சனி, ஜூலை 26, 2014

"நோக்குமிடமெல்லாம் நீயின்றி வேறில்லை ஜெயகாந்தா(ன்)!"



எழுத்தாளர் ஜெயகாந்தன் 80தாவது பிறந்த நாள் விழா நேரடிப் பதிவு!.
   
ஜெயகாந்தன் 80-ஆவது
பிறந்த நாள் விழாவில் ஜெயகாந்தன் கதைகள் நூலை விகடன் குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் வெளியிட தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெறுகிறார். உடன் (இடமிருந்து) மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியம், நடிகை லட்சுமி,
நடிகர் சிவக்குமார், ஓவியர் மாயா, நூலை தொகுத்த வனிதா ராம் அவரது கணவரும்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான லண்டன் மருத்துவர் ராம்.
  
           சென்னை மியூஸிக் அக்காடமிக்குள் நுழைய முடியவில்லை. வழியெங்கும் கார்களும் பைக்குகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டு இருந்தன. கிடைத்த இடத்தில் பைக்கை நுழைத்துவிட்டு விழா அரங்கிற்குள் நுழையத் தொடங்கினால்,  வழியிலேயே எழுத்தாளர் தமிழ்மகன் நின்றுக் கொண்டு இருந்தார்.  நலம் விசாரித்துவிட்டு அரங்கிற்குள் நுழைந்தால் அரங்கம் மக்களால் நிரம்பி இருந்தது. அப்படி ஒரு ஜனத் திரளை நான் பார்த்ததில்லை. எள் போட்டால் கீழே விழ வழியில்லை என்று சொல்வார்களே அப்படி இருந்தது விழா அரங்கு. திரும்பிய திசையெங்கும் மனிதத் தலைகள்.

தமிழ் எழுத்துலக பிதாமகன் ஜெயகாந்தனின் எண்பதாவது பிறந்த நாள் விழா மற்றும் கதைகள் வெளியீட்டு விழா கடந்த 24ம் தேதி சென்னை மியூசிக் அக்காடமியில் நடைபெற்றது.  ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரு கூட்டமா....? என்று நாம் மலைக்கத் தேவையே இல்லை. நேரு ஸ்டேடியத்தில் வைத்திருந்தாலும் ஸ்டேடியம் நிரம்பி வழிந்துதான் இருக்கும் என்பது உண்மை. லண்டன் வாழ் தமிழரான டாக்டர் ராம் தனது மானசீக எழுத்தாளருக்கு எடுத்த பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர்கள் முதற்கொண்டு ரசிகர்கள்வரை வந்து குவிந்துவிட்டனர்..

அரங்கில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய  வீடியோ காட்சிகள் திரையில் ஓடிக்கொண்டு இருந்தது. அவரைப்பற்றிய குறிப்புகள் பெரும் மலைப்பைத் தந்தன. மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரிடம் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்...என்று பல பரிணாமம் பெற்று இருக்கிறார்.

இது நாள்வரையில் மலையாள எழுத்துலக பிதாமகன் வைக்கம் முகமது பஷீர் மட்டுமே பல்வேறு தொழில்களை செய்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன்,  ஜெயகாந்தனும் அந்த வரிசையில் வருகிறார் என்கின்றபோது அவரது எழுத்தின் வீச்சு வரும் திசை தெரிந்தது.

---------

    மிழ் தாய் வாழ்த்துகளுடன் விழா தொடங்க...மேடையில் இடமிருந்து வலமாக ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரும், மொழிபெயர்ப்பாளரும், முன்னாள் ஆசிய வளர்ச்சி வங்கி இயக்குநருமான கே.எஸ்.சுப்பிரமணியம், நடிகை லட்சுமி, நடிகர் சிவக்குமார்,  தொழிலதிபர் நல்லி குப்புசாமிசெட்டி, விழா நாயகர் எழுத்தாளர் ஜெயகாந்தன், ஆனந்த விகடன் நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியன், ஓவியர் மாயா, இவ் விழாவினை நடத்தும் லண்டன் வாழ் தமிழரான டாக்டர் ராம், அவரைத் தொடர்ந்து அவரது துணைவியார் வனிதா ராம் ஆகியோர் வரிசைக்கிரமமாக அமர்ந்து இருந்தனர்.

