நினைவு அலைகளுக்கு தினமணியில் நான் எழுதிய கட்டுரை |
சதா ஓசை எழுப்பி கரையைத் தொடும் அலைகள், பார்க்க மகிழ்ச்சியாகத் தெரிந்தாலும் உண்மையில் ஆக்ரோஷம் நிறைந்தது என்பதை நாம் அறிவோம். கொஞ்சம் பிசகினாலும் நம்மை ஆக்ஷ்கரிக்கக் கூடிய ஆற்றல் அலைகளுக்கு உண்டு. அத்தகைய ஆபத்து சில புத்தகங்களுக்கும் உண்டு!. படிக்க படிக்க... அவை நம்மை சட்டென்று உள்ளே இழுத்துக் கொள்ளும். புரட்டி எடுத்து நம்மை அதன் போக்கில் கொண்டு சென்று விடும்.
அத்தகைய ஆபத்து நிறைந்தது டாக்டர் தி.சே.செள. ராஜனின் தன் வரலாறு
நூலான 'நினைவு அலைகள்'. 'பின்ன... கல்கியே இதில் மாட்டிக்கொண்டு
தப்பிக்க முடியாமல் போய்விட்டது...! என்றால் பாருங்களேன்!'.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் இரவு 1 1/2 மணிக்கு வீடு திரும்பிய
'கல்கி' கிருஷ்ணமூர்த்தி மேஜை மேல் இருந்த "நினைவு அலைகள்" என்னும்
பைண்டு முடியாமல் இருந்த புத்தகத்தை எடுத்து ' முதல் பள்ளிக் கூடம்'
என்னும் முதல் கட்டுரையை படிக்க ஆரம்பித்தார், 1937இல் ராஜாஜி மந்திரி
சபையில் சுகாதார மந்திரியாகி சபை கூட்டத்திற்கு வந்ததுவரை... ராஜன்
எழுதியதை படித்து முடித்தப் போது விடியற்காலை 5 மணி. சுமார் 3 1/2
மணி நேரத்தில் 335 பக்கங்களைப் படித்துவிட்டு உடனேயே 'நினைவு அலைகள்' நூலுக்கு முன்னுரையை எழுதி கொடுத்திருக்கிறார். கல்கியின் முன்னுரையே இன் நூலுக்கான அளவையாக மாறி முன் நிற்கிறது.
பிரபல மருத்துவரான தி. சே.செள. ராஜன் மருத்துவ சேவையையே முழு மனதாகக் கொண்டவர். தனது அயராத உழைப்பினால் அயல் நாடுகளில் பணி புரிந்து, பின்னர் ராஜாஜியின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். அவர் எழுதிய தன் வரலாறு கூறும் 'நினைவு அலைகள்' மீள் பதிப்பாக இப்போது சந்தியா பதிப்பகத்தாரால் வெளியீடப்பட்டுள்ளது. விலை ரூ225/-
கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் கழித்து ' நினைவு அலைகள்' மீள் பதிப்பாக
வெளிவரக் காரணம், அதன் தடையில்லா எழுத்தோட்டம்.
பள்ளிக் கூட வாழ்க்கையில் தொடங்கும் வரலாறு, அவரது திண்ணை பள்ளிக் கூட அனுபவம், கல்லூரி வாழ்க்கை, மருத்துவம் படித்து ராணுவ மருத்துவ மனையில் வேலைபார்த்தது, பின்னர் இங்கிலாந்தில் மருத்துவம் படிக்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம், லண்டனில் வ.வே.சு. ஐயர், வீர சாவர்க்கர்
நடத்திய இந்தியா விடுதியில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக இருந்து
தனது தொழில் படிப்பில் கவனம் செலுத்தியது, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்பிய
போது கடல் தாண்டிச் சென்றதால், வைதீக பிராமணர்கள் அவரை தள்ளிவைத்தது என்று அனுபவ ரேகைகள் நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றது.
டாக்டர் ராஜன் இன் நூலை சுய சரிதமாக எழுதாமல் ' நினைவுத் தொகுப்பாக'
எழுதியதே இதன் வெற்றிக்கு காரணம் என்கிறார், கா.நா.சு.
டாக்டர் ராஜன் தனது நினைவு அலைகளில் மிக மெதுவாக நீந்துகிறார்.
வாசகனுக்கு புரிபடும் விதத்தில் மிக நெருக்கமாக அவனுடன் உரையாடுகிறார். புத்தகம் என்றால் இதுவல்லவா புத்தகம்?! சுயசரிதம் என்றால் இதுவல்லவா சுயசரிதம்?! எழுதியவரின் உள்ளத்தோடு நம்முடைய உள்ளமும் ஒட்டி ஒன்றாகி விடுகிறதே என்று சிலாகித்துப் பேசுகிறார் கல்கி.
மீள் பதிப்பாக வந்திருக்கும் 'நினைவு அலைகள்' நம்மை நிச்சயம் உள்ளே
இழுத்துக்கொண்டு போய்விடும்.
சென்னை புத்தகக் காட்சியில் அரங்க எண்: 94 & 95.
தொலைபேசி: 044 24896979
Email: sandhyapublications@yahoo.கம
www. sandhyapublications.com
2 கருத்துகள்:
நல்ல பதிவு.
நன்றி.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
கருத்துரையிடுக