வெள்ளி, மார்ச் 14, 2014

காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!


(தினமணியில் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய கட்டுரை, பிடித்திருந்ததால் இங்கு  பிரசுரம் செய்கிறேன்)

                         பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் "காணவில்லை' சுவரொட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சம் துணுக்குறுகிறது. இவர்கள் எல்லாம் எப்படி காணாமல் போக முடியும்? மனிதர்கள், காட்டில் காணாமல் போகலாம், நாட்டில் காணாமல் போகலாமோ? இவர்கள் காணாமல் போக எது காரணமாக இருந்திருக்கும்? "தேடுவதற்கு யாருமற்றவர்கள் காணாமல் போவதில்லை' - எங்கோ படித்தவரி, எட்டிப்பார்க்கிறது.

காணாமல் போனவர்கள் காணாமல் போன அன்றைக்கு, பெரும்பாலும் கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கிறார்கள். "மனநிலை சரியில்லாதவர்' என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

அண்மையில், தென்மாவட்டத்திலுள்ள ஒரு நகரப்பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர், நல்ல மனநிலையுடையவராகவும் ஒழுங்கான முறையில் உடை அணிந்தவராகவும் காணப்பட்டாலும், எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் கைநீட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர் முகம் பரிச்சயமானதாக இருந்தது. அவரை நெருங்கினேன். அவரும் என்னை கவனித்து விட்டார். சட்டென்று பேருந்து நிலையக் கூட்டத்தில் கரைந்து காணாமல் போனார்.

சென்னையில் யார் வீட்டிலோ இவரைப்பார்த்திருக்கிறேன். யார் வீடாக இருக்கும் நினைவின் அடுக்குகளில் துழாவினேன். மனம் பதைத்தது. வழி தவறி வந்துவிட்டாரோ? என்னை கண்டதும் ஏன் ஒளிய வேண்டும்? அந்த பேருந்து நிலையத்தில் எவ்வளவு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெயில் - கூட்டம் - பேருந்துகளின் ஹாரன் சப்தம். நான் விரைவிலேயே களைத்துப் போய்விட்டேன்.

சற்று நின்றேன். கையில் பை கனத்தது. அதைவிட மனசு கனத்தது. வீட்டைவிட வெளியிடத்தை பாதுகாப்பாக உணர்வது எவ்வளவு துர்பாக்கியமானது? சுயமான சம்பாத்தியமோ, பென்ஷன் போன்ற வருவாயோ இல்லாத முதியவர்கள், வீட்டில் உள்ளோரின் கடுஞ்சொல் தாங்காது சில நேரங்களில் வெளியேறி விடுகின்றனர்.

இந்த முதியவரும் அப்படிப்பட்டவர்களில் ஒருவாராக இருப்பாரோ? பெரும்பாலான "காணவில்லை' சுவரொட்டிகளில், சில குறிப்பிட்ட வாசகங்களே அடிக்கடி காணப்படும்.

ஒருமுறை நான் பார்த்த "காணவில்லை' சுவரொட்டி ஒன்றில், மீசை அரும்பத் தொடங்கும் ஒரு பையனின் பால் வடியும் முகமும், அதன் கீழே, "அசோக்! எங்கிருந்தாலும் வரவும். அம்மா உன் நினைவாக படுத்த படுக்கை ஆகிவிட்டாள். உன் விருப்பப்படி இனி எல்லாரும் நடந்து கொள்கிறோம், உடனே வரவும்' என்ற வாசகங்களும் காணப்பட்டன.

இந்த சுவரொட்டியை அந்த பையன் பார்த்திருப்பானா? அம்மாவின் மேல் உள்ள பாசம் அவனை வீட்டுக்கு அழைத்துப் போயிருக்குமா? சூதும் வாதும் நிரம்பிய இந்த உலகத்தில் கெட்டவர்கள் கையில் அவன் கிடைத்திருந்தால், அவன் நிலைமை என்னவாகியிருக்கும்? கடவுளே, அப்படி ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது.

அந்த பையன் திரும்ப வந்திருப்பானா என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்குள் மூண்டது. அந்த சுவரொட்டி ஆறு மாதங்கள் முன்னால் ஒட்டப்பட்டதாக இருந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டேன். மறு முனையில் ஒரு பெண் குரல் கிறீச்சிட்டது.

"ஐயா, நீங்க யாருங்க? அசோக் கிடைச்சுட்டானா? அவனைப் பார்த்தீங்களா?' என் கைகள் நடுங்கின. நான் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தேன். ஆனாலும் "ஐயா'... "ஐயா'.. அந்தத் தாயின் தீனக்குரல் என்னைப் பல இரவுகள் தூங்கவிடாமல் செய்தது.

