திங்கள், அக்டோபர் 28, 2013

கோமல் சுவாமிநாதன் என்றோரு நீர்கோடு!



மாயவரம் பஸ்ஸாண்டில் உள்ள புத்தகக் கடையில், சொல்லி வைத்தால்தான் 'சுபமங்களா' கிடைக்கும். கல்லூரி காலங்களில் ஏதோ ஒன்றை தேடியலைந்த போது, நவீன இலக்கியங்களை எனக்குள் அறிமுகம் செய்துவைத்தது சுபமங்களாதான்.

எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது அச் சிற்றிதழ்.  அதன் இலக்கிய ரசனைக்காக சிற்றிதழ்  என்கிறேனே தவிர அது சிற்றிதழ் கிடையாது. மிகப் பெரிய சைஸில் வரக் கூடிய இதழ். ஸ்ரீராம் சிட்ஸ் நிதி பங்களிப்பில் வெளிவந்தது. அது வெகு ஜன பத்திரிகை இல்லையென்றாலும் 90களில் நவீன இலக்கியத்தை இளைஞர்களிடையே கொண்டு சொன்ற பெருமை சுபமங்களாவையே சேரும்.

எஸ் வைதீஸ்வரன், அசோகமித்திரன்,அம்பை,ந.பி., க.நா.சு., ப.முருகன் என்று பெரும் இலக்கிய கர்த்தாக்கள், மொழிபெயர்ப்பு இலக்கியம், 'நேர்காணல்' என்ற சொல்லாடல், கோவி.ஆனந்தின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் என்று இந்த கழுதைக்கு கற்பூர வாசத்தை காட்டியது சுபமங்களாதான். 
 
 
இத்தகைய அரும் பணிக்கு பின்னால் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். அவர் கோமல் சுவாமிநாதன்.  சுபமங்களா என்றால் கோமல்தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு ஒரு 'நீர்கோடாய்' சுபமங்களாவில் விரவியிருந்தவர். எழுத்து, நாடகம், சினிமா என்று எங்கும் எப்போதும் பேசப்பட்ட ஒரு மனிதர் கோமல் சுவாமிநாதன். எங்கலூர் திருவாலங்காட்டிலிருந்து அப்படியே திருவாவடுதுறை, மேக்கிரிமங்களம், ஆனாங்கூர், தேரழந்தூர என்று பின்பக்கமாய் சென்றால் கோமல் என்ற ஊர்  வந்துவிடும். தனது சொந்த ஊரின் பெயரையே  தனது பெயருக்கு முன்னால் வைத்து ஊருக்கு பெருமைச் சேர்த்தவர் கோமல் சுவாமிநாதன்.

இவரது 'தண்ணீர் தண்ணீர்' நாடகம் கம் சினிமா, இன்றும் நமக்குள் கண்ணீரை வரவழைத்துவிடும்.  இன்றளவுக்கும் அது பேசப்படக் கூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது.  ஒரு படைப்பாளியின் வெற்றியே அதுதான். நாடகம், சினிமா, கதைகள் என்று தனது இலக்கிய ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய மனிதர் அவர்.  நாடக உலகில் அவர் விட்டுச் சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது. நாடக உலகில் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் அவரது இடம் அப்படியேதான் இருக்கிறது எனலாம்.

 கோமலின் நாடகங்கள் பலவற்றை மேடையேற்றும் நல்லதொரு பணியை,  அவரது மகள் லலிதா தாரணி செய்துக்கொண்டு இருக்கிறார்.

வாழ்ந்து  மறைந்தாலும் பலர் மனதில், இன்றும் நிறைந்து வாழ்கிறார் கோமல் சுவாமிநாதன்.

இன்று அவரது 18 வது நினைவு நாள்.

-தோழன் மபா.

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தண்ணீர் தண்ணீர் - இன்றும் எங்கள் ஊரில் கஷ்டம் தான்...

கோமல் சுவாமிநாதன் அவர்களின் நினைவு நாளில் சிறப்பித்தமைக்கு நன்றி...

