திங்கள், மே 25, 2020

வேலைக்கு போவதற்காக வாழ்கிறோமா...?

(கீற்று இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 2020 மாதத்தில் வந்த எனது கட்டுரையின் திருத்திய மீள் பதிவு)
'வாழ்வதே வேலைக்கு போவதற்காகத்தான்' என்ற பெரும்பாலான இந்தியர்களின் பொதுப் புத்திக்கு இயற்கை கட்டாய ஓய்வளித்திருக்கிறது. இப்படி 2 மாதங்கள் மொத்தமாய் வீட்டில் முடங்குவது என்பதெல்லாம் அவர்கள் நினைத்திடாத ஒன்று!

இரண்டு நாள் லீவு கேட்க... நாம் படும் பாடு இருக்கிறதே.. அப்பப்பா சொல்லி மாளாது. தலை சொறிய வேண்டும், குரல் கம்ம வேண்டும், மேனேஜரின் மனநிலை பார்த்து விடுப்பு சொல்ல வேண்டும். அப்படியே எடுத்தாலும் சில சமயம் லாஸ் ஆப் பே வந்து விடும். வாங்கும் சம்பளத்தில் துண்டு விழும். விடுப்பு எடுப்பதிலும் சொல்வதிலும் இப்படி பல இடர்பாடுகள். இந்த கரோனா வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

சென்னை ரிப்பன் பில்டிங் 
வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே ஒரு மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்றெல்லாம் இந்தியர்கள் எவரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வீடு விட்டால் வேலை, வேலை விட்டால் வீடு. வீட்டிற்கு வந்த பிறகும் வேலை பற்றிய சிந்தனை, அதற்கான மெனக்கெடல் என்று மிக மிகச் சாதாரணமான வாழ்க்கை இந்தியர்களுடையது.
தனது வாழ்வில் பெரும்பாலான நேரத்தையும் ஒப்பற்ற இளமையையும் வேலைக்காக சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள் நம்மில் பலர் உண்டு. கூலி குறைவோ, நிறைவோ... ஆனால் திருப்தியான மனநிலையில் தொழில் மற்றும் நிறுவனம் சார்ந்த ஓர் இரத்த பிணைப்பு நம்மிடம் உண்டு. வாழ்வதற்காக வேலைக்குச் சென்று பொருள் ஈட்டிய மனிதன், காலப்போக்கில் வேலைக்குச் செல்வதற்காக வாழத் தொடங்கினான். பணி மற்றும் பணியிடம் சார்ந்தே அவனது வசிப்பிடமும், வாழ்வியலும் அமைந்தது.
வரலாறுகளின் தொடக்கத்தில் ஆற்றுப் படுகைகளில் தனது வசிப்பிடங்களை அமைத்துக் கொண்ட மனிதன், தொழில் புரட்சிக்குப் பிந்தைய நாட்களில் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினான். தனது வசிப்பிடங்களை அங்கேயே அமைத்துக் கொண்டான்.
கிடைத்த நேரத்தில் வேட்டையாடி, கிடைத்த நேரத்தில் ஓய்வு எடுத்து, கிடைத்ததை உண்டு, ஓர் ஏகந்தமான சூழலில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த மனித இனத்திற்கு நாகரீக உலகம் முற்றுப்புள்ளி வைத்தது. பணி சார்ந்தே, அவன் எதையும் சிந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டான். விளைவு கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கமென்று திசைக்கொன்றாய் பிரிந்து வாழ வேண்டிய சூழல் இங்கு சர்வ சாதாரணம். கணவன் அயல் நாட்டில் வருடக் கணக்கில் பணி புரிய... மனைவி பிள்ளைகளோடு தனித்து வாழ வேண்டிய சூழலும் இங்கு சர்வ சாதாரணம்தான்.
விடியற்காலையில் 5 மணி ரயிலைப் பிடிக்க, 4 மணிக்கு எழுந்து அரக்க பரக்க குளித்து சோத்தைக் கட்டிக் கொண்டு, திருத்தணி உள் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து பாசஞ்சர் ரயிலைப் பிடித்து, சென்னை வந்து சேர சரியாக ஒன்பதரையாகும். வேலை முடிந்து அதே ஓட்டமும் நடையுமாக சென்டரல் ஸ்டேஷன் வந்து ரிட்டன் பாசஞ்சர் ரயிலைப் பிடித்து இடம் கிடைத்து, உட்கார்ந்து வீடு வந்து சேர இரவு 9 அல்லது பத்து பத்தரையாகும். இனி இரவு உணவு முடிந்து மனைவி பிள்ளைகளோடு அளவளாவி படுக்கையில் விழுந்து அரைகுறையாக தூங்கி, இதோ மீண்டும் மூணு மணிக்கு எழுந்து ஓட வேண்டும். 'ஏன் இந்தக் கஷ்டம் சென்னைக்கே வந்து விடலாமே ' என்று கேட்டால்... 'மனைவி உள்ளூரிலேயே ஆசிரியையாகப் பணி புரிகிறார். அதனால் வீடு மாற முடியாது' என்று ஒரு பதில் வரும்.
வெவ்வேறு ஊர் என்றில்லை, பணி நிமித்தமாக தினந்தோறும் நாடுவிட்டு நாடு, எல்லை தாண்டும் மனிதர்களும் இருக்கின்றனர்.

