வியாழன், நவம்பர் 20, 2008

நேபாள மாவோயிஸ்டுகளும் ஈழப் புலிகளும்...

அனைத்துலக மார்க்சிய-லெனிய-மாவோயிஸ் அரங்கங்களிலும் தேசிய இன விடுதலை தொடர்பான சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஏன் வலதுசாரி சிந்தனையாளர்களிடத்திலும் "நேபாள மாவோயிச"த்தின் பாதையானது தீவிர விவாதங்களை உருவாக்கியிருக்கின்றது.

நேபாள மாவோயிஸ்டுகளை ஈழத்துப் புலிகளும் பின்பற்ற வேண்டும் என்றும்கூட அந்த விவாதங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தின் மீது தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி,

"ஒரு குழுவாக அவர்கள் (ஈழத் தமிழர்கள்) இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளைப் போன்று விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்குப் பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கின்றது.

இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது" என்று கூறியிருக்கின்றார்.

அதேபோன்று அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் ஏட்டுக்கு அளித்த நேர்காணலில் புதுச்சேரியைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் நேபாள அரசியல் நிர்ணய சபை தேர்தல் பார்வையாளராகச் சென்று திரும்பியவருமான கோ.சுகுமாரன் என்பவரும் "நேபாளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளும் பின்பற்ற வேண்டும்" என்று "அறிவுரை" கூறியிருக்கின்றார்.

ஏறத்தாழ 60 ஆண்டு காலத்துக்கும் மேலாக பாரிய இன ஒடுக்குமுறைகளுக்குள்ளாகியிருந்த தமிழீழத் தேசிய இனத்தினது அவலத்தை தமிழீழ மக்களின் இராணுவ அமைப்பாகவும் தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி வெற்றிகளே இந்த அனைத்துலக அரங்கத்துக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்று அவலத்தை துடைக்கும் சாதகமான ஒரு சூழலை நோக்கியும் பயணிக்கின்றது.

இலங்கைத் தீவின் நிலைமைகளும் நேபாளத்தின் நிலைமைகளும் எந்த வகையிலுமே தொடர்பற்ற முற்றிலும் முரணானவை

நேபாளம்


நேபாளத்தில் நடைபெற்று வந்த இந்து உயர் சாதிய மன்னர் ஆட்சியை மார்க்சிய-லெனினிய-மாவோயிச வழிப்பட்டதான ஆயுதப் போராட்டத்தின் ஊடே அகற்ற நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) போராடியது.

மன்னர் ஆட்சியை புரட்சியின் மூலம் அது அகற்றிவிடாத நிலையிலும் அனைத்துலக அரசியல் நிலைமைகளுக்கு ஒத்திசைந்து அரசாங்க அதிகாரத்தை அக்கட்சி இப்போது கைப்பற்றியுள்ளது.

இது சரியான பாதைதானா? என்று அனைத்துலக கொம்யூனிச அரங்கங்களும் இது கம்யூனிசத்தை அடைவதற்கு "நேபாளம் பின்பற்றும்" ஒரு தந்திரோபாயமே (மார்க்சிய மொழியில் செயல் உத்தி) என்று நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் கூறி வருகின்றன.

பல் தேசிய இனப் பண்பாடு கொண்ட நேபாளத்தில் ஆள்வது மன்னரா? மக்களா? என்ற நெடிய போராட்டத்தின் இறுதியில் "மக்களாட்சி" மலர்கின்றது.

"நேபாளத்தின் புதிய அரசியல் சாசனம் நேபாளத்தை ஒரு குடியரசு நாடாக நிலை நிறுத்தும்" என்றுதான் நேபாள மாவோயிச கட்சியின் தலைவர் பிரசந்தா பிரகடனப்படுத்தியிருக்கின்றார்.

இலங்கை

இலங்கைத் தீவிலோ வரலாற்றுக் காலம் தொட்டே தமிழர்களுக்கு என்று தனியரசு இருந்து கோலோச்சியிருந்தனர்.

