- திமுக தலை தப்புமா?
'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் இருக்கிறது தி.மு.க., நடந்த தவறுகளுக்கு யார் காரணம் என்ற புலனாய்வு மனநிலை அடிமட்ட திமுக தொண்டனிடம் பலத்த கேள்வியாக உறுத்திக்கொண்டு இருக்கிறது.
அது கவிதையாக இருக்கட்டும், கதையாக இருக்கட்டும் இல்லை சினிமாவாக இருக்கட்டும், கதையின் முடிவு (கிளைமாக்ஸ்) பொறுத்துதான் வெற்றி!. படம் முழுவதும் ரசிக்கும் படியாக கொடுத்துவிட்டு, கதையின் முடிவில் இயக்குனர் சொதப்பி விட்டால் படம் எப்படி 'பப்படம்' ஆகுமோ... அப்படி ஆகிவிட்டது திமுகவின் ஆட்சி.
இந்த முறை (தற்போதைய ஆட்சிக் காலத்தில்) எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்ற முடிவில் தீவிரமாக இருந்தார் கலைஞர். அதனாலயே பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கட்சியை ஆட்சியை பலப்படுத்த இதுவே தக்கதருணம் என்று முனைப்புடன் செயல்பட்டார்கள். ஆனால் விதி வலியது என்று அடுத்தடுத்து வந்த சம்பவங்கள் நிருபித்தன.
- திமுக ஆட்சிக்காலத்தில் தமிழினம் அழிப்பு
அதில் முக்கியமானது, இலங்கையில் தமிழினம் அழிப்பு போர். 32 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துக் கொண்டு இருந்த சண்டை திமுக ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு வந்ததுதான் பெரும் கொடுமை. தமிழ் தமிழர் நலன் என்று மேடை தோறும் முழக்கம் இடும் கருணாநிதியால் இந்த முறை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது தமிழின ஆதரவாளர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் கருணாநிதி மீது திரும்பியது. கருணநிதியின் கையாலாகாதத்தனம் தான் இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு முக்கிய காரணம் என்று ஜெயலலிதா, வைகோ,நெடுமாறன் போன்றவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இலங்கையில் போர் உக்கிரம் கொண்டிருந்தபோது இங்கு மனித சங்கிலி நடத்தியது, உண்ணாவிரதம் இருந்தது, டெல்லிக்கு தந்தி அடித்து காங்கிரஸ் செயல்பாட்டிற்கு 'காவடி'தூக்கியது என்று ஏகப்பட்ட 'டேமேஜ்'கள் திமுகமீது.
இலங்கை தமிழனை அழிக்க இங்கு தமிழ் நாட்டில் மீனம்பாக்கத்திலிருந்து விமானங்கள் சென்றன. இது தமிழர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
திமுகவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை தமிழன் அழிந்தது ஒரு வரலாற்று சோகம். இதை முன்னின்று நடத்தியது 'காங்கிரஸ்' என்பது ஊர் அறிந்த ரகசியம்.
- வின்னைத்தாண்டி(ய) வருவாய்!
இதற்கு முன்பாகவே மக்களின் மனநிலையில் சற்று மாற்றம் வரத் தொடங்கியது. அது கலைஞரின் குடும்பம் மொத்தமும் திரைப்படத் தாயரிப்பில் இறங்கியதுதான். முடிந்து திரைக்கு வரத் தயாராய் இருக்கும் படங்களை நல்ல விலைக்கு வாங்கி வெளியீடத் தொடங்கியது சன் குழுமம். தனது பாதாளம் வரைப் பாயும் 'நெட் ஒர்க்' தந்திரத்தால், தயாரிப்பாளர்களை தடுமாறச் செய்து தங்கள் பக்கம் திருப்பியது சன் பிக்ச்சர்ஸ். விளைவு, சன் டிவில் தொடந்து பட விளம்பரங்கள் தந்து 'அட்டு' படங்களையும் 'பிட்டு' படங்களைப் போல் ஓடச் செய்தனர்!.
