வியாழன், மே 14, 2015

கூட்டுத் தொகையில் கோட்டைவிட்ட குமாரசாமி!.

           
            எந்த ஒரு நீதி மன்றத் தீர்ப்பும் இந்த அளவிற்கு கேலிக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகியதில்லை. இரண்டு நாளுக்கு முன்னர் நீதிபதி குமாரசாமியால் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு சமூக வலைத்தளங்களிலும், இணையத் தளங்களிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 19 வருடங்களாக நடைபெற்ற வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் (இந்த வார்த்தையை ஏனோ...நிறைய ஊடகங்கள் தவிர்த்து வருகின்றன) 919 பக்கத்தில் கடைசி இரண்டு பக்கங்கள் மட்டும் படித்து, 19 நிமிடத்தில் சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதத்திலிருந்து ஜெயலலிதாவை விடுவித்துள்ளார் குமாரசாமி.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்த ஊழலுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்ற மனப்பான்மையில்தான் பெருவாரியன மக்கள் இருந்தனர். இப்படி ஒரே அடியாக விடுதலை செய்வார்கள் என்று அவர்கள் ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை..
கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஹா மாய்ந்து மாய்ந்து தீர்ப்பு சொல்லியதை ஒரே அடியில் வீழ்த்தி இருக்கிறார் குமாரசாமி.

வருமானத்திற்கு அதிகமாக 20 சதவீதம் வரை கூடுதலாக சொத்து சேர்க்கலாம் என்ற முந்தைய தீர்ப்புகளின் (CASE LAW) படி 10 சதவீதம்தான் சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு ஜெயலலிதா உட்பட நால்வரையும் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறார் குமாரசாமி!.
இவர் கூறிய அந்த 10 சதவீதம்தான் தற்போது பிரச்சனைகளுக்கு   வித்திட்டிருக்கிறது.

கூட்டுத் தொகையில் கோட்டை விட்ட குமாரசாமி 76.76 சதவீதம் உள்ள அதிகப்படியான சொத்து குவிப்பை வெறும் 8.12 சதவீதம்தான் என்று கூறி மொத்த பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். இதுதான் இன்று பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. சகுனம் சொன்ன பல்லி கழனி பானையில துள்ளி விழுந்த கதையாக மாறிவிட்டது குமாரசாமியின் தீர்ப்பு.
'நீதியை நிதி வென்று விட்டது', 'வழங்கப்பட்ட தீர்ப்பா? இல்லை வாங்கப்பட்ட தீர்ப்பா?' போன்ற விமர்சனங்கள் தற்போது பகிரங்கமாக எழுந்துள்ள நிலையில், தீர்ப்பை விமர்சிக்கும் ஹோஸ்டோக்குகள் முக நூலிலும், கட் செவியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று மரபு இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அவையும் விமர்சனத்திற்கு ஆட்பட்டே இருக்கிறது!. அதுவும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தீர்ப்பு கூறிய குமாரசாமியே வெட்கப்பட்டு தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு தறிக் கெட்டு ஓடுவது போல் ஆகிவிட்டது?. இன் நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்ய குமாரசாமி முயலுவதாக செய்தி வந்துள்ளது, கவனிக்கதக்கது.

முந்தைய குன்ஹா தீர்ப்பின் போது, மக்களின் அனுதாபத்தை அள்ளிய ஜெயலலிதாவிற்கு, இந்த முறை குமாரசாமியின் தீர்ப்பால் அது மிஸ்ஸிங் என்பதுதான் சோகத்திலும் பெரிய சோகம்.

சனி, மே 09, 2015

ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி!.



இந்திய-ரஷ்ய கலாச்சார நட்புறவு மையம் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில்  அண்மையில் நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

ஜெயகாந்தன் கம்யூனிச மேடைகளில் களமாடிய பொழுதுகளை மிக அழகாக, மிக சொற்பமான புகைப்படங்களைக் கொண்டு பதிவு செய்திருக்கின்றனர். ஒரு எழுத்தாளராகவே மட்டும் அறியப்பட்ட நமக்கு, அவர் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் போலவே காட்சிப்படுத்தப்படுகிறார். அதுவும் சில புகைப்படங்களை பார்க்கும் போது, அது ஜெயகாந்தன் தனா? என்ற பிரமிப்பும் நமக்குள் ஓடுகிறது. 

விளிம்பு நிலை மனிதர்களுக்கான முன்னெடுப்புகளில் சிங்கம் போன்ற அவரது ஆளுமையை அவரது படங்களில் காண முடிந்தது சிறப்பு!.

ஜெயகாந்தனின் 50 ஆண்டுகளான நண்பரான இசைஞானி இளையராஜாவும், ஜெயகாந்தனை நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறார், அதையும் இப்படி கண்காட்சிப்  படுத்தினால், வாசகனும் ரசிகனும் ஒரு சேர மகிழ்வான், 

 எனது மொபைல் காமிராவால் எடுக்கப்பட்டது,  அந்தளவிற்கு துல்லியமாக இருக்காது. பொறுத்தருள்க!.







போராட்ட களத்தில்


கண்ணதாசன் பக்கத்தில் அது ஜெயகாந்தன் தானே ...?!



புதன், ஏப்ரல் 08, 2015

குருபீடம் நோக்கி... வா மணிகண்டன்?



இணைய எழுத்தாளர் வா.மணிகண்டனின் 'லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன்' மற்றும் 'மசால் தோசை-38 ரூபாய்' ஆகிய இரண்டு நூலுக்கான விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் யாவரும்.காம் சார்பாக கடந்த ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. ஒரு அடிப்படை சம்சாரியின் ஞாயிற்றுக் கிழமை சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அரங்கு நிறைந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் புத்தக விமர்சனக் கூட்டங்களில் பேச வருபவர்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏடாக் கூடாமா பேசி எதற்கு எழுத்தாளனை இம்சிக்க வேண்டும், என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாய் பாராட்டி, நாலு வார்த்தை பேசி இறங்கி விடுகின்றனர்.  இந்த கூட்டத்திலேயும் அதுதான் நடந்தது.

ஒரு மனிதனை மேடையில் வைத்துக் கொண்டு அவனை வாய்க்கு வந்தபடி புகழ்வது என்பது, அவனுக்கு அனஸ்தீஸிய கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது போன்றது.   அப்படி ஒரு அவஸ்தைக்கு ஆட்பட்டு நாற்காலியில் துவண்டுக் கிடக்கத்தான் முடிந்தது வா.மணிகண்டனால். வந்தவர்கள் எல்லாம் பாராட்டித் தள்ள முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்று, இன்னும் வா.மணிகண்டனுக்கு கை கூடவில்லை போலும்?.

இந்த காலமான காலத்தில படிக்க நேரம் இருக்காது என்பதை மிக நன்றாக உணர்ந்து இருக்குகிறார் மணிகண்டன். 'பாஸ்ட் ஃபுட்' வகையை சார்ந்த இவரது எழுத்துகள், மிக எளிதாக ஒரு வாசகனை உள்ளிழுக்கும் சக்தி கொண்டது. பெரிய தரவுகளையோ, சரித்திர ஆதாரங்களையோ, மண்டயை குழுப்பும் வார்த்தை பம்மாத்துகளோ எதுவுமின்றி, 'இந்தா, இதை வாங்கி அந்தப் பக்கம் வை' என்பதுபோல் எளிமையாக கட்டுரை கம் கதை சொல்வதில் இருக்கிறது இவரது வெற்றி!.

அதே நேரத்தில் வா. மணிண்டன் எழுத்தை  விமர்சனம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?. சொல்லுங்க....?. 

