான் ஒரு டிராமாவில் எனக்கு வேலைக்காரன் வேடம். அதுவும் முட்டாள் வேலைக்காரன் வேடம், எது சொன்னாலும் ஏறுக்கு மாறுதான். வீட்டு முதலாளி கடிகாரத்திற்கு சாவி கொடுடா என்றால் சாவியை கடிகாரத்திற்கு முன்னால் நீட்டி "இந்தா கடிகாரம்..... சாவியை வாங்கிக்க...." என்று கெஞ்சுவதும், வீட்டு ஹாலில் சேரை போடுடா என்று வீட்டும்மா சொல்ல.... வீடு முழுவதும் சேற்றை தெளிப்பதுமாக எனது அட்ராசிட்டி தொடரும். இந்த டிராமா ரிகர்சலில் மாசிலாமணி சார் என் மேல் உட்கார்ந்து அமுக்குவது போல் நடித்துக் காட்டினார் அப்போது அவரது பேண்ட் கிழிந்துவிட்டது. வாத்தியார் பேண்ட் கிழிஞ்சுட்டுதுடான்னு பசங்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு!.

பத்தாம் வகுப்பில் நான் கோட் அடிக்க.... பின்னர் எப்படியோ பாஸ் செய்து, பதினோராம் வகுப்பு குத்தாலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் சேர்ந்திட்டேன். பத்தாவதில் கிடைத்த பாடம் என்னை பன்னிரண்டாவதில் பெயிலாகாமல் பாஸ் செய்ய வைத்தது. அதற்குப் பிறகான தொடர்புகள் குத்தாலம் மாயவரம் பக்கமே அமைய ஆடுதுறை பக்கம் செல்வது முற்றிலும் தடைபட்டுவிட்டது. ஆனால் மாசிலாமணி சாரை பார்க்க வேண்டும், என்ற எண்ணம் மட்டும் மனதில் ஒரு ஓரத்தில் இருந்துக் கொண்டே இருந்தது.

எப்படியோ அவரை பார்த்துவிட்டேன். இப்போதும் சார் சும்மா இருக்கவில்லை. ஒரு ஆர்கஸ்ட்ரா வைத்துக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அனைத்து விதமான வாத்தியக் கருவிகளை வைத்து 'நாத சங்கமம்' நடத்தி அப்ளாஸ் அள்ளுகிறார். கோயில் திருப்பணிகளையும் செய்து வருகிறார். பணி ஓய்வு பெற்றுவிட்டாலும், தனக்கான ஆர்வங்களுக்கு அவர் ஓய்வு கொடுக்கவில்லை. அவரது பூஜை அறைக்கு அழைத்துக்கொண்டு போய் திருநீறு இட்டு ஆசிர்வதித்தார். ஆளுயுர சாமிப் படங்கள் ஒரு கோயில் கருவரையில் இருந்த அமைதியை தந்தன.

நடக்க நடக்க பாதை விரியும், பாதை விரிய... விரிய.... பயணம் தொடரும் என்பார்கள். நமக்கான ராஜபாட்டைகளை ஆசிரியர்களே முதலில் அமைக்கின்றனர். அமைத்ததோடு மட்டுமல்லாமல் கைப் பிடித்து நடக்கவும் கற்றுத் தருகின்றனர். வழியில் நிழல் தரும் தரு போன்று, வளரும் தளிர்களை தழைக்கச் செய்கின்றனர். நாம் கடந்துவிடுகிறோம். அவர்கள் அங்கேயே நின்று நிலைத்து விடுகின்றனர்.
நமது நெஞ்சங்களிலும்!.

-தோழன் மபா.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

முப்பது வருடங்களுக்குப் பின் தங்களின் ஆசிரியரைச் சந்தித்து இருக்கிறீர்கள்
நெகிழ்வான சந்திப்பு ஐயா
ஒரு ஆசிரியருக்குப் பெருமை சேர்ப்பதே இது போன்ற சந்திப்புகள்தான்
நன்றி ஐயா

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

மிக்க நன்றி அய்யா!.

ஆசிரியரான நீங்கள் பாராட்டுவது மிகுந்த சிறப்புடையது!.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...