தினமும் நாடுவிட்டு நாடு எல்லை தாண்டும் மனிதர்கள்
சிங்கப்பூர் அருகில் இருக்கும் மலேஷிய நகரமான ஜோகர்பரிலிருந்து (ஜேபி) பல்லாயிரக்கணக்கான மலேஷியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) தினமும் உட்லன்ஸ் வழியாக சிங்கப்பூர் வந்து பணி புரிகின்றனர். இதற்காக பல மணி நேரம் பயணம் செய்து, தினமும் இரு நாட்டு எல்லை சோதனைச் சாவடியில் தங்களது பாஸ்போர்ட் மற்று கடவுச் சீட்டு ஆவணங்களைக் காண்பித்து குடியேற்ற ஒப்புகை பெற்று பணிக்குச் செல்கின்றனர். பின்னர் அதே நடைமுறைகளோடு பணி முடிந்து இரவு மலேஷியா திரும்புகின்றனர். பின்னர் மீண்டும் விடியற்காலையில் ஆயத்தமாகின்றனர். இப்படி திருத்தணி - சென்னை, ஜோகர்பர் - சிங்கப்பூருக்குப் பதிலாக நீங்கள் வெவ்வேறு ஊர்களைப் போட்டுக் கொள்ளலாம்.
உலகில் எல்லாமே வேலை அல்லது பணி சார்ந்தே சிந்திக்கப்படுகிறது. அதை மையமாக வைத்தே மனிதன் தனது எல்லைகளை வகுத்துக் கொண்டு நகர்கிறான். இதையே நீங்கள் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள், அவர்கள் வேலைக்கும், வாழ்தலுக்குமான எல்லைகளை மிக அழகாக வகுத்து இருப்பார்கள். மிக எளிதாக இரண்டு மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு உலகைச் சுற்றி வருவார்கள். இந்தியப் பணி சூழலில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
தொடக்கத்தில் 12 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை, 1942ம் ஆண்டு நடந்த 7வது தொழிலாளர்கள் மாநாட்டில் 8 மணி நேரமாகக் குறைத்து இந்தியத் தொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்தார் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். இல்லையென்றால் கூடுதலாக மூன்று மணி நேரம், நாக்கு தொங்க ஓடிக் கொண்டு இருக்க வேண்டும்.
இப்படி வேலையே பிரதானம், வேலையே சாஸ்வதம் என்றிருந்த நிலையில் இயற்கையே... 'நீ வீடடங்கு' என்று ஊரடங்கு உத்திரவு போட்டிருக்கிறது. உலகை அச்சுறுத்தும் கரோனா ஆட் கொல்லி வைரஸ் மின்னல் வேகத்தில் மனிதர்களை பலி கொண்டு வருகிறது. சங்கிலித் தொடராய் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவும் கரோனாவைக் கட்டுப்படுத்த, அந்த தொடர் சங்கிலியை அறுத்தெறிய வீடடங்குவதைத் தவிர வேறு மருந்தில்லை என்றாகி விட்டது.
அரசு அறிவித்த மொத்தம் 21 நாளில் இரண்டு வாரங்கள் தான் கழிந்திருக்கிறது. இன்னும் 1 வாரம் வீட்டில் இருக்க வேண்டும். இந்நிலையில் ஊரடங்கு இந்த மாதம் முழுவதும் நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்பொழுதே கண்ணைக் கட்டுதே என்று வீட்டில் நெளிய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தியா என்றில்லை உலக நாடுகளில் உள்ள மொத்த மக்களுமே வீடடங்கிக் கிடக்கின்றனர். வீட்டை விட்டு நேரம் காலமின்று அலைந்து கொண்டு இருந்த மனிதன், வீட்டில் அமர்ந்து மனைவி மக்கள் முகம் பார்த்துக் கிடக்கின்றான்.
மனிதனின் இடைவிடாத ஓட்டத்தின் மீது காலம் கரோனாவை சொடுக்கி இருக்கிறது. வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருந்த மனித இனத்திற்கு 'கட்டாயமாக வீட்டில் இரு' என்று பணிக்கப்படுவதெல்லாம் கனவிலும் கிடைக்காத ஒன்று! எக்காலத்திலும் நடவாத ஒன்று ! அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வரலாற்றைதான் நாம் வீடடங்கி எழுதிக் கொண்டிருகின்றோம். 'வேலையை விட நலமுடன் வாழ்தல் இனிது' என்பதை படித்துக் கொண்டு இருக்கின்றோம்.

சனி, மே 09, 2020

மது இல்லாமல் மனித வரலாறு இல்லை


     தமிழ் நாட்டில் அரசாங்கமே ஒயின் ஷாப் நடத்துவதால், கடந்த 20 வருடங்களாக பயமில்லாமல் குடித்துப் பழகிய தமிழனுக்கு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிக்காமல் இருப்பது பெரும் தண்டனை காலமாக இருக்கிறது போலும் ?

விளைவு...

கைகால் நடுங்க ஆரம்பித்து, ஆளாளுக்கு வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவது
எப்படி ? ஒயின் தயாரிப்பது எப்படி? என்று கூகுளில் தேட ஆரம்பித்து விட்டனர். சிலர் அடுப்பில் குக்கர் வைத்து காய்ச்சவும் தொடங்கி விட்டனர். எத்தனை விசில் அடித்தப்பின் இறக்க வேண்டும், என்று யூடூபில் கேட்கும் நிலைக்கு, நிலமை சீரியஸாய் போய் விட்டதுதான் காமெடி!

உண்மையில்.... தடுமாறாமல் நாம் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்த்தோமானால் ஒரு உண்மை புலப்படும். 'மதுவை தவிர்த்து, மனித வரலாற்றை அறிய முடியாது' என்பதுதான் அது. 'Civilisation begins with distillation' என்கின்றார் நோபல் எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர்.

இந்த உலகத்தில் மனிதன் எந்த மூலையில் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் சரி, இருந்தாலும் சரி, தனக்கான போதை பொருளை தானே தயாரித்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் அவனுக்கு இயற்கையாகவே இருக்கிறது. அந்த சூழலில் இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ அதை வைத்து சுயமாக போதை தரக் கூடிய மது பானத்தை தயாரித்துக் கொள்கிறான். மனித குல வரலாற்றில் இது தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

அரிசியிலிருந்து ஓட்கா,
முந்திரிப் பழத்திலிருந்து ஃபென்னி,
திராட்சையிலிருந்து ஒயின்,
ஆப்பிள், ஆப்ரிகாட், பீச், திராட்சை போன்ற பழங்களிலிருந்து பிராந்தி,
பார்லியிலிருந்து பீர்,
பழைய சோற்றிலிருந்து சுண்டக்கஞ்சி,
பார்லி, கோதுமை, கம்பு, சோளம் போன்ற தானியங்களிலிருந்து விஸ்கி
பதப்படுத்தப்பட்ட கரும்பு கூழிலிருந்து ரம்
பல நாள் ஊறவைத்த பழங்கள், வெல்லம், மரப்பட்டைகள் கொண்டு சாராயம்,
தென்னை, பனை, ஈச்சை மரத்திலிருந்து கள்,

என்று மனிதன், விதவிதமான மதுபானங்களை தயாரித்து பயன்படுத்தி வருகின்றான்.

