தீபாவளி நேரத்தில் யார் வீட்டில் அதிகம் வெடி வெடித்திருக்கிறது என்ற போட்டி உண்டு. அதனாலேயே பால்யத்தில் வீட்டு வாசலில் வெடி வெடித்த பேப்பர் கிடக்க வேண்டும் என்பதால் அந்த சின்ன சைஸ் கம்பி கட்டு வெடியை வாங்கி நிறைய பேப்பர் சுத்தி வெடிப்போம். (பார்க்க படம்) ஒரு வெடி வெடித்தால் போதும், வீட்டு வாசலில் நூறு வெடி வெடித்தது போல் ஆகிவிடும்.
அதே நேரத்தில் இந்த கம்பி கட்டு வெடி ஆபத்தானதும் கூட.... நிறைய பேரை பதம் பார்த்திருக்கிறது. அதில் நானும் ஒருவன். தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.
பத்தாம் வகுப்பு படிக்கும் போது....
இப்படி ஒரு நசநசப்பான தீபாவளி மழை நாளில்... வாங்கி வைத்திருந்த வெடியெல்லாம் நனைந்திருந்தது. அதில் கம்பி கட்டு வெடியும் உண்டு. வீட்டில் அப்பாவுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த பரீட்சை பேப்பரை எல்லாம் கம்பிகட்டு வெடியில் சுத்தி ஒரு பெரிய சைஸ் வெடியை தயார் செய்திருந்தேன்.
நனைந்திருந்த வெடிகளை உலர வைக்க.... வெந்நீர் அடுப்பு ஓரத்தில் வைக்கப் போக....அந்த நேரத்தில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. ஒரு நொடிதான் 'டமார்' என்ற வெடி சத்தம். எங்கே என்று சுதாரிப்பதற்குள் மொத்த பானையும் சிதறி என் இரண்டு கால்களிலும் பொத்தல் போட்டு விட்டது. உடம்பு முழுவதும் சாம்பல். பானை ஓடுகள் துப்பாக்கி குண்டுகளாய் எனது இரண்டு கால்களிலும் துளைத்து தஞ்சம் அடைந்து விட்டது. (அதனாலேயே நான் கரிகாலனாக வடுக்களோடு இன்றும் இருக்கிறேன்) ஆங்காங்கே பொத்தல் போட்டு ரத்தம் வழிய ஆரம்பித்து விட்டது. நல்ல வேளை.... அது விடியற்காலை என்பதால், வேறு யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. "என்னாச்சு" என்று பதறி ஓடி வந்த அம்மாவை வெளியே தள்ளிவிட்டு, நானும் வெளியே ஓடி வந்துவிட்டேன்.
பிறகென்ன....ஈக்களிடமிருந்து தப்பிக்க இரண்டு மாதம் கொசு வளைக்குள்தான் ஜாகை. டாக்டர் தினமும் வீட்டிற்கே வந்து, டிஞ்சர் வைத்த dressing forceps ஆல் காயத்திற்குள் சாவியை விட்டு திருகுவதுபோல் திரும்புவார். அதிலேயே பாதி உசுர் போய்விடும். இருந்தாலும் வீரனுக்கு இதெல்லாம் சகஜம் தானே! வலி வலியது.
******
அதே போல் எங்கள் பகுதியில் 'ஓலை வெடி' என்று ஒரு வெடி இருக்கிறது. இது குழந்தை வெடி ! பனை ஓலையில் வெடி மருந்து திரி வைத்து செய்வார்கள். சிறு குழந்தைகள் கூட இந்த வெடியை கையில் வைத்து வெடிக்கலாம். அந்தளவிற்கு மிக இலகுவான வெடி. கம்பி கட்டு, ஓலை வெடி போன்றவை வேறு பகுதிகளில் இருக்கிறதா என்று தெரியவில்லை?
6 கருத்துகள்:
தங்களால் இளமைக்கால நினைவலைகளுக்குள் ஒரு பயணம் செய்தேன்
நன்றி ஐயா
மிக்க நன்றி அய்யா !
மிகவும் நன்றி ஐயா.உங்களுடைய இளமைக்கால நினைவுகள் எங்கள் சிறுவயதை நினைவூட்டியது.👍
கும்பகோணத்தில் இளமைக்காலத்தில் நாங்கள் இவ்வாறான வெடியினை வெடித்துள்ளோம். அந்நாள்கள் நினைவிற்கு வந்தன.
@கலைலதா கூறியது.
தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றியும் மரியதையும் அத்தை.
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University
மிக்க நன்றி அய்யா. கும்பகோணத்தில் வசித்ததால் இந்த வெடிகளைப் பற்றிய விபரம் தங்களுக்கு தெரிந்திருக்கும்.
கருத்துரையிடுக