திங்கள், ஜூலை 25, 2022

'வெண்ணிற ஆடை' இருட்டிலிருந்து சில உண்மைக் கதைகள்.



எனது புத்தக அலமாரியிலிருந்து மெலிதான ஒரு புத்தகத்தை உருவினேன்; அது சரவணன் சந்திரன் எழுதிய 'வெண்ணிற ஆடை'.
புத்தகம்தான் மெலிதாக இருந்ததே தவிர, உள்ளே உள்ள கதைகள் மெலிதாக இருக்கவில்லை, அவை கணத்துக் கிடக்கின்றன.
 
அக வாழ்வின் இருண்ட பக்கங்களில் வாழும் நிழல் மனிதர்களை இக் கதைகள் படம் பிடித்திருக்கிறது. அவர்கள் சக மனிதர்கள் போன்று நம்மிடையே உலவினாலும், அவர்கள் சக மனிதர்கள் இல்லை. இந்த நிழல் மனிதர்கள் பெரும்பாலும் தங்களது உறவுகள், தங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று, இவர்கள் மீதே அவர்கள் அறியாமலயே படிந்துக் கிடக்கிறார்கள். சிலர் சுதாரித்து… பதறி உதறி விலகுகிறார்கள். சிலர் அதிர்ச்சியில் செய்வதறியாது சிதைந்துப் போகிறார்கள். 
 
ஒரு கதையை முடித்துவிட்டு அவ்வளவு எளிதாக மற்றொரு கதைக்குள் நீங்கள் சென்றுவிட முடியாது. “இப்படியும் நடக்குமா ….?” என்று நீங்கள் புருவம் உயர்த்திப் பர்க்க, உங்களுக்கு நீண்ட அமைதி தேவைப்படும். அந்த அமைதியே உங்களை ஆசுவசப்படுத்தும். 
 
‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி சின்னத் திரையில் வெளிவந்தது….. இன் நிகழ்ச்சி கடும் விமர்சனங்களையும், பராட்டுதலையும் ஒருசேர பெற்றது எனலாம். அன் நிகழ்ச்சியின் இயக்குனர்தான் இந் நூலின் ஆசிரியர். “இது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் எழுத்து வடிவமல்ல. தொலைக்காட்சி திரையில் சொல்ல முடியாத பல உண்மைகள் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றன. இதுவும்தான் தமிழ் வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் விசித்திரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நம்மிடையே பதில் இல்லை” என்கிறார் இன் நூலின் பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன். 
 
கதைகள் பெரும்பாலும் மூன்று நான்கு பக்கங்களிலேயே முடிந்து விடுகிறது. கதையாசிரியர், காட்சிப் பட இயக்குநர் என்பதால், எந்த வித நீட்டலுமின்றி உள்ளதை உள்ளப்படிக்கு சொல்கிறார். ஒரு டீ குடிக்கும் நேரத்தில் ஒரு கதையை சொல்லி முடித்துவிடுகிறார். சட் சட்டென்று காட்சிகள் மாறி, நமக்குள் கடத்த வேண்டிய கதையின் வாதையை ஒரு ஷாக் போன்று நமக்குள் பாய்ச்சிவிடுகிறார். 
 
இத் தொகுப்பில் இருபது கதைகள் இருக்கிறது. எந்தக் கதைக்கும் தலைப்பு இல்லை. நீங்களாக ஒரு தலைப்பை கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் கதையில்தான் கதையாசிரியர் எதையும் மூடி வைக்க வில்லையே…..? அப்புறம் எதற்கு தலைப்பு ? மற்றவர் பார்வைக்கு....தலைப்பின்றி கதை திறந்தேக் கிடக்கட்டுமே. 
 
-மபா
 
‘வெண்ணிற ஆடை’
உயிர்மை பதிப்பகம்
பக்கம் 120
விலை ரூ.110/-

புதன், ஜூலை 13, 2022

'காகமும் குடையும் சில கவிதைகளும்' - கவிதைப் போட்டி

 

எங்கள் கல்லூரி  வாட்ஸ்ஸப் குரூப்பில்... இந்தப் படத்திற்கு  கவிதை எழுதச் சொல்லி  எனது கல்லூரி கால நண்பர்கள்  கேட்டார்கள்.  நான் நான்கு  கவிதைகள்  எழுதியிருக்கிறேன்.  
இப் படத்திற்கு  கவிதை எழுத சொல்லி நமது முகநூல் கவி நட்புக்களையும் உரிமையோடு அழைத்திருந்தேன். அவர்கள் எழுதிய கவிதைகள் இதோ.....




