ஞாயிறு, ஜூன் 21, 2015

காக்கா முட்டை இயக்குனரின் வீடியோ பேச்சு!

               



      
      காலத்தின் முட்டை! 

           காக்கா முட்டை இயக்குனரின் உடனடி நேர்காணலாகவே அமைந்துவிட்டது,  கடந்த வாரம் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. கா.மு இயக்குனர் மனிகண்டன் பேச பேச நமக்குள் பல்ப் எரிந்தது!. மனிதர் மிக இயல்பாக தனது வாழ்க்கையைப் பற்றி கூறினார். எந்த பம்மாத்தும் இல்லாத அவரது பேச்சு நிச்சையம் சாதிக்க துடிப்பவர்களுக்கு உற்சாக டானிக்குதான்.

வாழ்க்கையில் வலி என்பது காசு பணத்தால் அளவிட முடியாதது.  வெற்றியோ விருதோ தொடாத மனிதனின் வலி என்பது உணர்வு ரீதியானது. சதா அவனை அது அரித்துக் கொண்டே இருக்கும். அவனது இலக்கை அடையும் வரை அந்த வலியை அவன் அடைகாத்துதான் ஆக வேண்டும். தான் அடைகாத்த அந்த வலியை அன்று மணிகண்டன் நமக்காக இறக்கிவைத்திருக்கிறார்.

இனி அவர் பேசிய வீடியோ தொகுப்பு....






புதன், ஜூன் 03, 2015

நஞ்சுண்ட நா! தமிழுண்ட நா!





நெஞ்சுக்கு நீதியாய் நின்று
எரிதழல் தன்னில் ஏந்தி
திருக்குவளை ஈன்றெடுத்த
தங்கமென தமிழுக்கு - நீ வந்தாய்.

நீ வந்ததிந்த நேரமோ...?
சூது மதியார் சூழ் நம் நிலத்தை
ஏதுமறியார் நம் தமிழர்
தலை நிமிறா நிலைகண்டு,

தமிழனை தடுத்தாட்கொண்டு
போர்களத்தில் - நீ முன்னின்றாய்.

கரகரத்த குரல் தமிழனின்  குறளாக..
முன்னின்று வழி நடத்த முக உன் பிறப்பு
காலத்தின் கொடையென்றோ...!
மழைக் காலத்தின் குடையன்றோ...!

அகவை தொன்னுற்றிரண்டாயினும்
முக'வை முன்னின்று வழி நடத்தும் முத்தமிழுக்கோர்
வயது மூவாயிரமாண்டுகள் மேலே
நனிதமிழுக்காற்றுவாய் நல் தொண்டினை அதற்குமேலே...!

நஞ்சுண்டநா வசை பாடும் -உன் மேல்
தமிழுண்டநா என்றும் இசைகொள்ளும் உன் பால்
பகுத்தாராய்ந்தால் நாங்கள் உன் பக்கம்
பகுத்தறிவற்றோர் என்றென்றும் நம் எதிர்பக்கம்!.

நீ இல்லாதுபோனால் அன்றுணருவார் -உன் பெருமை
இருக்கின்ற நாளெல்லாம் எய்துவார் உன் மேல் அம்பை
இதை நான் சொல்லாது போனால்
உன் காலத்தில் வாழ்ந்த எனக்கென்ன பெருமை!.

எம் தலைவனே!
நீவீர் வாழ்க பல்லாண்டு!.

-மகேஷ் பத்மனாபன்!.
3/06/2015


வியாழன், மே 14, 2015

கூட்டுத் தொகையில் கோட்டைவிட்ட குமாரசாமி!.

           
            எந்த ஒரு நீதி மன்றத் தீர்ப்பும் இந்த அளவிற்கு கேலிக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகியதில்லை. இரண்டு நாளுக்கு முன்னர் நீதிபதி குமாரசாமியால் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு சமூக வலைத்தளங்களிலும், இணையத் தளங்களிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 19 வருடங்களாக நடைபெற்ற வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் (இந்த வார்த்தையை ஏனோ...நிறைய ஊடகங்கள் தவிர்த்து வருகின்றன) 919 பக்கத்தில் கடைசி இரண்டு பக்கங்கள் மட்டும் படித்து, 19 நிமிடத்தில் சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதத்திலிருந்து ஜெயலலிதாவை விடுவித்துள்ளார் குமாரசாமி.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்த ஊழலுக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்ற மனப்பான்மையில்தான் பெருவாரியன மக்கள் இருந்தனர். இப்படி ஒரே அடியாக விடுதலை செய்வார்கள் என்று அவர்கள் ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை..
கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஹா மாய்ந்து மாய்ந்து தீர்ப்பு சொல்லியதை ஒரே அடியில் வீழ்த்தி இருக்கிறார் குமாரசாமி.