சன் குழுமத்தின் பட வெளீயிடு ஒரு பிரமாண்டத்தை எட்டவே, அதுவரையில் சோம்பித்திருந்த கலைஞர் குழுமம் விழித்துக் கொண்டது. 'நாமலும் ஏதாவது செய்யனும்டா' என்ற நிலைக்கு ஸ்டாலின் வர அதற்கு துணை புரிந்தார் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின். விளைவு 'ரெட் ஜெயண்ட்' பிறந்தது. இவர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு படத் தயாரிப்பில் ஈடுபட, சினிமா இண்டஸ்ட்ரீயில் இந்த ஆதிக்கத்தைப் பற்றி 'டாக்'வரத் தொடங்கியது.
இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று அழகிரிதரப்பும் "கிளவுட் நைன்' மூலமாக சினிமா தயாரிப்பில் குதிக்க... தொடர்ந்து கலைஞரின் இன்னொரு மகன் மு.க தமிழரசும் 'மோகனா பிக்ச்சர்ஸ்' மூலம் படத்தயாரிப்பில் ஈடுபட.... மொத்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீக்கும் 'கிலி' பிடித்துக் கொண்டு 'அதிரிபுதிரி'யானது. விளைவு கருணாநிதியின் குடும்ப சினிமா ஆக்கரிமிப்புப் பற்றி கதை கதையாக பல கதைகள் வரத்தொடங்கியது.
இவர்கள் யாரையும் படம் எடுக்க அனுமதிப்பதில்லை. நல்ல படங்கள் எடுத்தால் அதை இவர்களிடம் இவர்கள் சொல்லும் விலைக்கு விற்று விடவேண்டும். திரையரங்குகள் இவர்கள் வெளீயிடும் படங்களுக்கு உடனே இடம் தரவேண்டும், தாங்கள் எதிர்க்கும் படங்களுக்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது, தங்களுக்கு எதிப்புக் காட்டும் கதாநாயகர்களை வைத்து யாரும் படம் தயாரிக்கக் கூடாது. அப்படியே எடுத்தாலும், அதை வெளியீட முடியாத அளவிற்கு கிடுக்கிப்பிடி. பிறர் எடுக்கும் படங்களுக்கு சன் டிவியில் 'டாப் 10' ல் கூட இடம் கிடையாது என்பது போல் பல கதைகள் பல கிளைகளாக வளர்ந்து படர்ந்தன.
இந்த நேரத்தில் தமிழகத்தின் பாரம்பரியமான சில சினிமா தாயாரிப்பு கம்பெனிகள் 'நமக்கு எதுக்கடா வம்பு' என்று கையைக் கட்டிக் கொண்டு அமைதி காத்தன.
சாதாரணமாகவே சினிமா பற்றிய செய்தி ஒரு வினாடியில் உலகம் முழுவதும் பரவிவிடும் அத்தகைய 'வலுவான' ஊடகம் அது. அதில் இப்படி ஒரு குடும்ப ஆதிக்கம் நடப்பதால், அதை பிடிக்காதவர்கள் நாளொரு வதந்திகளை பரப்பிவந்தனர். இப்படித்தான் ஆரம்பித்தது கருணாநிதியின் குடும்பத்தின் மேல் வெறுப்பு. அந்த வெறுப்பு 'ஸ்பெக்ட்ரமில்' விஸ்வரூபம் எடுத்தது. அதுநாள் வரையில் திமுக அரசு மீது மக்கள் 'கிராப்' ஏறிக்கொண்டுதானிருந்தது. இவர்கள் சினிமாத் துறையில் அடித்த கொட்டம்தான் திமுக அரசின் மீது மக்களுக்கு எழுந்த முதல் வெறுப்பு.
