புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் பாலம் கடந்து அலுவலகம் போக....வேப்பேரிக்கு வலதுபுறம் திரும்பும் போது சொற்பமாக தேங்கி இருந்த தண்ணீரில் பைக் ஸ்கிட்டாக.... அப்படியே வழுக்கி நடு ரோட்டில் நடு நாயகமாக விழுந்தேன். நல்ல வேளை வண்டி எதுவும் வரவில்லை என்று நினைத்த வேளையில்...தண்ணி லாரி என்னை நோக்கி வந்தது.
மோதி செத்துவிடுவோம் என்று எனக்கு தோன்றவில்லை, அடிபட்டால் அந்த இம்சையை தாங்கவேண்டுமே என்ற எண்ணம்தான் அந்த கணத்தில் எனக்கு தோன்றியது. இப்படி நினைக்கும் போதே தண்ணி லாரி என் பைக்கில் மோதி நிற்க.....சரியாக பைக்குக்கும் லாரி பம்பருக்கும் இடையில் எனது இடது கால் மாட்டிக் கொண்டது. (ரொம்ப நாளா எனக்கு பம்பர் அடிக்குமுன்னு நெனைச்சிருந்தேன் அது இதுதான் போல...?!).
'யாரு பெத்த புள்ளையோ...?' என்று மற்ற வாகன ஓட்டிகள் உச்சு கொட்டுவதற்கு முன்பே காலை லாரி பம்பரிலிருந்து வெடுக்கென்று வினாடி நேரத்தில் விடுவித்துக் கொண்டு தாவி குதித்துவிட்டேன். அதற்குள் கூட்டம் சேர....ஆளுக்காள் லாரி டிரைவரை வாய்க்கு வந்தபடி பாராட்டினார்கள். "நல்ல வேளை பிரேக் போட்டு நிறுத்திட்டப்பா", இல்லெனா இந்த ஆளு இம்மா நேரம் பூட்ட கேஸாயிருப்பான்' என்று.
சென்னையில ஓடுற தண்ணி லாரிக்கு பிடிக்காத வார்த்தை 'பிரேக்'. நல்ல வேளை அன்று அந்த லாரிக்கு அது பிடித்து இருந்தது!.
வெடுக்கென்று இழுத்ததில் கால் புசு புசுவென்று வீங்கிவிட்டது. ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. வலது காலில் கல் குத்தி ரத்தம் பேண்ட் வழியோடி ஷூவை நனைத்துக் கொண்டு இருந்தது. நல்ல வேளையாக சக அலுவலக தோழர்கள் ராஜாவும் அருணும் பின்னடியே வந்து முன்னாடி வந்துவிட்டார்கள். பைக்கை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, என்னை 'டோ' பண்ணிக்கொண்டு போய் டவுண்டனில் இருந்த கிளினிக்கில் சேர்ந்து முதலுதவினார்கள்.
காலில் கட்டை போட்டுக்கொண்டு, பிற்பாடு ஒரு கால் பண்ணி, கால் டாக்ஸியை பிடித்து, வீடு வந்து சேர்ந்தால் மனைவி கண்ணை கசக்கினாள். அடுத்த நாள் அம்பத்தூரில் இருக்கும் செந்தில்குமார் எலும்பு டாக்டரிடம் போனேன். கிரேஸி மோகன் போல நோயாளர்களிடம் நேயமாய் கதை பேசிக்கொண்டு இருந்தார்.
"டாக்டர் ஏற்கனவே உங்களிடம் வந்து இருக்கிறேன்" என்றேன்.
"எலும்பு முறிவுன்னு நினைச்சவுடனே என் ஞாபகம் வருதுன்னா, நான் நல்லா மார்கெட்டிங் பண்ணி இருக்கிறேன்னு" அர்த்தம் என்றார்.
அடுத்த முறை கறி கடையில் நல்லி எலும்பு வாங்குறப்ப இவர் ஞாபகம் வராம இருக்க வேண்டும்!?.
எக்ஸ்ரேயை லைட்டடிச்சி பார்த்தவர் "உங்கள் காலில் 'சிப் கிராக்' ஆகியிருக்கு" என்றார் கண்ணடித்துக் கொண்டே....!. "காலில் காயம் ஆறிய பிறகு 'கிரிப் பேண்டேஜ்' போடலாம். அப்படி இப்படி எப்படியும் காலை அசைக்கக் கூடாது. காலை தொங்கப் போடாம நீட்ட வாக்கில்தான் வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் வலி இருக்கும்" என்றார்.
"எவ்வளவு செலவு ஆகும்? டாக்டர்ன்னு கேக்கிறதுக்குப் பதிலா எத்தனை நாளாகும்? டாக்டர்"ன்னு கேட்டேன். "குறைந்தது மூனு வாரம் ஆகும்" என்றார். "அவ்வளவு நாள் லீவு கிடைக்காது டாக்டர்" அப்படின்னேன்.
கிராக்குக்கு கிராக்குத்தனமா பேசாதிங்க என்பது போல் பார்த்தவர், முதல்ல லீவு போடுங்க அப்புறமா காலில் கட்டு போடலாம் என்றார் பலமாக சிரித்துக் கொண்டே!.
இந்த வலியைவிட தினமணி இலக்கியத் திருவிழாவில் கலந்துக் கொள்ள முடியாததே எனக்கு பெரும் 'வலி'யைத் தந்தது.
-தோழன் மபா.
19/06/2014
-----------------------
-----------------------
7 கருத்துகள்:
கவலையை விடுங்கள்... முதலில் உடல்நலம் தான் முக்கியம்...
உடல் நலனைக் கவனியுங்கள் ஐயா
@திண்டுக்கல் தனபாலன்.
நன்றி திதா.
@கரந்தை ஜெயக்குமார்.
நன்றி அய்யா!
இப்போது ஓரளவு குணமடைந்துவிட்டீர்களா நண்பரே?
இப்போது அலுவலகம் செல்ல ஆரம்பித்து இருக்கிறேன் சார்.
முன்பைவிட சற்று பரவாயில்லை என்ற நிலை இப்போது!
உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.
கருத்துரையிடுக