திங்கள், நவம்பர் 16, 2015

இது லா.ச.ரா நூற்றாண்டு!.


                இந்த நூற்றாண்டின் சொல்லாடல் மிக்க எழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு இது.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916 - அக்டோபர் 30ம் தேதி தமிழ் நாட்டில், லால்குடியில் பிறந்தார்.  200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளர்.  

தினமணி கதிரில் நான் எழுதிய  கட்டுரை!.
தனது 17வது வயதில் இருந்து எழுத தொடங்கிவிட்ட லா.ச.ரா தமிழின் தவிற்க முடியாத தனித்துவமிக்க எழுத்தாளர். தனது கவித்துவமான எழுத்து நடையில், புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தனது எழுத்தில் வாரி இறைத்தார். புரிந்தவன் புத்திசாலி, புரியாதவன் அபாயக்கசாலி என்ற பேதத்தின் அடிப்படையில் அவரது எழுத்துகள் துலாக்கோலில் அளவிட முடியாதவையாக இருந்தன.

1989ல் 'சிந்தா நதி' கட்டுரை தொகுப்பிற்காக லா.ச.ராவிற்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.  தினமணி கதிரில் வாரம் இரண்டு பக்கங்கள் எழுத சொன்ன போது முதலில் மறுத்த லா.ச.ரா பின்னர் ஒப்புக்கொண்டு எழுத தொடங்கினார். சிந்தா நதி 48 வாரங்கள்  தினமணி கதிரில் அலைகடலென புரண்டு மோதியது.  அதன் பிரவாகத்தில் காடுகள், மலைகள், நகரங்கள், மனிதர்கள், உணர்வுகள்,  என்று  பூமிக்கு மேல் உள்ள அனைத்தையும் இழுத்து சென்றது. இன்றளவும் இணையதள எழுத்துகளுக்கு 'சிந்தா நதி'யே முன் நதி, மூத்த நதி!.  கட்டுரையை கதை போலவும், கதையை கட்டுரை போலவும் சொல்லும் உத்தியை அவர் சிந்தா நதி முழுவதும் படரவிட்டிருந்தார். அதன் படிமங்களே இன்றும் ஆழமாய் படிந்துக் கிடக்கிறது. எல்லாம் அவரிடத்தில் இருந்து பெறப்பட்ட ஒன்ற!. லா.ச.ராவின் எழுத்துகள் புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தரவல்லவை!

சிந்தா நதியில் 'சொல்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

'பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன்மையை அதனதன் ஓசையினின்று தவிர்த்து? அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஓவியங்கள் பயக்கும் மயக்கும். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும்.

பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக்...

தருக்களின் இலைகளினூடே, காற்றின் உஸ்!...

அந்தி வேளையில் விண்மீன்கள் ஜரிகை கட்டிய இருள் படுதாவின் படபடப்பு.

நட்சத்திரங்கள் போன்று மின்னும் எழுத்துகள் நம்மை விட்டு விலகியே இருக்க விரும்புகின்றன. அவை கைகளுக்குள் தட்டுப்படாதவரைக்கும்தானே அவை நட்சத்திரங்கள்?!.

ரசிக்கத்தக்க அளவீடுகளில் அவரது பாணி எழுத்துகள் பிரிதொருவர் தொடராவண்ணமே இருக்கின்றன.

"என் எழுத்துகள் புரியவில்லை என்கிறார்கள். 'புரிந்தது புரியாதது இவை இரண்டுமே தற்காலிக நிலைகள். இன்றைக்கு புரியாவிட்டால் நாளைக்கு புரிகிறது. இல்லாவிட்டால் நாளைமறுநாள். அட, கடைசிவரை புரியாவிட்டால்தான் என்ன ? இருந்து விட்டுப் போகட்டுமே எழுதுபவனுக்கே எல்லாம் புரிந்து விடுகிறதா என்ன?' புரிவதைக்காட்டிலும் வாசகன் உணரக்கூடியது, உணர வேண்டியது விஷயத்தில் தாக்குதல் அந்த முதல் பாதிப்பு Impression, Impact ரத்தத்துடன் கலந்து உள்ளத்தில் ரஸாயணம் நிகழ்வது.