அதுவே, இவர்கள் குடும்பம் மட்டுமே கோடிகளை குவித்து வாழ்கிறதே என்ற என்னத்தையும் மக்களிடையே எழச் செய்தது. அதை சரியான முறையில் எழுதி பெரிதுப் படுத்தியது அச்சு ஊடகங்கள்.
இன்நிலையில் கனிமொழியும் படத் தயாரிப்பில் இறங்கப் போகிறார் என்கிறது ஒரு கோடம்பாக்கத்து பக்ஷி!
- கலைஞர் காப்பீட்டு சாதனை!
இதற்கிடையே 'கலைஞர் காப்பீட்டு திட்டம்' இன்று பட்டித்தொட்டியெல்லம் பரவியிருக்கிறது. அது நாள் வரையில் காப்பீடு என்றால் என்னவென்றே தெரியாத கிராமப்புற மக்கள் இன்று காப்பீடு திட்டம் பற்றி தெரிந்துவைத்திருக்கின்றனர். இது திமுக அரசின் மிகப் பெரிய சாதனையாக கருதுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் முன்னோடி திட்டமாகவும் பிற மாநிலங்களால் பார்க்கப் படுகின்றது. எப்படி ரிலையன்ஸ் நிருவனம் ரூ 500க்கு செல்போன் கொடுத்து, நாட்டில் தொலைதொடர்பு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்ததோ, அதேபோன்றதொரு மறுமலர்ச்சியை காப்பீடு துறையில் செய்துள்ளது திமுக அரசு. இது நிச்சயம் ஜெயலலிதாவால் ஜீரணிக்கமுடியாத ஒன்று. அதனால்தான் அவர் அவ்வப் போது ஒய்வு எடுக்க 'கொட நாடு' சென்று விடுகிறார்.
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு' என்பதை ஏற்றுக் கொள்ளாதவர் ஜெயலலிதா. ஆனல் அந்த விஷயத்தில் கலைஞர் 'மீனம் மேஷம்' பார்ப்பதில்லை. ஜெயலலிதா கொண்டுவந்த பணம் கொட்டக்கூடிய 'டாஸ்மாக்'கை அவர் கைவிடவில்லையே....!
கலைஞர் காப்பீட்டு திட்டத்தால் பயனாளிகளின் பட்டியல் நீண்டுக் கொண்டு இருப்பதுதான் இதன் வெற்றி. அதோடு, 'ஸ்டார் ஹெல்த் காப்பீடு' நிறுவனமும் இத்திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தி அரசிற்கு நற்பெயரை பெற்றுத்தருகிறது.
- '108' ஓட்டாக மாறுமா?
அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த மற்றொன்று '108 இலவச ஆம்புலன்ஸ் சர்வீஸ்'. முன்பெல்லாம் சாலையில் விபத்து ஏற்பட்டால் அடிப்பட்டவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் கிடைக்காமல் பெரும் உயிர் சேதம் ஏற்படும். ஆனால் தமிழக அரசின் 108 சர்வீஸ் வந்தவுடன் நிலை ஒரளவிற்கு மாறிவுள்ளது.
விபத்து மற்றும் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் கிரமாப்புரங்களில் 108 ஐ அழைக்கும் அளவிற்கு நிலை முன்னேறி உள்ளது. அவர்களும் சலைக்காமல் கூப்பிடும் இடங்களுக்கு சென்று, உயிர் காத்து வருகின்றனர். இத்திட்டமும் ஆளும் திமுக அரசிற்கு மக்கள் மத்தியில் நற்பெயரை ஈட்டிதந்துள்ளது.
அதோடு ஒரு ரூபாய்க்கு அரிசி, மலிவு விலையில் மளிகை, இலவச கலர் டிவி, கலைஞர் வீடு கட்டும் திட்டம், ஏழை விவசாயிகளுக்கு இலவச மோட்டார், ஏழைபெண்கள் திருமண உதவித் திட்டம், பிரசவத்திற்கு 6000 என்று மக்கள் நலம் காணும் பல்வேறு திட்டங்கள் அரசின் சாதனைப் பட்டியலில் நீள்கிறது.
