அது கர்நாடகத்தின் தென் கோடி கிராமம். அங்கு ஒரு மிலேக்சன் இருக்கிறான். அவன் அந்த ஊரின் பரம்பரை பணக்காரன், முரடன். என்னேரமும் அடியாட்களோடு வலம் வரும் அவன், கடைத்தெருவில் இருக்கும் அவனது கள்ளுக்கடையில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டு போகிற வருகிறவர்களை சண்டைக்கு இழுத்து சண்டியர்தனம் செய்வது, பெண்களை சீண்டித் தொல்லை கொடுப்பதுதான் அவனது வேலை. அவனது பெயர் பாஸ்கர பட்டேலர்.
அப்படியான அந்தக் கடைத்தெருவிற்கு பஞ்சைப்பராரியான, மாற்றுத் துணிக்கு வழி யில்லாத ஒருவன், அவனது அழகான மனைவியோடு கேரளத்தின் வயநாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வருகிறான். அவனது பெயர் தொம்மி.
மலையாள எழுத்துலகின் தனித்த அடையாளம் கொண்ட பால் சக்காரியா எழுதிய 'பாஸ்கர பட்டேலரும் தொம்மியின் ஜீவிதமும்' என்ற நாவல்தான் அது! இக்கதை பிற்பாடு 1993 ல் 'விதேயன்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து, தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை தட்டிச் சென்றது.
பால் சக்காரியா எழுதிய கதையை செல்லூலாயிட்டில் அப்படியே ஒரு காவியமாக படைத்திருப்பார் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். மம்முட்டியின் மிகையற்ற நடிப்பில் 'விதேயன்' சகாவரம் பெற்றது எனலாம்.
படத்தின் தொடக்கமே உங்களை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்றுவிடும். கள்ளுக்கடையின் வாசலில்.... ஒரு பக்கம் கைப்பிடி இல்லாத நாற்காலி போடப்பட்டிருக்கும். நாற்காலியின் ஒரு பக்கத்தில் ஒரு நீண்ட நாட்டுத் துப்பாக்கி சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். உடைந்த நாற்காலியின் கைப்பிடி ஓரத்தில் வெடி மருந்துகள் அடங்கிய சின்னஞ்சிறிய பை தொங்கிக் கொண்டிருக்கும்.
வாழ வழித்தெரியாத நோஞ்சானான 'தொம்மி' ஒரு கடையின் வாசலில் இரு கால்களையும் கட்டிக் கொண்டு சோகத்தில் உட்கார்ந்து இருக்கிறான். கடைத்தெருவில் போகிற வருகிறவர்களை எடவுட்டு பண்ணும் பாஸ்கர பட்டேலருக்கு இப்படியான ஒரு அப்பிராணி கண்ணில்பட்டால் சும்மா விடுவானா...?
அவனை வம்படியாக 'இவ்விட வாடா நாயிண்ட மகனே' என்று கூப்பிட்டு அவனை உதைத்து முகத்தில் வெற்றிலை எச்சிலை காறி உமிழ்ந்து விரட்டிவிடுகிறான் பட்டேலர்.
பஞ்சம் பிழைக்க வந்த தொம்மிக்கு அழகான மனைவி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு, அவனது குடிசைக்குள் புகுந்து அவளை நாசம் செய்கிறான் பட்டேலர். கடைத்தெருவில் அடிவாங்கியதில் அவமானம் தாங்காது எங்கோ திரிந்துவிட்டு இரவில் வீடு சேரும் தொம்மிக்கு, அவனது மனைவி ஓமனாவின் அழு குரல் வரவேற்கிறது. நடந்ததை ஊகித்துக் கொண்ட தொம்மி, மனதளவில் குமைந்து போகிறான்.
பிற்பாடு பட்டேலரின் ஆட்கள் "உன்னை பட்டேலர் அழைத்து வரச் சொன்னார்" என்று தொம்மியை அழைக்க..."வரமுடியாது" என்று முரண்டு பிடிக்கிறான் தொம்மி. "பட்டேலரைப் பகைத்துக் கொண்டு இந்த ஊரில் நீ வாழ முடியாது, வா" என்று பட்டேலரின் ஆட்கள் தொம்மியை மிரட்ட...பயந்த சுபாவம் கொண்ட தொம்மி பட்டேலரைப் பார்க்க வருகிறான்.
அங்கு தொம்மிக்கும், தொம்மியின் மனைவி ஓமனாவுக்கும் ஆடைகளைத் எடுத்துத் தந்து தொம்மியை தனது கள்ளுக்கடையில் வேலைக்கு சேர்த்து தன்னுடனே வைத்துக் கொள்கிறான் பட்டேலர். அன்றிலிருந்து பட்டேலரின் நிழல் போலவே மாறிவிடுகிறான் தொம்மி.