நான் ஜனரஞ்சகமான எழுத்தளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு அப்படியே, அதனாலயே பிரபலமாகிவிட்டவன். ஏதாவது புரியும் படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்துவிட்டது என்று என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்துவிடுவார்கள். இரண்டு மூன்று பேர் சொல்லிவிட்டார்கள் எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடில்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்?".

லா.ச.ராவின் எழுத்துகள் ஆத்ம சுத்திகரிப்பை செய்யக் கூடிய மந்திரத்தை பெற்று இருக்கிறது. கதைகளின் தோதான இடங்களில் அதை அவர் படைத்துவிடுகிறார். தனது முதல் கதையான ஜனனியில் இவ்வாறு எழுதுகிறார் "தேவி, நீ இதை அறிய வேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு. கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூட பயப்படுகிறது."

மானுடத்தின் மீதான விடுதலையை இதைவிட எளிதான புரிதலில் யாரும் சொல்லிவிட முடியாது. அகப்பட்டுக்கொண்ட எலி போன்ற அவஸ்த்தையை பெற்ற பிறகே விடுதலைக்கான வாசலை அடைகிறோம். ஆனால் அந்த கதவு ஏற்கனவே திருந்துதான் இருக்கிறது என்பதை உணராமலேயே காலம் நம்மை கடத்திவிடுகிறது.

லா.ச.ரா முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கினார். பாபுஜி (Babuji) என்ற கதை Short Story என்ற பத்திரிகையில்  1934ல் வெளிவந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் யானைக்கு மதம் பிடிப்பது பற்றிய கதை அது!. அதைத் தொடர்ந்து அவரை தமிழ் முழுவதுமாய் சுவிகரித்துக் கொண்டது.  அவரை பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே பலமுறை எழுத அவர் தயங்கியதே இல்லை. அலுத்துக் கொள்வதுமில்லை. பல சிறுகதைகள் அவரது அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன் நினைவை பழக்கிக்கொண்டவர் . அவர் கதை எழுத உட்கார்ந்ததில்லை. கதை மனதில் உட்கார ஆரம்பிக்கும்போது எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக் கொள்ளும் போது அதன் உருவத்தை எழுத்தாக்கினார் என்று நினைவு கூறுகிறார் லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி.

நன்றி தினமணி கதிர். 
15.11.2015.

 ()()()()()

இனி லா.ச.ரா நூற்றாண்டு விழா தொகுப்பு...

விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா உரையாற்றுகிறார்.
அருகில் இடமிருந்து: லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி, கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன், விமர்சகர் முருகேச பாண்டியன்.  (Pix courtesy: Charuonline.com)


        எழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், அண்மையில்  நடைபெற்றது.  டிஸ்கவரி புத்தக நிலையம் இன் நூற்றாண்டு விழாவினை முன்னெடுத்து நடத்தியது. பத்திரிகைகள் அல்லது பெரிய அமைப்புகள் செய்ய பணியை டிஸ்கவரி வேடியப்பன் செய்திருப்பது பாராட்டுக்குறியது. 


நூற்றாண்டு விழாவில் லா.ச.ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை லா.சா.ராவின் புதல்வர் சப்தரிஷி வெளியீட லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி லா.ச.ரா  பெற்றுக் கொண்டார்.  383 பக்கங்களை கொண்ட நேர்த்தியான இத் தொகுப்பு புதிய வாசகர்களை தன் பக்கம் இழுக்கும் சக்தி கொண்டது.  டிஸ்கவரி தனக்கான புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

"லா.ச.ராவை வாசிக்குபோதெல்லாம் புத்தகத்தின் பக்கங்களில் அடிக் கோடிட்டு குறித்துக் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தளவிற்கு வாசகனின்று விட்டு விலகாத எழுத்து அவருடையது' என்றார் எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது சிறப்புரையில்.

கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார்.  அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், விமர்சகர் முருகேச பாண்டியன் மற்றும் பேராசிரியர் ராமகுருநாதன் ஆகியோர் லா.ச.ராவைப் பற்றி  நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சிகளை கவிஞர் அகரமுதல்வன் தொகுத்து வழங்கினார். லா.ச.ராவின் நூற்றாண்டு விழாவினை கணையாழி, டிஸ்கவரி புக் பேலஸ், ஆம்பல், யாவரும் டாட் காம் ஆகியன ஒருங்கிணைந்து நடத்தின.

புதன், அக்டோபர் 21, 2015

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு.....

        

          தினமணி இளைஞர் மணியில் வலைத் தளங்கள் (Blogs) பற்றி அறிமுகம் செய்கிறோம்!. இது செவ்வாய் தோறும் இளைஞர் மணியில் 'இணைய வெளினியிலே!" என்ற பெயரில் வெளிவருகிறது.

இதில் சிறந்த வலைத்தளங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். வலைப்பதிவர்கள் தங்களது வலைத்தள முகவரி மற்றும் மொபைல் எண் விபரத்தை  எனது மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Email : greatmaba@gmail.com

தேர்ந்தெடுக்கப்படும் வலைத்தளங்கள் தினமணி இளைஞர் மணியில் பிரசுரிக்கப்படும்.
நன்றி!.

அன்புடன்
தோழன் மபா.


வெள்ளி, செப்டம்பர் 18, 2015

சென்னையில் 'ஆரோக்கியம்' மருத்துவ கண்காட்சி!.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அப்பலோ மருத்துவமனை இணைந்து வழங்கும் 'ஆரோக்கியம்' மருத்துவ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிறு நடைபெறுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வருடம் தோறும் பல்வேறு கண்காட்சிகளை இந்தியா முழுவதும் நடத்திவருகிறது.

கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் அப்பலோ குழுமத்துடன் இணைந்து இரண்டு நாள் மருத்துவ கண்காட்சியை நடத்துகிறது. சென்னை வர்த்தக மையத்தில் (CTC) நடைபெறும் இக்கண்காட்சியில் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் கலந்துக் கொள்கின்றன.

இக் கண்காட்சியில் சர்க்கரை நோய், கண் பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை, உடல் எடை மற்றும் BMI பரிசோதனை, அக்குபஞ்சர் பரிசோதனை, பாரம்பரிய மருத்துவ பரிசோதனைகள், BMD பரிசோதனை, இரப்பை மற்றும் கல்லீரல் நோய் ஆலோசனைகள், சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை ஆலோசனைகள் போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

இரண்டு நாள் கண்காட்சியில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் சிறப்புரைகள் வழங்குகின்றனர்.

19.9.2015 சனிக் கிழமை மாலை 4.30 மணிக்கு - 'உடல் பருமன்' - Dr. ராஜ்குமார் பழனியப்பன், Bariatric Surgeon, Apollo Hospitals Chennai.

19.9.2015 சனிக் கிழமை மாலை 5 மணிக்கு - 'உணவும் வாழ்வும்' சிந்தனை சித்தர் எம்.ஜி.எல். வேலாயுதம், C&MD, Alma Groups.

19.9.2015 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்கு - நலம் தரும் நாட்டு மருத்துவம்' சன் டிவி புகழ் டாக்டர் சக்தி சுப்ரமணி.

'ZUMBA FITNESS SESSION'

உடலை ட்ரிம்மாக வைத்துக் கொள்ள சர்வதேச புகழ்பெற்ற 'சும்பா நடனம்' 19.9.15 அன்று மாலை 6 மணிக்கும், 20.9.15 அன்று மாலை 5.30க்கும் நடத்தப்படுகிறது.

ஆரோக்கியம் காண அனைவரும் வாங்க!.
For Free Health Check-Up Call 9282438117/9962901299 தொடர்புகொள்ளவும்!.

சனி, செப்டம்பர் 12, 2015

புரட்சியின் நிறம் - சே குவேரா!