**********************
 மபா

1) காற்றறியுமோ...
குடை பிடித்தது
காகமென்று  ?!
**********************
2) மழை நாளில்
காக்கைக்கும் தேவை
குவார்ட்டர்  வாங்க
குடை !
***********************
3) உறவின்றி
தனித்து வாழ்தல்
அந்தோ
காக்கைக்கும்
குடை சாயும்.
******************
4) இரண்டுமே
கறுப்பு
ஒன்று கரையும்
மற்றொன்று
நனையும் !

----------------------------

வரதன் 


மரம் வளர் மனிதா!
குடையே வேண்டாம்.
நானமரக் கிளையாகும்
நீ அமர நிழலாகும்


---------------------------------------------
இன்னாசி பாண்டியன் (Innasi Pandiyan)

படர்ந்திருந்த மரமொன்று
காணாமல் போனதால்
நடு சாலையில் கவிழ்ந்த குடையில் ந
நின்றுகரைந்து கரைந்து தேடுகின்றேன்!!!
எனக்கு நிழல் கொடுக்கும்
அந்த மரத்தைப் போல் மாந்தருக்கு
நிழல் கொடுக்கும் இக்குடை
ஏனோ எனக்கு தர மறுக்கிறது!!!
மரம் வளர்ப்போம்
நிழல் கொடுப்போம்!!!

--------------------------------------------------
ரூபன் ஜாய் (Ruben Jay)

மயிலுக்கு போர்வை தந்தவனே,
இதோ,
காக்கைக்கு குடை கொடுத்தவனைப் பார்,
இவனல்லவா கொடை வள்ளல்.

------------------------------------------------------
விசுவநாதன் கணேசன்  (Viswanathan Ganeshan)

தாத்தாவின் குடை தடுமாறுகையில்
காக்காவுக்கு வைத்த சாதம் செய்த கைமாறு..

-------------------------------------------------------------
-வெங்கட் ராமானுஜன்.

சரிந்த  குடை இங்கே ..
குடைக்கு சொந்தகாரன்  எங்கே ..
வீழ்த்தபட்ட ஜனநாயகம் இங்கே..
காக்க போராடியவன் எங்கே..
தலைகவிழ்ந்த தன்மானம்  இங்கே..
தடியடித்த கொலை செய்த படுபாவிகள் எங்கே..
கரைகிரனே காகம் நான்
கேக்கவில்லையா அதிகாரம் புசிக்கும் பூதர்க்கு ..
குற்றம் செய்கிலா கோவலனுக்கு
நீதிகோரி எரித்தனளே கண்ணகி மதுரையை
குற்றமற்றவர்களின்  மர்ம உறுப்புகள்
சிதைக்கபட கதறிய  
வலிகளின் நடுநிசி ஓலங்களில்  
எரியாமல் ஏன் இருண்டது #சாத்தான்குளம்  ..
கா கா கா கா
எனறால் நான் வருவேன்
வா வா வா வா
எனறாலும் வர ஏன் நீ மறுக்கிறாய் ...
உன் சரிந்த  குடை இங்கே ..
குடைக்கு சொந்தகாரன் நீ எங்கே ..?

பி.கு1 :   

முகநூல் தமிழ் சொத்து  Mahesh Babu Padmanabhan அவர்கள் படம் பார்த்து கவிதை சொல்லும் கேள்விக்காக ..


