'கருத்த லெப்பை' கதையை படித்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது!. இதே கதை மேற்கு உலகிலோ அல்லது ஆங்கில மொழியிலிலேயோ வந்திருந்தால் கதையே வேறு? ஒன்று இக் கதையை தடை செய்திருப்பார்கள். அல்லது எழுத்தாளரின் தலையை கொய்து வரச்சொல்லியிருப்பார்கள். ஆனால், இங்கே இக் கதையை யாரும் கண்டுக் கொண்டதாகக் தெரியவில்லை.
விலை ரூ 50ல், மருதா வெளியிட்டில், 70 பக்கத்தில், குறு நாவலாக வந்திருக்கும் கருத்த லெப்பை 2007ல் முதல் பதிப்பு கண்டுள்ளது. இரண்டாவது பதிப்பு 2010ல் வந்திருக்கிறது. நான் படித்தது 2012ல். எவ்வளவு வருஷ இடைவெளி பாருங்கள்!. இருந்தும் ஒரு பரபரப்பு இல்லை. இல்லை எனக்குத் தெரியவில்லையா...? தெரியவில்லை?
சாத்தானின் கவிதையை எழுதி சர்வதேச கவனத்திற்கு வந்த அதிர்ஷ்டம் சல்மான் ருஷ்டிக்கு கிடைத்தது பாவம் இக் கதையை எழுதிய எழுத்தாளர் கீரனுர் ஜாகிர் ராஜாவுக்குக் கிடைக்கவில்லை. பேட் லக் ஜாகீர் ராஜா!.
சரி, நாவலுக்கு வருவோம்.
மரைக்காயர். ராவுத்தர், லப்பை என்று இஸ்லாமியர்களுள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் இருப்பது நமக்குத் தெரியும். ராவுத்தர்மார்களுக்கும் லப்பைகளுக்கும் இருக்கும் பொருளாதார வேறுபாடு, சமூதாய வேறுபாடாய் வளர்ந்து, நான் உசத்தி, நீ கீழே என்று தொடைத்தட்டுவது வெளிஉலகம் அவ்வளவாக அறியாத ஒன்று!. இருந்தாலும் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எந்தவித முக்காடும் போட்டுக் கொள்ளாமல் கதையை பட்டவர்த்தனமாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார்.
காலம் காலமாக லப்பைகள் ராவுத்தர்மார்களிடம் அடிமைப் பட்டுக் கிடப்பதும், அதிலிருந்து விடபட லப்பைகள் விருப்பமின்றி இருப்பதுமாய் கதை நகர்கிறது. கருத்த லப்பைதான் இதில் கதா நாயகன். மூல நோய் வியாதிக்காரனான கருத்த லப்பைக்கு ஊர் வம்பு வாங்குவதில் அலாதி பிரியம் போலிருக்கிறது. வெட்டியாய் பொழுதைக் கழிக்கும் கருத்த லெப்பைக்கு ராவுத்தர்மாருங்களோடு ஒத்து போவதென்பது முடியாத ஒன்றாகிவிடுகிறது. அவ்வப்போது விடைத்துக் கொள்ளும் கருத்த லப்பை நல்லதொரு லெவ பையானாகவே வளர்கிறான்.
பொருளாதார ரீதியில் கருத்த லெவை சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும் கொள்கை அளவில் கொஞ்சம் மாறுபட்டுத் தான் திரிகிறான். என்னதான் மதம் மனிதன் மீது பல கட்டுபாடுகளைத் தினித்தாலும், ஒரு தனி மனிதன் தனி அறையில் மதம் பற்றியோ அல்லது வழிபாடு பற்றியோ மறுபட்டு சிந்திப்பதில் எந்தவித வரையோ தேவையில்ல்லை.
சிறிய நாவல் என்றாலும் மிளகுப் போன்றே எதார்த்த நடையில், பிற்போக்குத் தனமின்றி சற்று துணிச்சலுடனே கதை நகர்கிறது. வீட்டில் குனிந்து பாத்திரம் கழுவும் அம்மாவின் பருத்த பிருஷ்டங்கள் கருத்த லப்பையை சற்றே சங்கடப்படுத்த.... அந்த சங்கடம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. எல்லோர் வீட்டிலும் சாதாரணமாய் நிகழும் ஒரு நிகழ்வை விகல்பம் இன்றி கையாண்ட விதத்திற்கு கதையாசிரியருக்கு ஒரு சலாம் போடலாம். இத்தகையை கதையை கையால்வதும் ஒன்றுதான் எரியிற கொல்லியால் தலையை சொறிந்துக் கொள்ளுவதும் ஒன்றுதான்.
உருவ வழிபாடென்பது இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. திசையை நோக்கித் தொழும் இஸ்லாத்தில், உருவம் பொறித்த ஆடைகளை அணிவதோ, ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதோ, நல்ல ஓவியங்களை வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வதேக் கூட மத துவேஷமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் கால மாற்றத்தில் இத்தகைய என்னமெல்லாம் புதையுண்டு போவது நல்லதுதானே....? சமீபத்தில் பாகிஸ்தானில் அல்லாவின் உருவத்தை வரைவோம் வாருங்கள் என்று 'ட்விட்டரில்'வந்த செய்தியை அடுத்து ஒரு வாரகாலத்திற்கு ட்விட்டரை முடக்கியது பாகிஸ்தான் அரசு. அதை ட்விட்டியவனை நோண்டி நோங்கெடுக்க, சல்லடை போட்டு தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அவன் கிடைத்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா...?
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் நீங்கள் வெகு தூரத்தில் தள்ளிதான் நிற்கவேண்டும். அல்லா உருவம் தொடர்பாக உங்கள் புருவம் கூட நெற்றியில் நெறிபடக் கூடாது. அந்த ஆசை இருந்தால், நீங்கள் மவுத்தாவது உங்கள் கையில் இல்லை. இக் கதையில் கூட கருத்த லப்பைக்கு நல்லதொரு தண்டனையை தந்திருக்கிறார் ஜாகீர் ராஜா. இல்லை என்றால்... அவருக்கல்லவா கிடைத்திருக்கும்!?.
3 கருத்துகள்:
அருமையான மதிப்பீடு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
மிகுந்த நன்றி ஐயா!
100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...
கருத்துரையிடுக