வெள்ளி, மார்ச் 21, 2014

எலிகண்ட் கமலநாதன் சார்!

 
கமலநாதன்


                        ன்னை போன்ற ஊடகத் துறையில் விளம்பர பிரிவில் பணியாற்றும் எவருக்கும், எலிகண்ட் பப்ளிசிட்டீஸ் கமலநாதன் சாரை நன்றாகத் தெரியும். இரண்டு பாக்கெட் வைத்த பளீர் வெள்ளை சட்டை, தும்பைப் பூ நிற வேஷ்டி, நெற்றியில் திருநிறு குங்குமம் இதுதான் சாரின் அடையாளம். அமைதி கனிவான பேச்சு என்று ஏகத்துக்கும் நம்மை வசிகரீக்கக் கூடியவர்.

தமிழகத்தில் முன்னணி விளம்பர நிறுவனமான 'எலிகண்ட்' முந்தையை கருப்பு வெள்ளை காலகட்டங்களிலிருந்து சினிமா விளம்பரங்களை வெளியீடுவதில் பெரும் புகழ் பெற்ற நிறுவனம்.
சினிமா பட ஸ்லைடுகளில் 'விளம்பரம் எலிகண்ட்' என்று வரும்; நீங்கள் கூட பார்த்திருக்கலாம்.

அந்தக் கால சினிமா பிரபலங்கள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். பேச பேச சினிமா பிரபலங்களைப் பற்றி வெளிவராத பல தகவல்கள் மிக அனாயசமாக வந்து விழும். இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டு இருப்போம். சினிமா மற்றும் அரசியல் உலகம் பற்றி அவர் கூறும் விபரங்கள் நம்மை மலைக்கச் செய்யும். எம்ஜிஆர், சிவாஜி, கருணாநிதி என்று சினிமா கம் அரசியல் பிரபலங்களோடு நெருங்கி பழகியவர்.

அவரது மேஜையில் எம்ஜிஆர், சிவாஜி, சாண்டோ சின்னப்பா தேவர் இவர்களது புகைப்படம் ஒரே பிரேமில் வைக்கப்பட்டிருக்கும். அதில் சிவாஜி ஆற்றில் நின்றுக் கொண்டு சூரியனை கும்பிடிவது போல இருக்கும் படம் மிக அழகாக இருக்கும்.


பத்திரிகைக்காரர்களை மிகவும் மதிக்கக் தெரிந்த உயர்ந்த மனிதர். நேரம் காலம் இல்லாமல் உழைக்கத் தெரிந்தவர். இன்று (19/03/2014) மதியம் 12 மணி வரையில் அலுவலகத்தில் இருந்துவிட்டு, வீட்டுக்கு சென்றவர், சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வுக்குப் பின்னர் பாத்ரூம் சென்றவருக்கு மராடைப்பு வந்திருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

60 வருடங்களை கடந்து இன்றும் எலிகண்ட் முன்னணி விளம்பர நிறுவனமாகத் திகழ்வதற்கு இவரது அயராத உழைப்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அலுவலகத்திற்கு வந்துவிடக் கூடியவர். நேர்மை, நேரம் தவறாமை, தொழில் பக்தி போன்றவை இவரடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

தனது 76 வயது வரைக்கும் ஓய்வறியாது உழைத்த மனிதர் இன்று ஓய்வடைந்துவிட்டார். கமல்நாதன் சார் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எலிகண்ட் நிறுவன ஊழியர்களுக்கும் எனது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 ****

எலிகண்டின்  வெற்றி எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சம்பவத்தை இங்கு  கூறுகிறேன்.