வருமானத்திற்கு அதிகமாக 20 சதவீதம் வரை கூடுதலாக சொத்து சேர்க்கலாம் என்ற முந்தைய தீர்ப்புகளின் (CASE LAW) படி 10 சதவீதம்தான் சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு ஜெயலலிதா உட்பட நால்வரையும் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்திருக்கிறார் குமாரசாமி!.
இவர் கூறிய அந்த 10 சதவீதம்தான் தற்போது பிரச்சனைகளுக்கு   வித்திட்டிருக்கிறது.

கூட்டுத் தொகையில் கோட்டை விட்ட குமாரசாமி 76.76 சதவீதம் உள்ள அதிகப்படியான சொத்து குவிப்பை வெறும் 8.12 சதவீதம்தான் என்று கூறி மொத்த பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். இதுதான் இன்று பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. சகுனம் சொன்ன பல்லி கழனி பானையில துள்ளி விழுந்த கதையாக மாறிவிட்டது குமாரசாமியின் தீர்ப்பு.
'நீதியை நிதி வென்று விட்டது', 'வழங்கப்பட்ட தீர்ப்பா? இல்லை வாங்கப்பட்ட தீர்ப்பா?' போன்ற விமர்சனங்கள் தற்போது பகிரங்கமாக எழுந்துள்ள நிலையில், தீர்ப்பை விமர்சிக்கும் ஹோஸ்டோக்குகள் முக நூலிலும், கட் செவியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என்று மரபு இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அவையும் விமர்சனத்திற்கு ஆட்பட்டே இருக்கிறது!. அதுவும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தீர்ப்பு கூறிய குமாரசாமியே வெட்கப்பட்டு தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு தறிக் கெட்டு ஓடுவது போல் ஆகிவிட்டது?. இன் நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்ய குமாரசாமி முயலுவதாக செய்தி வந்துள்ளது, கவனிக்கதக்கது.

முந்தைய குன்ஹா தீர்ப்பின் போது, மக்களின் அனுதாபத்தை அள்ளிய ஜெயலலிதாவிற்கு, இந்த முறை குமாரசாமியின் தீர்ப்பால் அது மிஸ்ஸிங் என்பதுதான் சோகத்திலும் பெரிய சோகம்.

சனி, மே 09, 2015

ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி!.



இந்திய-ரஷ்ய கலாச்சார நட்புறவு மையம் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில்  அண்மையில் நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

ஜெயகாந்தன் கம்யூனிச மேடைகளில் களமாடிய பொழுதுகளை மிக அழகாக, மிக சொற்பமான புகைப்படங்களைக் கொண்டு பதிவு செய்திருக்கின்றனர். ஒரு எழுத்தாளராகவே மட்டும் அறியப்பட்ட நமக்கு, அவர் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர் போலவே காட்சிப்படுத்தப்படுகிறார். அதுவும் சில புகைப்படங்களை பார்க்கும் போது, அது ஜெயகாந்தன் தனா? என்ற பிரமிப்பும் நமக்குள் ஓடுகிறது. 

விளிம்பு நிலை மனிதர்களுக்கான முன்னெடுப்புகளில் சிங்கம் போன்ற அவரது ஆளுமையை அவரது படங்களில் காண முடிந்தது சிறப்பு!.

ஜெயகாந்தனின் 50 ஆண்டுகளான நண்பரான இசைஞானி இளையராஜாவும், ஜெயகாந்தனை நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறார், அதையும் இப்படி கண்காட்சிப்  படுத்தினால், வாசகனும் ரசிகனும் ஒரு சேர மகிழ்வான், 

 எனது மொபைல் காமிராவால் எடுக்கப்பட்டது,  அந்தளவிற்கு துல்லியமாக இருக்காது. பொறுத்தருள்க!.







போராட்ட களத்தில்


கண்ணதாசன் பக்கத்தில் அது ஜெயகாந்தன் தானே ...?!



புதன், ஏப்ரல் 08, 2015

குருபீடம் நோக்கி... வா மணிகண்டன்?



இணைய எழுத்தாளர் வா.மணிகண்டனின் 'லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன்' மற்றும் 'மசால் தோசை-38 ரூபாய்' ஆகிய இரண்டு நூலுக்கான விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் யாவரும்.காம் சார்பாக கடந்த ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. ஒரு அடிப்படை சம்சாரியின் ஞாயிற்றுக் கிழமை சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அரங்கு நிறைந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் புத்தக விமர்சனக் கூட்டங்களில் பேச வருபவர்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏடாக் கூடாமா பேசி எதற்கு எழுத்தாளனை இம்சிக்க வேண்டும், என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாய் பாராட்டி, நாலு வார்த்தை பேசி இறங்கி விடுகின்றனர்.  இந்த கூட்டத்திலேயும் அதுதான் நடந்தது.

ஒரு மனிதனை மேடையில் வைத்துக் கொண்டு அவனை வாய்க்கு வந்தபடி புகழ்வது என்பது, அவனுக்கு அனஸ்தீஸிய கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது போன்றது.   அப்படி ஒரு அவஸ்தைக்கு ஆட்பட்டு நாற்காலியில் துவண்டுக் கிடக்கத்தான் முடிந்தது வா.மணிகண்டனால். வந்தவர்கள் எல்லாம் பாராட்டித் தள்ள முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்று, இன்னும் வா.மணிகண்டனுக்கு கை கூடவில்லை போலும்?.

