வெள்ளி, ஏப்ரல் 26, 2013

இந்தா படி 'சாபம்'


 


நூலின் பெயர்      : சாபம்.
எழுத்தாளர்            : சல்மா.
பக்கம்                       : 142
வெளியீடு               : காலச்சுவடு 
                                      669 கே.பி.சாலை, 
                                      நாகர்கோவில், 629001.

விலை          : ரூ.110/-


நவீன இலக்கிய உலகில் நாம் விலகிச் செல்ல முடியாத எழுத்து  கவிஞர் சல்மாவுடையது.  காலச்சுவடு மற்றும் தலித்  இதழ்களில்  சல்மா எழுதிய  11 சிறுகதைகள் 'சாபம்' என்ற தலைப்பில் தனி சிறுகதை தொகுப்பாக காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. 

எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் சல்மாவின் கதைகளில் வரும்    கதாப்பாத்திரங்கள் நிறைய மவுனங்களை சுமந்து கொஞ்சமே கொஞ்சமாக வார்த்தைகளை பிரசுவிக்கிறார்கள்.  மெதுவாக நகரும் கதைக் களங்களில் மெல்லிய பிளாக் அண்ட் ஒயிட் படம் பேன்றே கதை பாத்திரங்கள் நமது மனப் பிம்பங்களில் நகருகின்றன.

 பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராக பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வியலில் பெண் மிகுந்த வலியும் வேதனையும் சுமப்பவளாகவே இருக்கிறாள். மிக அழுத்தமான கதைகளில் அவளது மவுனமும், யாருமற்ற அண்ட வெளியில் அவள் தனிமைப்பட்டு நிற்கும் போது நம்மையும் அருகில் நிற்கவைத்து அந்த வலியை உணரச் செய்கையில் தெரிகிறது   சால்மாவின் எழுத்தின் ஆளுமை.

   இதில் முத்தாய்ப்பாக 'வலி' என்ற சிறுகதையில்  அவளும் அவனுமே கதைகளை நகர்த்துகின்றனர்.  அவர்கள் யார்? பெயர் என்ன? என்ற கேள்விகளுக்குள் நம்மை போக விடாமல் அந்த வலியை மட்டுமே உணரச் செய்கிறார். இதை ஒரு யுத்தி என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கதைகள் வெவ்வேறான காலகட்டத்தில் எழுதப்பட்டாளும் அதை ஒரு சேர படிக்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பது போன்ற சாயலை ஏற்படுத்துகிறது. 

 இத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் மைய்யமாக பெண்ணே இருக்கிறாள்.  அவளே ஆதியும் அந்தமுமாய் நின்று கதை நகர்த்தலில் முக்கிய பங்கு வகிக்கிறாள். மனத்தின் மிக நுட்ப போராட்டங்களையும், சிக்கலாகிவிட்ட ஆண் பெண் உறவின் சுமுகமற்ற  புரிதலையும் மிக அனாயசமாக கடந்து செல்கிறது இச் சிறுகதை தொகுப்பு. 

இச்  சிறுகதை தொகுப்பை படிக்காதவர்களுக்கு இந்த ப(பி)டி 'சாபம்' என்று கையில் கொடுக்கலாம்.


வியாழன், ஏப்ரல் 25, 2013

இப்ப... ஏமாந்தது யாரு...?



                                   அந்த இனிப்பான (?) நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வாங்க வேண்டி இருந்தது. ஒரு வாரமாக அந் நிறுவனத்தின் அட்மின் மேனேஜரினி 'அந்தா இந்தா' என்று இழுத்தடித்துக் கொண்டு இருந்தார். தொலை பேசியில் தொடர்பு கொண்டாலும் எடுப்பதில்லை. நேற்று நேராகவே சென்று விட்டேன். ரிசப்ஷனில் விசாரித்த போது, மேடம் இரண்டு நாளா leave என்றார்கள்.