பழங்களையும் தானியங்களையும் பல நாட்களுக்கு ஊற வைத்தும், நொதிக்க வைத்தும், கொதிக்க வைத்தும், பின்னர் வடிகட்டியும் போதை தரும் மது
பானங்களை உற்பத்தி செய்கிறார்கள். 'நாகரீகமும் வடித்தலும்' ஒன்றோடொன்று இணைந்தது என்கிறார் ஆதம் ரோஜர்.

நாடோடியாக அலைந்த மனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பயனாக நிலையாக ஒரு இடத்தில் வாழக் கற்றுக் கொண்டான். அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊற விட்ட போது அது புளித்தது. புளித்ததை முகர்ந்ததும் தலை கிறுகிறுத்தது. புளித்ததை கொதிக்க வைத்து குடித்ததும் போதை உச்சிக்கு ஏறியது. உலகின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகள் ஏதேச்சையாக தோன்றியது தான். போதை தரும் பானத்தையும் அப்படித்தான் கண்டுபிடித்தான். இப்படிதான் முதன் முதலில் பீர் கண்டுபிடிக்கப்பட்டது.

விஞ்ஞானிகள், தொல்லியல் வல்லுனர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கண்டுபிடிப்புகளில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட களி மண் எம்பொராக்களில் ஒயின்களின் மிச்சத்தை கண்டனர். சிரியா, மொசபோட்டோமியா, எகிப்து போன்ற நாடுகளில் நொதித்தல் வடிகட்டுதல் போன்றவை அறியப்பட்டன. உலகின் பல கண்டு பிடிப்புகளுக்கு பாதை வகுத்த, எகிப்தில்தான் முதன்முதலில் மத சடங்குகளில் ஒயின் பயன்படுத்தப்பட்டது என்கின்றது வரலாறு.

-----------------------
அமெரிக்காவில் மக்களே தங்களுக்கு தேயையான பீர் மதுபானத்தை சுயமாக தயாரித்துக் கொள்ள முடியும். அதற்கான உபகரணங்கள் அங்காடிகளில்
விற்கப்படுகின்றன. பீர் தயாரிக்க தேவையான மூல பொருட்களும் அங்காடிகளில் கிடைக்கின்றன. விருப்பமுடையவர்கள் தங்களது வீடுகளிலேயே பீரை தயாரித்து (ஹோம் மேட் பீர்) பயன்படுத்துகின்றனர்.
இன்றும் கூட சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் வசிக்கும் அயலக தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மது பானங்களை குக்கரில் வைத்து தயாரிக்கின்றனர். அதை பாட்டில்கள் அல்லது சிறு பாக்கெட்டுகளில்
அடைத்து தங்களது நெருங்கிய வட்டங்களில் விற்கவும் செய்கின்றனர். கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட அரபு நாடுகளிலேயே இப்படி என்றால் பிற நாடுகளில் கேட்கவும் வேண்டுமோ....?

இப்படி... மனிதன் சுயமாக சிந்திக்க தொடங்கிய காலத்திலிருந்தே, தனக்கான மது வகைகளை தயாரிக்க தொடங்கி விட்டான்.

 பழந்தமிழ் இலக்கியத்தில் மது பானங்கள் 

 பழந்தமிழர்கள் மதுபானங்கள் தயாரிப்பில் வளமான அறிவைக் கொண்டு இருந்தனர். அன்றைய நாட்களில் மதுபானங்கள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள்,தென்னை. பனை மற்றும் ஈச்சை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.  மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர்களில் மதுபானங்கள் அழைக்கப்பட்டன. பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில்தகவல்கள்  விரவிக்கிடக்கின்றன.

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!


- புறநானூறு   (திணை: பொதுவியல்.  துறை: கையறுநிலை)


 சிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான். அது தீர்ந்துபோன பின்னர் பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான்.  என்று அதியமான் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்து பாடுகிறார் அவ்வையார்.

அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப்  தமிழ் ஆதி இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.   காணலாம்.

வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவு வெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.

மலைத் தேனை காட்டு மூங்கில் குடுவைகளில் அடைத்து அவற்றை நாட்பட நாட்படமுதிர்விப்பார்கள். இவ்வாறு பதப்படுத்திய தேனே மென்போதை மிகுந்த 'தேக்கல் தேறல்' எனப்படும். குறவர்கள் இந்தத் தேறலைப் பருகி குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். இந்தத் தேறல் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.

நறும்பிழி செய்முறை

பழந்தமிழர்கள் 'நறும்பிழி' என்ற மதுபானத்தை அருந்தினார்கள். உச்சபச்ச போதை தரும் இந்த நறும்பிழிக்கு நல்லதொரு சைட்டிஷ் நாட்டு மீன்
குழம்புதான். தேனில் ஊறிய பலாச்சுளைப் போல கெட்டியான மீன் குழம்பில் மிதக்கும் கொழுத்த மீன் துண்டங்களும், மண் குவளைகளில் ஊற்றிய நறும்பிழியும் அன்றைய பார்ட்டிகளில் களைகட்டும் என்கின்றது பெரும்பாணாற்றுப் படை.

ஊறவைத்த அரிசியை உருளைகளில் வாயகன்ற பாத்திரங்களிலிட்டு காய வைப்பார்கள். பின்னர் இரவும் பகலும் இரு வேளைகளிலும் நறுமணம் கமழும் பலவகைப் இலைகளை அதில் சேர்ப்பார்கள். தீப்போல் ஒளிரும் தாதிரிப்பூவையும், வெல்லத்தையும் கூடவே சேர்ப்பார்கள். இவற்றை இரு வேளையும் வெறும் கைகளால் நன்றாக கிளறிவிட வேண்டும். பிறகு
வாய்மூடி கட்டின மண் குடங்களில் நீண்ட காலத்திற்கு ஊற வைப்பார்கள்.
நொதித்து பக்குவமாகும் போது கொதி நீரில் வேகவைத்து பின்னர் பனை நாறிலான வடிகட்டிகளில் வடித்து வைப்பார்கள்.