இந்த காலமான காலத்தில படிக்க நேரம் இருக்காது என்பதை மிக நன்றாக உணர்ந்து இருக்குகிறார் மணிகண்டன். 'பாஸ்ட் ஃபுட்' வகையை சார்ந்த இவரது எழுத்துகள், மிக எளிதாக ஒரு வாசகனை உள்ளிழுக்கும் சக்தி கொண்டது. பெரிய தரவுகளையோ, சரித்திர ஆதாரங்களையோ, மண்டயை குழுப்பும் வார்த்தை பம்மாத்துகளோ எதுவுமின்றி, 'இந்தா, இதை வாங்கி அந்தப் பக்கம் வை' என்பதுபோல் எளிமையாக கட்டுரை கம் கதை சொல்வதில் இருக்கிறது இவரது வெற்றி!.

அதே நேரத்தில் வா. மணிண்டன் எழுத்தை  விமர்சனம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?. சொல்லுங்க....?. 

நோயாளர்களை பற்றியோ, அல்லது படிக்க பணம் இல்லாமல் தவிப்பவர்களை பற்றியோ வா.மணிகண்டன் தனது 'நிசப்தம்' வலைத்தளத்தில் எழுதும் போது, அது பொது கவனத்திற்கு வந்துவிடுகிறது.  அதற்கு உதவி செய்ய நிறைய ஆதரவு கரங்கள் நீண்டு விடுகிறது.  அப்படி கிடைக்கப்பெறும் தொகையை சரியான முறையில் பயனாளர்களுக்கு கொண்டு செல்ல ஒரு அறக்கட்டளையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அதில் தற்போது 10 லட்சம் வரை சேர்ந்திருக்கிறது. வா.மணிகண்டனின் எழுத்து வீச்சிற்கு இந்த பத்து லட்சம் பதம்!.  20 நிமிடத்தில்  ஒரு பதிவை எழுதிவிடுகிறார் என்றால் பார்த்துக்  கொள்ளுங்களேன்!.

விழாவில் இயக்குனர் கவிதா பாரதி, கார்டூனிஸ்ட் பாலா, தம்பி சோழன் கூத்துப் பட்டறை, நாகேஸ்வரன்,சைதை புகழேந்தி, கிருஷ்ண பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். வா.மணிகண்டன் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சிகளை ஜீவ.கரிகாலன் தொகுத்து வழங்கினார்.

மற்ற பிரபல எழுத்தாளர்கள் போன்று நீங்களும்  'குரு பீடத்தை' நோக்கி போகிறீர்களா...? என்றொரு முக்கியமான கேள்வியை விழாவிற்கு வந்த ஒருவர் திரும்ப திரும்ப கேட்டார்.  "நான் அப்படி எல்லாம் போகலைங்க. அதிலெல்லாம் விருப்பமும் இல்லைங்க. நான் எழுதுவது 'நிசப்தம்' வாசகர்களுக்காகத்தான்" என்றார் மீண்டும் மீண்டும். ஏதோ "விதை விதைச்சேங்க.....வெள்ளாமை நல்லா வந்தது!" என்று எளிமையான விவசாயி சொல்வது போல் இருந்தது அவரது பேச்சு!.

அதிகம் கவனிக்கப் பெறும் எழுத்தாளனுக்கு 'குருபீடம்' என்பது தவிற்கமுடியாத ஒன்று. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னிச்சையாக அது நிகழ்ந்துவிடும். பாடாவதி சினிமா நடிகனுக்கு கூட அவனது ரசிகர்கள் குருபீடத்தை அமைத்து விடுகிறார்கள். எழுத்தாளனுக்கு அமைத்தால் என்ன பெரிய குடியா மூழ்கிவிடப் போகிறது?. தன்னியில்பாக நிகழ்ந்துவிடும் குருபீடத்தால் எழுத்தாளன் தன்நிலை மறந்தால், அது 'பலிபீடமாக' மாறும் என்பதையும் எழுத்தாளன் உணர்ந்திருக்க வேண்டும்.





வியாழன், மார்ச் 26, 2015

வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' வெளியீடு!



இடமிருந்து : பதிப்பாளர் வர்த்தமானன், வேலுர் கம்பன் கழக செயலாளர் இலக்குமிபதி, நூலின் உரையாசிரியர் எம்.கோவிந்தராஜன், பதிப்பக நிறுவனர் ஜெ.ஸ்ரீசந்திரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர்,பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரகந்தின் தலைவர் இல.கணேசன், கலைமகள் இதழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமனியன் & பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் உள்ளனர்.


             கடந்த ஞாயிறு அன்று வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' நூல் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது!. 

