வெள்ளி, மே 20, 2022

'எதிர்குரல் டி.எம்.கிருஷ்ணா'

ரொம்ப நாளைக்குப் பிறகு நல்லதொரு நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. கர்நாடக இசைப் பாடகர், சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட டி.எம். கிருஷ்ணா அவர்களின் நேர்காணல்தான் அது. இந்த மாத ‘காலச்சுவடு’ (மே 2022) இதழில் வந்திருக்கிறது. பொதுவாக ஒரு மேல்தட்டு கர்நாடக இசைப் பாடகரிடம் இசையைத் தவிர்த்து என்னவிதமான கேள்வி கேட்க முடியும்? என்னவிதமாக உரையாட முடியும்? அந்த உரையாடல்கள் முழுமைக்கும் சாஸ்திரிய இசையின் மகோன்னதம் மட்டுமே நிரம்பி வழியும் அப்படிதானே? ஆனால் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் நீண்ட நேர்காணல் ...(உண்மையாகவே நீண்ட நேர்காணல்தாங்க, 13 பக்கங்கள்.) சங்கீத உலகின் மரபார்ந்த விஷயங்களையும், உயர்சாதி கட்டுமானங்களையும், விலங்கு தோல்கள் பதனிடும் மனிதர்கள் பற்றியும், விளிம்பு நிலை வாழ்வியலைக் கொண்ட, இசைக் கருவிகள் செய்யும் மக்களைப் பற்றியும் காத்திரமான உரையாடலைத் துவக்கி வைத்திருக்கிறது. வட சென்னையில் தொழிற்சாலைகளால் சாம்பல் மூடிக் கிடந்த தெருக்களையும், மாசுபடர்ந்த நீர் நிலைகளையும் உண்மை நிலவரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது இவரது ‘புறம்போக்கு’ பாடல். சபாக்களில் மட்டுமே நடத்தபட்ட இசை நிகழ்ச்சிகளை சென்னை பெசன்ட் நகர் ஊருர் ஆல்காட் குப்பத்தில் நடத்தத்தினார். பின்னர் அது ‘சென்னை கலைத் தெருவிழா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கரோனோவிற்கு முன்பாக பழவேற்காட்டில் நடைபெற்ற விழாவில் ‘அதானி துறைமுக பணிகளை’ எதிர்க்க அந்த நிகழ்ச்சி பயன்படுத்தப்பட்டது. பாடுவதோடு மட்டுமல்லாமல் இரண்டு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதிய 'Southern Music A Carnatic story' நூல் 2013 இல் வெளிவந்த போது கர்நாடக இசை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கச்சேரிகள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நூறு வருடங்களாக நிலவும் மரபை அந்தப் புத்தகம் உடைத்தது. கர்நாடக இசை மரபுக்குள்ளே சாதி ரீதியிலான, பாலின அடிப்படையிலான மாற்றங்களை கேட்பதற்கான எதிர்குரலாக அன் நூல் ஒலித்தது. கர்நாடக இசை மரபைச் சுற்றி இன்று எழுப்பப்படுகிற கேள்விகளில் அந்தப் புத்தகத்தின் பாதிப்பு இன்றும் காணமுடிகிறது. அதைத் தொடர்ந்து ‘Sebastian & Sons’ என்ற ஆங்கில நூலை எழுதினார். தஞ்சையில் தலைமுறை தலைமுறையாக மிருதங்கம் செய்யும் மக்களையும் அதற்கு மாட்டுத் தோல்களை பதனிடும் எளிய மக்களின் வாழ்வையையும் பேசியது.
‘மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்: செபாஸ்டியன் குடும்பக் கலை’ (Sebastian & Sons), ‘கர்னாடக இசையின் கதை’ (Southern Music A Carnatic story (2013), ஆகிய இரு ஆங்கில நூல்களையும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். காலச்சுவடில் டி.எம். கிருஷ்ணாவுடனான இந்த நீண்ட உரையாடலையும் அவரே மேற்கொண்டு இருக்கிறார். இந்தப் புத்தகத்தின் வாயிலாக வெற்றி ஒரு பக்கம் என்றாலும், பெரும் பின்னடைவையும் டி.எம். கிருஷ்ணா அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. "அந்த வட்டத்திற்கு வெளியிலிருந்து யாரேனும் எழுதியிருந்தால் இந்த விளைவு இருந்திருக்காது. அவர்களுக்குள் ஒருவனே இப்படி எழுதிவிட்டதைதான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" இசைத்துறையில் என்னுடன் பணிபுரிந்தவர்கள் சிலருடனான உறவு முதல் புத்தகம் வந்தப்பிறகு கடினமாகத் தொடங்கியது. செபாஸ்டின் அண்ட் சன்ஸ் புத்தகம் வந்த பின்பு உறவு முற்றிலும் விட்டுப்போனது. அதன் பிறகே எனது சிந்தனைகள் பிறருக்கு புரிய ஆரம்பித்தது. நிறைய பேர் சண்டை போட ஆரம்பித்தர்கள். இப்பொது பழகிவிட்டது. என்கிறார் டி.எம்.கே. சமூக செயல்பாட்டிற்காக டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு மகசேசே விருது வழங்கப்பட்டது. 'பிராமணிய ஆதிக்கத்திலிருக்கும் கர்நாடக இசையுலகில் சாதி, வர்க்கத் தடைகளைத் தகர்த்து, சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இசை சென்று சேர வேண்டும் என்பதற்காக அவர் காட்டும் வலிமையான ஆற்றலுக்கான அர்ப்பணிப்புக்காக 'மகசேசே விருது' இவருக்கு வழங்கப்பட்டது என்று குறிப்பு வழங்கியது ‘ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை’. நேர்காணலில் மறைமுகமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூட எந்தவித மழுப்பலும் இல்லாமல் நேரிடையான பதிலைத் தந்திருக்கிறார். அவை மிக விஸ்தாரமாகவும், வாசகனை உடனே சென்றடையக்கூடியதாகவும் இருந்தது. உள்ளார்ந்த துணிவுடன் அவர் கேள்விகளை எதிர்கொண்ட விதமே அவரை ஒரு களப்போராளியாக காண்பித்தது. ஒரு கர்நாடக இசை ஜாம்பவானிடமிருந்து இப்படியான சமூகம் சார்ந்த உரையாடல்கள் புதிது. அதை செய்திருக்கிறார் கர்னாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா. -மபா 19.05.2022 #TMKrishna #கர்நாடகஇசை

கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...