வீட்டை விட்டு ஓடிப்போன ஒரு சிறுவனைப் பற்றிய ருஷ்யக்கதை உருக்கமானது: தாத்தா, பேரன் } இரண்டே பேர். தாத்தா பேரனை கண்டிப்பாக வளர்க்கிறார். சின்னஞ்சிறுவனான பேரனுக்கு தாத்தாவின் கண்டிப்பு பிடிக்கவில்லை. ரயில் ஏறி தொலைதூர நகரத்துக்கு போகிறான். அங்கே ஒரு ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்து பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். ஒருநாள் காகிதமும், கவரும் சேகரித்து தாத்தாவுக்கு கடிதம் எழுதுகிறான்.

அன்புள்ள தாத்தா,

இங்கே நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். உடம்பெல்லாம் கரியும் அழுக்குமாக இருக்கிறேன். அடிக்கிறார்கள். என்னை வந்து அழைத்துப் போங்கள். இனிமேல் உங்கள் பேச்சை கேட்கிறேன். உடனே வரவும். இப்படிக்கு - உங்கள் பேரன்.
கவரை ஒட்டி எடுத்துக் கொண்டு ஓடுகிறான். தபால் பெட்டியில் சேர்க்கும் முன்னதாக ஞாபகம் வந்தவனாய் முகவரியை எழுதுகிறான் தாத்தா, கிராமம். அவ்வளவுதான். 

நாம் நாளும் காணும் "காணவில்லை' சுவரொட்டிகளுக்குப் பின்னால் இது போன்ற கண்ணீர்க் கதைகள் எத்தனையோ? இனி ஒரு விதி செய்வோம். முதியோருக்குப் பரிவு காட்டுவோம்; பெண்களையும் சிறுவர்களையும் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவோம்; மனநலம் குன்றியவர்களைப் பாதுகாப்போம். காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!.



நன்றி தினமணி.

13 கருத்துகள்:

ராஜி சொன்னது…

இதுப்போன்ற காணாமல் போனவர்கள் பற்றி சுவரொட்டிகளைக் காணும்போது அவர்கள் வீட்டு நிலையை எண்ணி பார்ப்பதுண்டு.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தேடுவதற்கு யாருமற்றவர்கள் காணாமல் போவதில்லை'
சிரிய வாசகம்தான் ஆனாலும் எவ்வளவு பெரிய உண்மை.
என்று மாறும் நம் சமூகம்

இராய செல்லப்பா சொன்னது…

நண்பரே , ஏன் இவ்வளவு நாளாக எழுதுவதிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டீர்கள் ? திறமையுள்ளவர்கள் இப்படி செய்யலாமா ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்று வெளியே செல்லும் போது, குழந்தைகளின் மேல் எப்போதும் கவனம் இருக்க வேண்டும்...

இது போல் சுவரொட்டி காணும் போதெல்லாம் விரைவில் அவர்கள் உரியவர்களுக்கு விரைவில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வேன்...

Rathnavel Natarajan சொன்னது…

காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!

நன்றி தமிழன் வீதி

எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Chellappa Yagyaswamy
வணிக ஆண்டு இறுதி என்பதால், என்னைபோன்ற மார்க்கெட்டிங் மனிதர்களின் நேரத்தை, வேலை செய்யும் நிறுவனங்களே எடுத்துக் கொள்கின்றன. அவர்கள் நம்மை பிழிந்தெடுத்தப் பிறகு, எழுதுவதற்கு மனமே ஓட மாட்டேன் என்கிறது.

தொடர்ந்து எழுதுவேன் சார்.

Unknown சொன்னது…



நலமா! நண்பரே! நான்தான் வயதானவன்! இயலவில்லை!தாங்களே
நீண்டநாள் காணாமல் போகிறீர்களே!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ ராஜி.

நன்றி ராஜி, தங்களது முதல் முறை வருகைக்கும் கருத்திற்கும்

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@கரந்தை ஜெயக்குமார்.

நன்றி அய்யா!.
//தேடுவதற்கு யாருமற்றவர்கள் காணாமல் போவதில்லை// என்ற வாசகம் பிடித்திருந்ததால்தான் இங்கு பிரசுரம் செய்தேன். தஞ்சைக் கவிராயருக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி தித.

நானும் அத்தகைய விளம்பரங்களை உற்று நோக்குவது உண்டு.
அது எப்போதும் வலி தருவதாகவே இருக்கிறது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Rathnavel Natarajan.

மிக்க நன்றி அய்யா!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ புலவர் இராமாநுசம்!.

நன்றி அய்யா!. நேரம் கிடைப்பது என்பது என்னை பொருத்தவரையில் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. வீடு சென்னை புறநகரில் இருப்பதால் காலையில் எட்டரைக்கே கிளம்பி விட வேண்டியதாக இருக்கிறது. வீடு வந்து சேர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. அதன் பிறகு ஒரு சோம்பேரித்தனம் வந்து சேர... தொடர்ந்து எழுதுவது என்பது இயலாத ஒன்றாகவே இருக்கிறது.

தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் அய்யா!. தங்களது நலம் கொண்ட விசாரிப்புக்கு எனது அன்பான நன்றிகள் பல!.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ஆமாம் மனசு கனக்கிறது...

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...