இரண்டு நாளுக்கு முன்னரே வர்த்தமானன் சார் கூப்பிட்டு, நீங்கள் அவசியம் விழாவிற்கு வரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். ஞாயிறுகளில் காலை 8 மணி என்பது எத்தனை அற்புதமானது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!. சென்னை போன்ற பெருநகர வீடுகளில் விடியாத(?) அந்த காலை 8 மணி என்பது, மற்ற நாட்களை போல் இல்லாமல், எந்த வித பரப்பரப்பும்மின்றி சோம்பிக் கிடக்கும். அந்த சோம்பலை உதறி தள்ளி வெளிவருவதே பெரும்பாடுதான். அந்தகாரத்தில் அலங்கோலமாகிப்போன பொழுதைப் போலவே ஞாயிறுகளின் காலைப் பொழுது இருப்பதாக எனக்குப்படும்.

விழா தொடங்குவதோ காலை 9 மணி. "பிரேக்பாஸ்ட் இருக்கு மகேஷ்" என்று வர்த்தமானன் சார் சொல்லிவிட்டார். சரி, அங்கு போய் காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பப் போகும்போது, அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அதற்கு பதிலளித்துக் கிளம்பவே அரைமணி நேரமாகிவிட்டது. அடித்துப்பிடித்து விழாவிற்கு வந்து சேர்வதற்கும், விழா தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. பசியை மறந்து அரங்கில் அமர்ந்து விட்டேன். விழா முடியும் போது மதியம் மணி ஒன்று!. 'செவிக்கு உணவில்லாத போதுதானே.. வயிற்றுக்கு  ஈயப்படும். இங்குதான் செவிக்கு உணவு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அப்புறம் எதற்கு வயிற்றுக்கு?' அதனால் பசிக்கவேயில்லை போலும்?!. 

துளசி இராமாயணம் புத்தகத்தை பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியீட, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொண்டார். காலை 9 மணிக்கு விழா அரங்கு நிறைந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இதையேதான் இல.கணேசனும் தனது பேச்சில் தெரிவித்தார். அவரது பேச்சை அப்போதுதான் முதன் முதலாக கேட்கிறேன். சும்மா சொல்லக் கூடாது பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவர் என்பதால் இலக்கியத்திலும் இராமாயணத்திலும் கொஞ்சம் விஸ்தாரமாகவே பேசினார். அதிலும் இராமாயணத்தை பற்றி கூறும் போது 'முடி'யை வைத்து அவர் பேசியது ரசிக்கும்படியாக இருந்தது.

வால்மீகி இராமாயணம் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால் சாமான்ய மக்களால் அதைப் படித்து புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அயோத்தி வாழ் மக்களின் அடிப்படை மொழியான 'அவதி' மொழியில் வெளிவந்து, சாமான்ய மக்களின் அறிவுப் பசியையும் ஆன்மீக பசியையும் ஒரு சேர போக்கிய துளசி இராமாயணம்தான் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. துளசிதாஸர் அருளிய 'இராம சரித்திர மனஸ்' என்ற இராமாயணமே பின்னர் எழுதியவரின் பெயரோடு 'துளசி இராமாயணம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத் துளசி இராமாயணத்தை தமிழில் மூன்று தொகுதிகளில் வெளியீட்டுள்ளது வர்த்தமானன் பதிப்பகம் இம் மொழிபெயர்ப்பினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். முனைவர் எம்.கோவிந்தராஜன்.

இந்த இடத்தில் நூல் ஆசிரியர் பற்றி கூறியே ஆகவேண்டும். அடிப்படையில் இந்தி ஆசிரியரான முனைவர் எம்.கோவிந்தராஜன் தமிழில் அசாத்திய திறமை படைத்தவர். இவ் விழாவில் தனது ஏற்புரையையும் நன்றியுரையையும் செய்யுள் பாணி கவிதை நடையில் சிறு புத்தகமாக அச்சிட்டு வழங்கி இருந்தார்!. அனைத்தும் 'ஏ' கிளாஸ் ரகம்!. 

அறிமுக உரையாற்றிய வர்த்தமானன் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ஸ்ரீ சந்திரன், கம்ப இராமாயணத்திற்கும் துளசி இராமாயணத்திற்கும் உள்ள   வித்தியாசத்தை மிக அழகாக எடுத்துரைத்தார். கம்பரின் இராமாயணத்தில்..... தனது அண்ணான இராவணனுக்காக பரிந்து வரும் கும்பகர்ணன், போரின் இறுதியில் தலை வெட்டப்பட்டு ஆழ் கடலில் விழுவது போல் எழுதி இருப்பார். துளசி இராமயணத்தில் கும்பகர்ணனின் தலை வெட்டப்பட்டு அத்தலை இராவணின் மடியில் விழுவது போல் எழுதப்பட்டு இருக்கும். இப்படி இரு கதைகளிலும் ஆங்காங்கே காணப்படும்  சிறு சிறு வித்தியாசங்களை அழகாக பட்டியலிட்டார். 