சரி... என்று அவுங்க ஆபீஸ்லேருந்தே அவரை கை பேசியில் தொடர்புக் கொண்டேன். "சார், கடந்த இரண்டு நாளா வாமிட், டிசன்ரி. அதான் உங்க மொபைல கூட பிக்கப் பண்ண முடியவில்லை. இப்பக் கூட நான் ஆபிஸ்லதான் (?) சார் இருக்கேன். எம்டி இரண்டு நாளா ஆபீஸ் பக்கம் வரல என்றார்".

எனக்கு திடுக்கென்றது. எப்படி இந்த அம்மனி கூசாமல் பொய் சொல்கிறார் என்று. 'நான் உங்க ஆபிஸ்ல தான் இருக்கேன் மேடம்' என்று சொல்ல வாய் வரை வார்த்தை வந்துவிட்டது. ஆனால், அதை சொல்லி ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்று வெறுமனெ 'ம்' கொட்டினேன்.

எனக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய 'ஏமாறும் கலை' என்ற கதைதான் ஞாபகத்தில் வந்தது. அதில் இப்படித்தான் வங்கியில் பணம் கட்ட (அவ்வப்போது) வரும் பெண்மனி தனது கணவருக்கு இரண்டு காலும் முடியாது. அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல. அந்த வங்கியின் கேஷியர் அவருக்கு சிறப்பு சலுகைத் தருகிறார். "மேடம்.... நீங்க இனி கீயுவில் நிற்க வேண்டாம். நேரே வந்து எனது கவுண்டரில் கட்டிவிடுங்கள்" என்கிறார்.

அப்படி இருக்க ஒரு திருமண விருந்தில் அந்த பெண்மனியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியர் கடுப்பாகிறார். " சை...இந்த பொம்மனாட்டி நம்மள இப்படி ஏமாத்திட்டாளே " என்று மனதிற்குள் குமுறுகிறார். " நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்" என்று நினைத்துக் கொள்கிறார்.

இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்துக் கொள்ள, அவரோ ....அந்த பெண்மனியிடம் எதுவும் கேட்காதிர்கள் என்கிறார். அவர்கள் வந்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பன்னுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே காட்டிக்குங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரியாதே? இப்ப ஏமாந்தது யாரு....?

கிட்டத்தட்ட என் மன நிலையும் இப்படிதான் இருந்தது. 'ஏமாறும் கலை' சிறு கதையில் யுவன் சந்திரசேகர் மைனுட்டான அந்த விஷயத்தை மிக அழகாக கையாண்டிருப்பார்.

எனக்கும் அது சரியென்றுதான் பட்டது.

திங்கள், ஏப்ரல் 22, 2013

ஏப்ரல் 23 உலக புத்தக தினம்.



'புத்தகமே 
உலகை உளி கொண்டு செதுக்கும் சிற்பி
அன்பை வெளிப்படுத்தும் கருவி!'



     உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புடனே பிறக்கிறது. அது நினைவூட்டல் போன்றோ அல்லது முந்தைய அனுபவத்தின் மீள் தொடர்ச்சியாகவோ அன்றைய தினம் நினைவில் கொள்ளப்படுகின்றது. இது ஒரு வகையில் நாம் இயங்குவதற்கான சூழலை எளிதாக்குகிறது.  இன்றைய தினமும் அப்படியே.   இன்று உலகம் முழுவதும் "உலக  புத்தக தினம்" கொண்டாடப்படுகிறது.


ஒரு சமூகத்தை நல்லதொரு சமூகமாக மாற்றும் திறன் கொண்டது புத்தகங்கள்.  புத்தகங்கள் இல்லையென்றால் நாம் எப்படிபட்ட ஒரு மனித சமூகமாக இருந்திருப்போம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.  புத்தகங்களே இவ் உலகை உளி கொண்டு செதுக்கும் சிற்பியாக இருந்திருக்கிறது. இருந்தும் வருகிறது.

இவ் உலகை இயக்க அந்த புத்தகங்களிலிருந்துதான் மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களே மகா மனிதர்களாக இப்பூ உலகை  மான்புற செய்திருக்கின்றனர்.  ஒப்பற்ற தலைவர்களையும், ஞானிகளையும், தொழிற் நுட்ப வியாளர்களையும்,  மருத்துவர்களையும்,விஞ்ஞானிகளையும் மேதைகளையும், மக்கள் தலைவர்களையும் இந்த புத்தகங்கள்தான் பிரசவித்திருக்கின்றன.