சமீபத்தில் மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற, மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட 'நிலம் பூத்த மலர்ந்த நாள்' நாவலில்தான் மேற்கண்ட 'நறும்பிழி' தயாரிக்கும் செய்முறை அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

அன்றைய சங்ககால மது தயாரிப்பிற்கும் பிற்காலத்தில் சித்தர்கள் தயாரித்த
பட்டைசாராயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டுமே ஒன்று போல் அதே போன்றே சூத்திரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 இன்றைய குடி அவலம் 

அன்றைய நாட்களில் உடலுக்கு நன்மைத் தரும் பொருட்களைக் கொண்டு மதுபானங்கள் தயாரித்தனர், குடித்துக் களித்தனர், ஆடி மகிழந்தனர். இயற்கையாக என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு ஊறவைத்தும், நொதிக்கவைத்தும் புளிக்கவைத்தும் இயற்கையாக மதுபானங்களைத் தயாரித்தனர். இன்றையை நாட்களில் மதுபானங்கள் தயாரிக்கும் அவல முறையை சொல்லி மாளாது. அதுவும் அரசே டாஸ்மாக் மூலம் அயல் நாட்டு மதுபானங்கள் விற்கத் தொடங்கிய பின்னர், நிலைமை முன்பைவிட சீர் சீர்கெட்டுவிட்டது எனலாம். அயல் நாட்டு மது வகைகளைப் பயன்படுத்துவதில்; தனியாரிடம் இருந்த போது குடி மீதான பயம், அரசே மதுபான விற்பனையை ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர் சுத்தமாய் இல்லாமல் போய்விட்டது.

விளைவு....குடி நோயாளிகள் பெருத்த மாநிலமாக தமிழகம் தற்போது மாறிக்கொண்டு இருக்கிறது.டாஸ்மாக் கடைகளில் இன்று பெருவாரியான மக்கள் குடிக்கும் மதுபானங்கள்; விலையைவைத்தே அடையாளம்
சொல்லப்படுகிறது. இதிலிருந்தே இன்றைய மதுபானங்கள் எத்தகைய தரத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இவர்களின் அயல் நாட்டு மதுபானங்கள் விற்க வேண்டும் என்பதற்காக, இதுகாறும் தமிழர்கள் தொன்று தொட்டு குடித்து வந்த கள்ளையே கடந்த இருபது வருடங்களாக வடிக்கக் கூடாது விற்பனை செய்யக் கூடாது என்று தடைபோட்டுவிட்டார்கள், கிராதகர்கள்.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவை போன்ற அண்டை மாநிலங்களில் இன்றும் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி இருக்கிறது. கெமிக்கல்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் பிராந்தி விஸ்கியைவிடவா, இயற்கையான முறையில் வடிக்கப்படும் கள் கெடுதலாகிவிட்டது ?
இனிவரும் காலங்களிலாவது தமிழர்களின் தொல்
கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில், உடல் அரோக்கியப் பானமான 'கள்' இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். செய்வார்களா....?

- தோழன் மபா
27-4-2020

தகவல் உதவி:

#பரிபாடல்
#தினமணிடாட்காம்
#நிலம்பூத்துமலர்ந்தநாள்
#கீற்று

திங்கள், ஆகஸ்ட் 05, 2019

வெற்றிலை பாக்கு மகாத்மியம் !


ஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் வெற்றிலை பாக்கு மீது ஒரு கிரேஸ் வந்துவிட்டது. வயசாயிட்டான்னு தெரியலை?! 😆

மாயவரம் போயிருந்த போது, லாகடத்தில் நல்ல கும்பகோணம் கொழுந்து வெற்றிலையும், நிஜாம் பாக்கும் கூடவே ஏஆர்ஆர் சுகந்த பாக்கும் வாங்கிக் கொண்டேன். 

ரெண்டு வெற்றிலையை எடுத்து ஈரம் போக வேட்டியில் துடைத்து, ஆள்காட்டி விரலில் கொஞ்சோண்டு சுண்ணாம்பை எடுத்து சுமார்ட் போனை தடவுவது போல் வெற்றிலையில் தடவி, நிஜாம் பாக்கை சேர்த்து, வெத்தலையை நறுவிசாக மடித்து காம்பு மற்றும் நுனி கிள்ளி ரெண்டு மடிப்பு மடித்து கடைவாயில் வைத்து நறுக்கென்று கடிக்கும் போது மொத்த சுகந்தமும் வாயிக்குள் ஊழிக் காற்றாய் சுழன்றது !
இப்படி வெற்றிலையை மடித்துக் கொண்டு இருந்த என்னை விநோதமாக பார்த்தார் என் அப்பா. 'என்னாச்சுடா உனக்கு ? ' என்றார் கவலையாய்.

'சும்மா'என்றேன்.
--------
ஊரில் நம்ம பெரிசுகள் வெற்றிலை போடும் அழகே அழகு ! மேற்படி வெற்றிலையை எல்லா சிஷ்ருயையும் செய்து, சவ்வுதாளில் இருக்கும் பன்னீர் புகையிலையை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலில் லாவகமாக எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறு உருண்டையாக உருட்டி கடைவாயில் அதக்குவார்கள். அதற்குள் அந்த பன்னீர் புகையிலை வாசனை ஏரியாவே கமகமக்கும். அதுவும் கும்பகோணம் பன்னீர் புகையிலையின்னா கேட்கவே வேண்டாம், வாசனை ஒரு தூக்கு தூக்கும் !

அதுவும் கிராமத்தில் சில மூப்பர்கள் வெற்றிலை பாக்கை வெற்றிலைப் பெட்டி (செல்லமா அதற்கு செல்லமுன்னு பெயர்) வைத்து க் கொள்வார்கள், சிலர் சுருக்கு பை , ரெக்சின் ஷீட், பிளாஸ்டிக் தாள் என்று விதவிதமாக வைத்துக் கொள்வார்கள்.