இப் பதிப்பகத்தின் வெற்றிக்கு வர்த்தமானன் அவர்களின் திட்டமிடலும், தொலை நோக்கு பார்வையுமே காரணம். புத்தகங்கள் விற்பனையில் மற்ற பதிப்பகங்களை காட்டிலும் வேறுபட்ட வியாபார உத்தியை கொண்டது வர்த்தமானன் பதிப்பகம். வர்த்தமானன் பதிப்பக நூல்களை நீங்கள் இவர்களிடம் மட்டுமே வாங்க முடியும். தங்களது தயாரிப்புகளை வாசகர்களிடம் நேரிடையாக கொண்டு சேர்க்கிறார்கள். விளம்பரங்கள் மூலம் தங்களது வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ள வர்த்தமானன் பதிப்பகத்திற்கு இது ஐம்பதாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது!.

வெள்ளி, மார்ச் 20, 2015

மாட்டிறைச்சி கவுச்சியும் விபச்சார புனிதமும்!

.

           செய்ய வேண்டிய  வேலைகள் எத்தனையோ இருக்க....அதை விடுத்து வெட்டி வேலை பார்ப்பவனை ..."செய்யிற வேலையை விட்டுவிட்டு, ஏண்டா செனப்பு சொறியிற என்று கேட்டு" கிராமத்தில் ஏகடியம் செய்வார்கள்.  அதை போல ஏகடியத்திற்கு ஆளாகியிருக்கிறது மகாராஷ்ட்டிரா பாஜக அரசு.

  மகாராஷ்டராவில்  மாட்டுக் கறி விற்பனைக்கு தடை விதித்து பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது, ஆளும் பாஜக அரசு!.. இந்தியாவில எந்த ஒரு மாநில அரசும் முக்கியத்துவம் கொடுக்காத விஷயத்திற்காக ஒரு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறது. இச் சட்டத்தின் மூலம் நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை மதவாத பாஜக அரசு தீர்மானித்திருக்கிறது. இது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்மாதிரி சட்டமாகும். மக்களின் அன்றாட உணவு முறைகளில் இத்தகைய கெடுபிடிகள் வீண் பிரச்சனைகளையே ஏற்படுத்தும். 

 மகாராஷ்டிராவின் அப்போதைய  பாஜக சிவசேனா கூட்டனி அரசு விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர எண்ணி 1995 ம் ஆண்டு ஒரு மசோதாவை தாக்கல் செய்திருந்ததது. 19 ஆண்டு காலம் நிலுவையில் இருந்து வந்த அந்த மசோதாவை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் தூசித் தட்டி எடுத்து நிறைவேற்றியுள்ளனர்.  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அங்கீகாரத்தால் இச் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த சட்டப்படி மாட்டுக் கறியை விற்றாலோ, அல்லது வைத்திருந்தாலோ அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.  பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கோட்பாடுகளையும் கொள்கைளையும் மீளூருவாக்கம் செய்வதில் சங்பரிவார்கள் அதிக முணைப்புக் காட்டி வருகிறது என்பதற்கு மகாராஷ்டிரா ஒரு உதாரணம்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் பழமைவாதிகள்  விதிக்கும் சட்டங்களுக்கும், செயல்களுக்கும் இத்துத்துவ பழமைவாதிகளின் சட்டங்களுக்கும் செயல்களுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை என்றுதான் தோன்றுகிறது?.
-----------------

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் மாட்டுக் கறி தொடர்பான ஒரு கட்டுரையை படித்திராவிட்டால், மாட்டுக் கறி மீதான எனது அபிப்ராயம் அப்படியேதான் இருந்திருக்கும். மனிதன் சாப்பிடக் கூடிய மாமிசங்களில் மாட்டுக் கறியும், இன்ன பிற இறைச்சிகளோடு ஒன்றே என்றும், அதை நிராகரிக்க தேவையில்லை என்றும், உலக நாடுகளில் மாட்டுக் கறியின் நிலையை அவதானித்து ஒரு நீண்ட கட்டுரையை தனது வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அது படிக்கவேண்டிய ஒன்று!. இல்லையென்றால் நானும் மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டு திரிந்திருப்பேன். மாட்டுக் இறைச்சி சாப்பிடுவது கேவலம், என்ற பொதுமை மனோ நிலையை பன்னெடுங்காலத்திற்கு முன்னரே இங்கு ஏற்படுத்திவிட்டனர். அதனாலயே இங்கு தமிழகத்தில் மாட்டுக் கறிக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. மாட்டு இறைச்சி தொடர்பான.... ஆதவனின் அக் கட்டுரை எல்லோருக்குமே ஒரு 'ஐ ஓப்பனர்தான்'!.

இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ பழமைவாதிகள் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். வட இந்தியாவில் புனிதப்  பசு என்ற போர்வையில் பெரும் கலவரங்களும் உயிர் பலிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பரிணாமம்தான் இந்த தடை உத்திரவு!.
-------------------------


புனித பசு!

