வியாழன், நவம்பர் 20, 2008

கனிமொழி சொன்ன கதை

இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கறுப்புக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.


இதன் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டு கறுப்புக் கொடி அசைத்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் தெரிவித்துள்ளதாவது:

நம் நாடு நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசுகிறோம். அதே நேரத்தில் ஈழத்தின் உண்மை நிலை என்ன? என்று நம்மால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில் உள்ள பத்திரிகைகள், ஊடகங்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் வெளியிடுகின்றன.

இலங்கையில் பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தைகள் பதுங்கு குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போர் அறிவிப்பு செய்த பிறகு, பாதிரியார் ஒருவரை அவர் தங்கியிருக்கும் இடத்தை விட்டு செல்லுமாறு அரசு ஆணையிட்டது. அதையடுத்து அந்தப் பாதிரியாரும் மூட்டை, முடிச்சுகளை கட்டிக் கொண்டு போக புறப்பட்டார். அப்போது இரண்டு குழந்தைகள் அங்கு வந்தனர். அவர்களிடம் எனது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பாதிரியார் 2 பேனாக்களைக் கொடுத்தார்.

அந்தப் பேனாவை பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகள் பாதிரியாரிடமே அவற்றைத் திருப்பிக் கொடுத்தன. நாங்கள் உயிருடன் இருப்போமா அல்லது இருக்கமாட்டோமா என்று தெரியவில்லை. எனவே, வேறு ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பேனாவைக் கொண்டு போய் கொடுங்கள் என்று அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கும் நாடு ஒரு நாடா?

தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ் பேசும் பாவத்திற்காக அவர்களை அழிக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் சுற்றுப்பயணம் செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.

சுற்றுப்பயண வேனின் இருபுறங்களிலும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைச் சித்தரிக்கும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கும் வகையில் அமைந்துள்ளன.
நன்றி
புதினம்.காம்

கருத்துகள் இல்லை:

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...