பத்து கட்டளைகள்.

உலகம் முழுவதும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சம நிலை ஏற்பட அறிவுசார் தகவல்களை பரவலாக்கும் முயற்சியில் 1972ம் ஆண்டு உலக புத்தக ஆண்டாக அறிவிக்கப்பட்டது.  அதற்கு முன்னர்  உலக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் இவர்களின் முயற்சியால் 1971 அக்டோபர் 22ம் தேதி மாநாடு ஒன்று நடைபெற்றது.  அதில் படிப்பாற்றலை பரவலாக்க 10 கட்டளைகள் நிறைவேற்றப்பட்டன.



  • அனைவருக்கும் வாசிக்கும் உரிமை.
  • புத்தகங்களின் இருத்தல் அவசியம்.
  • படைப்பாளியை உருவாக்கும் சமூகச் சூழல்.
  • பதிப்பகத் தொழில் வளர்ச்சி.
  • நூலகங்களின் வசதிகள்.
  • நூலகங்கள் நாட்டின் கருவூலம்.
  • பதிப்பாளர்- வாசகர் இணைப்பு.
  • புத்தகங்களை பராமரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  • அனைத்து நாடுகளின் / மொழிகள் புத்தகங்கள் பரிமாற்றம்.
  • வாசிப்பு மூலம் உலக உறவு

இந்த பத்து கட்டளைகளின் தொடர் விவாதம் விளைவாக 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தகத் தினம் அறிவிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்தே அனைத்து நாடுகளும்  ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தகத்தினமாக கொண்டாடப்பட்டது.

இந்த உலக புத்தகத் தினத்தை மேற்கத்திய நாடுகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன.  குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த பல்வேறு  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.   அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டு பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பல்வேறு விற்பனை திட்டங்களை அறிமுகப்படுத்தினர்.  சிறப்பு தள்ளுபடி, பரிசுப் பொருட்கள், பிரபல எழுத்தாளரின் கையொப்பம் என்று புத்தக விற்பனையில் நவீன உத்திகள் புகுத்தப்பட்டது.

இதனால் வருடம்  தோறும்  'உலக புத்தக தினம்' ஏப்ரல் 23ம் தேதி அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  உலக புத்தக தினத்தன்று சிறுவர் சிறுமியர்களுக்கு   புத்தகங்களை பரிசாக அளிப்போம்.  நாளைய நவீன உலகை  கட்டமைக்கப் போகும் சிற்பி அவர்கள்தானே....?!


 தகவல் உதவி:   தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 'உலக புத்தகத் தின' அழைப்பு மடல்.  

வியாழன், ஏப்ரல் 04, 2013

"ராஜூ முருகன் நல்லா எழுதுறாண்டா!"


'வட்டியும் முதலும்'

               திரும்பிப் பார்க்கவைத்த ஒரு தொடர். சில நேரம் படிப்பதுண்டு. சில நேரம் படிப்பதில்லை. நம்மால் இப்படி எழுத முடியவில்லையே என்ற ஏக்கத்தில் சில வாரங்கள் 'வட்டியும் முதலும்' படிக்காமல் கூட  விட்டுவிடுவேன். படித்த வாரத்தை விட படிக்காமல் விட்ட வாரம் உறுத்திக் கொண்டே இருக்கும்.    
ராஜூ முருகன்


மிக இயல்பாக, மிக மிக எளிமையாக சாமனியனின் தோள் தொட்டு செல்லும் ஆற்றல் ராஜூ முருகனின் 'வட்டியும் முதலும்மில் இருந்தது.  வ.முவின் கதைக் களம் பெரும்பாலும் நமக்கு தெரிந்த ஏரியா என்பதால் கொஞ்சம் ச(அ)க்கரை தூக்கலாகவே இருக்கும்.  கோடம்பாக்கம் புலியூர் அபார்ட்மெண்ட் (8 வருடம் எனக்கு அங்கேதான் ஜாகை), கொரடாச்சேரி என்று எனக்கு தெரிந்த ஏரியாக்கலில் பயணம் செய்ததால் படிப்பது இன்னும் எளிதாக இருந்தது.

ஆனந்த விகடனில் தொடர் வெளிவந் போதே, இலக்கிய வாடை அடித்தது. "யாராது....ராஜூ முருகன்?. படவா.. நல்லா எழுதுறாண்டா.  ஒவ்வொரு வாரமும் கலக்குறாண்டா" என்று ஸ்காட்ச் மயக்கத்தில் நண்பன் புருனேவிலிருந்து விசாரித்தான். ஆனந்த விகடனில் ஒன்றரை வருடங்களாக வெளிவந்த வட்டியும் முதலும் தற்போது நிறைவுப் பெற்றது.

ராஜூ முருகனின் 'வட்டியும் முதலும்' தாக்கத்தில் நானும் ஒரு கட்டுரை எழுதினேன்.  எனது தமிழன்வீதியில் மேய்ச்சல் நிலம்    (உடல் நோக சுமந்துவிட்டு, உதறி எறியலாமா...? என்ற பகுதியில் அந்த கட்டுரையை எழுதினேன்.  அது ஒரு முயற்சி. காசா பணமா...?  சும்மா டிரைப் பன்னி பார்க்கலாமே என்ற என்னத்தில் எழுதினேன். நமது வலைத்தளம்,  நாம்தான் ஆசிரியர்.  அதனால் 'வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம்' என்ற பேச்சுக்கே இடமில்லை.

பொதுவா தொடர் கட்டுரை என்றால், வயது முதிந்தவர்கள் அல்லது ஐம்பது பிளஸ் ஆசாமிகள்தான் எழுதுவார்கள். இல்லை என்றால் நமக்கு தெரிந்த அல்லது பிரபலமான மனிதர்களையே எழுதச் செய்வார்கள். ஆனந்த விகடன் அப்படி இல்லை. துணிந்து புது முகங்களை இறக்குவார்கள். கரிசல்காட்டு கடிதாசி-ராஜ நாரயணன், கம்பிக்குள் வெளிச்சம் -தியாகு, கூட்டாஞ்சோறு - வேல ராமமூர்த்தி, தேனீ ஈஸ்வரின் ஜமீன்களை பற்றிய தொடர் கட்டுரை (பெயர் மறந்து விட்டது) என்று ஆனந்த விகடன் குழுமம் அறிமுகப்படுத்திய கட்டுரையாளர்கள் சோடை போனதில்லை.  சிம்மாசனத்தில்தான் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ராஜூ முருகனும் நம்மை கட்டுரை எழுத வைத்துவிட்டார்.

வட்டியும் முதலும் இளஞர்களின் குரல் என்றே சொல்லலாம். அந்த எழுத்து நம்மை வசீகரித்தது. அதன் ஆளுமை மிக எளிதாக படிப்பவனின் மனதில் புகுந்து வெளியேற மறுத்தது. "இந்த வயதிற்குள் அப்படி என்ன அனுபவம் கிடைத்துவிடப்போகிறது..?"  என்ற கேள்விக்கு  "யாருப்பா...அந்த ராஜூ முருகன்...?" என்று பிறர் கேட்பதன் மூலமே  பதில் கிடைத்தது. அந்த அளவிற்கு வட்டியும் முதலும் அவரை  உயர்த்திவிட்டது.

 வட்டியும் முதலும் தந்த ராஜூ முருகன் இனி 'குக்கூ' என்று வெள்ளித் திறையில் கூவப் போகிறார். சினிமாதான் அடுத்தப் படியா என்று தெரியவில்லை....?   ஷங்கரின் தயாரிப்பில் ஒரு படம் பன்ன ரேடியாகிவிட்டார் ராஜூ முருகன்.   இந்த நல்லதொரு எழுத்தாளனை சினிமா நீர்த்துப் போகாமல் வைத்திருக்க வேண்டும் என்பதே நமது ஆசை!

குட்லக் ராஜூ முருகன்.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...