ரெக்சின் ஷீட்டோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டோ சதூரமாக வெட்டி, மடிக்க தோதா ஒரு முனையில் நூலைக் கட்டி வைத்துக் கொள்வார்கள். உள்ளே வெற்றிலை , பாக்கு அல்லது லெட்சுமி சீவல், புகையிலை பொட்டலம், சுண்ணாம்பு டப்பி கூடவே ஒரு பாக்கு வெட்டி என்று சகலமும் இருக்கும்.
அதை அவர்கள் வைத்துக் கொள்ளும் அழகு இருக்கிறதே , அப்பப்பா.... அப்படி ஒரு அழகு !

கோடி ரூபாய் கொடுத்தால் கூட அப்படி பத்திரமாய் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

வெற்றிலை பெட்டிக்கும் பாக்கு பொட்டலத்திற்கும்
அப்படி ஒரு முக்கியத்துவம் சாமானியனின் வாழ்வில்.

-மபா

திங்கள், ஜூன் 10, 2019

நீங்க தமிழா ?!


இப்போதெல்லாம் வட இந்தியா பக்கம் போனால், சுதந்திரமாக கூட தமிழில் பேச முடியவில்லை. பொது இடத்தில்... அங்கிருக்கும் யாராவது ஒருவருக்கு தமிழ் தெரிந்திருக்கிறது!முகம் தெரியாத யாராவது ஒருத்தர் 'சார் நீங்கள் தமிழா .... தமிழ் நாட்டில் எங்கே....? ' என்று ஆர்வமாக விசாரிக்க தொடங்கி விடுகின்றனர்.

இப்படிதான் சில வாரங்களுக்கு முன் கவுகாத்தி சென்ற போது நடந்த சம்பவம்.

சம்பவம் 1

நாங்கள் ஒரு ஹோட்டல் வாசலில் நின்று கொண்டு, அந்த ஹோட்டல் நல்ல ஹோட்டலா ? போகலாமா வேண்டாமா, என்று விவாதித்துக் கொண்டு இருந்த போது...உள்ளேயிருந்து ஒரு குரல் "நல்ல ஹோட்டல்தான், பயப்படாமல் சாப்பிட வா சார் " என்றது.
யார் என்று பார்த்தால்... அந்தக் கடையில் வேலை செய்யுமா சர்வர். கடந்த 5 வருடமாக சென்னையில் வேலை பார்த்தவராம். சென்னை என்றதும்... அந்த இடம் தெரியும் இந்த இடம் தெரியும், மெரீனா பீச், டாஸ்மாக், நயன்தாரா என்று அளக்க ஆரம்பித்துவிட்டார்.பிச்சிக்கோ என்று வருவதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

சம்பவம் 2

இது இந்தியா தாண்டி நேபாளத்தில்.

நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சந்திர கிரி மலைத் தொடர். அதன் உச்சியில் அழகான சிவன் கோயில். கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 2556 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த சந்திர கிரி. மேலே கேபிள் காரில்தான் செல்ல வேண்டும். மேலே போகப் போக கேபிள் கார் அப்படியே மேகங்களுக்குள் மறைந்து விடும். கீழே அழகிய கலர் கலர் மரங்களும், காத்மண்டுவின் மலைப் பிரதேசமும், தூரத்தில் மேகங்களுக்கிடையே எவரெஸ்ட் வெளியும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். அப்படி ஒரு மயிர்கூச்செறியும் அழகு ! ஒரு கேபிள் காரில் ஆறு பேர் பயணிக்கலாம்.  நாங்கள் நான்கு போர் அமர்ந்து பயணிக்க... எங்களோடு இரண்டு வத்தல் மூஞ்சி நேபாள இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
Cable Car


Kathmandu ((Nepal) Chandra Giri Temple
நாங்கள் பேசுவதைப் பார்த்து, அதில் ஒரு பையன் நீங்கள் தமிழா ? என்றான் ஆர்வத்துடன்.

எங்களுக்கு ஆச்சரியமென்றால் அப்படி ஒரு ஆச்சரியம்!
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் , அதுவும் அந்தரத்தில் மேகங்களுக்கிடையே ஒரு வேற்று மொழிக்காரன், தமிழில் கேட்கிறான் 'நீங்க தமிழா' என்று ?!

'ஆமாம்' என்றோம் கோரஸாக.

'சார், நான் கோயம்புத்தூரில்தான் செஃப்பாக வேலை செய்தேன் என்றான். பிறகு தமிழகத்தின் பல ஊர்களைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டான். பிறகு அவனே 'நீங்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சென்றிருக்கிறீர்களா?' அங்குதான் டிப்ளமோ ஒன்று படித்தேன் என்றான். பின்பு அவனுக்கும் தமிழகத்திற்குமான தொடர்பினை மிகுந்த ஆர்வத்தோடு கண்கள் பளிச்சிட பேசினான்.

'பிறகு ஏன் நேபாளம் வந்திட்டே' என்றோம்.

'அப்பாவுக்கு முடியலை, குடும்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால் தான் தமிழ் நாட்டிலிருந்து வந்து விட்டேன்' என்றான். அவனது பேச்சில் தமிழ்நாட்டை விட்டு பிரிந்த சோகம் இழையோடியது.

நேபாளம் என்று இல்லை, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், உ.பி மேற்கு வங்கம், குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்கள் மற்றும் அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களான உள்ள குக்கிராமங்களில் கூட தமிழ் பேசத் தெரிந்தவர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர்.

இப்படிதான் ராஜஸ்தானுக்கு சுற்றுலா சென்று நமது நண்பர், ராஜஸ்தானில் சிறு கிராமத்தில் கூட தமிழ் பேசத் தெரிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கின்றார்கள் என்றார்.

இது எதுவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல, கள நிலவரம்.

****
1967க்குப் பிறகான திராவிட ஆட்சியில் தமிழகம், அடிப்படை சுகாதாரம், சாலை வசதி, தொழில் துறை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் வளர்ச்சிப் பெற்று, வளர்ந்த ஒரு ஐரோப்பிய நாட்டுக்கிணையான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

அதனாலேயே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் சாரை சாரையாக தமிழகம் நோக்கி வருகிறார்கள்.

ஆலப்புழையிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக டாடாபாத் செல்லும் 'தன்பாத்' ரயிலைப் பாருங்கள், ரயில் முழுவதும் வட இந்திய தொழிலாளர்களால் ரயில் பிதுங்கியபடி செல்லும். நிற்க இடமின்றி கழிப்பறைகளில் கூட அமர்ந்து செல்வார்கள்.