எம்ஜிஆர்  முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். "நாளை அனைத்து பத்திரிகைகளிலும் முழு பக்கம் விளம்பரம் வரவேண்டும்" என்று  எலிகண்ட் நிறுவனத்தை அழைத்து  எம்ஜிஆர் கூறிவிட்டார். அவர் கூறும் போது மணி மாலை 4. இப்போது போல் அப்போது மோடம், இ மெயில் போன்ற வசதிகள் இல்லை. எந்த விளம்பர மெட்ரியல் அனுப்ப வேண்டும் என்றாலும், நேரிடையாக அல்லது ஆட்கள் மூலம்தான் அனுப்ப முடியும்.  அதுவும் தமிழ் நாடு முழுவதும் அனைத்து பதிப்பிலும் அனைத்து பத்திரிகைகளிலும் வரவேண்டும் என்றால் மந்திர சக்தி இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

இன்றைய காலம் என்றால், தொலை தொடர்பு சாதனங்களை கொண்டு உலகம் முழுவதும் ஒரு நொடியில் அனுப்பிவிடலாம்.  அன்றைக்கு அதெல்லாம் சாத்தியம் இல்லாதது. திருச்சிக்கு விளம்பர மெட்ரியல் அனுப்ப வேண்டும் என்றால் ஒரு நாளுக்கு முன்பாகவே பேருந்து அல்லது ரயில் மூலம் பத்திரிகைகளின் பெயரை  போட்டு அனுப்பிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் அங்கு அதை சேகரித்துக் கொள்வார்கள்.

எம்ஜிஆர் சொல்லும் போது மணி மாலை 4 மணி. அதற்கு பிறகு விளம்பரத்தை எழுத்து பிளாக் மூலம் கம்போஸ்  செய்து, அதை எம்ஜிஆரிடம் காண்பித்து அனுமதி வாங்கி தமிழகம் முழுவதும் அனுப்ப வேண்டும் என்றால் மிகவும் கடினமான ஒன்று. பத்திரிகைகள் இயங்குவேதே நேரத்தின் அடிப்படையில்தான் என்பது நாம் அறிந்த ஒன்று! . நிர்ணயக்கப்பட்ட நேரத்தில் அந்தந்த வேலை முடிந்தால்தான் உங்களுக்கு  6 மணிக்கு படிக்க பேப்பர் கிடைக்கும்.

எம்ஜிஆரிடம் அனுமதி பெற்ற விளம்பரத்தை விமானம் மூலம் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி என்று அனுப்பி அடுத்த நாள் தமிழகத்தின் அனைத்து பத்திரிகைளிலும், பதிப்புகளிலும் விளம்பரத்தை வர செய்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் சாதாரண நிகழ்வுதான். அன்றைக்கு அது சாதனை.
****


6 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எலிகண்ட் கமலநாதன் ஐயா அவர்களின் பிரிவால் வாடும். அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஐயா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எலிகண்ட் கமலநாதன் அவர்களின் ஆதமா சாந்தியடைய வேண்டுகிறேன்...

இராய செல்லப்பா சொன்னது…

1966இல் என் நண்பர் (இராணிப்பேட்டை எல்.ஐ.சி.யில் பணிபுரிந்தவரான) திரு. கஜராஜூடன் எலிகண்ட் பப்ளிசிட்டீஸ் அலுவலகத்திற்குச் சென்றேன். அப்போது, பல சினிமா விளம்பர போஸ்டர்களுக்கிடையே நின்றுகொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்த ஒருவரை காட்டி 'இவர் தான் நாம் பார்க்கும் சினிமா விளம்பரங்களை எல்லாம் தயாரித்துக் கொடுப்பவர்' என்று ஒருவரை கஜராஜ் அறிமுகப்படுத்தினார். அது அமரர் கமலனாதனாகத்தான் இருக்க வேண்டும். அப்போது நான் பதினோராம் வகுப்பு மாணவன். 'வாங்க தம்பி' என்று அன்புடன் அமரவைத்து தேநீர் கொடுத்தார். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக!

Unknown சொன்னது…

நானும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Rathnavel Natarajan சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்.

J.Jeyaseelan சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள் ஐயாவுக்கு! இதுபோல இன்னும் அறியாத சாதனைகளுக்கு சொந்தக்காரர்......



http://pudhukaiseelan.blogspot.in/

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...