நோயாளர்களை பற்றியோ, அல்லது படிக்க பணம் இல்லாமல் தவிப்பவர்களை பற்றியோ வா.மணிகண்டன் தனது 'நிசப்தம்' வலைத்தளத்தில் எழுதும் போது, அது பொது கவனத்திற்கு வந்துவிடுகிறது.  அதற்கு உதவி செய்ய நிறைய ஆதரவு கரங்கள் நீண்டு விடுகிறது.  அப்படி கிடைக்கப்பெறும் தொகையை சரியான முறையில் பயனாளர்களுக்கு கொண்டு செல்ல ஒரு அறக்கட்டளையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அதில் தற்போது 10 லட்சம் வரை சேர்ந்திருக்கிறது. வா.மணிகண்டனின் எழுத்து வீச்சிற்கு இந்த பத்து லட்சம் பதம்!.  20 நிமிடத்தில்  ஒரு பதிவை எழுதிவிடுகிறார் என்றால் பார்த்துக்  கொள்ளுங்களேன்!.

விழாவில் இயக்குனர் கவிதா பாரதி, கார்டூனிஸ்ட் பாலா, தம்பி சோழன் கூத்துப் பட்டறை, நாகேஸ்வரன்,சைதை புகழேந்தி, கிருஷ்ண பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். வா.மணிகண்டன் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சிகளை ஜீவ.கரிகாலன் தொகுத்து வழங்கினார்.

மற்ற பிரபல எழுத்தாளர்கள் போன்று நீங்களும்  'குரு பீடத்தை' நோக்கி போகிறீர்களா...? என்றொரு முக்கியமான கேள்வியை விழாவிற்கு வந்த ஒருவர் திரும்ப திரும்ப கேட்டார்.  "நான் அப்படி எல்லாம் போகலைங்க. அதிலெல்லாம் விருப்பமும் இல்லைங்க. நான் எழுதுவது 'நிசப்தம்' வாசகர்களுக்காகத்தான்" என்றார் மீண்டும் மீண்டும். ஏதோ "விதை விதைச்சேங்க.....வெள்ளாமை நல்லா வந்தது!" என்று எளிமையான விவசாயி சொல்வது போல் இருந்தது அவரது பேச்சு!.

அதிகம் கவனிக்கப் பெறும் எழுத்தாளனுக்கு 'குருபீடம்' என்பது தவிற்கமுடியாத ஒன்று. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னிச்சையாக அது நிகழ்ந்துவிடும். பாடாவதி சினிமா நடிகனுக்கு கூட அவனது ரசிகர்கள் குருபீடத்தை அமைத்து விடுகிறார்கள். எழுத்தாளனுக்கு அமைத்தால் என்ன பெரிய குடியா மூழ்கிவிடப் போகிறது?. தன்னியில்பாக நிகழ்ந்துவிடும் குருபீடத்தால் எழுத்தாளன் தன்நிலை மறந்தால், அது 'பலிபீடமாக' மாறும் என்பதையும் எழுத்தாளன் உணர்ந்திருக்க வேண்டும்.





வியாழன், மார்ச் 26, 2015

வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' வெளியீடு!



இடமிருந்து : பதிப்பாளர் வர்த்தமானன், வேலுர் கம்பன் கழக செயலாளர் இலக்குமிபதி, நூலின் உரையாசிரியர் எம்.கோவிந்தராஜன், பதிப்பக நிறுவனர் ஜெ.ஸ்ரீசந்திரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர்,பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரகந்தின் தலைவர் இல.கணேசன், கலைமகள் இதழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமனியன் & பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் உள்ளனர்.


             டந்த ஞாயிறு அன்று வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' நூல் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது!. 

இரண்டு நாளுக்கு முன்னரே வர்த்தமானன் சார் கூப்பிட்டு, நீங்கள் அவசியம் விழாவிற்கு வரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். ஞாயிறுகளில் காலை 8 மணி என்பது எத்தனை அற்புதமானது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!. சென்னை போன்ற பெருநகர வீடுகளில் விடியாத(?) அந்த காலை 8 மணி என்பது, மற்ற நாட்களை போல் இல்லாமல், எந்த வித பரப்பரப்பும்மின்றி சோம்பிக் கிடக்கும். அந்த சோம்பலை உதறி தள்ளி வெளிவருவதே பெரும்பாடுதான். அந்தகாரத்தில் அலங்கோலமாகிப்போன பொழுதைப் போலவே ஞாயிறுகளின் காலைப் பொழுது இருப்பதாக எனக்குப்படும்.

விழா தொடங்குவதோ காலை 9 மணி. "பிரேக்பாஸ்ட் இருக்கு மகேஷ்" என்று வர்த்தமானன் சார் சொல்லிவிட்டார். சரி, அங்கு போய் காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பப் போகும்போது, அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அதற்கு பதிலளித்துக் கிளம்பவே அரைமணி நேரமாகிவிட்டது. அடித்துப்பிடித்து விழாவிற்கு வந்து சேர்வதற்கும், விழா தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. பசியை மறந்து அரங்கில் அமர்ந்து விட்டேன். விழா முடியும் போது மதியம் மணி ஒன்று!. 'செவிக்கு உணவில்லாத போதுதானே.. வயிற்றுக்கு  ஈயப்படும். இங்குதான் செவிக்கு உணவு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அப்புறம் எதற்கு வயிற்றுக்கு?' அதனால் பசிக்கவேயில்லை போலும்?!. 

துளசி இராமாயணம் புத்தகத்தை பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியீட, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொண்டார். காலை 9 மணிக்கு விழா அரங்கு நிறைந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இதையேதான் இல.கணேசனும் தனது பேச்சில் தெரிவித்தார். அவரது பேச்சை அப்போதுதான் முதன் முதலாக கேட்கிறேன். சும்மா சொல்லக் கூடாது பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவர் என்பதால் இலக்கியத்திலும் இராமாயணத்திலும் கொஞ்சம் விஸ்தாரமாகவே பேசினார். அதிலும் இராமாயணத்தை பற்றி கூறும் போது 'முடி'யை வைத்து அவர் பேசியது ரசிக்கும்படியாக இருந்தது.

வால்மீகி இராமாயணம் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால் சாமான்ய மக்களால் அதைப் படித்து புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அயோத்தி வாழ் மக்களின் அடிப்படை மொழியான 'அவதி' மொழியில் வெளிவந்து, சாமான்ய மக்களின் அறிவுப் பசியையும் ஆன்மீக பசியையும் ஒரு சேர போக்கிய துளசி இராமாயணம்தான் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. துளசிதாஸர் அருளிய 'இராம சரித்திர மனஸ்' என்ற இராமாயணமே பின்னர் எழுதியவரின் பெயரோடு 'துளசி இராமாயணம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத் துளசி இராமாயணத்தை தமிழில் மூன்று தொகுதிகளில் வெளியீட்டுள்ளது வர்த்தமானன் பதிப்பகம் இம் மொழிபெயர்ப்பினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். முனைவர் எம்.கோவிந்தராஜன்.

இந்த இடத்தில் நூல் ஆசிரியர் பற்றி கூறியே ஆகவேண்டும். அடிப்படையில் இந்தி ஆசிரியரான முனைவர் எம்.கோவிந்தராஜன் தமிழில் அசாத்திய திறமை படைத்தவர். இவ் விழாவில் தனது ஏற்புரையையும் நன்றியுரையையும் செய்யுள் பாணி கவிதை நடையில் சிறு புத்தகமாக அச்சிட்டு வழங்கி இருந்தார்!. அனைத்தும் 'ஏ' கிளாஸ் ரகம்!. 

அறிமுக உரையாற்றிய வர்த்தமானன் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ஸ்ரீ சந்திரன், கம்ப இராமாயணத்திற்கும் துளசி இராமாயணத்திற்கும் உள்ள   வித்தியாசத்தை மிக அழகாக எடுத்துரைத்தார். கம்பரின் இராமாயணத்தில்..... தனது அண்ணான இராவணனுக்காக பரிந்து வரும் கும்பகர்ணன், போரின் இறுதியில் தலை வெட்டப்பட்டு ஆழ் கடலில் விழுவது போல் எழுதி இருப்பார். துளசி இராமயணத்தில் கும்பகர்ணனின் தலை வெட்டப்பட்டு அத்தலை இராவணின் மடியில் விழுவது போல் எழுதப்பட்டு இருக்கும். இப்படி இரு கதைகளிலும் ஆங்காங்கே காணப்படும்  சிறு சிறு வித்தியாசங்களை அழகாக பட்டியலிட்டார். 