இராய செல்லப்பா சொன்னது…

மேற்கு மாம்பலத்தில் என் வீட்டிற்குப் பின்புறத் தெருவில் தான் அவர் குடியிருந்தார். நான் டில்லியில் இருந்தபோது சுபமங்களாவை விளம்பரப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார். எளிமையானவர். அவரது நினைவு நாளை நினைவுபடுத்தியதற்கு அன்றி. கலை இலக்கியத் துறைகளில் முந்திக்கொண்டு தொண்டாற்றிய தஞ்சாவூர்க்காரர்களில் அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

Unknown சொன்னது…

வணக்கம். உங்களைப்போலே நானும் சுபமங்களாவின் தீவிர வாசகன். எனது கல்லூரி காலகட்டத்தில் தேவகோட்டை பேரா.மு.பழனி இராகுலதாசன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சுபமங்களாவின் வெற்றிடம் இன்றுவரை நிரப்பப்படாமலேயே உள்ளது. கோமலை நினைவு கூர்ந்த உங்களுக்கு நன்றி.

-பழ.அசோக்குமார், புதுக்கோட்டை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கோமல் சுவாமிநாதன் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

'தண்ணீர் தண்ணீர்' நாடகம், திரைப்படமாக எடுக்கப்படுவதற்குமுன்னாலேயே அந்த நாடகத்தின் முழு வசனத் தொகுப்பும் முழுமையாக (சுமார் 32 பக்க அளவில்) சிறிய எழுத்துக்களில் 'கல்கி'யில் வெளியிடப்பட்டது இப்போது என் நினைவிற்கு வருகின்றது. [உங்கள் நினைவிற்கு(ம்) வருகிறதா தோழன் ம.பா.?] அவ்வாறான சிறப்பைப் பெற்றது அந்த நாடகம்.
அந்த படைப்பாளியை நினைவு கூர்ந்தமை, மிகசிறப்பு.

(நானும் மயிலாடுதுறை புத்தக் கடையில்தான் பெரும்பான்மை இதழ்கள் வாங்குவது வழக்கம்.)

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…


தங்கள் கருத்திற்கு நன்றி நிஜாமுதீன்.

நீங்களும் மாயவரம்தானா? எனக்கு பக்கத்தில் திருவாலங்காடு கிராமம். தற்போது வசிப்பது சென்னையில்.
தங்களது வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…


நலம்தானே தோழன் ம.பா.?
//"நீங்களும் மாயவரம்தானா?"//
- என்று கேட்டுள்ளீர்கள். அதற்கான பதில் இந்தப் பதிவில்:

விகடனில் நிஜாம் பக்கம்!


மயிலாடுதுறை புத்தகக் கடை பற்றிய எனது பதிவு: !பத்து புரோட்டா பார்சல்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தொடர்ச்சி...=>
தங்களூர் வழியே நான் பயணித்தபோது... இந்தப்பதிவு:
!விழுந்தா உங்க தலையிலதான் விழும்!


//உங்கள் நினைவிற்கு(ம்) வருகிறதா தோழன் ம.பா.?] //
- என்று ஒரு கேள்வி கேட்டிருந்தேனே, பதில் சொல்லவில்லையே ம.பா?
செம்பியன் (என்ற புனைபெயரில் கல்கி கி.ராஜேந்திரன் அவர்கள்) எழுதிய "கிரியா ஊக்கி" என்ற முழு நவீனம் கல்கியில் வந்தது. தாங்கள் படித்ததுண்டா?
தங்கள் பின்னூட்டப் பதில்களை எதிர்பார்க்கிறேன். எனது வலைப்பூ இணைப்புகள் மூலம் பதிவுகள் படித்து, தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ NIZHAMUDEEN. படித்ததில்லை நிஜாம்!. ஆனால், கேள்வி பட்டு இருக்கிறேன். கல்கியின் மற்ற புதினங்கள் படித்திருக்கிறேன். அப்போது தொடர் வாசிப்பில் ஆவியும், குமுதம் மட்டுமே இருந்தது!.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...