பி.கு2 :   இறந்த நம் சகோதரர்களுக்கு #JusticeForJayarajAndFenix 🙏🙏


----------------------------
ஷண்முகம் எம்.பி (Shanmukham Mb)

Kuudu kata maram indri thavitha kagathirkaga kudaiyayi kudutha kudaivallal vazhga endru kagam karaithadhu
கூடு கட்ட மரம் இன்றி தவித்த காகத்திற்காக குடையையே கொடுத்த குடை வள்ளல் வாழ்க என்று காகம் கரைந்தது
()()
Shanmukham Mb
Mullaiku theyer kuduthaan paarivalar endha kakaiku kudai kudutan andha koudaivalar
--------------------------------------------
சாண்டியல்யன் (S Sandilyan)

உட்கார்ந்த இடம்
குடையின்
கொடை
()()
--------
காக்கை உட்கார
குடை சாய்ந்தது!!
()()

காக்"கை(யில்)"
குடை
----------------------
பாதையில்
குடை
காகம் உட்கார
எது தடை????
--------------------------
வேடியப்பன்  எம் முனுசாமி (Vediyappan M Munusamy)
..
தாத்தாவின் குடைமீது காக்கா
உட்காந்திருக்கிறது என்றேன்.
தளுதளுத்த குரலில் சொன்னார் பாட்டி..
இல்லை.., தாத்தாவேதான் உட்காந்திருக்கிறார்.
----------------------------------------------------------------------------------
மனோஜ் கிருஷ்ணா (Manoj Krishna)

அர்த்த ராத்திரி
அற்பர்கள் மத்தியில்.....
குடை பிடிக்கத்
தெரியாத காகம்.!
---------------------------------------------
தேவ தேவா (Deva Deva)

மனிதனால்
தூக்கி வீசப்பட்ட
கைக்குடை
அந்த கைக் குடையின்
முதுகெலும்பின் உச்சியில்
ஒரு கருநிறக் காகம்
பார்ப்பதற்கு என்னவோ
விளையாடுவதற்கு
உட்கார்ந்தது போல்
தெரியவில்லை
எல்லாமே தற்காலத்தில்
வினையாகி விட்டது
என்பதை உணர்த்துவதற்காக
உட்கார்ந்து போல் தெரிகிறது !!!
நம்மை விட
சில அறிவு குறைவான
ஆகாயத்துப் பறவைதானே
என்றெண்ணுவதா
அல்லது
புத்தி கெட்ட மனிதனுக்கு
இறைவனால் அனுப்பப்படும் இறுதித் தூதனென்று
எண்ணுவதா
இயற்கையின்
மொழியறிந்தால்
இப்பறவையின்
கூக்குரலை நிச்சயமாய்
நானறிவேன்
தன் இனமே
அழிந்து போகிறதென்கிற
இறுதி செய்தியைச் அறைக்கூவல் செய்கிறதோ
அல்லது
தன் வாழிடங்களை
அழித்துப் போட்ட மானுடனத்தை பார்த்து
உங்களுடன் எப்பொழுதும் வேண்டுமானாலும்
போர் செய்வேன்
என்ற எச்சரிக்கை
தொனியை
உயர்த்துகிறதோ
இப் பூமியில் நடக்கும்
அநீதிகளை கண்டு
இதற்கெல்லாம் காரணம்
இப்பாழாய்ப் போன
மனிதன் தானென்று
கடவுளை நோக்கி
அபயமிடுகிறதோ
மனிதமே...
உன்னால் தலைகீழான இயற்கையின் விதிகளை
என்னால்
நிலைநிறுத்த இயலும்
என்று
சவால் விட்டு அழைக்கிறதோ...
இயற்கையின்
மொழியறிந்தால்
இப்பறவையின்
பாடுகளை நானறிவேன்

---------------------------------------------
கதிரவன் திருநாவுக்கரசு (Kadhiravan Thirunavukkarasu)

குடைக்குள் காகம்..
கரு மேகம்..
மழைக்கு காகமோ , குடையோ..

----------------------------------------------
பாலசுப்ரமணியன் சுதாகர் (Balasubramanian Sudhakar)

லாக்டவுன் நேரத்தில்
யாரும் வெளியில் வராதீர்கள்ன்னு
எச்சரிக்கை செய்கிறதோ,
தனித்திருக்கும் காகம்!!
---------------------------------
ஜான் தம்பிதுரை (John Thambidurai George)

நான் காகம் தானே...
கரைய மட்டும் தான் இயலும்!
குடை சாய்ந்து போனதே இந்த பூமி...
என் செய்வேன்?
---------------------------------------------------
பரமானந்தம் யோகானந்தம் (Paramanandam Yoganandam)

மழை வரும் என்று
நம்பாத மனிதன்
சாலையில் வீசிய குடையை,
நம்பிக்கையுடன்
பிடித்திருக்கும் காகம்.