இந்தியாவில் எந்த ஒரு விவசாயியும் பசு மாட்டை கொல்ல மாட்டான். பசு மாடு என்பது அவனைப் பொறுத்தவரையில், அவனது வாழ்வியலில் ஒரு அங்கம்,. அவனது குடும்ப உறுப்பினர்களில் அதுவும் ஒன்று!. நகரங்களில் காரை துடைத்து பள பளவென்று வைத்திருப்பது போல.... கிராமங்களில் மாட்டை குளுப்பாட்டி நெற்றி, வயிறு வாலின் மேல்புறம் என்று பொட்டுவைத்து கொம்பிற்கு வண்ணம் பூசி சும்மா பள பளவென்று வைத்திருப்பார்கள்!.. மாடு மேய்த்தலின் போது, மாட்டின் வயிறு புடைப்பாக இருந்தால் மட்டுமே மாட்டை வீட்டிற்கு ஓட்டி வருவார்கள். மாட்டுக் கொட்டகையில் மாட்டிற்கு கொசு கடிக்கும் என்பதற்காகவே மூட்டம் போட்டு கொசுவை விரட்டக் கூடியவ ஜீவ காருண்யம் மிக்கவர்கள் நமது விவசாயிகள். அந்த விளிம்பு நிலை மனிதர்கள் என்றுமே ஜீவ காருண்யத்தை விட்டு விலகி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொளவ்தில்லை.





ஆனால், இங்கு சட்டம் போடுபவர்களின் அதிகபட்ச ஜீவ காருண்யம் என்ன?, அதன் வாலை தொட்டு தடவி தங்கள் தலையில் தேய்த்துக் கொண்டால் போதும் என்று நினைக்கக் கூடியவர்கள்.  அதுவே தங்களது உயர்ந்தபட்ச ஜீவகாருண்யம் என்று செம்மாந்து திரியக் கூடியவர்கள். இத்தகையை அற்ப பேர்வழிகளே இந்திய கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதாக பம்மாத்து பண்ணிக் கொண்டு திரிகிறார்கள். இன்றைய நவீன இந்தியாவில் மாடுகள்  குப்பைத் தொட்டியில் நாயோடு நாயாக நின்று,  தங்களது உணவுகளை தேடக் கூடிய இழி நிலையில் இருக்கின்றது என்பதை, இந்த ஜீவகாருண்ய பாஜக புலிகள் மறந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் மாடுகள் சாணம் போடுவதை விடுத்து,  மனித மலத்தை ஒத்த கழிசல்களை சாலை முழுவதும் தொர...தொரவென்று ஒழுக விட்டப்படி சென்றுக் கொண்டு இருக்கிறது. மாடுகளின் உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றம், அதன் கழிவுகளை நாற்றம் பிடித்தாக மாற்றிவிட்டது. கொடுக்கின்ற பாலையும் நஞ்சாக மாற்றிவிட்டது?.

பொதுவாகவே இறைச்சிகளில் கிடா கறியைதான் அதிகம் பேர் விரும்புவார்கள். "கிடா ஆடா?" என்று கேட்டுவிட்டுதான் ஆட்டுக் கறியே எடுப்பார்கள். அது ஆடாக இருந்தாலும் சரி கோழியாக  இருந்தாலும் சரி, மாடாக இருந்தாலும் சரி. இங்கு பெண் என்பது முதலீடுக்கான வழி.  குட்டிகளை ஈணுவது அதன் வேலை. அதனாலேயே 'பொட்ட ஆடு' என்றல் யாரும் கறி வாங்க மாட்டார்கள்.  அதையும் அடித்து தின்றுவிட்டு ஒன்றுமில்லாமல் உட்கார்ந்து இருக்க....விவசாயி என்ன முட்டாளா.....?.

பசுவை ஒரு மாபெரும் வாக்கு வங்கியாகவே தொன்றுதொட்டு பயன்படுத்திக் கொண்டு வருகிறது பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும்!. 
.
புனித பசு மீதான மாயையை மதத்தின் பெயரால் தக்கவைத்திருக்கும் இந்துத்துவாவின் முகத்திறை கிழிக்கிறது “The Myth of Holy Cow” என்ற புத்தகம், இன் நூலை வரலாற்று ஆய்வாளரான த்விஜேந்திர நாராயண் ஜா (டி.என்.ஜா)  எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணரான டி.என்.ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான,கற்பனைகளின் அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபித்திருக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

இந்திய அரசியலில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார்

‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை இப் புத்தகம் உடைத்தெரிகிறது.
கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி,  இந்து மத, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை இப் புத்தகம் நிரூபித்திருக்கிறது!..

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்ததுள்ளது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என்பதையும் இப்புதகம் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.  புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

மாட்டுக் கறி வைத்திருந்தால் பாலியல் கொடுமைகளை விட அதிகத் தண்டனை!.

