செவ்வாய், ஜூன் 28, 2022

அறியப்படாத ஆலம்பரைக் கோட்டை

தினமணியில் வந்த எனது கட்டுரை


சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையானது இந்தியாவின் மிக அழகான கடற்கரை சாலை என்று வர்ணிக்கப்படுகிறது! சாலையின் இரு மருங்கிலும் பச்சையம் போர்த்தி வரிசைக் கட்டி நிற்கும் மரங்கள்; கூடவே வளைந்து நெளிந்து வரும் சோழ மண்டல கடற்கரை (வங்காள விரிகுடா) அவ்வப்போது சாலைகளின் இடையிடையே குறிக்கிடும் ஆறுகள்; பருவப் பெண்ணின் வனப்போடு வளைந்து நெளிந்து கருங்கூந்தல் போல் காட்சி அளிக்கும் சாலை என்று கிழக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்) வார இறுதியில் குடும்பத்தோடு சிறிய ஜாலி டூருக்கு ஏற்ற இடம்.

 கிழக்கு கடற்கரை சாலையில் காரில் மிதமான வேகத்தில் பயணிப்பது அலாதி சுகம். அப்படிப்பட்ட ஈசிஆரில் பெருவாரியான மக்களுக்கு தெரியாமல் ஒரு கோட்டை ஒளிந்துக் கொண்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா...? 

“என்னது இ.சி.ஆரில் கோட்டையா ? அங்க எங்க மலை இருக்கிறது ? கோட்டை இருக்கிறது ?” என்று கேட்கலாம். 

மலை இருந்தால்தான் கோட்டை கட்ட முடியுமா? 

இங்கு கடற்கரையில் ஒரு கோட்டை கட்டியிருக்கிறார்கள். 

அதன் பெயர் ‘ஆலம்பரை கோட்டை’

உருது மொழியில் ‘ஆலம்’ என்றால் ஜனங்கள், ‘பரா’ என்றால் நிறைய என்று பொருள் வருகிறது. இன்னும் இந்த கோட்டையை 'ஆலம்பரா கோட்டை'என்றுதான் உள்ளூர் மக்கள் பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். 

ஆலம்பரைக் கோட்டை அழகிய ஆற்றின் கழிமுகத்துவாரத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் நூற்றி பதினோராவது கிலோ மீட்டரில் கடப்பாக்கம் என்ற ஊர் வருகிறது. அந்த ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ‘ஆலம்பரை கோட்டை’.

கி.பி 18 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்டது. 

கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள 'ஆலம்பரை' பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்தது. 

சங்கக்கால இலக்கியமான சிறுபாணற்றுப்படையின் மூலம் இப்பகுதி ‘இடைக்கழி நாடு’ என்று பெயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. 

இந்த கோட்டை முழுக்க முழுக்க செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இக் கோட்டை கட்டப்பற்றிருக்கிறது. 

இந்தக் கோட்டை 1735 ல் நவாப் தோஸ்து அலிகானின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. பிரெஞ்சு தளபதியான புகழ்பெற்ற டூப்ளே தனக்களித்த உதவியைப் பாராட்டி இக்கோட்டையை தக்காணச் சுபேதார் முஸாபர்ஜங், பிரெஞ்சுசுகாரருக்கு கி.பி.1750 –ல் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். பிரெஞ்சு ஆட்சியின் வலிமை தளர்ந்த போது, ஆங்கில தளபதி ஒருவர் கி.பி.1760-ல் இக் கோட்டையை கைப்பற்றி தகர்த்திருக்கிறார். இக் கோட்டை மட்டும் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் ப்ரெஞ்சு (புதுச்சேரி) ஆதிக்கத்தின் எல்லை கடப்பாக்கத்திலிருந்து தொடங்கி இருக்கும். 

கடற் கொள்ளையார்களால் இந்த கடற்பகுதி தொடர்ந்து தாக்கப்பட்டபோது, கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் இக் கோட்டை கட்டப்பட்டது. பிற்பாடு இந்தக் கோட்டையிலிருந்து ஜரிகைத் துணிகள், நெய் மற்று உப்பு போன்ற பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 

இக் கோட்டையின் கீழ்புறம் படகுத்துறை ஒன்று கப்பலிலுள்ள பொருட்களை ஏற்றி இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத்துறையின் நீளம் சுமார் 100 மீட்டர் ஆகும். இது கோட்டையிலிருந்து கடல் வரை நீண்டு இருந்தது. பிரெஞ்சு இந்தியாவில் ஆனந்தரங்கம் பிள்ளை, துபாஷ் முதல் தூப்ளக்ஸ் வரையிலான நாட்குறிப்புகளில் ஆலம்பரை பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது ஆர்காட் நவாப்களுக்கான வர்த்தகத்தின் முதன்மை துறைமுகமாகும். ஆலம்பறையின் அமைந்திருந்த நாணயச்சாலையில் ஆலம்பரைக் காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. 

இந்நாணயச்சாலையின் பொறுப்பாளராக இருந்த 'பொட்டிபத்தன்' கிழக்குக் கடற்கரை சாலை வழியாக காசி இராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சிவன் கோயிலையும் பெரிய குளம் மற்றும் சத்திரத்தினையும் ஏற்படுத்தினார் என்கிறது வரலாற்றுக் குறிப்புகள். 

2004 - ஆம் ஆண்டில் நேரிட்ட சுனாமி பேரழிவின்போது, இந்தக் கோட்டையும் சிதிலமடந்தது. சிதிலமடைந்த கோட்டை தற்போது தொல்லியல் துரை ப5ராமரிப்பில் உள்ளது. 

தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (டி.டி.டி.சி) இந்த கோட்டையை மாநிலத்தில் அதிகம் அறியப்படாத இருபது சுற்றுலா தலங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.

கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே பெரிய மணல் திட்டு இருக்கிறது. ஆறும் மென்னலைகளோடு சிறு கடல்போல் காட்சித் தருகிறது. மனிதர்கள் அமர்ந்து குளிக்க ஏதுவாக இருக்கிறது. சுற்றுபுர மக்கள் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து குளித்து இளைப்பாருகிறார்கள். கனிசமான சுற்றுலா பயணிகளை பார்க்க முடிகிறது. இசிஆர் நெடுஞ்சலையில் ஆங்காங்கே கோட்டைப் பற்றிய அறிவிப்புகளைப் பார்க்க முடிகிறது. கடலும் மணலும் கோட்டையும், பரந்து விரிந்த கிராமத்து அழகும் இயற்கையின் பேரமைதியும் உங்களுக்கு நல்லதொரு சுற்றலா அனுபவத்தை தரும். 

 -மபா.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது
நன்றி

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்

நன்றி அய்யா!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...