அவர் குஜராத் பெண்மணி. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அதனால் தமிழ் அட்சரம் பிசகாமல் வரும். ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். அவரது உறவினர்கள் அடையார், புரசைவாக்கம், செளகார்பேட்டை என்று சென்னை முழுவதும் வியாபித்து வாழ்கிறார்கள்.
இதுனால் வரைக்கும் எங்க குஜராத் அப்படி, எங்க குஜராத் இப்படி என்று வம்படியாக கம்பு சுற்றிக் கொண்டு இருந்தார். மோடி, அமித்ஷா வகையராக்களின் வீர தீர பராக்கிரமங்களை வாய் வலிக்க வியாக்கியானம் பாடுவார். அவர் என்று இல்லை, அவரது உறவுகள் முழுவதுமே அப்படிதான். குஜராத்திகளின் பெருமைகளை அவர்கள் பேசும் போது கேட்க வேண்டுமே? காதில் ரத்தம் வந்துவிடும். ரொம்ப உக்கிரம் காட்டுவார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் வாழும் அவரது உறவினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார், ஸ்டான்லி , ராஜீவ்காந்தி போன்ற அரசு மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு நல்ல சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குஜராத் அம்மணி பேஸ்தடித்துக் கிடக்கிறார். குஜராத்தில் உள்ள அவரது உறவினர்களில் பலர் கரோனாவால் பீடிக்கப்பட்டு கிடக்கிறார்களாம். பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவுடன் அரசுக்கு தெரியப்படுத்தினால், அரசிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லையாம். மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறதாம். இதனால் பலர் உயிரிழக்க நேர்கிறதாம். என்று சோக கீதம் வாசித்தார்.
'அந்த வகையில் நம்ம தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லைப்பா.... (கவனிக்க...நம்ம தமிழ்நாடு). பாசிட்டிவுன்னு அரசாங்கத்துக்கு தகவல் தெரிந்தவுடன், சுகாதார ஆய்வாளர்கள் வீட்டுக்கு நேரடியாகவே வர்றாங்க. சுவாப் மற்றும் சிடி ஸ்கேன் டெஸ்ட் மூலம் கரோனா தொற்றின் நிலை குறித்து தெரிந்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சையா...? இல்லை வீட்டில் தனிமைப்படுத்துதல் போதுமா என்று முடிவெடுத்து நோயாளிகளை காப்பாற்றுகின்றனர்' என்றவர் முத்தாய்ப்பாக 'thank god' என்றார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்றின் நிலை அறிந்து தன்னை மேம்படுத்திக் கொணடிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. கரோனா நோய்க்கு எதிரான முன் களப்பணி, கரோனா நோய்க்கு பிந்தைய நலவாழ்வு என்று அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி இருக்கின்றது தமிழகம்.
மருத்துவ துறையில் இப்படி நிலையான வளர்ச்சிக்கு சுயமாய் சிந்தித்த திராவிட ஆட்சியாளர்களே காரணம். இது வட மாநிலங்களில் மிஸ்ஸிங்.
அதனாலேயே உண்மை நிலை உணர்ந்து அந்த குஜராத் பெண்மணி இப்போது கதறுகிறார்.
ஆனால் சில மேதாவிகள், குஜராத் பற்றிய போலி பிம்பங்களை இங்கு பரவவிட்டும், 'தமிழகத்தை திராவிட கட்சிகள் வீணடித்து விட்டன' என்றும் கூக்குரலிட்டு வருகிறார்கள்.
-மபா
2 கருத்துகள்:
உண்மைதான் ஐயா
பெரியாரும் திராவிடக் கட்சிகளுமே காரணம்
மிக்க நன்றி அய்யா !
கருத்துரையிடுக