எதார்த்தம் பேசும் நுழைவு வாயில்!
         வழக்கமாக ஓவிக் கண்காட்சி என்றால் பளபள பளிங்கு தரையும், ஓவியத்தின் மீது மட்டும் ஒளி உமிழும் விளக்குகள் போர்த்தப்பட்ட அரங்குகளில்தான் நடைபெறும். காலடி சத்தம் கூட காதில் விழாத ஒரு அந்தகாரத்தின் அமைதியில் அந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். மொளன நகர்வுகளில் பார்வையாளனுக்கும் ஓவியத்திற்குமான புரிதல் காலடியின் இடைவெளியில் கரைந்து போகும்.

ஆனால் புரட்சியாளன் சே குவேராவின் ஓவியக் கண்காட்சி அப்படி அல்லவே....?!.

ஒரு மேல் நிலைப்பள்ளியின் வகுப்பறையில்,  மாணவர்களின் கூக்குரலிக்கிடையே இவ் ஓவியக்காட்சி நடத்தப்படுவதே புரட்சிக்கான பிரத்யேக அழகுதான். 

இந்த நூற்றாண்டின் சின்னம் என்று போற்றப்பட்ட சே குவேராவை விதவிதமாக வரைந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி!. 'சே குவேரா புரட்சியின் நிறம் ஓவியக் காட்சி' என்ற தலைப்பில் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

.இனம் மொழி கடந்து உலக விடுதலைக்காக போராடிய அந்த மனிதனை இன்றைய இளைஞர்கள் தங்களது தலைவனாக வரித்துள்ளனர்.

காங்கோ காடுகளில் ஜீப்பின் பாணட்டில் துப்பாக்கியுடன் அமர்ந்து செல்லும் சே குவேரா..... போர் முனையில் வீர நடை போடும் சே குவேரா, துப்பாக்கியை கையில் பிடித்தபடி கடைவாயில் கனன்றுக் கொண்டு இருக்கும் சுருட்டுடன் சே குவேரா என்று ஓவியங்களின் பின்னணியில் ஒரு நீர் கோடாய் விரவி இருக்கிறார் சே. அதுவே நம்மை அவரது படையில் சேர்க்க வைத்து வெற்றி கூச்சலிடவைக்கிறது. இத்தகைய புரிதல்கள் ஒரு கலைஞனின் வெற்றியாகவும் அமைந்துவிடுவது சிறப்பு!.

முன்னதாக இவ் ஓவியக் காண்காட்சிப் பற்றி தனது முக நூலில் பதிவிட்டிருந்தார் நண்பர் வேடியப்பன். அதனாலயே அங்கு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது, அவருக்கு நன்றி!..

சென்னை வெங்கட் நாராயணா சாலையில், திருப்பதி தேவஸ்தானம் எதிரில் இருக்கும் சி.தெ. நாயகம் மேல் நிலைப் பள்ளியில் .இவ் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. வரும் ஞாயிறு (13ம் தேதி) வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது. 

அவசியம் பார்க்கவும்!.

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

புத்துயிர் பெறுமா கபடி...?


  சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக                     
மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது.                       
 

          
 (கடந்த சனிக்கிழமையன்று தினமணியில் வந்த எனது கட்டுரை )
          இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது புரோ கபடி லீக் போட்டி. கடந்த மாதம் தொடங்கிய புரோ கபடி லீக், கபடி விளையாட்டில் புதிய மின்னலைப் பாய்ச்சியிருக்கிறது. கிரிக்கெட்டை தொடர்ந்து கபடி விளையாட்டிலும் லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புரோ கபடி லீக் போட்டிகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது கபடி ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது.

 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகள் இப் போட்டிகளில் மோதுகின்றன. ஆனால், கபடியின் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து எந்த ஓர் அணியும் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று.

 சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது. தொன்மை இனமான தமிழினத்தின் வீர விளையாட்டான சடுகுடு என்ற கபடி இன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அழிந்துக் கொண்டு வருகிறது.

 காசு செலவு இல்லாத விளையாட்டு இது. உடல் வலு, மூச்சுப் பயிற்சி என்று கூடுதல் பலனும் நமக்கு கிட்டும். 