பிரித்தானியர்களும் போர்த்துக்கேயர்களும் ஒல்லாந்தர்களும் என அந்நியர் உள்நுழைந்த காலத்தே தமிழர்களின் இறைமை பெற்ற தனியரசுகள் அழித்தொழிக்கப்பட்டு தென்னிலங்கைச் சிங்களத்தோடு இணைந்ததொரு ஒரு நிர்வாக முறைமை உருவாக்கப்பட்டது.

காலனியாதிக்க முடிவில் தமது இறைமை கொண்ட தமிழ்த் தனியரசை மீட்பதில் போதுமான முனைப்பை நமது முன்னைய தலைமுறை வெளிப்படுத்தாதால் பிரித்தானியர்கள்- சிங்களவர்களோடு இணைந்த நிர்வாக முறையை அப்படியே விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர்.

வெறிபிடித்த சிங்களமோ வரலாற்று வன்மத்தை வெளிப்படுத்தி இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தை பூண்டோடு கருவறுக்க முனைந்தது.

அகிம்சைப் போராட்டங்கள் பயனற்றுப் போய் தனிநாட்டுக் கோரிக்களுக்கு செவி சாய்ப்பார் ஏதுமில்லாமல் போய் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டது.

விரிவாதிக்க கோட்பாட்டுடன் உள்நுழைந்த வல்லாதிக்க இந்தியாவோ, "தமிழீழ தாயக" கோட்பாட்டையே சிதைக்க முனைந்தது.

அதனைச் சிதைக்க விடாது வல்லாதிக்க இந்தியாவுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் போரிட்ட நிலையில் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க சகோதர யுத்தத்தை உருவாக்கியது இந்தியாதான் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியே சுட்டிக்காட்டியும் இருக்கின்றார்.

தேசத்தின் விடுதலையை நேசித்து திட்டமிட்ட உண்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், பலம்பெற அவர்களே ஏகப் பிரதிநிதிகளாக இன்று தமிழீழத் தனியரசைக் கட்டியெழுப்பி வருகின்றனர்.

தமிழீழத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் "அறிவிக்கப்படாத ஒரு தனியரசு நிர்வாகத்தை" நடத்திக் கொண்டு அனைத்துலக நாடுகளின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கின்றனர்.

நடந்தது என்ன?

நேபாளத்தில் நேபாள மாவோயிஸ்ட் அமைப்பு 1996 பெப்ரவரி 13-இல் தான் உதயமானது. திடீர் உதயமும் அல்ல அது.

ஏலவே இருந்த நேபாள கொம்யூனிச இயக்கத்தினரை வலதுசாரிகள் என்றும் திரிபுவாதிகள் என்றும் விமர்சனம் செய்துவிட்டுத்தான் ஆயுதப் பாதைக்குத் திரும்பினார்கள்

அங்கும் 10 ஆண்டுகாலமாக "சகோதர கட்சிக"ளுடன் "கருத்து" மோதல்களை மாவோயிஸ்ட் கட்சி மேற்கொள்ளாமல் இல்லை.

ஈழத்திலும் இந்திய றோ தலையிடாத வரை-

இந்தியப் பேரரசு தனது வல்லாதிக்க விரிவாதிக்க கனவை நடைமுறைப்படுத்த முனையாத வரை

எத்தனையோ குழுக்கள் சுதந்திரமாக நடமாடிய வரலாறும்-

புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஒரு கட்டத்தில் ஐக்கியமாக நிற்க முயன்ற வரலாறும்

இந்த மண்ணிலும் நிகழாமல் இல்லை.

இதே தமிழ்நாடு முதல்வர் கலைஞர்தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இப்படிக் கூறியதாக இந்தியாவின் ஜெயின் ஆணையம் தனது அறிக்கையில் கூறியும் உள்ளது.

"Faced with such strident criticism in the State Assembly, Sri
Karunanidhi, on 8th May 1990 , on the floor of the Assembly is
reported to have accused the Research and Analysis wing (RAW)
of trying to create a rift between the Centre and the State
appealed to the Prime Minister to take appropriate action. He alleged
that the RAW which was responsible in the past for creating
divisions among various Tamil groups of Sri Lanka was doing
the same between the Centre and the State." (நன்றி: ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" நூல், விடுதலை க. இராசேந்திரன், தமிழ்நாடு)


"இலங்கையில் உள்ள தமிழ்க் குழுக்களிடையே பிளவை ஏற்படுத்தியமைக்கும் அதேபோல் இந்திய மத்திய மற்றும் இந்திய மாநில அரசுகளிடையே பிணக்கை உருவாக்கியதற்கும் இந்திய றோ தான் காரணம்" என்று அன்று குற்றம் சாட்டியவர் இதே முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.