இந்தி பேசும் வட மாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்கள் தமிழ் மொழியை தட்டுத்தடுமாறி பேச கற்றுக் கொள்கின்றனர்.
உண்மை இப்படி இருக்க....

இது தெரியாத சில அரைகுறை பேர்வழிகள், இந்தி கற்றுக் கொண்டால் என்ன, இந்தி கற்றுக் கொண்டால் தமிழ் அழிந்து விடுமா ? என்றெல்லாம் அறிவிலித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள்.

அப்படி வலுக்கட்டாயமாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழருக்கில்லை என்பதே உண்மையின் நிதர்சனம்.

உலகில் தொல் இனமான தமிழர்கள், இதுகாறும் உயிர்ப்புடன் இருக்கவும், மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழவும் தமிழே காரணம்.
தங்களது தாய் மொழியான தமிழ் மொழி பற்றே தமிழர்களை உலக அரங்கில் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக அடையாளம்படுத்துகிறது. நமது அடையாளம் தமிழ் என்பதை நாம் பெருமையுடன் உணர வேண்டும்.

உலகின் மூத்த மொழியான தமிழை நமது முன்னோர்கள், பாதுகாப்பாக நமது கையில் தந்திருக்கிறார்கள். அதை உலகம் உள்ள வரையில் பாதுகாக்க வேண்டிய மாபெரும் கடமை நமக்கிருக்கிறது. அந்த கடமையிலிந்து நாம் நழுவ வேண்டாம்.

- மபா
7.6.2019 



 டிஸ்கி:  
சந்திரகிரி சிவன் கோயில் வளாகத்திலேயே... 'Bar @ 2520' என்ற பெயரில் ஒரு பார் இருக்கிறது. சரியாக அந்த மலைச் சரிவில் அமைந்திருக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 2520 அடி உயரத்தில் இருப்பதால், அதற்கு பார் 2520 என்ற பெயரையே வைத்துவிட்டர்கள். சில் பீயரோடு இமைய மலையை ரசிக்கலாம் என்றார்கள். சாமி தரிசனம் முடிந்த கையோடு பாருக்குள் நுழைந்துவிட்டோம். அங்கு கூர்க்கா என்ற பெயரில் ஒரு பீயர் இருக்கிறது. ஒரிஜினல் நேபாளி சரக்கு, செம ஸ்டார்ங்க். தோதான இடம் பார்த்து இமைய மலையை ரசிக்கலாம் என்று உட்கார்ந்தால், ஒரே மம்பும் மந்தாராமாக இருந்தது, எங்களைப் போலவே...

வெள்ளி, நவம்பர் 02, 2018

பிறிதொன்றாய் - கவிதை

இந்த வாரம் (29.10..2018)  கல்கி இதழில் எனது கவிதை !

-----------------------------

'பிறிதொன்றாய்'

குட்டி மீன்கள் நீந்தும் அத்தடாகத்தில்
அவன் மிதந்துக்கொண்டு இருந்தான்
நேற்றைய இரவுகளில் அவன்
உயிரோடு இருந்தானா என்பதை இனிதான்
துப்பு துலக்க வேண்டும்.

பல முறை அவன் இதே தடாகத்தில்
மீன்களிடத்தில் இளைப்பாறியதுண்டு

அவனது தோல்கள் உரிந்து செதில்களாக உதிரும்வரை...
அவன் அவற்றோடு நீந்தி களித்தின்புறுவான்

காலிடிக்கில் வழுக்கிச் செல்லும் அம் மீன்கள்
அதற்காக அவனிடத்திலிருந்து பொறிகளை பரிசாக பெறுவதுண்டு
சொப்புவாய்யைத் திறந்து கவ்வும் அழுகே...அழகு!

கொதி நிலையற்ற அவ்வாழ் பிரதேசத்தில்
தக்கையாகும் வரை நீந்துவான்.

அக்கரையில் மிதந்த அவனது உடலை
இடுப்பில் கயிறுக் கட்டி இக்கரை கொண்டுவந்தார்கள்

இனி அவனது உடலை பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும்

புறம் அகம் எதுவுமின்றி உயிர் போன
தடமுமின்றிக் கிடந்தான் அவன்.

அறிக்கை; 'சந்தேகத்திற்கிடமான மரணம்' என்று சொல்லிவிட...

அத்தடாகமெங்கும்
மீன்கள் துள்ளிக் குதித்து நீந்தின
புதிதாய் வந்த மீனுடன்.

-தோழன் மபா

திங்கள், ஜூலை 03, 2017

விபத்து தரும் பாடம் - தோழன் மபா


தினமணியில் வந்த கட்டுரை

By தோழன் மபா  |   Published  in Dinamani on : 29th June 2017 01:46 AM  |

   புனித ரமலான் மாதத்தில் பெரும் தேசிய சோகத்தை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து, வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 153 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அது வெறும் சாலை விபத்தாக மட்டும் இருந்திருந்தால், இத்தகைய உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. அதையும் தாண்டி மனித மனதின் இலவச அல்ப ஆசை ஒரு மாபெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டு இருந்த பெட்ரோல் லாரி விடியற்காலை 6.30 மணிக்கு டயர் வெடித்ததன் காரணமாக நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

லாகூருக்கு 400 கீ.மீ. தொலைவிலுள்ள பஹவல்பூர் மாவட்டம், அகமதுபூர் ஷார்கியா பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், லாரியிலிருந்த பெட்ரோல் வெளியேறி கிட்டத்தட்ட 25 ஆயிரம் (5500 கேலன்ஸ்) லிட்டர் சாலையின் அருகில் இருந்த வயல்களில் ஆறாக ஓடியது.


கோர விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி
சுற்றி வளைத்த தீ










சுவடுகள்
அருகில் இருந்த கிராம மக்கள் இதைக் கேள்விப்பட்டதும் பெரும் திறளாக, கைகளில் கேன்களுடனும் பெரிய பெரிய டின்களுடனும் வந்து ஆறாக ஓடிய பெட்ரோலை கேன்களில் பிடித்து நிரப்பிக் கொண்டனர்.
இந்த விபத்தைப் பற்றியும் பெட்ரோல் ஆறாக ஓடுவதும் பற்றியும் அருகிலிருந்த மசூதியின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தகவலும் எச்சரிக்கையும் விடப்பட்டது. மக்கள் பெரும் கூட்டமாக பைக்குகளிலும் வண்டிகளிலும் வந்து பெட்ரோலை பிடிக்க ஆரம்பித்தனர்.