விழாவில் மூத்த ஓவியர் கோபுலு கலந்துக் கொள்வதாக இருந்தது. எதிர்பாராத விதமாக அவரது மனைவி இறந்துவிட்டதால் அவர் வரமுடியாமல் போய்விட்டது. அவர் வராத குறையை நடிகர் சிவக்குமார் தீர்த்துவைத்தார். விகடனில் அவர் வரைந்த ஓவியங்கள் பற்றி சிவக்குமார் கூறியது அவர் ஒரு ஓவியக் கலைஞன் என்பதைக் காட்டியது. விகடன் தீபாவளி மலருக்கு கோபுலு வரைந்த ஓவியங்களைப் பற்றி இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்தார். கோபுலு அய்யாவை பார்த்தபோது,  "இந்த கையால படங்கள்ல நிறைய ஸ்டோக்ஸ் போட்டோன்ல்லியோ அதான் எனக்கும்  ஸ்டோக் வந்துடுத்துரா....." என்று அந்த நேரத்திலேயும் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தினார் என்றார்.  ஜெயகாந்தனின் கதைகளில் வரும் கதாபாத்திர பெயர்களையும், கதை சுருக்கத்தையும் சுவைப் பட பேசி பெரும் கைத் தட்டலை பெற்றார்.

முன்னதாக விழாவை தொடங்கிவைத்து டாக்டர் ராம் வரவேற்புரையாற்றினார். ஜெயகாந்தனின் தீவீர ரசிகர் என்பது அவரது ஒவ்வொரு செய்கையிலும் பேச்சிலும் தெரிந்தது. இல்லையென்றால் இப்படி பல லட்சங்களை செலவு செய்து இந்த விழாவை நடத்துவாரா?. ஜெயகாந்தனின் தீவிர ரசிகர் என்று இவரைத்தான் சொல்லவேண்டும். இவரால்தான் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. இவ் விழா எடுக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர் செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும். நல்லவேளை டாக்டர் காப்பாற்றினார்.

இவ் விழாவில் பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டும் அல்லாமல் ஜெயகாந்தன் 70-80களில் அவர் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த கதைகளில் 20 கதைகளை தேர்ந்தெடுத்து, அதே அச்சு வடிவில், அதே ஓவியங்களை கொண்டு  நல்லதொரு தொகுப்பையும் வெளியீட்டு இருக்கிறார்கள்.  இத் தொகுப்பை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி வெளியீட விகடன் நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். ஓவியங்களை ஓவியர் மாயாவும், ஓவியர் கோகுலும். வரைந்துள்ளனர். ஜெயகாந்தனை விட மூத்தவரான மாயா அந்த ஓவியங்களை இப்போதும் அப்படியே வரைந்திருப்பது  இத் தொகுப்பிற்கு பெரும் வரவேற்பை கூட்டி இருக்கிறது!.

நடிகை லட்சுமி எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

"பதினோரு வயதுவரை எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவோம் படிப்போம். தமிழ் படிக்கத் தெரிந்த பிறகு எனது ஆதர்ஷ எழுத்தாளராக ஜெயகாந்தனே இருந்தார். மிஸ்டர் ஜேகேயோட 'அக்னி பிரவேசம்' என்ற நாவலைத்தான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள்.  அதில் முக்கியமா ஒரு சீன்:  கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாப்பில் அந்த பெண் நிற்க; அவள் ஏற வேண்டிய பஸ் மட்டும் அன்றுப் பார்த்து வர லேட்டாகிறது. அவளோடு கூட இருந்தவர்கள் எல்லோரும் அவரவர் பஸ் வந்தவுடன் ஏறி போய்விட, இந்தப் பெண் மட்டும் தனிமையில் மழையில் நனைந்துக் கொண்டு இருக்கிறாள். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞன் அவள் நிற்பதை பார்த்துவிட்டு, அவளை அவள் வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று கூறி அவளை தனது காரின் பின் சீட்டில் ஏற்றிக் கொண்டு அவளை யாரும் அற்ற இடத்தில் வைத்து கற்பழித்து விடுகிறான். பின்னர் அவளை அவளது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு பறந்துவிடுகிறான்".