- செம்மொழி மாநாடு
தனது தாய் மொழியை தனது உயிராக பார்க்கக் கூடியவர்கள் தமிழர்கள்.
தமிழுக்கு உயரிய 'செம்மொழி அந்தஸ்த்து கிடைத்ததை மிகப் பிரமாண்டமாகக் "செம்மொழி மாநாடாகக் கொண்டாடியது தமிழகம். 10 நாட்கள் நடைப் பெற்ற இவ் விழா; இந்தியாவை சற்றே திரும்பிப் பார்க்கவைத்தது எனலாம். மகராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் கூட ஒரு பேட்டியில் தமிழுக்காக நடைப்பெற்ற விழாவை ஏகமாக புகழ்ந்தார். "தமிழர்கள் தங்களது மொழிமேல் காட்டும் அக்கரையை போன்றே நாமும் நமது மொழியை காக்க வேண்டும்" என்றார். அந்த அளவிற்கு தமிழ அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. திமுக அரசை பிடிக்காதவர்கள் கூட பாராட்டும் அளவிற்கு இருந்தது அந்த ஏற்பாடு.
- பெரிய கோவில் 1000 மாவது விழா
இதுவும் கலைஞருக்கு தனது வாழ்நாளில் கிடைத்த ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம். கிடைத்த கொஞ்ச அவகாசத்தில் இந்த விழாவை மிக நேர்த்தியாக நடத்திக் காட்டியது தமிழக அரசு. சிறப்பான ஏற்பாடுகளின் மூலம் மாமன்னன் ராஜராஜனின் பெருமைக்கு வலு சேர்ப்பதுபோல் அமைந்தது இந்த ஆயிரமாவது விழா. அதையும்தாண்டி ஒரு பெருமை கருணாநிதிக்கு உண்டு. அது தஞ்சை மாவட்டத்துகாரன் என்ற பெருமை!. என்னதான் தஞ்சை மாவட்டம் நிர்வாக ரீதியாக, மூன்றாக பிரிந்திருந்தாலும், அவரது திருவாரூர் தனி மாவட்டமாக அமைந்திருந்தாலும், அவர் குறிப்பிடும்போது "ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்துக்காரனான நான்..." என்று கூறுவதில் அவர் பெரும் பெருமைகொள்வார்.
ஆனால், இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் கலைஞர் பொதுவழியில் வராமல் வேறுவழியில் வந்ததும், பட்டு வேட்டிக் கட்டிக் கொண்டதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
- மூவர் கூட்டணி
இப்படி ஆளும் மைனாரிட்டி அரசு (ஜெயலலிதா கூறுவது போல்...) தனக்கான கோல்களை சரியாக அடிக்க... முழி பிதுங்கி நின்றனர் மூவர். அவர்கள் சோ, குருமூர்த்தி மற்றும் சுப்ரமணிய சாமி(கூட்டணியை பருங்க...?) . அந்த நேரத்தில் அவர்கள் கையில் கிடைத்ததுதான் 'ஸ்பெக்ட்ரம்'. (ஸ்பெக்ட்ரம் பற்றி பிரிதொரு பதிவில் விரிவாக பார்ப்போம். கட்டுரை நீண்டு கொண்டே செல்கிறது. காலை 5.மணிக்கு ஆரம்பித்தது. இப்போது மதியம் 2.25 ஆகிறது. இடையிடையே குடும்பப் பணிவேறு... )
இவர்களுக்கு சையிடு சப்போட்டாக தினமணியும் தினமலரும். இதில் தினமலர் அடக்கி வாசிக்க, ஆட்சியாளர்களை அளற வைக்க தினமணி, தினமும் தனது பக்கம் தோறும் திமுகவிற்கு எதிராக மிளகாய்பொடியைத் தூவிக் கொடுத்தது. தினமணியைப் பார்த்ததும் கலைஞர் 'நெடி' ஏறி தும்மல் போட..., விளைவு தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ்க்கு கடந்த 10 மாதமாக அரசு விளம்பரம் நிறுத்தப்பட்டது.
