செவ்வாய், நவம்பர் 01, 2011

மழைக் காலமும் சில மீன் பிடி நினைவுகளும்!


திருவாலங்காடு காவிரி ஆறு

    மழைக்காலம் வந்துவிட்டாலே  ரம்மியமான நினைவுகளும் நமக்கு வந்துவிடும். அதுவும், கிராமம் சார்ந்த நினைவுகள் என்றால் கேட்கவே வேண்டாம். மனம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து அந்த நிகழ் காலதிற்கே சென்றுவிடும். வாழைப் பழம்  பிடிக்காத குரங்கும் மழைக்காலம் பிடிக்காத மனிதனும்  இருக்க முடியுமா....?
     

மழைக்காலம் தொடர்பான  எனது சிறுவயது நினைவுகள் இன்றும் பசுமையாக அப்படியே உள்ளது.

எங்கள் ஊர் காவிரி ஆற்றின் கடைமடை பாசனப்பகுதி(கும்பகோணம்- மயிலாடுதுறை) என்பதால் 90 சதவீதம் விவசாய நிலங்கள்தான்.  மழைக்காலம் என்றால் போதும், இரு கரை தொட்டு தளும்பி செல்லுவாள் காவிரி அன்னை. 
      

'நெல்லுக்கு இறைத்த நீர்  -வாய்க்கால்
வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்'

ஆறு நிறைந்து, வாய்க்கால் நிறைந்து, வயல் நிறைந்து... கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீர் பாய்விரித்து படுத்திருக்கும். சிலுசிலுக்கும் காற்றில் நீர் திவாளைகள் முகத்தில் பட்டுத் தெரிக்கும்.  செஞ்சாந்தாய் சுழித்து ஓடும் நீரில் கயல்களும் சாரைகளும் வளைந்து நெளிந்து,  நீரில்  நீர் கோலமிடும்.   காற்றில் எழும்பும் சிறு அலையில் நீரில் மறைந்திருக்கும் பால்கட்டிய நெல் கதிர்கள் நாங்கள் இங்குதான் இருக்கிறோம் என்று மெல்ல தலை அசைக்கும்.  அடடா...கம்பன் பிறந்த ஊர் கூப்பிடும் தூரத்தில்தான், என்பதை நீங்கள் மறந்து விடவேண்டாம். 

அந்த கவின்மிகுக் காட்சிகள் என்றைக்கும் நம் நெஞ்சை விட்டு அகலாது.

வயல் வெளிகள் எங்கும் ஆற்று நீர் நிறைந்திருப்பதால், மீன்கள்;  மான்கள் போல்  வாய்கால்களில் துள்ளிக் குதிக்கும்.  அந்த புதுவரவு மீன்களை  பிடிக்க சில நூதன உத்திகளை பயன்படுத்துவார்கள் கிராமத்தினர்.
              
    
'சாறுமடை'

வாய்கால்களில்  குறுகிய இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் 'சாறுமடை' அமைப்பார்கள்.  அதாவது பனைமரத்தின் கூடாக இருக்கும் சிறு த(து)ண்டை எடுத்து  (நடு மரம்),   அதில் ஒரு பக்கத்தில் சிறு சிறு துளைகளை போடுவார்கள். மரத்தின் மறு பக்கத்தில் 'ப' வடிவில் வெட்டி விடுவார்கள்.  இந்த மரத்துண்டை  வாய்க்காலின் நடுவில் வைத்து நீரை தடுப்பார்கள். இப்படிச் செய்து ஒரு செயற்கையான  சிறு அணையை உருவாக்குவார்கள். இரு பக்கத்திலும் சிறு பானையை அணையின் இரு ஓரத்திலும் பதித்து விடுவார்கள். அப்படி பானையை வைக்கும் போது, நீர் வழியும் பக்கத்தில் கொஞ்சம் சரிவாக இருக்கும்படி அமைப்பார்கள். 