அபத்தத்தின் உச்சம் என்றால் இச் சட்டத்தைதான் சொல்லவேண்டும். இந்தியாவில் தற்போது உச்சத்தில் இருக்கும்  பாலியல் கொடுமைகளுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை வழங்கப்படுக்கிறுது. அதே நேரத்தில் மாட்டுக் கறி வைத்திருந்தால் 5 வருடம் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் கொடுமையை விட மாட்டுக் கறி அப்படி என்ன புனிதம் என்று தெரியவில்லை? தனக்கான வாக்கு வங்கியை இந்துக்களிடம் தக்கவைக்கவே மதவாத பாஜக அரசு பலவகையிலும் முயற்சித்து வருகிறது. அதன் வெளிப்பாடே இத்தகைய சட்டங்கள்.

மாட்டிறைச்சிக்கு தடை என்ற சட்டம் நிறைவேறியதும் "இன்றுதான் எனது கனவுகள் நிறைவேறியிருக்கிறது" என்று தனது டூவிட்டர் பக்கத்தில் ஒரு சுட்டுறையை பதிவு செய்திருந்தார்  மாஹாராஷ்டிர முதல்வர் தேவந்திர ஃபட்னாவீஸ்!. ஆர்எஸ்எஸ் உருவான நாக்பூரில் பிறந்தவரான ஃபட்னாவீஸ், இந்துத்துவ கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் முகுந்த ஆர்வம் காட்டக் கூடியவர். சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு  இடஒதுக்கீடு கூடாது என்று பிடிவாதமாக இருந்து அதை சட்டரீயாக  தடை செய்திருக்கிறார். .

மகாராஷ்டிராவில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் வரிசைக் கட்டி நிற்க, அதிலிருந்து வழி மாறி சென்றுக் கொண்டு இருக்கிறார் ஃப்ட்னாவீஸ்  தலைநகர் மும்பைக்கு பல பெருமைகள் உண்டு. மும்பை என்றதும் ஞாபகம் வரக் கூடிய மேற்படி சங்கதிகளில் ஒன்று அம்மாநிலத்தில் தங்குத்தடையின்றி நடைபெறும் விபச்சாரத் தொழில்தான். ஆசியாவிலேயே மிகப் பெரிதான, இந்தியாவில் குறிப்பிடத்தக்க விபச்சார சந்தையான 'காமாத்திபுரா' மும்பையில்தான்  இருக்கின்றது. பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட காமாத்திபுரா விபச்சார விடுதிகள்,  இன்றும் படு சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. இங்கு 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் செக்ஸ் தொழிலாளர்கள் தங்களது சேவைகளை ஆண்களுக்காக வழங்கி வருகிறார்கள்.  பெண்களை தெய்வமாக போற்றப்படக் கூடிய இந்தியாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது வாழ்வை தொலைத்து இங்கு தங்களது உடலை பாலியல் விற்பனைக்கு ஆட்படுத்தி வருகிறார்கள்.

இந்த விபச்சார விடுதிகளுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் கடத்தி வரப்படுகிறார்கள். மிகவும் கொடூரமான சித்திரவதைகள் கூடாரங்கள் மூலம் அவர்கள் சம்மதிக்க வைக்கப்படுகிறார்கள். அடிப்படை மனித உரிமைமீறல்கள் என்பது இத்தகைய விபச்சார விடுதிகளில் சர்வசாதாரணம். அடி உதை, வெட்டு, மார்புகளை வெட்டி எறிவது, சூடு போடுவது போன்ற சித்திரவதைகள் இங்கு கடத்தி வரப்படும் பெண்களுக்கு இழைக்கப்படுகிறது.  மிகப் பெரிய நெட்வொர்க்கை கொண்டு இந்தியா முழுவதுலுமிருந்து இளம் பெண்கள் இங்கு கடத்தி வரப்படுகிறார்கள். கோடிகளில் பணம் புழங்கும் இந்த விபச்சார தொழில் பற்றி ஆளும் அரசுக்கு தெரியாமல் இருக்குமா... என்ன?.


"மாட்டு கறியை தடை செய்தது எனது வாழ் நாள் கனவு" என்று கூறிய மாநில முதல்வர் தேவந்திர ஃப்ட்னாவீஸ், ஏன் விபச்சாரத்தை தடை செய்யவில்லை?. விபச்சாரத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, அதை தடை செய்திருக்கலாமே.....?. விபச்சாரம் என்ற படு குழியில் தள்ளப்படும் பெண்களை காப்பாற்றி இருக்கலாமே......? ஏன் செய்யவில்லை.....?. ஓட்டுக் வங்கிக்காக மாடுகளின் மீது காட்டப்படும் அக்கரை, மகளிர் மீது காட்டப்படவில்லையே ஏன்?.

பசுவின் கறி புனிதம் என்றால்? பெண்கள் தங்களது சதையை விற்பது வியாபாரமா....?   சொல்லுங்கள் மிஸ்டர் தேவேந்திர ஃப்ட்னாவீஸ்???.


கட்டுரை / புகைப்படம்
-தோழன் மபா.