இன் நிலையில் அடுத்த ஆட்சி 'யார்' பக்கம் என்பதில் மிகப்பெரிய கேள்விகுறி எழுந்துள்ளது. ஒரு பக்கம் விஜயகாந்த் முன்னுக்கு பின்னாய் வழக்கம் போல் குழறி அடிக்க ?! ஜெயலலிதாவோ விஜயகாந்தை அவசரப்படுத்துகிறார், கூட்டணி வைக்க இதுவே தக்கதருணம் என்று. கிடைத்த வாய்ப்புகளை கோட்டைவிட்ட விஜயகாந்த் இந்த முறை என்ன செய்வார் என்பது தெரியவில்லை.
- வாய்ப்புகளை தவறவிட்ட ஜெயலலிதா
சமீபகாலமாக அதிமுக போராட்டமிகுந்த எதிர்கட்சியாக இருக்கவில்லை. ஜெயலலிதாவும் உண்மையான எதிர்கட்சி தலைவியாக நடந்துக்கொள்ளவில்லை. என்பது நாம் அறிந்த ஒன்று. கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பை நிச்சயம் ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதிமுகவில் யார் முன்னணியில் இருப்பார்கள், யார் கட்சியை விட்டே நீக்கப் படுவார்கள் என்பது அக்கட்சியில் விசுவாசமாக இருக்கும் எவருக்கும் தெரியாது. இதனால் எம்ஜிஆர் தொடங்கிய அந்த கட்சி நிலையான மனநிலையில்லா; தலமையால் பெரிதும் குழப்பத்தில் இருக்கிறது.
அதிமுக தொண்டர்களுக்கு தாம் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியவில்லை. அம்மாவோ ஆடிக்கு ஒரு முறை அம்மாவசைக்கு ஒரு முறை மாவட்டங்கள் அளவில் போராட்டங்களை நடத்துகிறார். அதுவும் அவர் வருவதில்லை, மூன்றாம் மற்றும் நான்காம் மட்டத் தலைவர்களே வருகிறார்கள்.
அதோடு சட்டமன்றத்தில் பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படாமல், முனுக்கென்றால் வெளிநடப்பு செய்ததும் அதிமுக தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. இதுதவிர அங்கிருந்த எஸ்.வி.சேகர், அனிதா ராதகிருஷ்ணன், முத்துசாமி போன்ற ஓரங்கட்டப் பட்ட 'ஆக்டிவ்' தலைவர்கள் எல்லாம் தற்போது திமுகவில். இதுவும் அதிமுக வை அமைப்பு ரீதியாக பலகீனப்படுத்தும். தற்போது நீக்கப்பட்ட அதிமுகவின் வட சென்னை அதி 'தீவிர' செயல்வீரரான சேகர்பாபு வும் திமுகவில் இனைந்துள்ளார். சேகர்பாபு போன்று தலைமைக்கு விசுவாசமானவர்களே கட்சியை விட்டு ஓரங்கட்டப் படுவது அதிமுகவிற்கு தற்போது உள்ள சூழ்நிலையில் நல்லதல்ல.
- விக்கெட்டை சாய்க்கும் விலைவாசி
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் திசை மாறியிருக்க... ஆளும் திமுகவிற்கு உண்மையான எதிரி விலைவாசி ஏற்றம்தான். கண்மண் தெரியாத இந்த ஏற்றம் அனைத்து தரப்பு மக்களையும் தினம்தோறும் பாதித்துவருகிறது. தங்கம் விலைபோல் பெட்ரொல் டீசல் விலையும் 15 நாளுக்கு ஒரு முறை ஏறி வருகிறது. இது மத்திய அரசின் கைகளில் இருந்தாலும் 'திமுக' அந்த கூட்டணியில் இருக்கிறது, மத்திய அமைச்சரவையிலும் பதவி வகிக்கிறது.