இப்போது நீர் பனை மரத்தின் சிறு சிறு துவாரங்கள் வழியாக சட சட வென்று  வெளியேறும்.  அந்த சத்தம் மீன்களை ஈர்க்கும்.  இயற்கையான விதியின் படி மீன்கள் எப்போதும்  சட சடவென்று நீர் வரும் வழியில் ஏறும் அல்லது துள்ளிக் குதிக்கும்.  இப்படி துள்ளிக் குதிக்கும் மீன்கள், அந்த பனை மரத்தண்டின்  இரு புறங்களில்  பதித்து வைத்திருக்கும் பானைகளில் விழுந்து விடும். பானையில் விழுந்த மீன்களால் துள்ளி வெளியே வர முடியாது.

  இந்த சாறுமடையை இரவினில்தான் அமைப்பார்கள். அப்போதுதான் மீன்கள் நன்றாக பாயும்.   விடியற் காலையில் வந்து,  இரு பானைகளில் விழுந்திருக்கும் மீன்களை சேகரித்துக் கொள்வர்கள்.  இரண்டு மூன்று வீடுகளுக்கு தேவையான மீன்கள் இந்த சாறுமடை மூலம் கிடைத்துவிடும்.

'ஊத்தா'

ஊத்தா.  இது மூங்கிலால் ஆனது. ஒரு பக்கம் வாய் அகன்றும் மறு பக்கம் குறுகியும் இருக்கும்.  மூங்கில் குச்சிகளால் சிறு இடைவெளிவிட்டு கயிறுகளால் பின்னப்பட்டிருக்கும். ஊத்தா மீன் பிடிக்கப் பயன்படாத நாட்களில், கோழி அடைக்க பயன்படும்.  சில ஊர்களில் பஞ்சாரம் என்று அழைக்கிறார்கள்.


       து கொஞ்சம் வேடிக்கையானது.  சாணி உருண்டைகளை  உருட்டி, அதில் வறுத்த அரிசிகளை  (பொறி அரிசி) தூவிவிடுவார்கள்.  இதை வீட்டிலேயே தயார் செய்துக் கொண்டுவிடுவார்கள்.   பின்னர் நீர் நிலைகளில் மீன்கள் அதிகம் இருக்கும் இடமாகப்பார்த்து தண்ணீல் ஆங்காங்கே வைத்துவிடுவார்கள். அந்த சாணி உருண்டையின் மீது ஒரு கோரையையும் சொருகி விடுவார்கள். 

மீன்கள் வந்து அரிசிகளை தின்ன ஆரம்பித்ததும், அந்த கோரைகள் அசையத் தொடங்கும்.  பின்னர் ஊத்தாவைக் கொண்டு அடிமேல் அடிவைத்து அந்த வாய் அகலாமான ஊத்தாவை சளக்கென்று  தண்ணீரில் கவிழ்ப்பார்கள். இப்போது அந்த உருண்டையை மொய்த்துக் கொண்டு இருந்த  மீன்கள்  ஊத்தாவிற்குள் வந்துவிடும். பிறகென்ன ஊத்தாவிற்குள் கையைவிட்டு மீன்களை பிடித்துவிடுவார்கள்.  கெண்டை, கெளுத்தி, குரவை, செனல், வாளை என்று ரகத்திற்கு ஒன்றாய் கைகளுக்குள் அடைக்கலம் புகும். மற்ற நேரங்களில்

மழை சிறு தூரலாக  பெய்யும் நேரத்தில், காற்று குளிரோடு நம்மை தழுவிக் கொண்டு இருக்கும். அந்த நேரத்தில் கமகமக்கும் மீன் குழம்பும், ஆவி பறக்கும் சுடு சோற்றின் ருசியை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமென்பதில்லை?!.


4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

பசுமையான நினைவசைகள் !

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி ஹேமா!. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

ஆத்மா சொன்னது…

அழகான நினைவுகள். ஒவ்வொரு கிராமமும் வித்தியாசமான சுவாரஷ்யங்களை கொண்டுள்ளது மழைகாலங்களில்... பனை மூலம் மீன்பிடித்தல் புதிது அடியேனுக்கு

vimal சொன்னது…

https://www.youtube.com/watch?v=KAJphQyBLHE
நீங்கள் குறிப்பிடும் மீன்பிடிக்கும் முறை இதுதான் என்று நினைக்கிறேன்

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...