இப் பதிப்பகத்தின் வெற்றிக்கு வர்த்தமானன் அவர்களின் திட்டமிடலும், தொலை நோக்கு பார்வையுமே காரணம். புத்தகங்கள் விற்பனையில் மற்ற பதிப்பகங்களை காட்டிலும் வேறுபட்ட வியாபார உத்தியை கொண்டது வர்த்தமானன் பதிப்பகம். வர்த்தமானன் பதிப்பக நூல்களை நீங்கள் இவர்களிடம் மட்டுமே வாங்க முடியும். தங்களது தயாரிப்புகளை வாசகர்களிடம் நேரிடையாக கொண்டு சேர்க்கிறார்கள். விளம்பரங்கள் மூலம் தங்களது வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ள வர்த்தமானன் பதிப்பகத்திற்கு இது ஐம்பதாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது!.

வெள்ளி, மார்ச் 20, 2015

மாட்டிறைச்சி கவுச்சியும் விபச்சார புனிதமும்!

.

           செய்ய வேண்டிய  வேலைகள் எத்தனையோ இருக்க....அதை விடுத்து வெட்டி வேலை பார்ப்பவனை ..."செய்யிற வேலையை விட்டுவிட்டு, ஏண்டா செனப்பு சொறியிற என்று கேட்டு" கிராமத்தில் ஏகடியம் செய்வார்கள்.  அதை போல ஏகடியத்திற்கு ஆளாகியிருக்கிறது மகாராஷ்ட்டிரா பாஜக அரசு.

  மகாராஷ்டராவில்  மாட்டுக் கறி விற்பனைக்கு தடை விதித்து பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது, ஆளும் பாஜக அரசு!.. இந்தியாவில எந்த ஒரு மாநில அரசும் முக்கியத்துவம் கொடுக்காத விஷயத்திற்காக ஒரு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறது. இச் சட்டத்தின் மூலம் நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை மதவாத பாஜக அரசு தீர்மானித்திருக்கிறது. இது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்மாதிரி சட்டமாகும். மக்களின் அன்றாட உணவு முறைகளில் இத்தகைய கெடுபிடிகள் வீண் பிரச்சனைகளையே ஏற்படுத்தும். 

 மகாராஷ்டிராவின் அப்போதைய  பாஜக சிவசேனா கூட்டனி அரசு விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர எண்ணி 1995 ம் ஆண்டு ஒரு மசோதாவை தாக்கல் செய்திருந்ததது. 19 ஆண்டு காலம் நிலுவையில் இருந்து வந்த அந்த மசோதாவை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் தூசித் தட்டி எடுத்து நிறைவேற்றியுள்ளனர்.  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அங்கீகாரத்தால் இச் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த சட்டப்படி மாட்டுக் கறியை விற்றாலோ, அல்லது வைத்திருந்தாலோ அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.  பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கோட்பாடுகளையும் கொள்கைளையும் மீளூருவாக்கம் செய்வதில் சங்பரிவார்கள் அதிக முணைப்புக் காட்டி வருகிறது என்பதற்கு மகாராஷ்டிரா ஒரு உதாரணம்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் பழமைவாதிகள்  விதிக்கும் சட்டங்களுக்கும், செயல்களுக்கும் இத்துத்துவ பழமைவாதிகளின் சட்டங்களுக்கும் செயல்களுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றுகிறது?.
-----------------

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் மாட்டுக் கறி தொடர்பான ஒரு கட்டுரையை படித்திராவிட்டால், மாட்டுக் கறி மீதான எனது அபிப்ராயம் அப்படியேதான் இருந்திருக்கும். மனிதன் சாப்பிடக் கூடிய மாமிசங்களில் மாட்டுக் கறியும், இன்ன பிற இறைச்சிகளோடு ஒன்றே என்றும், அதை நிராகரிக்க தேவையில்லை என்றும், உலக நாடுகளில் மாட்டுக் கறியின் நிலையை அவதானித்து ஒரு நீண்ட கட்டுரையை தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அது படிக்கவேண்டிய ஒன்று!. இல்லையென்றால் நானும் மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டு திரிந்திருப்பேன். மாட்டுக் இறைச்சி சாப்பிடுவது கேவலம், என்ற பொதுமை மனோ நிலையை பன்னெடுங்காலத்திற்கு முன்னரே இங்கு ஏற்படுத்திவிட்டனர். அதனாலயே இங்கு தமிழகத்தில் மாட்டுக் கறிக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. மாட்டு இறைச்சி தொடர்பான.... ஆதவனின் அக் கட்டுரை எல்லோருக்குமே ஒரு 'ஐ ஓப்பனர்தான்'!.

இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ பழமைவாதிகள் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். வட இந்தியாவில் புனிதப்  பசு என்ற போர்வையில் பெரும் கலவரங்களும் உயிர் பலிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பரிணாமம்தான் இந்த தடை உத்திரவு!.
-------------------------


புனித பசு!

இந்தியாவில் எந்த ஒரு விவசாயியும் பசு மாட்டை கொல்ல மாட்டான். பசு மாடு என்பது அவனைப் பொறுத்தவரையில், அவனது வாழ்வியலில் ஒரு அங்கம்,. அவனது குடும்ப உறுப்பினர்களில் அதுவும் ஒன்று!. நகரங்களில் காரை துடைத்து பள பளவென்று வைத்திருப்பது போல.... கிராமங்களில் மாட்டை குளுப்பாட்டி நெற்றி, வயிறு வாலின் மேல்புறம் என்று பொட்டுவைத்து கொம்பிற்கு வண்ணம் பூசி சும்மா பள பளவென்று வைத்திருப்பார்கள்!.. மாடு மேய்த்தலின் போது, மாட்டின் வயிறு புடைப்பாக இருந்தால் மட்டுமே மாட்டை வீட்டிற்கு ஓட்டி வருவார்கள். மாட்டுக் கொட்டகையில் மாட்டிற்கு கொசு கடிக்கும் என்பதற்காகவே மூட்டம் போட்டு கொசுவை விரட்டக் கூடியவ ஜீவ காருண்யம் மிக்கவர்கள் நமது விவசாயிகள். அந்த விளிம்பு நிலை மனிதர்கள் என்றுமே ஜீவ காருண்யத்தை விட்டு விலகி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொளவ்தில்லை.





ஆனால், இங்கு சட்டம் போடுபவர்களின் அதிகபட்ச ஜீவ காருண்யம் என்ன?, அதன் வாலை தொட்டு தடவி தங்கள் தலையில் தேய்த்துக் கொண்டால் போதும் என்று நினைக்கக் கூடியவர்கள்.  அதுவே தங்களது உயர்ந்தபட்ச ஜீவகாருண்யம் என்று செம்மாந்து திரியக் கூடியவர்கள். இத்தகையை அற்ப பேர்வழிகளே இந்திய கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதாக பம்மாத்து பண்ணிக் கொண்டு திரிகிறார்கள். இன்றைய நவீன இந்தியாவில் மாடுகள்  குப்பைத் தொட்டியில் நாயோடு நாயாக நின்று,  தங்களது உணவுகளை தேடக் கூடிய இழி நிலையில் இருக்கின்றது என்பதை, இந்த ஜீவகாருண்ய பாஜக புலிகள் மறந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் மாடுகள் சாணம் போடுவதை விடுத்து,  மனித மலத்தை ஒத்த கழிசல்களை சாலை முழுவதும் தொர...தொரவென்று ஒழுக விட்டப்படி சென்றுக் கொண்டு இருக்கிறது. மாடுகளின் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றம், அதன் கழிவுகளை நாற்றம் பிடித்தாக மாற்றிவிட்டது. கொடுக்கின்ற பாலையும் நஞ்சாக மாற்றிவிட்டது?.