-------------------------------------------
வித்யா சுரேஷ் (Vidhya Suresh)


தருவில்லா தெரு
குடைக்குள்
கூடடைவோம்
-------------------------------------
பன்னீர் செல்வம் (Panneer Selvam)

மரங்களை
அழித்த மாபாதக செயலில்...கூடே,
எனது குடையாகும்...
உங்களின் குடையோ..கொடையோ...
எமக்கு.கூடாகுமோ..!?!
---------------------------------------------

அகிலா பரணி (Akila Bharani)

குடை இருக்கு...
மழை இருக்கு....
மனுஷன காணோமே...
----------------------------------------------
பிரான்சிஸ் (P.J. Francis)

குடிமகன் விட்டுசென்ற குடைகூட போதையில்
கவிழ்ந்து காக்கை குடித்தனம்
செய்யும் இடமானது
----------------------------------------

எ.ராஜமாணிக்கம்  வழக்கறிஞர்.

மழையின் கரங்கள்
பூமியை அறைந்து கொண்டிருக்க...
வானத்தின் கண்ணீரில்
நிலை தடுமாறிய குடை....
நீதிகேட்டு வானத்தை
நோக்கி
வழக்காடும்
காகம்......
------------------------------------

எனது வேண்டுகோளை ஏற்று கவிதைப் படைத்த நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றியும் பேரன்பும்!

அன்புடன்
தோழன் மபா.

வெள்ளி, ஜூலை 08, 2022

இசைஞானி இளையாராஜாவோடு ஒரு மஹா சந்திப்பு !

           

'எனது  வாழ்நாளில் இருவரிடம் புகைப்படம்  எடுத்துக் கொள்ள வேண்டும்  என்று  நினைத்திருந்தேன், ஒன்று  தலைவர் கலைஞர், மற்றொருவர்  இசைஞானி இளையராஜா'

படத்தில் இளையராஜாவோடு நான்
முகநூல் மீள் பதிவு !
 
        மார்க்கெட்டிங்  வேலையில் இலக்குகளை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும்  நமக்கு, மிக அரிதாக ஆசிர்வதிக்கப்பட்ட நாளொன்று அமையும்!   

அப்படியான நாளாக நேற்றைய  முன் தினம் இசை மாமேதை, இசைஞானி  இளையராஜா  அவர்களை  அலுவல் நிமித்தமாக  சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. 

ஊடகத்தில் பணி புரிபவர்கள் பிரபலங்களை கண்டால் பெரிதும்  அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.  ஏன் பிரஸ் மீட்டில் கூட கை தட்ட மாட்டார்கள்.  அப்படியான  மரபு இங்கு  கடைபிடிக்கப்படுகிறது. 

இதெல்லாம் செய்தியாளர்களுக்கு மட்டும் என்றில்லை,  என்னை போன்ற மார்க்கெட்டிங் மனிதர்களுக்கும் இது பால பாடம். 

நிற்க. 

எனது  வாழ் நாளில் இருவரிடம் புகைப்படம்  எடுத்துக் கொள்ள வேண்டும்  என்று  நினைத்திருந்தேன்.  ஒன்று  தலைவர் கலைஞர்,
மற்றொருவர்  இசைஞானி இளையராஜா. 

தலைவர்  கலைஞரோடு அப்படியான  வாய்ப்பு  அமையவில்லை.  முயற்சி செய்திருந்தால் புகைப்படம்  எடுத்திருக்கலாமோ என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.   காலம் கடந்து விட்டது.

இசைஞானி அவர்களை சந்திக்க வேண்டும்  என்ற எனது கனவில்... காலம் என்னை கை விடவில்லை.  கையை பிடித்து  அவரிடமே அழைத்து  போய் விட்டது. 

