கடந்த சில நாட்களாகவே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சாவு செய்தி தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் காலமானர். தமிழக சினிமா ரசிகர்களின் ஒட்டு மொத்த இதயத்தையும் கொள்ளைக் கொண்ட அவரை சில நாட்களுக்கு முன்னர்தான் பெஸண்ட் நகர் மயானத்தில் எரித்துவிட்டு வந்தோம்.
அது முடிந்த அடுத்த கையோடு...இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். நாட்டையே உலுக்கிய அந்த திடீர் மரணம், இந்தியாவை துக்க வீடாக மாற்றியது. பிரதமர் முதல் சாமானியன் வரை, குடிசை வீடு முதல் மாளிகை வரை தெருவுக்கு தெரு துக்கம் அனுஷ்டித்தனர். மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முப்படை தளபதிகள் என்று இந்தியாவின் அதிகார வர்க்கமே இராமேஸ்வரத்தில் சங்கமித்தது. அவரை அடக்கம் செய்வதற்கு, முந்தைய இரவு, ஒரு உயிர் நாக்பூர் சிறையில் ஊசலாடிக் கொண்டு இருந்தது.
மும்பை குண்டு வெடிப்பிற்காக சரணடைந்த யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் வியாழன் விடியற்காலை தூக்கில் போடப்பட்டார். 'விடிய விடிய விசாரணை விடிந்தப்பின் பிரேத பரிசோதனை' என்ற உயர்ந்தபட்ச கொள்கையின் அடிப்படையில் மிக மிக துரிதமாக செயல்பட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது மஹாராஷ்டிரா பாஜக அரசு. அரசு இயந்திரத்தை நினைத்தால் அதிர்ச்சியும் வேதனையுமே எழுகிறது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த செய்தி: . மதுக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக 200 அடி செல் போன் கோபரத்தில் ஏறி 4 மணி நேரமாக போராட்டம் நடத்திய சசி பெருமாள் திடிரென்று ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துவிட்டார். சசி பெருமால் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் டாஸ்மாக் எதிரான போராட்டம் மேலும் வலுவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிறந்தவர்கள் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்றாலும், இப்படி தொடர் சாவு என்பது மனிதனை அழக் கூட முடியாதவனாக்கிவிடுகிறது. அன்பும் கருனையும் கொண்ட உலகத்தில்தான் யாம் ஜீவிக்கவே விரும்புகிறோம். போதும்.... "இத்தகைய நிகழ்வுகளை நிறுத்து" என்று யாரிடம் விண்ணப்பம் வைப்பது....
இறைவா....!.
1 கருத்து:
தொடர்ந்து தொடர்ந்து சோகங்கள் தான்...
கருத்துரையிடுக