பொதுவாகவே இறைச்சிகளில் கிடா கறியைதான் அதிகம் பேர் விரும்புவார்கள். "கிடா ஆடா?" என்று கேட்டுவிட்டுதான் ஆட்டுக் கறியே எடுப்பார்கள். அது ஆடாக இருந்தாலும் சரி கோழியாக  இருந்தாலும் சரி, மாடாக இருந்தாலும் சரி. இங்கு பெண் என்பது முதலீடுக்கான வழி.  குட்டிகளை ஈணுவது அதன் வேலை. அதனாலேயே 'பொட்ட ஆடு' என்றல் யாரும் கறி வாங்க மாட்டார்கள்.  அதையும் அடித்து தின்றுவிட்டு ஒன்றுமில்லாமல் உட்கார்ந்து இருக்க....விவசாயி என்ன முட்டாளா.....?.

பசுவை ஒரு மாபெரும் வாக்கு வங்கியாகவே தொன்றுதொட்டு பயன்படுத்திக் கொண்டு வருகிறது பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும்!. 
.
புனித பசு மீதான மாயையை மதத்தின் பெயரால் தக்கவைத்திருக்கும் இந்துத்துவாவின் முகத்திறை கிழிக்கிறது “The Myth of Holy Cow” என்ற புத்தகம், இன் நூலை வரலாற்று ஆய்வாளரான த்விஜேந்திர நாராயண் ஜா (டி.என்.ஜா)  எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணரான டி.என்.ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான,கற்பனைகளின் அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபித்திருக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

இந்திய அரசியலில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார்

‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை இப் புத்தகம் உடைத்தெரிகிறது.
கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி,  இந்து மத, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை இப் புத்தகம் நிரூபித்திருக்கிறது!..

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்ததுள்ளது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என்பதையும் இப்புதகம் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.  புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

மாட்டுக் கறி வைத்திருந்தால் பாலியல் கொடுமைகளை விட அதிகத் தண்டனை!.

அபத்தத்தின் உச்சம் என்றால் இச் சட்டத்தைதான் சொல்லவேண்டும். இந்தியாவில் தற்போது உச்சத்தில் இருக்கும்  பாலியல் கொடுமைகளுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை வழங்கப்படுக்கிறுது. அதே நேரத்தில் மாட்டுக் கறி வைத்திருந்தால் 5 வருடம் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் கொடுமையை விட மாட்டுக் கறி அப்படி என்ன புனிதம் என்று தெரியவில்லை? தனக்கான வாக்கு வங்கியை இந்துக்களிடம் தக்கவைக்கவே மதவாத பாஜக அரசு பலவகையிலும் முயற்சித்து வருகிறது. அதன் வெளிப்பாடே இத்தகைய சட்டங்கள்.

மாட்டிறைச்சிக்கு தடை என்ற சட்டம் நிறைவேறியதும் "இன்றுதான் எனது கனவுகள் நிறைவேறியிருக்கிறது" என்று தனது டூவிட்டர் பக்கத்தில் ஒரு சுட்டுறையை பதிவு செய்திருந்தார்  மாஹாராஷ்டிர முதல்வர் தேவந்திர ஃபட்னாவீஸ்!. ஆர்எஸ்எஸ் உருவான நாக்பூரில் பிறந்தவரான ஃபட்னாவீஸ், இந்துத்துவ கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் முகுந்த ஆர்வம் காட்டக் கூடியவர். சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு  இடஒதுக்கீடு கூடாது என்று பிடிவாதமாக இருந்து அதை சட்டரீயாக  தடை செய்திருக்கிறார். .

மகாராஷ்டிராவில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் வரிசைக் கட்டி நிற்க, அதிலிருந்து வழி மாறி சென்றுக் கொண்டு இருக்கிறார் ஃப்ட்னாவீஸ்  தலைநகர் மும்பைக்கு பல பெருமைகள் உண்டு. மும்பை என்றதும் ஞாபகம் வரக் கூடிய மேற்படி சங்கதிகளில் ஒன்று அம்மாநிலத்தில் தங்குத்தடையின்றி நடைபெறும் விபச்சாரத் தொழில்தான். ஆசியாவிலேயே மிகப் பெரிதான, இந்தியாவில் குறிப்பிடத்தக்க விபச்சார சந்தையான 'காமாத்திபுரா' மும்பையில்தான்  இருக்கின்றது. பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட காமாத்திபுரா விபச்சார விடுதிகள்,  இன்றும் படு சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. இங்கு 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் செக்ஸ் தொழிலாளர்கள் தங்களது சேவைகளை ஆண்களுக்காக வழங்கி வருகிறார்கள்.  பெண்களை தெய்வமாக போற்றப்படக் கூடிய இந்தியாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வாழ்வை தொலைத்து இங்கு தங்களது உடலை பாலியல் விற்பனைக்கு ஆட்படுத்தி வருகிறார்கள்.

இந்த விபச்சார விடுதிகளுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் கடத்தி வரப்படுகிறார்கள். மிகவும் கொடூரமான சித்திரவதைகள் கூடாரங்கள் மூலம் அவர்கள் சம்மதிக்க வைக்கப்படுகிறார்கள். அடிப்படை மனித உரிமைமீறல்கள் என்பது இத்தகைய விபச்சார விடுதிகளில் சர்வசாதாரணம். அடி உதை, வெட்டு, மார்புகளை வெட்டி எறிவது, சூடு போடுவது போன்ற சித்திரவதைகள் இங்கு கடத்தி வரப்படும் பெண்களுக்கு இழைக்கப்படுகிறது.  மிகப் பெரிய நெட்வொர்க்கை கொண்டு இந்தியா முழுவதுலுமிருந்து இளம் பெண்கள் இங்கு கடத்தி வரப்படுகிறார்கள். கோடிகளில் பணம் புழங்கும் இந்த விபச்சார தொழில் பற்றி ஆளும் அரசுக்கு தெரியாமல் இருக்குமா... என்ன?.


"மாட்டு கறியை தடை செய்தது எனது வாழ் நாள் கனவு" என்று கூறிய மாநில முதல்வர் தேவந்திர ஃப்ட்னாவீஸ், ஏன் விபச்சாரத்தை தடை செய்யவில்லை?. விபச்சாரத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, அதை தடை செய்திருக்கலாமே.....?. விபச்சாரம் என்ற படு குழியில் தள்ளப்படும் பெண்களை காப்பாற்றி இருக்கலாமே......? ஏன் செய்யவில்லை.....?. ஓட்டுக் வங்கிக்காக மாடுகளின் மீது காட்டப்படும் அக்கரை, மகளிர் மீது காட்டப்படவில்லையே ஏன்?.

பசுவின் கறி புனிதம் என்றால்? பெண்கள் தங்களது சதையை விற்பது வியாபாரமா....?   சொல்லுங்கள் மிஸ்டர் தேவேந்திர ஃப்ட்னாவீஸ்???.


கட்டுரை / புகைப்படம்
-தோழன் மபா.

புதன், பிப்ரவரி 04, 2015

'ரத்தம் விற்பவனின் சரித்திரம்'



           ரும்பு திறை கொண்ட நாட்டிலிருந்து, ரத்த வாடை வீசும் நாவல் வருவதென்பது இயல்பானதொன்று என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். இது அடக்குமுறை கவுச்சி வீசும் ரத்த சரித்திரம் அல்ல, உண்மையாகவே பஞ்சம் பிழைக்க தனது ரத்தத்தை விற்கும் ஒரு சாமானிய சீனனின் கதை!.

1994களில் வெளிவந்து சர்வதேச கவனத்தைக் கவர்ந்த யூ ஹூவாவின் 'கிராணிக்கல் ஆஃப் ஏ பிளட் மெர்ச்சண்ட்' என்ற நாவல்தான் தற்போது ரத்தம் விற்பவனின் சரித்திரமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் மைய பகுதியில் கதை நிகழ்கிறது.  இதுகாரும் திறக்கப்படாத சீனா கம்யூனிச கதைவுகளை சற்றே நெம்பி, நமது கையை பிடித்து சீனாவின் உள் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார் யூ ஹூவா.