நாம் பல்வேறு கணக்குகளை போட்டு, கூட்டி கழித்துப் பார்க்க திமுகவின் விக்கெட்டை எடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது 'வெங்காயமும் தக்காளியும்'. இந்திய சமையலின் அடிப்படை காய்கறி இரண்டுதான், தக்காளி வெங்காயம் இல்லாமல் இந்திய / தமிழக சமையல் இல்லை. இந்த இரண்டின் விலையேற்றம் நிச்சயம் வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொளிக்கும். அதற்கு ஆளும் திமுக அரசு என்ன 'மேஜிக்' செய்யப் போகிறது, என்று பொறுத்திருந்து பார்ப்போம்?
7 கருத்துகள்:
விலைவாசியும், ஊழலும் தான் தி.மு.க வின் விக்கெட்டை பறிக்கும் உறுதி செய்யப்பட்டது என்று தான் தோன்றுகிறது.... நல்ல விமர்சனம்.. சரியான அலசல்.. வாழ்த்துக்கள்
இதில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு நல்ல திட்டம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இன்சூரன்ஸ் எவ்வளவு கவர் செய்கிறதோ அவ்வளவு தான் மருத்துவம் பார்க்கப்படும். இது தான் அமெரிக்காவில் இப்போது பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது.
இதில் இன்னொரு பெரிய அபாயம் அரசு மருத்துவமனைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும். இது 'முன்னேறிய' சில நாடுகளின் சாபக்கேடு.
இது நல்ல ஆட்சி போல தோன்றும் ஒரு மிக குறுகிய பார்வையில் ஓட்டை அள்ள நினைக்கும் கேவலமான ஆட்சி. இது மறுபடியும் வரக்கூடாது!
தனது தாய் மொழியை தனது உயிராக பார்க்கக் கூடியவர்கள் தமிழர்கள்.
nijamaluma ...
நன்றி மதுரை சரவணன். சற்று தீவிரமான அலசல்தான், இன்னும் விஷயம் இருக்கிறது. அது தேர்தல் வரும் போது எழுதலாமென்று இருக்கிறேன். நன்றி!
@ bandhu.
காப்பீடு என்பது நமக்கு புதிதான ஒன்று. ஏழைகளின் இடத்தில் இருந்து பார்க்கும் போதுதான் அதன் நிஜமான பயன் தெரியும்.
@ ரமேஷ் கார்த்திகேயன்.
"நிஜமாகத்தான்....1"
நண்பா மிகவும் அருமையாக உள்ளது ... எப்படி திரைபடத்தில் கதாநாயகனை முதல் பாதியில் கெட்டவனாகவும் பின்பு நல்ல மனிதனாகவும் கான்பிபார்களோ அதைபோல் தமிழ் தலைவனை பற்றி அருமையாக சொல்லி உள்ளேர்கள்... நாம் இதுவரை கண்டது கழக ஆட்சியைத்தான் .. இரண்டு கழக ஆ...ட்சியையும் ஒப்பிட்டு பார்த்தல் ...நம் தமிழ் நாட்டிற்கு நல்லது நடந்தது எல்லாம் தமிழ் தலைவனின் ஆட்சியில்தான் ,இன்றும் நாம் அதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் ..மக்கள் பல (நற்) பலனை அடைந்தது அடைந்துகொண்டு இருபது தமிழ் தலைவனின் ஆட்சியில்தான் ..இன்று திமுக தலை தப்புமா என்றால் ..சந்தேகத்துக்கு இடம் இல்லை திமுக தலை நிமிர்ந்து இருக்கும் அவர்களுடன் இருபவர்களின் தலையும் தப்பும் ...மீண்டும் தமிழ் தலைவனின் கழக ஆட்சி அமையும் ..அவருக்கு நிகர் அவரேதான் ... எனவே திமுக தலை மட்டும் அல்ல தமிழர்களின் தலையும் தப்பும் .
கருத்துரையிடுக