 உத்தி பிரித்து கபடி...கபடி... என்று தொடையைத் தட்டிக் கொண்டு அடங்கா ஆவேசத்துடன் எதிர் அணிக்குள் புகுந்து களமாடினால் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஹோவேன்று ஆர்ப்பரிக்கும். அப்படி ஓர் உணர்ச்சிமிக்க விளையாட்டு கபடி.

 அன்றைய நாள்களில் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் கபடி போட்டிகள் நடைபெறும். தெருவுக்குத் தெரு ஒரு கபடி அணி இருக்கும். பகல், இரவு ஆட்டமாக போட்டியை இரண்டு நாள் நடத்தும்போது, ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருக்கும். 

 ஆனால் இன்றோ, தமிழர்களின் வீர விளையாட்டான கபடியின் நிலை... நினைத்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருக்கிறது. மனிதனின் நேரத்தை விழுங்கும் கிரிக்கெட்டின் வருகைக்குப் பின்னர்தான் கபடி களையிழந்து போய்விட்டது.

 தமிழகத்தில்தான் கபடி விளையாடுவது குறைவாக உள்ளதே தவிர, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போற்றப்படக் கூடியதாக கபடி வாழ்கிறது. வங்கதேசத்தில் கபடி தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஈரான், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்ச்சி பெற்ற கபடி அணிகள் இருக்கின்றன. 13 உலக நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
 இந்தியாவுக்குத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தொடர்ந்து ஏழு முறை தங்கப் பதக்கம் வென்று வருகிறது. 

 1985-இல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி முதல் முறையாக உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 1990-இல் நடைபெற்ற 11}ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கபடி களம் இறக்கப்பட்டது.

 ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய உள்விளையாட்டு அரங்கப் போட்டி, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி என்று மூன்று பிரதான விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டது. இம் மூன்றிலும் சேர்க்கப்பட்ட ஒரே விளையாட்டு கபடி மட்டுமே. இதுவரை கபடிக்காக நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கோப்பையை இந்தியாவே வென்றிருக்கிறது. 

 இந்த ஆண்டு புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இது கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக புகழ்பெற்ற தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த முறை புரோ கபடி போட்டியில் பட்டம் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் இல்லாத ஜெய்ப்பூர் அணியை அவர் புரோ கபடி லீக் போட்டியின் முதல் சாம்பியனாக மாற்றினார்.

 இந்தியாவின் சிறந்த தடுப்பாட்டக்காரரான சேரலாதன் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார். தற்போதைய போட்டியில் முன்னணியில் இருக்கும் யூ மும்பா அணியில், தேர்ச்சி பெற்ற தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். தமிழக வீரர்களின் ஆட்ட பாணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

 வளமையான கபடி பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் புரோ லீக் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்திலிருந்து ஓர் அணியும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது நெருடலான ஒன்று. ஐபிஎல் போன்றே இதிலும் அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.

 அப்படி இருக்க தமிழகத்திலிருந்து ஒருவர் கூடவா தமிழகத்தின் பெயரில் அணியை வாங்க முடியவில்லை? ஏலத் தொகை அப்படி ஒன்றும் கோடிகளில் இருக்கவில்லை. லட்சங்களில்தான் இருக்கின்றன. தமிழக நலன் சார்ந்த எந்த ஒரு நிறுவனத்துக்கும் இந்த நிகழ்வு கவனத்தில் வராதது மிகவும் கொடுமை.

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஏ.கே.எஃப்.ஐ.) இணையதளங்களிலும், கபடிக்கான விக்கிபீடியாவிலும் கபடி இந்தியாவின் பழைமையான விளையாட்டு என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ கபடி தமிழர்களின் விளையாட்டு என்பதைப் பதிவு செய்ய நாம் தவறிவிட்டோம்.

 கைப் பிடி, கைப் பிடி என்று சொல்லே கபடியாக மாறியது என்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். காலத்தே பதிவு செய்யாத நமது பிறவிக் குணத்தால் நமது பாரம்பரியமான கபடி விளையாட்டை தாரைவார்த்து இருக்கிறோம். 

 நமது வரலாற்றை நாம் மறந்தால் வரலாறு நம்மை மறந்துவிடும். எதிர்வரும் ஆண்டுகளிலாவது புரோ கபடி லீக் போட்டியில் தமிழகத்திலிருந்து கபடி அணிகள் இடம்பெற வேண்டும் என்பதே சாமானிய தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

சரித்திரம் படைத்த சாமானிய மனிதன் லியோ முத்து!.




              இந்தியாவின் தென் கிழக்கு மூலையில் உள்ள, அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் பிரசித்திப்பெற்ற கல்வி நிலையங்களை தொடங்குவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 

கனவுகளின் கதவுகளை நோக்கி தீரமுடன் நடக்கத் தொடங்கிய அந்த எளிய மனிதர், தனக்கான பெரும் சாம்ராஜியத்தை நிறுவிவிட்டு சென்றிருக்கிறார்.
நமக்கெல்லாம் அரசாங்க வேலைக் கிடைத்தால் என்ன செய்திருப்போம்....?. ஓய்வு பெரும் நாள் வரையில் ஓய்வாக வேலை செய்துவிட்டு, ஓய்வு பெற்றதும் வீட்டில் அமர்ந்து ஓய்வாக பென்ஷனை வாங்கி காலத்தை கடந்திருப்போம். ஆனால் பொதுப்பணித்துறையில் வேலை செய்த ஒருவர் தனக்கு கிடைத்த சொற்ப நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, அதன் நெளிவு சுளிவுகளை கற்று நல்லதொரு நிறுவனத்தை தொடங்கினார். அதுவே அவரை சிங்கமென இத் தொழில் உலகில் கர்ஜிக்கவைத்து அவருக்கான நெல்லதொரு பெயரை பெற்றுத் தந்தது. 

அவர் லியோ முத்து!. 
 ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் தலைவர். 

கடந்த சில மாதமாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த மாதம் ஜூலை 10ம் தேதி, தனது 63வது வயதில் இயற்கை எய்தினார். இவரது இயர்பெயர் எம்.ஜோதிபிரகாசம். 

அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்ட லியோ முத்து, தனது கல்வி நிறுவனங்களை ஒரு முன் மாதிரி கல்வி நிலையமாக மாற்றி இருக்கிறார், கடந்த சில வருடங்களாக அண்ணா பல்கலைக்கழத்தின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி. 

அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு கல்லூரி, தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் வருவது என்பது பாராட்டப் படவேண்டிய ஒன்று!. 

மாணவர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி, பெற்றோர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி என்று இரண்டு விதமான பொறியியல் கல்லூரிகளை நாம் பார்க்க முடியும். இன்றைய கால கட்டத்தில் படித்து முடிக்கும் முன்பே பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பினை பெருவதையே மாணவர் சமுதாயமும் பெற்றோர்களும் விரும்புகின்றனர். தரமான கல்வி, கட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றில் அவர்கள் எந்தவித சமரசமும் செய்துக்கொள்வதில்லை. இரு தரப்பும் விரும்பும் ஒரு கல்லூரியாக தன்னை தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்று!. அந்த சவாலை மிக அனாயசமாக செய்து முடிக்கிறது ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமங்கள்.

அதனாலயே தமிழகத்தில் இருக்கும் 552 பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து முதல் 10 இடங்களைப் பிடித்துவிடுகிறது. 

லியோ ஹவுஸிங்கை தொடங்கி நடத்திவந்த லியோ முத்து, 1989 வாக்கில் சென்னை மடிப்பாக்கத்தில் சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளியை 137 மாணவர்களைக் கொண்டு தொடங்கினார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 100 சதவீத தேர்ச்சியை தக்கவைத்து வருகிறது இப் பள்ளி!. ஒரு கல்விச்சாலையை தொடங்கி இக் சமூதாயத்திற்கு உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. அதுவே பின்னாளில் அவர் சாய்ராம் பொறியியல் கல்லூரி தொடங்க வழிவகுத்தது. தொழிநுட்பக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் சித்தா, ஆயூர்வேதா, யூனானி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளையும், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளையும், பாலிடெக்னிக்குகளையும் நடத்திவருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கல்லூரிகளை நடத்திவருகிறது சாய்ராம் கல்வி குழுமம்.

லியோ முத்து அவர்கள் விட்டுச் சென்ற பெரும் பணியை, அவரது புதல்வர் சாய் பிரகாஷ் ஏற்று செயல்பட தொடங்கிவிட்டார். கல்வி நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலன ஒன்று. சவாலான அந்த பணியை மிக துணிவுடனும் வெற்றிகரமாகவும் செய்துவருகிறார் சாய்பிரகாஷ். 

()()()() 

இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவரது நிறுவனத்தைப் பற்றிய செய்தி ஒன்றை அவரது ஒப்புதல் இல்லாமல் எழுதிவிட்டோம். அது எங்களுக்கும் அவருக்கும் மனக் கசப்பை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் காரம்சாரமாய் ஓடிய அந்த பிரச்சனையை எப்படியோ சமாளித்து முடிவுக்கு கொண்டுவந்தோம். பத்திரிகையாளர்கள் மீது பெரும் அன்பு கொண்டவர். திடீரெண்டு அவரிடத்திலிருந்து போன் வரும் "சார்...... சேர்மன் சார் பேசுறாங்க" என்று அவரது உதவியாளர்கள் யாராவது பேசி போனைத் தருவார்கள். அவர் தொடங்கப் போகும் கல்வி நிலையங்களைப் பற்றி கூறுவார். அவருக்கான கனவுகள் என்பது மிகவும் பெரியதாகவே இருந்திருக்கிறது. என்னை சில நேரங்களில் மாயவரத்துக்காரரே என்றுதான் அழைப்பார். அவரோடு ஒரு நாள் அவரது இல்லத்தில் உணவறுந்தும் பாக்கியமும் கிடைத்தது. 

தாம்பரத்தில் சர்வ வல்லமைப் படைத்த அரசியல் பிரமுகர் ஒருவர் அவரோடு மோதி வந்தார். சாலையில் செல்லும் கல்லூரி பேருந்துகள் மீது இடையூறு ஏற்படுத்திவருவது, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது, என்று பல வழிகளில் தொந்திரவு கொடுத்து வந்தார். இவர் பல முறை எச்சரித்தும் அந்த அரசியல்வாதி இவரை விடுவதாக இல்லை. முடிவில் இவர் செய்த ஒரு விஷயம் அந்த அரசியல்வாதியை தலையெடுக்க முடியாமல் செய்துவிட்டது.
சாய்ராம் கல்லூரிக்கு அந்த அரசியல்வாதி, என்னென்ன வழிகளில் இடையூறு செய்கிறார். அவரது அரசியல் ரீதியான தில்லுமுல்லுகள், சட்டத்திற்கு புறம்பான அவரது நடவடிக்கைகள், மக்கள் விரோத செயல்கள் என்று பெரும் பட்டியலை தயார் செய்து, அதை ஒரு மாலை பத்திரிகை ஒன்றில் ஒரு பக்கம் விளம்பரமாக கொடுத்துவிட்டார். முதலில் அந்த விளம்பரத்தை வெளியீட மறுத்த நிர்வாகம், இவர் வழங்கிய ஆதாரத்தை அடிப்படையாகவைத்து அந்த விளம்பரத்தை வெளியீட்டது. விளம்பரத்தை வெளியிட்டதோடு மட்டும் நில்லாமல், 50 ஆயிரம் பிரதிகளை காசு கொடுத்து வாங்கி தாம்பரத்தில் வீடு தோறும் விநியோகம் செய்துவிட்டார். அந்த விளம்பரத்தை அந்த அரசியல் பிரமுகர் எதிர்பார்க்கவில்லை. அந்த அரசியல்வாதியின் பொய் முகம் கிழிக்கப்பட்டு அவரது அரசியல் அஸ்திவாரத்தையே தகர்த்தெரிந்துவிட்டார். அத்தகைய போர்குணம்  கொண்டவர் லியோ முத்து. 

இத்தகைய போர் குணம் கொண்டவர்களே தங்களுக்கன வெற்றிகளை அடைகின்றனர். தங்களுக்கான கனவுகளை அடைய... அவர்கள் அயராது உழைக்கின்றனர். அது இச் சமூகம் மேம்படவும், மாணவர் சமுதாயம் நல்லதொரு உலகை படைக்க வழிகாட்டியாகவும் அமைந்துவிடுகிறது.  அத்தகைய மனிதர்களையே நாளைய விருச்சத்தின் விதையாக பார்க்கிறது இவ் உலகம்!. 

 அண்மையில் ( 9.8.2015) லியோ முத்து அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் திராவிடர்க்கழக் தலைவர் வீரமணி கலந்துக் கொண்டு படத்தை திறந்துவைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தி.ஆர்.பாலு கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார், கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு, சன் டிவி  வீர பாண்டியன், ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் கனகராஜ், ஆரம்கே மற்றும் ஆரம்டி கல்விக் குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் போன்றோர் கலந்துக்கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு லியோ முத்துவின் மருமகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி .ஆர்.பி ராஜா நன்றி கூறினர்.

.
-தோழன் மபா 

வெள்ளி, ஜூலை 31, 2015

போதும் சாவு செய்தி?



க
டந்த சில நாட்களாகவே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சாவு செய்தி தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் காலமானர். தமிழக சினிமா ரசிகர்களின் ஒட்டு மொத்த இதயத்தையும் கொள்ளைக் கொண்ட அவரை சில நாட்களுக்கு முன்னர்தான் பெஸண்ட் நகர் மயானத்தில் எரித்துவிட்டு வந்தோம்.

அது முடிந்த அடுத்த கையோடு...இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார். நாட்டையே உலுக்கிய அந்த திடீர் மரணம், இந்தியாவை துக்க வீடாக மாற்றியது. பிரதமர் முதல் சாமானியன் வரை, குடிசை வீடு முதல் மாளிகை வரை தெருவுக்கு தெரு துக்கம் அனுஷ்டித்தனர். மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முப்படை தளபதிகள் என்று இந்தியாவின் அதிகார வர்க்கமே இராமேஸ்வரத்தில் சங்கமித்தது.    அவரை அடக்கம் செய்வதற்கு, முந்தைய இரவு, ஒரு உயிர் நாக்பூர் சிறையில் ஊசலாடிக் கொண்டு இருந்தது.

மும்பை குண்டு வெடிப்பிற்காக சரணடைந்த யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் வியாழன் விடியற்காலை தூக்கில் போடப்பட்டார்.    'விடிய விடிய விசாரணை விடிந்தப்பின் பிரேத பரிசோதனை' என்ற உயர்ந்தபட்ச கொள்கையின் அடிப்படையில் மிக மிக துரிதமாக செயல்பட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது மஹாராஷ்டிரா பாஜக அரசு. அரசு இயந்திரத்தை நினைத்தால் அதிர்ச்சியும் வேதனையுமே எழுகிறது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த செய்தி: . மதுக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக 200 அடி செல் போன் கோபரத்தில் ஏறி 4 மணி நேரமாக போராட்டம் நடத்திய சசி பெருமாள் திடிரென்று ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துவிட்டார். சசி பெருமால் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் டாஸ்மாக் எதிரான போராட்டம் மேலும் வலுவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

பிறந்தவர்கள் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி என்றாலும், இப்படி தொடர் சாவு என்பது மனிதனை அழக் கூட முடியாதவனாக்கிவிடுகிறது. அன்பும் கருனையும் கொண்ட உலகத்தில்தான் யாம் ஜீவிக்கவே விரும்புகிறோம். போதும்.... "இத்தகைய நிகழ்வுகளை நிறுத்து" என்று யாரிடம் விண்ணப்பம் வைப்பது....
இறைவா....!.
 

புதன், ஜூலை 29, 2015

'அணையா விளக்கு - அப்துல் கலாம்'




நதி போகும் கூழாங்கள்
பயணம் தடையமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி
மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின்
இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே.....

மனதை வருடும் வீடியோ பதிவு.....

காலத்தை வென்ற கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!. 

 





ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...