இந்தியாவை போலவே ஆணாதிக்க குடும்ப சூழலை பிரதிபலிக்கும் சீனாவில், சதாரண சீனர்கள் வாழும் தெருக்களிலும், வீடுகளிலும், உள் முற்றங்களிலும், உள் அறைகளிலும், அடுக்களைக்குமாய் நம்மை நகர்த்தி செல்கிறது கதை. அன்றைய காலகட்டத்தில் ரத்தம் விற்பது என்பது சீனாவில் வாழும் ஏழைகளின் தொழிலாக இருந்தது. ரத்தம் விற்பது மூலமாக 35 யுவான்வரை கூலியாக தரப்பட்டது. இது ஆறு மாதங்கள் வயல்களில் விவசாயம் செய்தால் என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமானது.  வியற்வை சிந்தி கூலி பெறுவதும், ரத்தம் கொடுத்து பணம் பெறுவதும் ஒன்று போலவே கருதினர் அன்றைய சீனர்கள்.

மக்கள் தொகையில் உலகை மிஞ்சிவிட்ட ஒரு தேசத்தில் வறுமை என்பது வாசல்படி போன்றது.  பதற்றம் நிறைந்த மாவோ காலத்து சீனவின் குடும்ப வாழ்க்கையை முறையையும், இலகுவானதொரு அதினின்றும் சற்றே மாறுபாட்ட வாழ்வில கூறுகளையும் மிக நிதானமாக விவரிக்கிறார் யூ ஹூவா. வாழ்வின் படிமங்களையும் நுண்ணிய வாழ்வியல் முறைகளையும் மிக ஆனாயசமாக கடந்து  பயணிக்கிறது இன் நாவல்.

1960களில் பிறந்த  யூ ஹூவா  பிறந்தபோது நிலவிய கடும் பஞ்சம், லட்சக் கணக்கான சீனர்களை பலிகொண்டது. 1959ல் தொடங்கி மூன்றாண்டு  வரை பஞ்சம் நீடித்தது. அவரது மாணவப் பருவத்தில் சீனாவில் கலாச்சார புரட்சி நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டில் சீனர்கள் சந்தித்த துன்பியல் வாழ்க்கை முறையை விஷமத்தனமான நகைச்சுவையோடு சொல்கிறது இன் நாவல். 

ரத்தம் கொடுக்கும் முன்னர், சிறுநீர் கழித்துவிட்டால் அது ரத்தமாக மாறாமல் சிறு நீராக வெளியே வீணாக போய்விடும்  என்பதால் ரத்தம் கொடுக்கும்வரை சிறு நீர் கழிக்காமல் இருப்பது போன்ற கிராமத்து அறியாமை இன் நாவல் முழுவதும் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. 303 பக்கம் கொண்ட இப் புகழ்பெற்ற நாவலை சந்தியா பதிப்பத்தினர் வெளியீட்டுள்ளனர். இன் நாவல் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. இன் நாவலை எழுத்தாளர் யூமா வாசுகி மொழி பெயர்த்துள்ளார்.

யூ ஹூவா சீனாவின் மரபுகளை மீட்டெடுக்கும் ஒரு நம்பிக்கை நச்சத்திரமாக துளிர்த்து இருக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் பேசப்பட்ட, வாசகர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் பத்து நூல்களில் யூ ஹூவாவின் "ரத்தம் விற்பவனின் சரித்திரம்" இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மனித வாழ்வியலின் துயரங்களையும், தூசி படிந்த நினைவுகளையும் யார் சொன்னால் என்ன.....? எங்கிருந்து சொன்னால் என்ன.....? ரத்தம் விற்பவனின் சரித்திரம் சீன எல்லை கடந்து... இந்திய இதயத்தை தொட்டிருக்கிறது. படைப்பாளிக்கும் படிப்பவனுக்கும் பிரபஞ்சமே எல்லை.!.

-தோழன் மபா.

சனி, ஜனவரி 17, 2015

புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்கள்!.

38வது சென்னை புத்தகக் காட்சி இதோ முடிவுறும் தருவாயில் இருக்கிறது. மக்கள் சாரி சாரியாக புத்தகங்களை சுமந்து வெளியேறுகிறார்கள்!. சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்!. உங்களுக்கு(ம்) பயன்படும் என்றே இந்த பட்டியலைத் தருகிறேன்.

இனி....ஓவர் டூ புத்தக பட்டியல்.....!

மாவோ வாழ்க்கை வரலாறு - ஃப்லிப் ஷார்ட். விடியல் பதிப்பகம்.  விலை ரூ.350/- .

பொதுவுடமை லட்சியத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவனின் வாழ்க்கை வரலாற்று நூல். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களைப் பற்றி நிறைய நூல்கள் வந்துள்ளன. மாவோவைப் பற்றி அதிகம் தமிழில் வந்ததில்லை. அந்த இடத்தை நிரப்ப இன் நூல் வெளிவந்துள்ளது.
****
ஒரு பனங்காட்டு நரி-மு.சுயம்புலிங்கம். உயிர்மை பதிப்பகம். விலை ரூ.90
 
வெள்ளாந்தியா இருக்கிற மனுசன், வெள்ளாந்தியா ஒரு கத சொன்னா எப்படி இருக்கும்?. அப்படி இருக்கு இந்த கத!.
***

தமிழ் மண்ணின் சாமிகள்-மணா.துடியா இருக்குற நம்ம ஊரு சாமிங்கள, தேடி போயி எழுதியிருக்கிறாரு மணா. தமிழன் சாமிக்கு இப்பதான் வரம் கெடைச்சிருக்கு?.
உயிர்மை பதிப்பகம். விலை ரூ.40.
***

கரிச்சான் குஞ்சு- கே.ஜி. சேஷாத்ரி.
ஆடுதுறை ஸ்ரீ குமரகுருபாரர் சுவாமிகள் மேல் நிலைப் பள்ளியில் படித்தபோது, பள்ளி ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா 'கரிச்சான் குஞ்சு' வந்திருந்தார். மேல சட்டை போடாம பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு வந்தார். அவரது பெயர்  கொஞ்சம் வினோதமக இருந்ததால ஆளை போலவே அந்த பெயரும் என் மனசுல ஒட்டிகிடுச்சி.  அவரது பெயருக்காவே அவரை எக்கி நின்று வேடிக்கை பார்த்தோம்.
சாகித்திய அகாதமி. விலை ரூ.25.
****

தமிழகப் பழங்குடிகள். பக்தவத்சல பாரதி.மானிடவியலில் தொல்குடிச் சமூகம் பற்றிய ஆய்வு முக்கியமானது. இந்த நூல் ஆதிசமூக நிலையிலிருந்து இன்றைய நவீன காலம் வரை பதிவு செய்திருக்கிறது.
அடையாளம் பதிப்பகம். ரூ.170
***

தியாகசீலர் கக்கன், முனைவர் இளைசை சுந்தரம்.காமராஜரைப் பற்றி நினைவு கூறும் போது, எப்போதாவது தியாகி கக்கனைப் பற்றியும் கூறுவார்கள். கக்கனைப் பற்றிய அறிமுகம், நம்மிடம் அம்மட்டுமே. அந்த குறையை போக்க வெளிவந்திருக்கிறது இன் நூல். கக்கனை பற்றிய மிக உயர்வான நூல். மதுரா பாலனின் பெரும் முயற்சியால் இன் நூல் வெளிவந்திருக்கிறது. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.
மதுரா வெளியீடு. விலை 150.
 ***

காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம். தமிழில் ஞானி.
காவியின் பயங்கரம் பற்றிய சிறு கையேடு, ஞானியின் ஞானபானுவில் வாங்கியது.
 ***
அயோக்கியர்களும் முட்டாள்களும்- ஞானி.
சமூகத்தில் இருக்கும் அயோக்கியர்களையும் முட்டாள்களையும் பற்றிய ரசனையான அதே சமயத்தில் ரகளையான புத்தகம்.
அன்னம் வெளியீடு. விலை ரூ70.
***

கவிதையும் கத்திரிக்காயும்-விக்கிரமாதித்யன். 
நக்கீரன் வெளியீடு விலை ரூ.90

கவிதைக்கும் கத்திரிக்காயுக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள்?. கவிதையோடு எதையும் லிங்க் செய்துவிடலாம்.
சாம்பிளுக்கு ஒன்று!.

பொருநைவண்டல் பூராவும்
புதுமைபித்தன்
காவேரி தீரம்
கு.ப,ரா
அந்த கொங்குச்சீமைக்கு
ஆர்.சண்முகசுந்தரம்
கரிசலுக்கொரு
கி.ராஜநாராயணன்
விக்ரமாதித்யனை
வகைப்படுத்து பார்ப்போம்.
***
.
நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா.
அடையாளம் பதிப்பகம். ரூ.120

ஓராண்டுக்கு முன்பு எக்ஸ்பிரஸ் குழுமம் சென்னையில் நடத்திய கல்வி தொடர்பான ஒரு அமர்வில் காஞ்சா அய்லய்யா உறையாற்றினர். செக்குலரிசம் பற்றிய அவரது பேச்சு மிகுந்த வரவேற்பை பெற்றது. ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறை தலைவர். 'Why i am not a Hindu?' என்று ஆங்கிலத்தில் எழுதி பிரசித்துபெற்ற இன்னூல் தற்போது தமிழில் வெளிவந்துள்ளது. சாதிய பாகுபாடு மிகுந்த ஆந்திராவின் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தோன்றியவர். விளிம்பு நிலை மனிதர்களுக்கான இவரது ஆங்கில கட்டுரைகள் எப்போதும் கவனிக்கக்கூடியவை. 'நலுப்பு' என்ற தலித் பகுஜன் இதழின் நிறுவனர். கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
****

மசால் தோசை 38 ரூபாய். வா.மணிகண்டன். யாவரும்.காம். விலை ரூ.110/-
இணைய எழுத்தாளரான வா,மணிகண்டன் வளரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். தற்போதைய இணைய உலகில் பெரும் பட்டாளத்தை வாசகராக கொண்டவர்.

***
மெனிஞ்சியோமா- கணேச குமரன். யாவரும்.காம். விலை ரூ.80/-
யாவரும்.காமின் புதிய வெளியீடு என்பதால் வாங்கினேன். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் முனைப்போடு செயல்படுகின்றது யாவரும்.காம். புதிய சிந்தனையோடு களம் இறங்கியிருக்கிறார் எழுத்தாளர். பாராட்டுவோம்!.
***
கார்காத்தார் இன வரலாறு. சுப்பிரமணியன் பிள்ளை. விலை ரூ.175/- சந்தியா பதிப்பகம்.
அன்றைய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தின் அதிகாரம் மிக்க ஒரு சமூகம் கார்காத்தார். நகரத்தார் பற்றி ஏகத்திற்கும் பதிவுகள் இருக்கிறது, அனால். கார்காத்தார் பற்றி எந்த பதிவும் இது வரையில் இல்லை. அக் குறையை போக்க வந்திருக்கிறது இப் புத்தகம். தமிழனி வரலாற்றை அறிந்துக் கொள்ள சமூகம் சார்ந்த புத்தகங்கள் வாசிக்கப்படவேண்டிய ஒன்று!.
***
பூனை எழுதிய அறை -கல்யாண்ஜி. விலை ரூ.50. சந்தியா பதிப்பகம்

கல்யாண்ஜியின் கவிதைகள் எப்போதும் கவனத்திற்கு உரியவை. பசாங்கற்ற ஒரு மனிதன்  நெரிசல் மிகுந்த சாலையில் சட்டதிட்டதிற்கு உட்பட்டு நடைபாதையில் நடப்பது போல் அமைந்து விடுகிறது அவரது கவிதைகள்!.
***

ஆதி திராவிடர்கள் மாநாடுகள்-தொகுப்பாசிரியர் வாலாசா வல்லவன். தமிழ் குடிஅரசுப் பதிப்பகம். விலை ரூ.175.

ஆதி திராவிடர்கள் மாநாடுகள் என்ற இன் நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகள் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பூர்வகுடிகளே இவ் உலகில் புறக்கணிக்கப்படும் ஒரு சமூகமாக அமைந்துவிடுவது ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழையாகும். அந்த பிழையை நீக்க ஆதி திராவிடர்களெடுத்த முயற்சிகள் அக் கால நடையில் பதிவு செய்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று!.
***

பொசல்-கவிதா சொர்ணவல்லி. நிலமிசை பதிப்பகம். விலை.ரூ.80/-.
மண் மனம் வீசும் கதை தொகுப்பு. பொசல் என்ற வார்த்தைக்காகவே இப் புத்தகத்தை எடுத்தேன். அது சரி.....பொசல் என்றால் என்ன.....?
***

பூமணி சிறுகதைகள்- பூமணி. நற்றினை பதிப்பகம். விலை.ரூ.400/-
சாகித்திய அகாடமி விருதுப்பெற்ற, எழுபதுகளில் ஆற்றல்மிக்க சிறுகதைக் எழுத்தாளர்களில் ஒருவரான பூமணியின் சிறுகதை தொகுப்பு!. பூமணி தனது சிறுகதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி.
***

தாத்தா பாட்டி சொன்ன கதைகள்-கழனியூரான். பாரதிபுத்தகலாயம். விலை ரூ.60.
இந்த காலத்தில் எந்த தாத்தாப் பாட்டியும் கதை சொல்வதில்லை. யாரும் தாத்தாவாக மாறுவதுமில்லை. பாட்டிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.  புத்தகத்தில் படித்தே குழந்தைகள் புரிந்துக் கொள்ளவேண்டு. என் மகள் தேர்ந்தெடுத்தப் புத்தகம்.
***

வியாழன், டிசம்பர் 25, 2014

பாரதிராஜாவை மறக்கலாமா......?!

 
 எழுத்தாளர் சுரா
 
 
தமிழ் திரைப்பட உலகை தங்களுடைய அபார திறமையால் வளர்த்த இயக்குநர்களைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.அப்போது என் மனதில் திரும்ப திரும்ப வலம் வந்தவர் பாரதிராஜா.

தான் இயக்கிய படங்களின் மூலம் தமிழ் படவுலகிற்கு பாரதிராஜா எவ்வளவு புகழையும்,பெருமையையும் சேர்த்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது,எனக்கு அவர் மீது அளவற்ற மரியாதை உண்டாகிறது.

என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது.