அப்போது பெட்ரோல் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதற்காக தீ குச்சியைப் பற்ற வைத்ததில், காற்றில் ஆவியாக பரவி இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் காற்றில் பரவி இருந்த பெட்ரோல் தீ பற்றி ஒரு நெருப்புக் கோளம் போல் ஆகிவிட்டது.

உடனே ஆவியாகக் கூடிய பெட்ரோல் தனது அடர்த்தியின் காரணமாக காற்றில் அப்படியே பரவி இருக்கும். இத்தகைய விபத்துகளில் கசிந்து ஓடும் பெட்ரோல் அவ்வளவு எளிதில் கரைந்துவிடாது.

இந்த சம்பவத்தில் 25 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் என்பதால் அடர்த்தியும் எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மையும் அதிகம். அதனால் ஒரு சிறு தீப் பொறி கூட பெரும் சேதத்தை விளைவித்துவிடும். அதுவே நிகழ்ந்திருக்கிறது.
பெட்ரோலை சேகரித்துக் கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறிவிட்டனர். 130 பேர் 80 சதவீதம் தீக்காயத்தால் முல்தானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தில் பலர் இந்த விபத்தில் மாண்டிருக்கின்றனர். அங்கிருந்த லாரி, பைக், கார் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின. 

எப்போதும் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஆறாத ரணம்.

சுல்கா பீபீ என்பவர் தனது இரண்டு மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரிக்கட்டையாகக் கிடக்கும் மனித உடல்களில் தனது மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உடல்களை அடையாளம் காண மரபணு சோதனைக்கு உத்தரவு இட்டிருக்கிறது பஞ்சாப் மாகாண அரசு.
புனித ரமலான் மாதத்தின் கடைசி நாளான ஈதுல் பித்தர் அன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஞாயிற்றுக்கிழமையே ரமலான் பண்டிகையை கொண்டாடிவிட, பாகிஸ்தான் மட்டும் திங்கள்கிழமை கொண்டாட இருந்தது. அதற்குள் இப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்துவிட்டது.

மக்களின் ஆசையே, மாபெரும் துயரத்தையும், மனித இழப்பையும் கொண்டு வந்திருக்கிறது. பெட்ரோல் இலவசமாக பெறுவதற்காக தங்களது உன்னதமான உயிரை இழந்திருக்கின்றனர். எத்தகைய கொடூரம் இது?
காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயலாற்றியிருந்திருந்தால், இத்தகைய உயிரிழுப்பு ஏற்பட்டு இருந்திருக்காது. விபத்து நடந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் போக்குவரத்தை அனுமதித்திருந்தனர். அதோடு மக்களை விபத்து நடந்த இடம் அருகில் வரவிடாமல் செய்திருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாததால், மக்கள் அதிக அளவில் வந்துவிட்டனர்.

போலீஸாரின் அலட்சியத்தால்தான் இப்படிப்பட்ட பெரும் விபத்துகள் நடக்கின்றன. எததெற்கோ கடுமைக் காட்டும் காவல் துறை, இத்தகைய ஆபத்தான விஷயங்களில் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த மெத்தனமே மக்களை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வரச் செய்திருக்கிறது.

போலீஸாரை குறை சொல்லும் அதே நேரத்தில், மக்களையும் நாம் கண்டிக்க வேண்டும். கசிந்து ஓடுவது பெட்ரோல் என்று தெரிந்தும், இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக பேரல்களை எடுத்துக் கொண்டு வந்தவர்களை என்னவென்று சொல்வது?

நமது நாட்டிலும் இலவச வேட்டி, சேலை வழங்கும்போதும், கோயில்களில் அன்னதானம் வழங்கும்போதும் ஏற்படும் கூட்ட
நெரிசல்களில் பலர் உயிரை இழந்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் அரசு தரும் இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இப்படியான இலவச மனோபாவங்களால் தங்களது விலை மதிக்கமுடியாத உயிரை இழப்பது வேதனையிலும் வேதனை.

இத்தகைய விபத்துகளில் நமக்கான படிப்பினையும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

-நன்றி தினமணி

செவ்வாய், மார்ச் 21, 2017

மறுதாம்பு புத்தகம் பேசுது விமர்சனம்





    இனிப்பும், கசப்பும் கொண்ட வாழ்வில் பொய்மையும் ஒரு சுவையென்று அறியும் தருணத்தில் வாழ்விற்கான நீட்சியை இனங்காண்கிறார் தோழன் மபா. வாழ்க்கையை விரிவாக்கம் செய்து ஓலை அனுப்பியிருந்த கடவுள், மனிதர்கள் ‘மால்’களின் மின் தூக்கிகளில் கடைவாயில் அதக்கிய பீட்ஸாவுடன் வார இறுதிப் பொழுதுகளில் கடன் அட்டைகளைக் கையில் ஏந்தி களமாடும் போக்கைக் கோபத்துடன் கவனித்திருக்கிறான். எருக்கஞ்செடி மண்டி, ஏர் உழாமல் பாலையாகி விட்ட நிலங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது கடவுளின் கேள்வி; (ப.103). ‘வந்தேறிகள் சூழ் உலகு’ என்ற இன்றைய உலகை ஆள்வோர் யாரென இனங் காட்டுகிறார்.

கண்ணியமிக்க கனவான்களே உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பிஞ்சுக் கைகளில் இரத்தத்தைப் பூசுவதற்கும், உலகளாவிய விதத்தில் போர்களைத் திணிப்பதற்கும் அவர்கள் திட்டமிடுவதையும் அம்பலப்படுத்துகிறார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை உடைத்துப் பெருகி சென்னை மாநகரை மூழ்கடித்த ஊழிப் பெருவெள்ளம் வடிந்தபின் நகரெங்கும் பூத்திருந்த பாலித்தீன் (நச்சுப்) பூக்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கவிதை. ‘கட்டிங் கேட்ட கடவுள்’, ‘ஆதி நிலத்து தேவதை’ ‘அது மாத்திரம்‘ கவிதைகளில் சாதியத்தின் மீது சவுக்கடி வீசுகிறார் தோழன் மபா.  