ஆனால் தான் தெரிவித்த கருத்துக்கு மாறாக- உண்மைக்கு மாறான செய்தியை அதே தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கின்றார். கலைஞர் போன்ற மதிப்பிற்குரிய ஒரு முதுபெரும் அரசியல்வாதியானவர்கள் இந்த வரலாற்றை மறத்தல் அல்லது மறைத்தல் சரிதானா?

அதேபோல்

சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்துத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்துகிறார்கள்-

ஆனால் சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தை தூக்கியெறிந்து விட்டு சிறிலங்காவில் "புலிகள்" அரசாங்கத்தை உருவாக்க அல்ல அந்த ஆயுதம் தரிப்பு!

ஒரு பேரினவாதத்தின் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையிலிருந்து ஒரு இனம் தன்னைத் தற்காத்துக் கொள்ள-

இழந்து போன இறைமை கொண்ட தேச அரசுரிமையையை ஒரு இனம் மீட்டுத் தக்க வைத்து வருங்கால தலைமுறைகளின் வாழ்வுரிமைகளைத் தற்காத்துக் கொள்ளவே அந்த ஆயுதத் தரிப்பு!

இலங்கைத் தீவில் கடந்த கால் நூற்றாண்டுகாலமாக நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ அமைதிப் பேச்சுக்கள் நடந்துவிட்டன.

அந்த அமைதிப் பேச்சுக்களில் புலிகள் ஒன்றும் பங்கேற்காமலும் இல்லை.

இன்னமும் சொல்லப் போனால் அண்மையில் சிறிலங்காப் பேரினவாத அரசாங்கத்தால் முறித்துக் கொள்ளப்பட்ட "யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை" உருவாக்க அடிப்படையாக அமைந்ததே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைபட்ச போர் நிறுத்தப் பிரகடனமும் அமைதிப் பேச்சுக்கான அழைப்பும்தான்!

அண்மைய அமைதிப் பேச்சுக்களிலிருந்து புலிகள் தானாக இன்னமும் வெளியேறிவிடவும் இல்லை.

போரினால் பாதிக்கப்பட்ட

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட

தமிழ் மக்களுக்குரிய மனிதாபிமான உதவிகளைக் கூட செய்யாமல்-

இருதரப்பும் ஏற்றுக் கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் எந்த ஒரு சரத்தையுமே ஏற்றுக் கொள்ளாமல்-

யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் 5 இலட்சம் தமிழ் மக்களை பட்டினி போட்டு படுகொலை செய்ய ஏ-9 பாதையை மூடிவைத்ததை மறுபரிசீலனை செய்யாமல்- இருந்ததால்தான், பேச்சு மேசைகளிலிருந்து மட்டுமே புலிகள் வெளியேறினார்கள்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டதாக சிங்களம் பிரகடனம் செய்தபோதும் கூட தங்கள் கண்முன்னே சொந்த மக்கள் அநீதியாக படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட அமைதிப் பேச்சுக்கான கதவுகளை இப்போதும் இன்னமும் திறந்தே வைத்திருப்பதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தானே!

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையிலேயே நில வல்வளைப்புக்களையும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் எத்தனை, எத்தனை யதார்த்தமான உண்மைகள் இதுவே!

தனியரசு நடத்தி அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தையும் அரசு நிர்வாக மாற்றத்துக்கான ஒரு ஆயுதப் போராட்டத்தையும் இணையாக ஒப்பிடுவதும் அப்படியான பிழையான கருதுதல்களுடன் கருத்துகளை வெளியிடுவதும் பொறுப்புகளில் உள்ளோருக்கு பொறுப்பாகாது அல்லவா?.

-செ.விசுவநாதன்.
www.puthinam.com
நன்றி
விசுவநாதன்.

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...