     1977 ஆம் ஆண்டு...அப்போது நான் என் பட்டப் படிப்பை முடித்திருக்கிறேன்.அந்தச் சமயத்தில்தான் பாரதிராஜா இயக்கிய முதல் படமான 'பதினாறு வயதினிலே' திரைக்கு வருகிறது.கமல்,ஸ்ரீதேவி இணைந்து நடித்த அப்படத்தில் வில்லனாக நடித்தவர் ரஜினி.படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு.இசையமைத்தவர் இளையராஜா.சப்பாணியாக கமல் நடித்திருந்தார்.பரட்டையாக ரஜினி.மயிலாக ஸ்றீதேவி.படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.எங்கு பார்த்தாலும் அந்தப் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசினார்கள்.பத்திரிகைகள் அப்படத்தை தலையில் வைத்துக் கொண்டாடின.'யார் இந்த பாரதிராஜா?எங்கிருந்து இப்படியொரு திறமைசாலி படவுலகிற்கு வந்தார்?'என்று ஆச்சரியப்பட்டு எழுதின.இவற்றையெல்லாம் படித்து விட்டு, நான் படம் பார்க்கச் சென்றேன்.உண்மையிலேயே நான் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன்.இதுவரை தமிழில் பார்த்திராத ஒரு புது வகை சினிமா ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.உண்மையான கிராமத்தை படத்தில் பார்த்தேன்.இளையராஜா படத்தில் ஆட்சி புரிந்திருந்தார்.பாடல்கள் அத்தனையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.நிவாஸ் ஒளிப்பதிவில் தன் திறமை அத்தனையும் வெளிப்படுத்தியிருந்தார்.நடிகர்களும்,நடிகைகளும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள்.மிகச் சிறப்பாக திரைக்கதை அமைத்து புதுமையான பாணியில் படத்தை இயக்கியிருந்தார் பாரதிராஜா.படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் உள்ளங்களிலும் பாரதிராஜா நிறைந்து நின்றிருந்தார்.என் உள்ளத்திலும்தான்.தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலை வீச ஆரம்பித்து விட்டது,ஒரு புதிய அத்தியாயம் பிறந்து விட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன்.தலையை நிமிர்த்தி திரையரங்கை விட்டு வெளியே வந்தேன்.'பதினாறு வயதினிலே'திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் சிறப்பாக ஓடி சாதனை புரிந்தது.25 வாரங்கள் ஓடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படம் 'கிழக்கே போகும் ரயில்'.சுதாகர் என்ற புதிய கதாநாயகனும்,ராதிகா என்ற புதிய கதாநாயகியும் அறிமுகம்.முற்றிலும் ஒரு புதிய பாணியில் படத்தை இயக்கியிருந்தார் பாரதிராஜா.அவர் நினைத்திருந்தால்,கமல் அல்லது ரஜினியை வைத்தே தன் அடுத்த படத்தையும் இயக்கியிருக்கலாம்.அப்படிச் செய்யாமல் தன்னுடைய திறமையை முழுமையாக நம்பி,புதுமுகங்களை வைத்து படத்தை இயக்கிய பாரதிராஜாவை எனக்கு மிகவும் பிடித்தது.இளையராஜா கோவில்மணி ஓசைதனை,மாஞ்சோலை கிளிதானோ,பூவரசம்பூ பூத்தாச்சு ஆகிய பாடல்களின் மூலம் அந்த படத்தை எங்கோ கொண்டு சென்றிருந்தார்.நிவாஸ் ஒளிப்பதிவில் முத்திரை பதித்திருந்தார்.கிராமத்தில் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி கதாநாயகனை முதல் தடவையாக நான் தியேட்டரில் பார்த்தேன்.அவன் சென்னைக்கு புறப்பட்டு வந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரப் போவதை,அந்த கிராமத்தின் வழியே வரும் புகை வண்டியின் பின் புறத்தில் 'நம் வாழ்க்கையில் வசந்தம் பிறந்தது' என்று எழுதி அனுப்புவான்.அதைப் பார்த்து பரஞ்சோதியின் காதலியான பாஞ்சாலி 'பூவரசம்பூ பூத்தாச்சு'என்று குதூகலித்து பாட்டு பாடுவாள்!என்ன உயர்ந்த கற்பனை!மதுரை கல்பனா திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த என் மனமும் ராதிகாவுடன் சேர்ந்து துள்ளி குதித்தது.அவருடன் சேர்ந்து நானும் ஆனந்த நடனம் ஆடினேன்.அதில் இருந்த 'பட்டாளத்தான்' கதாபாத்திரம் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்தது.

கிராமத்து மனிதர்களின் முகத்தில் கரியைப் பூசி விட்டு,கிழக்கே போகும் ரயிலில் ஏறி தப்பித்துச் செல்லும் அந்த இளம் காதல் ஜோடிகளை படம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை உள்ளங்களும் வாழ்த்தின.காதலர்களை வாழ வைத்த பாரதிராஜாவையும்.

அந்தப் படம் சென்னை தேவி காம்ப்ளெக்ஸில் 50 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது.
கிராமிய பாணி படங்கள் மட்டும்தானா,தன்னால் நகரத்து பின்னணியில் ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழ் படத்தை இயக்கவும் தெரியும் என்பதை பாரதிராஜா 'சிகப்பு ரோஜாக்கள்'படத்தை இயக்கியதன் மூலம் நிரூபித்தார்.இளையராஜா பாடல்களிலும்,பின்னணி இசையிலும் அபார சாதனை புரிந்திருந்தார்.பாரதிராஜாவிற்கு இன்னொரு வெற்றிப் படம்!
அடுத்து பாரதிராஜா இயக்கிய படம் 'புதிய வார்ப்புகள்'.கதாநாயனாக பாக்யராஜ் அறிமுகம்.கதாநாயகியாக 'லக்ஸ்'சோப் விளம்பரப் படங்களில் நடித்த ரத்தி அக்னிஹோத்ரி.ஒரு கவித்துவமான கிராமத்து காதல் கதை.கவுண்டமணி சுய உணர்வற்ற நிலையில் இருக்கும் ரத்தியின் கழுத்தில் தாலியைக் கட்டி விடுவார்.'உனக்கு இது தாலியாக இருக்கலாம்.எனக்கு இது சாதாரண கயிறு'என்று கூறி,ரத்தி அதைக் கழற்றி வீசி எறிவார்.அதற்கு முன்பு இப்படியொரு புதுமைக் காட்சியை நாம் எந்த தமிழ் படத்திலும் பார்த்தது இல்லையே!ரத்தி தாலியைக் கழற்றி விட்டெறிந்தபோது,மொத்த தியேட்டரும் கைத்தட்டி ஆரவாரித்தது.பாரதிராஜாவிற்கு எவ்வளவு பெரிய வெற்றி!இளையராஜாவின் இசையில் 'இதயம் போகுதே' ஒலித்தபோது,பாக்யராஜுடன் சேர்ந்து மக்களும் பேருந்தில் பயணித்தனர்.அந்த காதலர்களுக்காக கண்ணீர் விட்டனர்.இதுதான் உண்மை.பாரதிராஜாவிற்கு இன்னொரு வெற்றி மகுடம்!

பாரதிராஜா அடுத்து இயக்கிய படம் 'நிறம் மாறாத பூக்கள்'.அதுவும் ஒரு வெற்றிப் படமே! தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்கள்!யாரும் புரியாத சாதனை... பாரதிராஜாவின் அடுத்த படம் 'கல்லுக்குள் ஈரம்'.இயக்கம் என்று ஒளிப்பதிவாளர் நிவாஸின் பெயர் வரும்.டைரக்ஷன் மேற்பார்வை என்று பாரதிராஜாவின் பெயர் வரும்.யாரும் இதற்கு முன்பு தமிழ் படங்களில் தொடாத கதைக் கரு.ஒரு கிராமத்திற்கு படப்பிடிப்பிற்கு வரும் படப்பிடிப்பு குழு,அதைத் தொடர்ந்து அங்கு உண்டாகும் சில நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்...இதுதான் அப்படத்தின் கதை.அருணா,விஜயசாந்தி என்ற இரு புதுமுக நடிகைகள் அதில் அறிமுகம்.மாறுபட்ட கதை.எனினும்,வர்த்தக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை.பாரதிராஜாவின் கலையுலக பயணத்தில் அவருக்கு கிடைத்த முதல் தோல்வி அது!

1980ல் பாரதிராஜா இயக்கிய படம் 'நிழல்கள்'.பாரதிராஜாவிற்கும் நிவாஸுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி இருவரும் பிரிய பி.கண்ணன் ஒளிப்பதிவாளராக நுழைந்தார்.வைரமுத்து பாடல் எழுதிய முதல் படம்.வேலையில்லா திண்டாட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட கதை.ராஜசேகர்,ரவி,சந்திரசேகர்,சுவிதா,ரோகிணி-புதுமுகங்கள் என்று தோன்றாத அளவிற்கு பாத்திரங்களுக்கு உயிர தந்திருந்தனர்.இளையராஜாவின் இசையமைப்பில் இது ஒரு பொன்மாலைப் பொழுது.பூங்கதவே தாழ் திறவாய் ஆகிய பாடல்கள் தெருவெங்கும் முழங்கின.அனைத்தும் இருந்தும்,ஏதோ ஒன்று இல்லை.விளைவு-வர்த்தக ரீதியாக படம் தோல்வி.பாரதிராஜாவிற்குக் கிடைத்த இரண்டாவது தோல்வி.
அடுத்து பாரதிராஜா இயக்கிய படம் 'அலைகள் ஓய்வதில்லை'.கார்த்திக் கதாநாயகனாகவும், ராதா கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள்.தியாகராஜனும்,கமலா காமேஷும்.ஒரு முற்போக்கான காதல் கதை.ஒரு பிராமண இளைஞனுக்கும்,ஒரு கிறிஸ்தவ மீனவ பெண்ணுக்கிடையே மலரும் காதலை கவித்துவமாக வெளிப்படுத்தியிருந்தார் பாரதிராஜா.இளையராஜா இசை சாம்ராஜ்யமே நடத்தியிருந்தார்.அவரின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர்தான் படத்தின் தயாரிப்பாளர்.படம் சூப்பர் ஹிட்! 25 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தது.அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.வெற்றி விழாவில் கலந்து கொண்டு கேடயங்களை வழங்கினார்.படத்தின் உச்சக்கட்ட காட்சியையும்,பாரதிராஜாவையும் அவர் மனம் திறந்து பாராட்டினார்.