"இந்தப்படத்தில் இந்த சீன் மிகவும் முக்கியமானது. அந்த பிராமணாத்து  வெகுளிப் பெண் கேரக்ட்டருக்கும், மழையில நனைஞ்சி நிக்கிற கேரக்டருக்கும்  நான் தான் பொருத்தமா இருப்பேன்னு ஜேகே, இயக்குனர் பீம்சிங்கிடம் கூறிவிட்டார். அப்போது நடிக்காம ஒதுங்கி இருந்த ஒரு நடிகை ஜெயகாந்தனின் இந்த கதைக்கு நான்தான் நடிப்பேன்னு ஒத்தக்கால்ல பிடிவாதமா நிற்கிறார். அப்படத்தில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டு இருந்தார்.  இயக்குனர் பீம்சிங்கும் இதை ஜேகேயிடம் அடிக்கடி கூறி இருக்கிறார். அப்போ ஜேகே ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க......அய்யோ.....அதை எப்படி நான் சொல்வேன்" என்று இரண்டு மூன்று சொன்னவர், எல்லொரும் ஆவலுடன் அமைதி காக்க.... அவரே ஜேகே சொன்னதை பின்வருமாறு கூறினார்  "அந்த நடிகையையெல்லாம் தனியா அழைச்சிக்கிட்டு போய் கெடுக்க முடியாதுப்பா!"  என்று கூற.... அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது!. அந்தப் படம் 1977ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது என்றார். பேசிமுடித்தவர் ஜெயகாந்தன் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று  கைகளை பற்றிக் கொண்டு நெக்குருகி அவரது கால்களை தொட்டு வணங்கினார்.

இவ் விழாவிற்கு கவிஞர் வைரமுத்து வருவதாக இருந்தது.  கடைசி நேரத்தில் வர முடியாமல் போக....அவர் வராத குறையை அவரது வீடியோ பேச்சு தீர்த்துவைத்தது. ஜெயகாந்தனின் தீவிர  ரசிகர் கம் நண்பரான இசையமைப்பாளர் இளையராஜா இவ் விழாவிற்கு ஏன் அழைக்கப்படவில்லை  என்ற காரணமும் புரிந்தது. விழாவை ஏற்று   நடத்தியவர்கள் வைரமுத்துவின் உறவினர்கள் என்பதால் இளையராஜாவை இவ் விழவிற்கு அழைக்கவில்லை போலும்?!.

ஏற்புரையாக ஓவியர் மாயாவை பேச அழைத்தனர் "எனது இந்த வெற்றிக்கு விகடன் ஆசிரியரே காரணம், அவர்தான் எனக்கு இந்த வாழ்க்கையை அளித்தார். இங்கே கோபுலு வரவில்லை வந்திருந்தால் அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருப்பேன். இங்கே அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் என்னைவிட வயதில் இளையவர்கள். அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்" என்றார்.

இறுதியாக ஏற்புரையாற்ற ஜெயகாந்தனை அழைத்தனர்.  எழுந்து நடக்க முடியாததால் அவரது இருக்கைக்கு மைக் வைக்கப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு பேசிய அவர் " இங்கு வந்து நீங்கள் நன்றி வணக்கம் சொன்னால் போதும் என்றார்கள், இங்கு வர முடியாதவர்கள் மனம் இங்குதான் உலாவிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் நன்றி வணக்கம் என்று குளறலுடன் முடித்துக் கொண்டார். ஜெயகாந்தன் பேசுவதற்கு பெரிதும் சிரமப்பட்டார்.  அதனால் அவரது ஒற்றை வார்த்தைக் கூட நமக்கு கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. தமிழுக்கு கிடைத்த ஒரு யதார்த்தமான எழுத்தாளரின் பிறந்த நாளை அன்று தமிழகமே கொண்டாடியது எனலாம்.

இனி விழா துளிகள்....

விழாவில் தனிப்பட்ட முறையில் பஜாக செயற் குழு உறுப்பினர் இல கணேசன்,  சால்வை போர்த்தினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விடியல் சேகர் ஜெயகாந்தனுக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு ஜெயகாந்தனுக்கு சால்வை போர்த்த மேடைக்குவர.... அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

விழாவிற்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பனார், எழுத்தாளர் விக்கிரமன், எழுத்தாளர் சுபா, முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் பப்பாசி தலைவர்கள் செண்பகா பதிப்பகம் ஷண்முகம் மற்றும் கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.