”தோழன் மபாவின் கவிதைகள் நாம் அறியாத சந்து பொந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மேய்ச்சல் நிலம்‘, வளமான வண்டல்மண் படிவுகள் நிரம்பியதுதான் என நிறுவுகிற படைப்பு. நேரடியாகவும், வெடிப்புறவும் பேசுகிற வரிகள். ‘மறுதாம்பு’கள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழிலார்ந்த அட்டையும், ‘மண்குதிரை’ச் சின்னமும் பொருத்தமானவை.

சனி, ஜனவரி 21, 2017

மறுதாம்பு கவிதை நூல் வெளியீடு

சமகால பிரச்னைகளை கவிதைகள் பிரதிபலிக்க வேண்டும்: 

கவிக்கோ அப்துல் ரகுமான்.

 
மறுதாம்பு வெளியீட்டின் போது ... 
இடமிருந்து கவிஞர் வேல் கண்ணன்,   நூல் ஆசிரியர் தோழன் மபா, ஊடகவியலாளர் நாச்சியாள் சுகந்தி, தோழன் மபா வின் தந்தை பத்மநாபன், கவிக்கோ அப்துல் ரகுமான், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கல்கி வார இதழ் தலைமை துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா. 

      சமகால பிரச்னைகளை பிரதிபலிப்பதாக கவிதைகள் இருக்க வேண்டும் என கவிக்கோ அப்துல் ரகுமான் வலியுறுத்தினார்.


கவிஞர் தோழன் மபா எழுதிய "மறுதாம்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை (02/01/2017) நடைபெற்றது. விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து நூலை வெளியிட, கவிக்கோ அப்துல் ரகுமான் பெற்றுக் கொண்டார்.



பின்னர் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசியது: இந்தக் காலத்தில் சமுதாயத்தில் நடக்கும் அவலம், உண்மைகளைப் பேச யாரும் தயாராக இல்லை என்ற ஆதங்கம் பலரிடையே இருக்கிறது. எது உண்மை என்று தெரியாத நிலையிலேயே பலர் இருக்கிறார்கள். இது பற்றிப் பேசுகையில் "பெரியவங்க பொய் சொன்னா பேப்பரில போடுறான். சின்னவங்க உண்மை சொன்னா ஜெயிலுக்குள்ள போடுறான்' என்று கொத்தமங்கலம் சுப்பு எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.


தான் எழுதிய நூலுக்கு "மறுதாம்பூ' என்ற அற்புதமான பெயரை வைத்த தோழன் மபா தனது மனைவி, தந்தை ஆகியோரையும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்து கௌரவித்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் இன்று அரிதாகி வருகின்றன. மபா எழுதிய கவிதைகள் எதுவுமே மனைவியை வைத்துக் கொண்டு சொல்வதற்கு தயங்கும் கவிதைகள் இல்லை. ஒரு படைப்பு அப்படித்தான் இருக்க வேண்டும்.


சமுதாய நோக்கம் அவசியம்: கவிதைகளில் நவீனத்துவம் எப்போதோ வந்து விட்டது. சிலர் அறியாமையின் காரணமாக "வசனத்தை ஒடித்துப் போட்டால் புதுக்கவிதை' என்கிறார்கள். அது தவறு. "ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை'. பொதுவாக கவிதைகளில் தற்போதைய பிரச்னைகளைப் பற்றி சொல்வது அவசியம். சமகாலப் பிரச்னைகளை பிரதிபலிக்கும் கவிதைகள்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.


வீழாதததற்கு விருது வழங்க வேண்டும்: புயலில் கீழே விழுந்து கிடக்கும் மரங்களைப் பார்க்கும்போது எனக்கு அழ வேண்டும்போல் தோன்றியது. அதனால் இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு "வெறித்தனமாக வீசிய புயலோடு வீராவேசமாக போராடி நின்று கொண்டிருக்கும் மரங்களுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும்' என்று ஒரு கவிதையை எழுதிவிட்டுத்தான் வந்தேன். இன்றைய சூழலில் தென்றலைக் காட்டிலும் புயலைப் பற்றிக் கூறுவதே சரியாக இருக்கும். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தாத கருத்துகள் இல்லாவிட்டால் கவிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை.
அந்தக் காலத்தில் தீபாவளி மலரில் மட்டும்தான் கவிதைகள் வெளியாகும். இப்போது கவிதைகள் வெளியாகாத செய்தித்தாள்களே இல்லை. கவிஞர்கள் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதட்டும். அவற்றில் ஒரு கவிதையாவது சமூகத்துக்குப் பயன்பட்டாலே போதுமானது. அன்றாடம் நிகழும் வீட்டுப் பிரச்னைகள், சமூக அவலங்கள் குறித்து ஒருவர் எழுதினால் அவரையும் அவர் கவிதையையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் நாம் எழுத்துக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம் என்றார் அவர்.


முன்னதாக கல்கி வார இதழ் தலைமை உதவி ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, கவிஞர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அப்போது மறுதாம்பு கவிதை நூலில் இடம்பெற்றுள்ள சமுதாய சிந்தனைகள் கொண்ட கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கினர்.


விழாவில் ரஹமத் பதிப்பக உரிமையாளர் முஸ்தபா, கவிஞர் வேல்கண்ணன், மபாவின் தந்தை கே.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 

 தினமணி ஆசிரியர் கி.வைத்திய நாதன் உரை:

https://www.youtube.com/watch?v=fbs4ToqQARo

கல்கி வார இதழ் துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா உரை:

 https://www.youtube.com/watch?v=CYBLRKvnd-8&t=21s

கவிஞர் சுகந்தி நாச்சியாள் உரை

https://www.youtube.com/watch?v=ZeHCHHKlIdY 

மனைவியிடம் எதையும் மறைக்ககூடாது - கவிக்கோ அப்துல் ரகுமான் நகைச்சுவை பேச்சு | Kaviko Abdul Rahman

https://www.youtube.com/watch?v=3lgUvNoTZCc


ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...