கமல்ஹாசன்,ராதா,மாதவி,ஸ்வப்னா ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கிய க்ரைம் கதை 'டிக்...டிக்...டிக்'.கமல் சட்டையை ஸ்வப்னா மாட்டிக் கொள்ள,ஸ்வப்னாவின் ஆடையை அணிந்து கமல் இருக்க.கீழே போலீஸ் வேன் வர..அந்த ஒரு காட்சி போதும் பாரதிராஜாவின் திறமையைப் பறை சாற்றுவதற்கு!அடுத்து பாரதிராஜா இயக்கிய அருமையான படம் 'மண் வாசனை'.பாண்டியன் கதாநாயகனாகவும்,ரேவதி கதாநாயகியாகவும் அறிமுகமானார்கள்.உண்மையிலேயே மண் வாசனை நிறைந்த படம்தான்.இளையராஜாவின் அற்புதமான இசை!வைரமுத்துவின் வைர வரிகள்!ரேவதியின் அருமையான நடிப்பு!பாரதிராஜாவின் திறமை வாய்ந்த இயக்கம்!அனைத்தும் சேர்ந்து படத்தை வெற்றிப் படமாக ஆக்கின.அடுத்து ஏவிஎம்மின் 'புதுமைப் பெண்'.மீண்டும் பாண்டியன்-ரேவதி ஜோடி.இளையராஜாவின் இசை,வைரமுத்துவின் பாடல்கள்,பாரதிராஜாவின் சிறந்த இயக்கம் படத்தை வெற்றிப் படமாக ஆக்கின.தமிழக அரசு அந்தப் படத்திற்கு வரி விலக்கு அளித்தது.

'சங்கராபரணம்' ஓடி எங்கு பார்த்தாலும் அப்படத்தின் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த நேரம்.அதேபோல கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் தந்து ஒரு படத்தை இயக்கினால் என்ன என்று நினைத்த பாரதிராஜா இயக்கிய படம் 'காதல் ஓவியம்'.இளையராஜா இசையமைத்த அருமையான பாடல்களைக் கொண்ட படமது.கண்ணன் என்ற புதிய கதாநாயகன் அதில் அறிமுகம்.கதாநாயகி ராதா.இசையில் தோய்ந்த கதாநாயகனுக்கு பார்வை சக்தி இல்லை.அதற்காக காதல் வராமல் இருக்குமா?பாடல் காட்சிகளில் திரையரங்கில் கூச்சல்...குழப்பம்...விஷில்!ஏன்?பாரதிராஜாவிற்கே புரியவில்லை.கூச்சல் போடப்பட்ட பாடல் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன.ப.டம் தோல்வி!

அந்த தோல்வியால் உண்டான கோபத்தில் பாரதிராஜா இயக்கிய படம்தான் 'வாலிபமே வா வா'.ஆண் தன்மையற்ற கதாநாயகனைப் பற்றிய கதை.கதாநாயகன் கார்த்திக்.படம் பரவாயில்லாமல் ஓடியது.ஆனல்,'இந்தப் படத்தை பாரதிராஜா இயக்க வேண்டுமா?' என்ற விமர்சனம் எழுந்தது.

கே.பாக்யராஜ் கதை எழுத,பாரதிராஜா இயக்கிய படம் 'ஒரு கைதியின் டைரி'.கமல் ஹீரோ.அருமையான திரைக்கதை.விறுவிறுப்பான காட்சிகள்.கமல்,ரேவதி ஆகியோரின் அருமையான நடிப்பு படத்திற்கு சிறப்பு சேர்த்தது.ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற படமது.

ரஜினி நடித்து,பாரதிராஜா இயக்கிய 'கொடி பறக்குது' வெற்றி பெறவில்லை.
நடிப்பு மாமேதை சிவாஜி கணேசனை வைத்து பாரதிராஜா இயக்கிய 'முதல் மரியாதை' காலமெல்லாம் பாரதிராஜாவின் பெயரைக் கூறிக் கொண்டேயிருக்கும்.'பூங்காற்று திரும்புமா?' பாடலைக் கேட்கும்போதெல்லாம் சிவாஜி,பாரதிராஜா,இளையராஜா,வைரமுத்து அனைவரும் நம் நினைவில் வந்து கொண்டே இருப்பார்கள்.

பாரதிராஜாவின் குறிப்பிடத்தக்க படம் 'கடலோரக் கவிதைகள்'அவரின் துணிச்சலான முயற்சி.'வேதம் புதிது'.'வா ராசா வா'என்று சரிதா சிறுவனை வீட்டிற்குள் அழைக்கும் காட்சி மனதிலேயே நிற்கிறது.

'புது நெல்லு புது நாத்து'-பாரதிராஜா இயக்கிய இன்னொரு நல்ல படம்.'வர்ற லட்சுமியை யாருடா தடுத்து நிறுத்த முடியும்?நான் எப்பவும் நல்லதுதான் சொல்லுவேன்.நல்லதுதான் செய்வேன்.இந்த ஜனங்கதான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க' என்ற நெப்போலியனையும்,கதாநாயகன் ராகுல் தோளில் போட்டு தூக்கிக் கொண்டு போகும்போது,அவரின் முதுகை விரல்களால் வருடும் சுகன்யாவையும் எப்படி மறக்க முடியும்?

பாரதிராஜாவை புகழ் குன்றின் உச்சியில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்த படம் 'கிழக்குச் சீமையிலே'.விஜயகுமார்,ராதிகா,நெப்போலியன் மூவரும் கதாபாத்திரங்களாகவே அதில் வாழ்ந்திருந்தார்கள்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தென் கிழக்குச் சீமையிலே,மானூத்து மந்தையிலே,ஆத்தங்கரை மரமே ஆகிய பாடல்கள் இப்போதும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றனவே!

வித்தியாசமான கதை என்று இயக்கிய 'என் உயிர் தோழன்'..தேசிய விருதுகள் பெற்ற 'கருத்தம்மா'...'அந்தி மந்தாரை'...'கடல் பூக்கள்'...மாறுபட்ட முயற்சியான 'கேப்டன் மகள்'...சிவாஜி நடித்த 'பசும்பொன்'..ஏ.ஆர்.ரஹ்மானின் இனிய பாடல்களைக் கொண்ட 'தாஜ்மஹால்'...ஆங்கிலேயர் காலத்து காதல் கதையான 'நாடோடித் தென்றல்'...எதிர் பார்த்த வெற்றியைப் பெறாமல் போன 'அன்னக்கொடி'...விஜயகாந்த் நடித்த 'தமிழ்செல்வன் ஐ.ஏ.எஸ்...நல்ல முயற்சியான 'கண்களால் கைது செய்'....அருமையான படமான 'பொம்மலாட்டம்'...இப்படி பாரதிராஜாவின் சாதனைகளையும்,பெருமைகளையும் கூறிக் கொண்டே போகலாம்.

இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்,யாரும் படத்தை இயக்கலாம்,யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம் என்ற சூழ்நிலை உண்டாகி,கூட்டம் கூட்டமாக ஆட்கள் வெளியூர்களிலிருந்து தினமும் படவுலகைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்...அவர்கள் பாரதிராஜாவிற்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.அவர்தான் கோட்டைகளைத் தகர்த்தெறிந்து இந்த அருமையான சூழ்நிலையை உண்டாக்கிய மாமனிதர்.அவர் போட்ட பாதையில்தான் இன்று எல்லோரும் சந்தோஷமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.பாதை போட்டவரை மறக்கலாமா?
 
(எழுத்தாளர் சுரா  தனது முக நூலில் எழுதிய கட்டுரை! )

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...