அப்போதுதான்  தியானம் முடித்து  வந்து அமர்ந்திருந்தார். அன்றலர்ந்த மலர் போன்றும், கரு நீல கண்ணன் போன்றும், மயக்கும் இசையால் எம்மை ஆட்கொண்ட மாயக்காரன் போன்றும் அமர்ந்திருந்தார்.

 
எத்தனை எத்தனை  ராகங்கள், எத்தனை எத்தனை  வசீகரப் பாடல்கள்,  எத்தகைய இடரிலும், ஒற்றை நொடியில் நம்மை அக் காலகட்டத்திலிருந்து மீட்டெடுக்கும்  வல்லாதிக்க இசையல்லவா ராக தேவனின்  இசை!

அவ்விசை; நம்மை உயிர்ப்புடன்  இயக்கும் விசை !  

சந்திப்பு முடிந்த தருணத்தில்,  அவரோடு புகைப்படம்  எடுத்துக் கொண்டோம். அன்று உலக புத்தக  தினம் என்பதால் எனது #மறுதாம்பு  கவிதை தொகுப்பை கொடுத்தேன். வாங்கிக் கொண்டார். 

முடிவில்லா  இரவுகளிலும், நெடுந்தூரப் பயணங்களிலும் நம்மோடுதானே  இம் மனிதர் இசையாய்  இணைந்து பயணித்திருப்பார்?! 

பிரமிப்பும்  ஆச்சரியமும் கட்டித் தழுவ, அப்படியே  சொக்கிப் போய்.... பிரசாத் ஸ்டுடியோவுக்கு வெளியே  இருந்த டீ கடையில் லைட்ஸ் ஒன்றை வாங்கி மிதப்பாய் உள்ளிழுக்க... அருகிலிருந்த  மரத்திலிருந்து மிளகு சைஸ் மஞ்சள்  பூக்கள்  என் மீது ஆசிர்வாதமாய் பூச் சொறிந்தன. 
 
-

#இளையராஜா

செவ்வாய், ஜூலை 05, 2022

தருணம் ! கவிதை

ருணம்

முற்றிலும் வேறாயிருந்த ஸ்பரிசத்தை 

கண்டுணரும் தருணத்தில்... 

காதலும் காமமும்

 நம்முன் படையலிடப்படுகிறது! 

அன்னப் பறவையென உருமாறும்-

அத் தருணத்தில் இருக்கிறது

 நமக்கான வாய்ப்பு !

 -மபா

சனி, ஜூலை 02, 2022

வானளாவிய அடுக்கங்களில் வேறொரு உலகம் !

சமீபத்தில் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் ராஜ அண்ணாமலைபுரத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம். 18 ஆவது மாடியில் இருக்கிறது அவரது பிளாட். சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு புளோருக்கு இரண்டு வீடுகள் என்று பதினெட்டு மாடி கொண்ட பிரமாண்டமான பிளாட் அது. சென்னை வேறொரு தளத்தில் பயணிக்கிறது என்பதற்கு இப்படியான கட்டிடங்களே சாட்சி.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மெரினாவில் நங்கூரமிட்டு வரிசைக்கிரமமாக நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களும், எறும்புபோல் ஊர்ந்து கொண்டிருக்கும் பேருந்துகளும் ஒழுங்கின்றி மானாவாரியாக கட்டப்பட்ட வீடுகளும் என்று சென்னையை வேறொரு தளத்தில் பார்க்க நேரிட்டது.
கான்கிரீட் காடுகளை ஊடறுத்து செல்கிறது அடையாறு, அதன் இருமருங்கிலும் பச்சையம் பூசிக்கிடக்கிறது. ஜன்னலுக்கெதிரே.... சன் டிவி அலுவலகமும், லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலும், தூரத்தில் சாந்தோம் பஸிலிக்கா சர்ச்சின் கோபுரமும் மினியேச்சர் மாடலாய்த் தெரிகிறது. அண்ணாந்துப் பார்த்த இடங்கள், நமது பார்வையின் கோணத்தில் சிறிதாகிப் போவது விந்தை!! வானளாவிய அடுக்கங்களில், நாம் பார்க்காத வேறொரு உலகம் இருக்கிறது மக்களே!

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...