அடிக்கடி தொம்மியின் குடிசைக்கு பட்டேலர் வருவதும் போவதுமாக இருக்கிறான். "உன் மேல் எண்ட எஜமானரின் வாசம் அடிச்சாலும், நீ எனது ஸ்திரி" என்று தனது மனைவிடம் தனது உரிமையை விட்டுக் கொடுக்காது கட்டிப்பிடித்து கொள்கிறான் தொம்மி.
கதை இதற்குப் பிறகுதான் புது ரூட் பிடித்து பயணிக்கிறது.
பட்டேலரின் மனைவி அழகு மற்றும் பொறுமையின் சிகரமா இருக்கிறார். அவரை சரோஜா அக்கா என்று வாய் நிறைய அழைக்கிறான் தொம்மி. பட்டேலரின் அடாவடி நாளைக்கு நாள் அதிகமாகிறது. இதனால் தொடர்ந்து பட்டேலருக்கும் சரோஜாவிற்கும் சண்டை நடக்கிறது. சரோஜாவை தனது இஷ்ட வாழ்விற்கு இடைஞ்சலாக நினைக்கும் பட்டேலர், அவளை ஒரு நாள் கொலை செய்து விடுகிறான்.
பட்டேலர் தனது மனைவியை கொலை செய்த செய்தி காட்டுத்தீயாய்ப் பரவ...சரோஜா வின் சகோதரர்கள் ஊர் மக்களோடு சேர்ந்து பட்டேலரின் ஜீப்பைக் கொளுத்தி அவனைத் தாக்குகிறார்கள். போலீஸ் பட்டாளம் குவிக்கப்படுகிறது. அங்கிருந்து தப்பிக்கும் பட்டேலர், தொம்மியின் குடிசைக்குள் வெற்று உடம்போடு மாற்றுத் துணியில்லாமல் தஞ்சமடைகிறான். பசியோடு இருக்கும் பட்லர் தொம்மி குடித்துவிட்டு வைத்தக் கஞ்சியைக் குடிக்கிறான். ஆஜானுபாகுவான பாஸ்கர பட்டேலர் பரிதாபத்திற்குரிய ஒரு மனிதனாக தொம்மியின் முன்னால் நிற்கிறான்.
பாஸ்கர பட்டேலராக மம்முட்டியும், தொம்மியாக கோபக்குமாரும் நடித்திருக்கிறார்கள்.
ஒட்ட வெட்டிய தலைமுடி, முறுக்கி விடப்பட்ட மீசை என்று மிரட்டலான ஒரு சண்டியராக நடித்திருக்கிறார் மம்முட்டி. அந்த எகத்தாளமான நடிப்பு ஆஸம்! இந்தப் படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு 1994 ல் தேசிய விருது கிடைத்தது.
அதேபோல் தொம்மியாக நடித்திருக்கும் கோபக்குமாரின் நடிப்பு.... "எஜமானரே" என்று பட்டேலரை அழைப்பதாகட்டும், தனது மனைவியை பட்டேலர் நாசம் செய்துவிட்டான் என்று தெரிந்தும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று மறுகுவதாகட்டும், பிற்பாடு யுசுப் பாய் பட்டேலரை கொலை செய்ய வெடி குண்டு வீசும் போது அதற்கு துணை நிற்பதும், அதிலிருந்து தப்பித்து காயமுற்று விழும் பட்டேலருக்காக அழுவதாகட்டும் என்று ஒரு எஜமானருக்கு விசுவாசத்துடன் இருக்கும் நம்பிக்கையான வேலைக்காரனாக மம்முட்டிக்கு இணையான ஒரு நடிப்பை வழங்கியிருப்பார் கோபக்குமார். படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்திருக்கிறார் தன்வீ ஆஸ்மி, என்னவொரு அழது !!
படத்தின் பிரதான கதாபாத்திரமாக 'இருட்டும்' நடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான காட்சிகள் இருட்டின் துணை கொண்டு நகர்கிறது. அந்த இருட்டிலிருந்து கதை மாந்தர்கள் மெல்ல ஒளிப்பெற்று உயிர் பெறுகிறார்கள். அந்த வித்தையை படம் நெடுக நிகழ்த்தியிருக்கிறார்கள் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் காமிராமேன் ரெவி வர்மாவும்.
சில காட்சிகளை புளி போட்டு விலக்காமல், பார்வையாளனின் முடிவுக்கு விட்டுவிடுவது இயக்குநரின் தனி சாமர்த்தியம்.
இருட்டையும் தெளிவான வண்ணத்தையும் பூசிக் கொண்டு படம் வெளிவந்து 28 ஆண்டுகள் கடந்தும் 'விதேயன்' திரைப்படம் அழகாக மிளிர்கிறது.
-மபா
2 கருத்துகள்:
தங்களின் விமர்சனம் படம்பார்க்கத் தூண்டுகிறது.
வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் பார்ப்பேன்
சிறப்பு சார், நல்லப் படம் பாருங்கள்.
கருத்துரையிடுக