புதன், பிப்ரவரி 04, 2015

'ரத்தம் விற்பவனின் சரித்திரம்'



           இரும்பு திறை கொண்ட நாட்டிலிருந்து, ரத்த வாடை வீசும் நாவல் வருவதென்பது இயல்பானதொன்று என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். இது அடக்குமுறை கவுச்சி வீசும் ரத்த சரித்திரம் அல்ல, உண்மையாகவே பஞ்சம் பிழைக்க தனது ரத்தத்தை விற்கும் ஒரு சாமானிய சீனனின் கதை!.

1994களில் வெளிவந்து சர்வதேச கவனத்தைக் கவர்ந்த யூ ஹூவாவின் 'கிராணிக்கல் ஆஃப் ஏ பிளட் மெர்ச்சண்ட்' என்ற நாவல்தான் தற்போது ரத்தம் விற்பவனின் சரித்திரமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் மைய பகுதியில் கதை நிகழ்கிறது.  இதுகாரும் திறக்கப்படாத சீனா கம்யூனிச கதைவுகளை சற்றே நெம்பி, நமது கையை பிடித்து சீனாவின் உள் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார் யூ ஹூவா.

இந்தியாவை போலவே ஆணாதிக்க குடும்ப சூழலை பிரதிபலிக்கும் சீனாவில், சதாரண சீனர்கள் வாழும் தெருக்களிலும், வீடுகளிலும், உள் முற்றங்களிலும், உள் அறைகளிலும், அடுக்களைக்குமாய் நம்மை நகர்த்தி செல்கிறது கதை. அன்றைய காலகட்டத்தில் ரத்தம் விற்பது என்பது சீனாவில் வாழும் ஏழைகளின் தொழிலாக இருந்தது. ரத்தம் விற்பது மூலமாக 35 யுவான்வரை கூலியாக தரப்பட்டது. இது ஆறு மாதங்கள் வயல்களில் விவசாயம் செய்தால் என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமானது.  வியற்வை சிந்தி கூலி பெறுவதும், ரத்தம் கொடுத்து பணம் பெறுவதும் ஒன்று போலவே கருதினர் அன்றைய சீனர்கள்.

மக்கள் தொகையில் உலகை மிஞ்சிவிட்ட ஒரு தேசத்தில் வறுமை என்பது வாசல்படி போன்றது.  பதற்றம் நிறைந்த மாவோ காலத்து சீனவின் குடும்ப வாழ்க்கையை முறையையும், இலகுவானதொரு அதினின்றும் சற்றே மாறுபாட்ட வாழ்வில கூறுகளையும் மிக நிதானமாக விவரிக்கிறார் யூ ஹூவா. வாழ்வின் படிமங்களையும் நுண்ணிய வாழ்வியல் முறைகளையும் மிக ஆனாயசமாக கடந்து  பயணிக்கிறது இன் நாவல்.

1960களில் பிறந்த  யூ ஹூவா  பிறந்தபோது நிலவிய கடும் பஞ்சம், லட்சக் கணக்கான சீனர்களை பலிகொண்டது. 1959ல் தொடங்கி மூன்றாண்டு  வரை பஞ்சம் நீடித்தது. அவரது மாணவப் பருவத்தில் சீனாவில் கலாச்சார புரட்சி நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டில் சீனர்கள் சந்தித்த துன்பியல் வாழ்க்கை முறையை விஷமத்தனமான நகைச்சுவையோடு சொல்கிறது இன் நாவல். 

ரத்தம் கொடுக்கும் முன்னர், சிறுநீர் கழித்துவிட்டால் அது ரத்தமாக மாறாமல் சிறு நீராக வெளியே வீணாக போய்விடும்  என்பதால் ரத்தம் கொடுக்கும்வரை சிறு நீர் கழிக்காமல் இருப்பது போன்ற கிராமத்து அறியாமை இன் நாவல் முழுவதும் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. 303 பக்கம் கொண்ட இப் புகழ்பெற்ற நாவலை சந்தியா பதிப்பத்தினர் வெளியீட்டுள்ளனர். இன் நாவல் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. இன் நாவலை எழுத்தாளர் யூமா வாசுகி மொழி பெயர்த்துள்ளார்.

யூ ஹூவா சீனாவின் மரபுகளை மீட்டெடுக்கும் ஒரு நம்பிக்கை நச்சத்திரமாக துளிர்த்து இருக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் பேசப்பட்ட, வாசகர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் பத்து நூல்களில் யூ ஹூவாவின் "ரத்தம் விற்பவனின் சரித்திரம்" இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மனித வாழ்வியலின் துயரங்களையும், தூசி படிந்த நினைவுகளையும் யார் சொன்னால் என்ன.....? எங்கிருந்து சொன்னால் என்ன.....? ரத்தம் விற்பவனின் சரித்திரம் சீன எல்லை கடந்து... இந்திய இதயத்தை தொட்டிருக்கிறது. படைப்பாளிக்கும் படிப்பவனுக்கும் பிரபஞ்சமே எல்லை.!.

-தோழன் மபா.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...