இறுதியில் தேசிய கீதம் பாடுவதற்கு, ஒலி பெருக்கி ஏதோ மக்கர் செய்ய....எழுந்து நின்று அனைவரும் ஒரே குரலில் தேசிய கீதம் பாடி விழாவை நிறைவு செய்தது,   எழுத்தாளர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர்கள்  என்பதை சொல்லாமல் சொல்லியது.

()()()()
-தோழன் மபா.
26/07/2014
புகைப்படம் உதவி ஏ.எஸ் கணேஷ்,  தினமணி.


16 கருத்துகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ஓர் எழுத்துக் கலைஞருக்குச் செய்யப்பட்ட பெருவிழா!
அதை அழகுற இங்கே பதிவு செய்தீர்கள். வாழ்த்துக்கள்!!

TM.1

KILLERGEE Devakottai சொன்னது…


விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//வாஅவரது அமர்ந்திருப்பவர்களில் நா
நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்...

ஜெயகாந்தன் கதைகள் நூல்கள் வெளியீடு

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற .//

இது என்ன?

Unknown சொன்னது…

நேரடியாக விழாவில் கலந்து உணர்வை தந்த உங்கள் பதிவுக்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விழாவினை நேரில் கண்ட உணர்வினை ஏற்படுத்தி விட்டன தங்களது எழுத்துக்கள்
நன்றி ஐயா

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி நிஜாம்!.

பத்திரிகைகள் பெரிதாக இன் நிகழ்ச்சியை பதிவு பண்ணவில்லை. அதனால்தான்,நான் பதிவு செய்தேன்.

பதிவுக்கு கீழே இருந்தது நோட்ஸ், அவை தவறுதலாக வந்துவிட்டது. அவற்றை நீக்கிவிட்டேன்.
மீண்டும் வருகைக்கு நன்றி!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி கில்லர்ஜி!.

வருகைக்கும் வாழ்த்திற்கும்!

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி பகவான்ஜி!,

பத்திரிகைகள் ஏனோ இன் நிகழ்ச்சிக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் தரவில்லை.
ஒரு சமகால எழுத்தாளனை புறக்கணிப்பது, நமது வரலாற்றை புரம் தள்ளுவது போன்றது என்பதை இந்த ஊடகங்கள் உணரவில்லை.

வாழ்த்திற்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வீடியோ காட்சிகள் பலரையும் வியக்க வைத்திருக்கும்...

தொகுத்து எனகளுக்கும் அறிய வைத்தமைக்கு நன்றி...

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்.

தங்களது வாழ்த்துதலுக்கு நன்றி அய்யா!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ திண்டுக்கல் தனபாலன்.

உண்மைதான் DD, ஜெயகாந்தனை பற்றிய வீடியோ பதிவுகள் ரசனையுடன் இருந்தது!.

எழுதி குவித்த எழுத்தாளனுக்கு, வாழ்த்த குவிந்த கூட்டம்தான் நம்மை மலைக்க வைத்தது!.

வாழ்த்துகளுக்கு நன்றி தித!

இராய செல்லப்பா சொன்னது…

நிகழ்ச்சிக்கு முதல் நாள் நான் மங்களூர் செல்ல வேண்டி இருந்தது.இதனால் யாராவது நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டார்களா என்று தேடினேன். உங்கள் எழுத்தில் அதைக் கண்டேன். மிக்க நன்றி! ஜெயகாந்தனால் பேச முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

Unknown சொன்னது…

ஜெயகாந்தனால் பேச முடியவில்லை என்றாலும் அவர் எழுத்துக்கள் நம்மோடு என்றென்றும் பேசிக் கொண்டுதான் இருக்கும் !நாமும் அவரைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருப்போம் !

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Chellappa Yagyaswamy.

யூ ட்யூப்பில் சிவக்குமாரின் பேச்சை போட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அதில் அவ் விழாவை கண்டு களிக்கலாம்.
கூகுளில் Jayakanthan Birthday Celebration என்று தேடினீர்கள் என்றால் கிடைக்ககும்.

வாழ்த்திற்கு நன்றி சார்!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Bagawanjee KA.


அப்படி பேச வைப்பதில்தான் ஒரு எழுத்தாளனின் வெற்றியே இருக்கிறது!.

வருகைக்கு நன்றி பகவான் ஜி!.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...