சகோதரர் என்னும் சொல்லுக்கு உடன் பிறந்தவர் என்பது பொருள். சக+உதரர் (உதரம் -வயறு) ஒரே வயிற்றில் பிறந்தவர் சகோதரர். தனித் தமிழில் உடன் பிறந்தார். இது பொதுச்சொல். ஆனால் தமையன்,தமக்கை,தம்பி,தங்கை எனும் சொற்கள் அமைந்த தமிழின் சிறப்பு என்னே?
தம் + ஐயன் = தமக்கு மூத்தவன்- தமையன் (அண்ணன்)
தம் + அக்கை =தமக்கை - தமக்கு மூத்தவள் (அக்கா)
தம் + பின் = தம்பி எனத் திரிந்தது. தம்பின் (தமக்குப் பின்) பிறந்தவன்- தம்பி
தம் + கை = தமக்குச் சிறியவள் - தங்கை (கை எனும் சொல் சிறிய என்று பொருள்படும்)
இப்படி எல்லாம் ஆங்கிலத்தில் கூறிவிட முடியுமா? அங்கு Brother என்பதோடு ஒட்டுச் சொற்களை இணைக்க வேண்டும். Younger Brother, Elder Brother என்றிவ்வாறு குறிப்பிடுகிறோம். நந்தமிழில் ஒவ்வொரு நிலைக்கும் தனித் தனி பெயர் இருக்கும் போது, ஆங்கில மொழியின் தாக்கத்தால் 'மூத்த சகோதரர்' என்றும் 'இளைய சகோதரர்' என்றும் அழைப்பது சரியா? என்று இக் கட்டுரையில் நம்மை கேள்வி கேட்கிறார் கட்டுரையாளர்.
அதோடு குழந்தை பருவம் என்று சொல்லுகிறோம். இந்த குழந்தை பருவத்திலேயே பத்து பிரிவை கண்டவர்கள் தமிழர்கள்.
ஆண்பால் பிள்ளையாயின்.... 1. காப்புப் பருவம், 2. செங்கீரைப் பருவம், 3. தாலப் பருவம், 4. முத்தப் பருவம், 5. சப்பாணிப் பருவம், 6. அம்புலிப் பருவம், 7. வருகைப் பருவம், 8. சிற்றில் பருவம், 9. சிறுதேர்ப் பருவம், 10. சிறுபறைப் பருவம்.
இதுவே பெண் பிள்ளையாயின்.... இறுதி மூன்றும் மாறுபட்டு, 8. கழங்கு (தட்டாங்கல்), 9.அம்மானை, 10.ஊசல் (ஊஞ்சல்) என்று பகுத்துப் பிரித்தார்கள்.
தமிழின் பொருள் பட வாழ்ந்தார்கள் என்று தமிழின் பெருமையை தமிழன் உணர தொடர்ந்து எழுதிவருகிறார். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
ஆனால், இன்றோ தமிழன் வேற்று மொழிக்கு வரவேற்பு செய்து 'தமிழுக்கு' சங்கு ஊதுகிறான். நாம் தமிழைப் பற்றி, அதன் பெருமை பற்றி ஏதாவது கூறினால், 'உச்' கொட்டுகிறான்.
- தமிழன் தம் மொழி மறந்த மாந்தனாக மாறிவிட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக